Thursday, October 1, 2009

சமீபத்தில் மிகவும் ரசித்த க்ளிப்ஸ்

மனோகரா spoof. - தேங்காய் சீனிவாசன் காமெடி. படம் - கல்யாண ராமன்

ரொம்ம்ம்ப நாள் பொறுத்து ஒரு முதுகெலும்புள்ள டெமாக்ரட் பிரதிநிதி.


மருத்துவ சீர் திருத்தம் தற்போது அமெரிக்காவின் மிக முக்கியமான உள்நாட்டுக் கொள்கையாக விவாதிக்கப் பட்டு வருகிறது. அடிப்படை மருத்துவ வசதிக்குக் கூட வழியில்லாத, ஏறக்குறைய நாற்பது மில்லியன் அமெரிக்க மக்களுக்கு உதவுவதற்காகவும், மருத்துவ இன்சூரன்ஸ் கம்பெனிகளின் அரக்கப் பிடியில் சிக்கி வீடு வாசலை இழந்து கொண்டிருக்கும் நடுத்தர வர்க்க மக்களுக்கு கை கொடுக்கவும் ஒரு நல்ல திட்டத்தைக் கொடுக்குமாறு, ஒபாமா, சட்ட மன்றத்தைக் கேட்டிருக்கிறார். எதிர்க் கட்சியான பணக்கார வெள்ளையர்கள் அடங்கிய கன்சர்வேடிவ் ரிபப்ளிக்கன் செனேட்டர்கள் ஒட்டு மொத்தமாகவும், டெமாக்ரட் கட்சியில் இருக்கும் சில முதுகில் குத்தும் துரோகிகளும், தனியாருக்குப் போட்டியாக வரும் எந்த திட்டத்தையும் கொண்டு வர விடாமல் முட்டுக் கட்டைப் போட்ட வண்ணம் இருக்கிறார்கள். இவர்களைப் பின்னாலிருந்து இயக்கும் கார்ப்பரேஷன்களும், ஓயாமல் பொய்ப்பிரச்சாரம் செய்யும் fox news போன்ற ஊடகங்களும் பிரமிக்க வைக்கின்றன. இவர்கள் எப்போதுமே வரலாற்றின் தவறான பக்கத்திலேயே இருந்திருக்கிறார்கள்.

Tuesday, September 8, 2009

உலகம் யாவையும் தாமுள வாக்கலும் ....


உலகம் யாவையும் தாமுள வாக்கலும்
நிலை பெறுத்தலும் நீக்கலும் நீங்கலா
அலகிலா விளையாட்டுடையார் அவர் தலைவர்
அன்னவர்க்கே சரண் நாங்களே
-- கம்பராமாயண முதல் பாடல்


விளக்கம்:
எண்ணற்ற உலகங்கள் அனைத்தையும் படைப்பதுவும்,
அவற்றைக் காப்பதுவும், பின் அழிப்பதுவும் ஆகிய
அளவற்ற விளையாட்டுகள் புரியும் அவரே (கடவுள் ) எங்கள் தலைவர்.
அத்தன்மை வாய்த்த இறைவனிடமே நாங்கள் சரணாகதி அடைகிறோம்.

Monday, September 7, 2009

சாருவின் தமாஷ்



இவரே இணையத்தில்தான் எழுதிகிறார், ஆனால் இவர் இணைய எழுத்துகளை அவ்வளவாகப் படிப்பதில்லையாம். மேலும், இப்படித்தான் எழுத வேண்டும் என்று வரையறை இல்லாமல் மனம் போன போக்கில் எழுதுகிறார்களாம். மக்கா, மனசாட்சியே இல்லையா? சாரு தன்னுடைய 'சீரோ டிகிரி', 'ராசா லீலா' ஆகியவற்றை இந்த வகையில்தானே வரையறை இல்லாமல் மனம் போன போக்கில் எழுதிவிட்டு, இதுதான் பின் நவீனத்துவம் என்றும் பிலாக்கணம் செய்தார். இவருடைய இணையதளத்தில் ஜெயமோகனைத் திட்டி எழுதிய கடிதங்கள் 'ஹாட்' லிஸ்டில் எப்போதுமே இருக்கும். ஒரு மனிதனுக்கு இத்தனை வயிற்று எரிச்சலா?

Saturday, August 29, 2009

இயற்கை என்னும் இளைய கன்னி ஏங்குகிறாள் நிலையை எண்ணி...


ஓர் உறுப்பின் அத்தனை ரத்த நாளங்களும் வெட்டப்பட்டது போல, சுற்றிலும் உள்ள நீர் ஆதாரங்கள் தடுக்கப்பட்டு, வெகு விரைவில் பாலைவனமாகும் நிலையில் உள்ளது தமிழகம். கணக்கற்ற ஏரிகளும் குளங்களும் தூர்ந்து, காணாமல் போய் விட்டன. உயிரை லேசாகப் பிடித்துக் கொண்டிருந்த ஒரு சில சிற்றாறுகளும் பெரிய மனிதர்களால் தூர்க்கப்பட்டு, கல்லூரிகளாகவும் கல்யாண மண்டபங்களாகவும் மாறி விட்டன. ஆற்று மணல் கொள்ளை பற்றிக் கேட்கவே வேண்டாம்.
"காவிரி தென்பெண்ணை பாலாறு தமிழ் கண்டதோர் வைகை பொருனைநதி
எனும் மேவிய ஆறு பலவினிலும் உயர் வெள்ளை மணல் கொண்ட தமிழ்நாடு "
( கண்ணதாசனின் spoof )

Monday, August 17, 2009

பசங்க ....

இன்னும் ஒரு வாரத்தில் என் மகள் பாரதி கிண்டர்-கார்டன் வகுப்பில் சேரப் போகிறாள். நாள் முழுதும் கட்டுப்பாடுகள் ஏதுமின்றி விளையாடிக் கொண்டிருந்தவள் இப்போது ஏழு மணி நேரத்துக்கு ஆசிரியர் மேற்பார்வையில் இருக்க வேண்டும். வீட்டிலிருந்து இரண்டு மைல் தொலைவில்தான் அரசுப் பள்ளி, இருந்தாலும் மனது லேசான பதற்றத்துடன் குறு குறுவென்று இருக்கிறது. வயது போன காலத்தில் பிள்ளை பெற்றால், பெற்றோருக்கு இப்படித்தான் இருக்குமோ?

நான் வசிக்கும் டெக்சஸ் மாநிலத்தில், தம் அதிகாரத்துட்பட்ட எல்லைக்குள் சொத்து வரி விதித்துக் கொள்ள 'ஒருங்கிணைந்த பள்ளிகள் நிர்வாகத்துக்கு' உரிமை உண்டு. இது தவிர அரசாங்கம் சிறிதளவு நிதி உதவி அளிக்கும். இது ஒருவகையில் உள்ளாட்சி அமைப்பு மாதிரி. வரி விதிக்கும் அதிகாரம், கல்வித்துறைக்கு மிகவும் அவசியம். ஏதாவது பற்றக்குறை என்றால் மாநில அரசு கை வைக்கும் முதல் துறை, கல்விதான். இங்கு பள்ளிகளுக்கும், அங்கு படிக்கும் மாணவர்கள் திறமையை வைத்து ரேட்டிங் முறை உண்டு. நம் விருப்பப்படி விரும்பிய பள்ளியில் சேர முடியாது. நம் வீட்டு முகவரிக்கு ஏற்றார் போல் இன்னின்ன பள்ளியில் தான் சேர முடியும். ஒவ்வொரு பள்ளிக்கூடத்துக்கும் எல்லைக் கோடுகள் உண்டு. இந்த எல்லையும் சில வருடங்களுக்கு ஒரு முறை என்று மாற்றி அமைக்கப்படும். அடிப்படைக் காரணங்கள் இரண்டு. முதலாவது, சிறு குழந்தைகள் கல்வி கற்பதற்காக நிறைய தூரம் செல்லக்கூடாது, இரண்டாவது, அந்தந்த எல்லைக்குள் அடங்கும் மக்கள் இடப்பெயர்ச்சி. மேலும் நடுநிலைப் பள்ளி, உயர்நிலைப் பள்ளி என்று போகப்போக, எல்லைக்கோடுகள் விரிவடைந்து கொண்டு போகும். இந்தக் காரணங்களால் சிறந்த பள்ளிகளின் எல்லைக்குள் வரும் வீடுகள் விலை மிக அதிகமாக இருக்கும். இதன் பக்க விளைவு, அவ்வளவு விலையில் வீடு வாங்க, வசிக்க, இயலாதவர்கள் பிள்ளைகள், மோசமான பள்ளிகளுக்குப் போய் சேருகின்றனர். இது முடிவில்லாத சுழற்சி. இதில் பாதிக்கபடுபவர்கள் பெரும்பாலும் கறுப்பின மக்கள், மற்றும் ஸ்பானிஷ் மொழி பேசும் தென்னமெரிக்கப் புலம் பெயர்ந்தவர்கள்.

Monday, August 10, 2009

மயக்கமா.. கலக்கமா .. - அமெரிக்கா

மயக்கமா ? கலக்கமா ? மனதிலே குழப்பமா ? வாழ்க்கையில் நடுக்கமா ?
நாகரீக அவசர உலகின் மனிதர்கள் எவரிடமும் 'விக்ஸ் ஆக்ஷன்- 500' ஸ்டைலில் மேற்கண்ட கேள்விகள் கேட்கப்பட்டால் வரும் பதில் 'ஆமாம் சார் ஆமாம் ' என்பதுதான். நம் வாழ்வில் சிலமுறையாவது மனச்சிக்கலை எதிர்கொண்டே இருப்போம். இதற்கு எளிமையான பக்க விளைவுகள் இல்லாத தீர்வைத் தருகிறார் கண்ணதாசன்.
' வாழ்க்கை என்றால் ஆயிரம் இருக்கும்
வாசல் தோறும் வேதனை இருக்கும்
வந்த துன்பம் எதுவென்றாலும்
வாடி நின்றால் ஓடுவதில்லை

உனக்கும் கீழே உள்ளவர் கோடி
நினைத்துப் பார்த்து நிம்மதி நாடு '

Friday, August 7, 2009

ரிபப்ளிகன் கட்சியும் இலவச பிரியாணி பொட்டலங்களும்


தமிழ்கத்தின் நிரந்தர முதல்வரான அகிலாண்ட நாயகி புரட்சித் தலைவியை விமர்சனம் செய்த சு.சாமியையும், மணிசங்கர் அய்யரையும் மேற்படி அம்மையாரின் அடிப்பொடிகள் துரத்தித் துரத்தி அடித்து, மகளிர் அணி 'நடனம்' போன்ற கலை நிகழ்ச்சிகளையும் நடத்தித் தாம் தின்ற பிரியாணி செரிக்கச் செய்ததை எல்லோரும் அறிவோம். ஏறக்குறைய இது போன்ற கேவலமான நிகழ்வுகள் தற்சமயம் அமெரிக்காவில் நடந்து வருகின்றன. இதற்குக் காரணம், ஒபாமா, தன் தேர்தல் வாக்குறுதிகளில் ஒன்றான 'எல்லோருக்கும் மருத்துவ வசதி' யை சட்டபூர்வமாக்க முயன்று வருகின்றார். இதற்கு ஏன் 'எய்த அம்புகளான அறியா வெள்ளையர்கள்' எதிர்ப்பு தெரிவிக்கிறார்கள் ? காரணங்களைக் கீழே பார்ப்போம்.

முன்னேறிய நாடுகளில் ஒன்றான அமெரிக்காவில், ஒரு காலத்தில், அதாவது நிக்சன் ஜனாதிபதியாவதற்கு முன்வரை,

Thursday, August 6, 2009

கனவெனும் மாயா லோகத்திலே - அமெரிக்கா

போன வாரம் இங்கு நடந்த beer summit பற்றிக் கேள்விப்பட்டீர்களா? கறுப்பரான ஹார்வர்ட் பல்கலை பேராசிரியர் ஹென்றி கேட்ஸ், சீனப் பயணத்திலிருந்து திரும்பி வந்து, தன் வீட்டுக்கதவைத் திறக்க முயன்றிருக்கிறார். பயணக் களைப்போ என்னவோ, கதவைத் திறக்க முடியாமல் டாக்சி டிரைவருடன் முயற்சி செய்திருக்கிறார். மாலை அரையிருட்டில் இதைப் பார்த்த பக்கத்து வீட்டுப் பெண்மணி, பொறுப்பாக போலீசுக்குத் தகவல் சொல்ல, விரைந்து வந்த போலீசிடம் ப்ரொபசர் என்னவோ வாக்குவாதம் செய்யப்போக, தன்னுடைய அடையாள அட்டையைக் காட்டி, அதைத் தன் வீடு என்று உறுதி செய்த பின்பும், அவரை போலீஸ்காரர் கைது செய்தார். மிகவும் செல்வாக்கான ஹார்வர்ட் ப்ரொபசருக்கே இந்த நிலைமை. அவர் கருப்பராக வேறு இருந்ததால் பிரச்னை நாடு முழுதும் பேசப்பட்டது. ஒபாமாவிடம் ஒரு நிருபர் இது குறித்துக் கேட்க, அவர், போலீசின் இந்த நடவடிக்கை முட்டாள்தனமானது என்று சொன்னார். Fox News போன்ற வெறுப்பை மட்டுமே உமிழும் வலது சாரி மீடியாக்களுக்கு இதை விடப் பெரிய தீனி தேவையா? ஒபாமா எந்த வகையில் அமெரிக்காவுக்கு ஆபத்தானவர் என்று 'ஆய்வுகள்', கருத்தரங்கங்கள். நிற வெறுப்பை ஊதி ஊதிப் பற்ற வைத்தார்கள். சோ வும் சு.சாமியும் கேட்டார்கள் போங்கள். பார்த்தார் ஒபாமா. உடனே சம்பத்தப்பட்ட இருவரையும் வெள்ளை மாளிகைக்கு அழைத்து ஒரு பியர் மீட்டிங் வைத்து, பிரச்னை பெரிதாகாமல் 'சாந்தி' செய்து அனுப்பினார். அடிப்படையில், இது நிறப் பிரச்னையே அல்ல. ஒரு ஈகோ பிடித்த போலீசுக்கும், ஒரு கிறுக்குக் கிழவருக்கும் நடந்த சண்டை. அமெரிக்க மனோபாவப்படி ஒருவரும் மன்னிப்பு கேட்கத் தயாராகவில்லை. ஆமாம். அமெரிக்கர்கள் யாரிடமும் எதற்கும் மன்னிப்பு கேட்க மாட்டார்கள். பிரச்னைகள்தான் பெரிதாக வளர்ந்து போகும். இந்த இடத்தில், இப்படி ஒரு தலைவர்தான் தேவை.

Friday, July 31, 2009

என் ஜன்னலின் வெளியே -- 1

என் அபிமான எழுத்தாளர்களுள் ஒருவரான சுஜாதா சொல்வார் "காஷ்மிரில் வசித்துக் கொண்டு மாம்பலத்தில் மாமி இட்டிலி சுடுவது பற்றிக் கதை எழுதுவார்கள். அங்கு ஜன்னலைத் திறந்தால் ஆயிரம் கதைகள் கிடைக்கும்.." என்று.
பன்னிரண்டு ஆண்டுகளுக்கு முன் பாஸ்டன் நகரில் காலடி எடுத்து வைத்தபோது, இதுதான் நான் 'வாக்கப்படப் போற பூமி' என்று நினைக்கவில்லை. கலிபோர்னியாவில் எட்டாண்டுகள் வசித்துவிட்டு நான் தற்சமயம் வசிக்குமிடம் டெக்சஸ் மாகாணத்துத் தலைநகர் ஆஸ்டின். இடையில் நடந்த கதையெல்லாம் சுவாரசியம் இல்லாததால் இங்கே சொல்லப்போவதில்லை. இந்தியாவின் வெகு ஜன மீடியாவில் வராத, எனது ஜன்னலுக்கு வெளியே நடக்கும் சமூக, அரசியல் விஷயங்களை இங்கு என் பார்வையில் பட்டவாறு கொடுக்கிறேன். தமிழகம் அளவுக்கு இங்கு அரசியல் சமூக நிகழ்வுகள் அத்தனை கேளிக்கையோ திருப்பங்களோ அற்றது. இருந்தாலும் என்ன வித்தியாசம் இருக்கிறது என்று நீங்கள் தெரிந்து கொள்ளவே இந்தப்பதிவு.


யு. எஸ். ஏவின் பிரதான இரண்டு அரசியல் கட்சிகள் ரிபப்ளிகன், டெமாக்ரட் கட்சிகள் என்பது சென்னை பள்ளிசிருவர்களுக்கும் தெரியும். அதில்லாமல், சோஷலிச கட்சி, அரசியலமைப்பு கட்சி, பச்சைக் கட்சி, போன்ற நிறைய உதிரிக் கட்சிகளும் உண்டு. இவையெல்லாம் சொற்ப அளவில் ஒட்டு வாங்கித் தோற்பவை. இரண்டு பெரிய கட்சிகளுக்கும் சிறிதளவில்தான் வித்தியாசம். ஒரு கட்சி கொண்டு வரும் திட்டங்களை அடுத்த கட்சி கண்ணை மூடிக்கொண்டு எதிர்க்கும் வகையில் நம்ம ஊர் தி.மு.க. அ.தி.மு.க. போல ஒரே குட்டையில் ஊறிய மட்டைகள். முந்தைய ஆட்சி உழவர் சந்தை, கல்வி, மருத்துவ உதவித் திட்டங்கள் கொண்டு வந்ததா? தூக்கி உடைப்பில் போடு, சாராயக் கடை திறந்ததா? ?? ஹ்ம்ம்.... ?? சரி இருக்கட்டும் விடு.. இது போல.

ஜார்ஜ் புஷ் போன்றவர்கள் அடங்கிய ரிப்பப்ளிக்கன் கட்சி, கிழவர்கள் நிரம்பிய அவ்வளவாக படிப்பறிவில்லாதவர்கள் விரும்பும், தேசிய உணர்வுகளைத் தூண்டி குளிர்காயும் அதி தீவிர வலது சாரிக் கட்சி. டெமாக்ரடிக் கட்சியினர் தம்மை முற்போக்கானவர்கள் என்று அடிக்கடி சொல்லிகொண்டாலும், முக்கியமான விஷயங்களில் ஜகா வாங்கிக் கொண்டும், பல்டி அடித்துக் கொண்டும், சமரசம் செய்து கொண்டும், கேனைத்தனமாக லேசான வலதுசாரித் தனத்துடன் இருப்பவர்கள். இந்த வகையில் ரிபப்ளிகன் கட்சியை பா.ஜ.க என்றும், டெமாக்ரட் கட்சியை, சோனியா காங்கிரஸ் என்றும் சொல்லலாம். பொதுவில் இரண்டு கட்சிக்காரர்களும் கார்ப்பரேட் கோடீஸ்வரர்களின் அடிவருடிகள். ஜனாதிபதி முதல், மாவட்ட ஜட்ஜ்கள், போலீஸ் தலைவர் வரை, பொதுமக்களே ஓட்டுப் போட்டுத் தேர்ந்தெடுப்பார்கள். நான்கு வருடத்துக்கு ஒருமுறை, நிறைய செலவு செய்து ஜட்ஜ் தேர்தலில் நிற்கும் ஜட்ஜின் நீதி வழங்கல் எப்படி இருக்கும் என்பதை உங்கள் கற்பனைக்கு விட்டுவிடுகிறேன்.

இப்போது நானிருக்கும் ஊர் ஆஸ்டின், டெக்சாசின் தலைநகர் . டெக்சசின் பொது குணாதிசயத்துக்குக் கொஞ்சமும் சம்பந்தமில்லாத ஊர் இந்த ஆஸ்டின். இப்போதெல்லாம் விக்கிப்பீடியாவின் உதவியுடன் எந்த இடத்தைப் பற்றியும் அல்லது விஷயத்தைப் பற்றியும் உடனே தெரிந்து கொள்ள முடிவதால், பூகோள, வரலாற்று விபரங்களுக்குச் செல்லப் போவதில்லை.
யு. எஸ். ஏவின் எந்த மாவட்டத்துக்கும் இல்லாத சிறப்பு டெக்சசுக்கு உண்டு. இங்கிருந்து போய் ஜனாதிபதி ஆனவர்கள்தான் பேரழிவான யுத்தங்களை ஆரம்பித்துள்ளார்கள். ரிச்சர்ட் நிக்சன் வியட்நாம் போர், சீனியர் புஷ் முதல் ஈராக் யுத்தம், ஜூனியர் புஷ், சொல்லவே தேவையில்லை, தேன் கூட்டைக் கலைத்த குரங்கு . 'முதலில் சுடு. அப்புறம் கேள்வி கேட்கலாம்' என்ற கவ்பாய் மனப்பான்மை உள்ளவர்கள். கரடு முரடான பண்ணை வாழ்க்கை, கடுமையான தட்ப வெப்ப நிலைகள், தீவிர பைபிள் நம்பிக்கை, எல்லாவற்றுக்கும் மேலாக, கொஞ்சம் தடித்தனம், இவற்றின் கலவையே டெக்சஸ் மக்கள். மாநகரங்கள் அல்லாத இடங்களில் வசிப்பவர்கள், இன்னும் 16-ஆம் நூற்றாண்டு மனப்பான்மையைத் தாண்டி வரவில்லை, விருப்பமும் இல்லை. கொஞ்சம் ரிமோட்டான இடங்களுக்குச் சென்றால், வெள்ளையராக இல்லாத பட்சத்தில் குறைந்தபட்ச ஆபத்து உத்தரவாதம். பல மைனாரிட்டி இனங்கள் இங்கே வசித்து வந்தாலும், வெள்ளையர் அல்லாதவர்களை டூரிஸ்ட்கள் என்றுதான் நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். கரடு முரடான ஆட்கள் என்றாலும், அடிப்படை நேர்மையில், பிற மாநிலத்தவரை விடவும், இந்தியரை விடவும் மிக உயர்ந்தவர்கள். சில இடங்களில், இன்னும் பழைய வாசனை போகாமல், வழி கேட்டு வருபவர்களுக்கும் உணவளித்து உபசரிக்கும் சிற்றூர்களும் சில உண்டு. அடியும் கொடுத்து அல்வாவும் வாங்கித்தரும் மதுரைக்காரர்கள் போல....
டெக்சசைப் பொறுத்தவரை, கண்ணை மூடிக்கொண்டு ரிபப்ளிக்கன் கட்சிக்கே எப்போதும் ஓட்டுப்போடுவார்கள். ஒபாமா வென்ற இந்தத் தேர்தலில் டெமாக்ரட் கட்சி வாங்கியிருக்கும் வாக்கு சதவீதம் உயர்ந்திருப்பது சற்று ஆறுதலானவிஷயம்.
இங்குத் தேர்தலில் நிற்க விரும்புபவர்கள் கட்டாயம் ரெகுலராக சர்ச்சுக்குப் போக வேண்டும். மனைவி குழந்தைகளுடன் வாழ வேண்டும் என்பது போன்ற எழுதப்படாத விதிகள் உண்டு. உங்களுக்கு ஏசுவின் மேல் விசுவாசம் இல்லையா ? அரசு உயர் வேலையை மறந்து விடலாம்.

அடுத்து: ஆஸ்டின் நகர் மக்களைப் பற்றிக் கொஞ்சம், நிகழ்வுகள் கொஞ்சம்..

Tuesday, July 28, 2009

கல்லிலே கலை வண்ணம் கண்டான்



இந்தப் படத்துக்கும் பயணக் கட்டுரைக்கும் என்ன சம்பந்தம்? பிறகு சொல்கிறேன்.
போனமுறை ஊருக்குப் போனபோது, ' பொன்னியின் செல்வனை' மூன்றாவது முறை படித்தேன். உடனே சோழப் பிரதேசம் சென்று பார்க்க வேண்டுமெனத் தோன்றியது. என் தம்பியின் நண்பர் சீனுவாசன் சரியான டூர் பைத்தியம். தமிழ்நாட்டின் அத்தனை ரோடுகளும் அத்துப்படி. பஸ் கனெக்ஷன் எல்லாம் கூட மனப்பாடம். நான் கேட்டவுடன், 'அதற்கென்ன.. காலையில் கிளம்பி விடுவோம் ' என்றார். மறுநாள் காலை, முதலில் 'கங்கை கொண்ட சோழபுரம்' நோக்கி வண்டியை விட்டோம். உளுந்தூர்ப் பேட்டை தாண்டியவுடன் காருக்கு உதறல் எடுக்க ஆரம்பித்து விட்டது. தமிழக அரசின் இலவச சேலையை விட மெல்லியதாகப் போடப்பட்ட தார்ச்சாலை, பத்து நிமிடம் லேசாக விழுந்த தூறலில் காணாமல் போயிருந்தது. உளுந்தூர்ப்பேட்டை சாலையில் டிஸ்னி லேண்ட் ரைட் அனுபவம் தந்த அந்தக் குத்தகைதாரர் பதினாறும் பெற்று வாழட்டும்.
கங்கை கொண்ட சோழபுரம் நெருங்க நெருங்க, வழி கிராமங்கள் எல்லாம் மிக ரம்மியமாக இருந்தன. ஊர்ப் பெயர்களும் அற்புதமான தமிழில், நெல்லைப் பக்கத்து கிராமங்களின் பெயர்கள் போலவே இருந்தன. திடீரென்று 'time travel ' செய்வது போலத் தோன்றியது. வண்டியின் பின்னால் திரும்பி, பழுவேட்டரயரோ, வந்தியத் தேவனோ, குதிரையில் வருகிறார்களா என்று எட்டிப் பார்த்தேன். ஒரு சிறுவன்தான் சைக்கிள் டயர் ஒட்டிக் கொண்டு சென்றான். கோயிலை அடைந்ததும் அதைக் கார்னர் ஆங்கிளில் பார்த்து அசந்து போனேன். (http://tamilnation.org/culture/architecture/gkc.htm ). சுற்றிலும் ஜன சந்தடியே இல்லை. வாசலில், இளநீர் விற்கும் ஒரு நோயாளி மட்டும். "யாரு சார் இங்கல்லாம் வர்றாங்க. எனக்கு வியாபாரமும் கம்மி ". அவர் இளநீர் சீவுவதைப் பார்க்கப் பாவமாக இருந்தாலும், எல்லோரும் வாங்கினோம். இக்கோயிலை இந்தியத் தொல்பொருள் துறை எடுத்துக் கொண்டிருக்கிறது. ஆச்சர்யமான வகையில், படு சுத்தமாகவும், படு விஸ்தாரமாகவும் உள்ளது. ராஜேந்திர சோழன், தன் தந்தை ராஜ ராஜ சோழன் (சிவாஜி கணேசன் அல்ல! ) எழுப்பிய பெரிய கோயிலின் மாடலில் அதே போல், ஆனால் அதை விட சிறிய அளவில் கட்டி இருக்கிறான். Amazingly Perfect Geometric structure. ஆயிரம் ஆண்டுகள் தாண்டியும் சிதிலமடையாத சிற்பங்கள். சுற்றுப் பிரகாரத்தில் அக்காலத் தமிழ் எழுத்தில் கல்வெட்டு. வெளிப் பிரகாரத்தில் அழகான புல்தரை, சிறந்த பராமரிப்பு. குழந்தைகள் நிச்சயம் நாள் முழுதும் ஓடியாடி மகிழ்வார்கள். இப்படி ஓர் அழகான கோயிலுக்கு மக்கள் என் வருவதில்லை? கோயில் என்று இல்லாமல், டூரிஸ்ட் ஸ்பாட் மாதிரியாகவேனும் வரலாமே. யாரேனும் மாடர்ன் சாமியாருக்கோ, மயிர் போன நடிகருக்கோ காத்திருக்கிறதா?

தாராசுரம்: அங்கிருந்து கிளம்ப மனமே இல்லாமல் கிளம்பி, தாராசுரம் (http://en.wikipedia.org/wiki/Airavateswara_temple) நோக்கிப் பயணமானோம். அது கும்பகோணத்துக்கு ஐந்து மைல் தூரத்தில் உள்ளது. வழியெல்லாம் கண் கொள்ளாத அழகில் வெற்றிலை மற்றும் வாழைத்தோட்டங்கள். தாராசுரம் ஒரு un-assuming small town. ஐராவதேஸ்வரர் கோயிலில்தான் ஆச்சரியம் காத்திருக்கிறது. உள்ளே போகும்போது, 'ஆளே இல்லாத கடையில் டீ ஆற்றிய' கதையாக இங்கும் கோயிலில் யாருமே இல்லை. கோயிலைப் பற்றிய விபரங்கள் எல்லாம் மேலே கொடுத்துள்ள சுட்டியில் உள்ளது. அந்த சிற்பங்களைப் பார்த்து சற்று நேரம் மூச்சடைந்தது. தூண்கள் நிறைந்த மண்டபத்தில் ஒவ்வொரு தூணிலும் ஒவ்வொரு விதமான மிக நுண்ணிய வேலைப்பாடுள்ள சிற்பங்கள். இந்தக் கல் சிற்பங்களுக்கு சவால் விடும் வகையில் அமைந்தது, எனக்குத் தெரிந்து, ஹம்ப்பியில் உள்ள கிருஷ்ணதேவராயரின் ஹளபேடுதான். "மனுஷன் சும்மா வெண்ணையில செதுக்கறா மாதிரி செதுக்கி இருக்காம்பா! " ஒரு பகுதி மூடினால் பசு, மறு பகுதி மூடினால் யானை, என்பன போன்ற சிற்பங்கள். கருவறை மற்றும் இதர அறைகள் ஜன்னல்கள் எல்லாம், கல்லிலே, டிசைன் டிசைனாக, அனுபவித்து செதுக்கியிருக்கிறார்கள். ஒவ்வொன்றாக அனுபவிக்க ஒரு நாள் போதாது. இந்தக் கோயிலையும் தொல்பொருள் துறை எடுத்திருப்பதால், சுவற்றில், ' I am loves Grijaa... ' , ' தன்மானச் சிங்கம் முனியாண்டி அழைக்கிறார்.. ', ' பொன்வண்டு சோப் ' போன்ற அநாகரீகக் கிறுக்கல்கள் இல்லை.
மேற்கொண்டு விவரிக்காமல், குடும்பத்துடன் போய் இந்த இடங்களைப் பார்க்குமாறு வேண்டுகிறேன். தமிழ்நாட்டில் இருந்து கொண்டு இதெல்லாம் பார்க்காமல் இருப்பது பெரிய குற்றம்.

கடைசியாக.. எதற்கு இந்தப் பயணக் கட்டுரையில் டெர்ரர் ராஜேந்தர் படம் ? முதல் காரணம், சுவாரஸ்யம் காரணமாக இந்தப் பதிவைப் படிக்க வருவீர்கள். இரண்டாவது முக்கிய காரணம். இத்தகைய சிறப்பான கலைகள் வெறுமனே மன்னர்களின் அதிகாரத்தால் மட்டுமே வளர்ந்திருக்காது. குறைந்த அளவுக்காவது மக்களும் கலாச்சார ரீதியாக மிக உயர்ந்து இருக்க வேண்டும். இல்லாவிட்டால் சிறந்த செவ்விலக்கியங்களும் தோன்றியிராது. பின்னர் தமிழர்களுக்கு என்ன நேர்ந்தது? டீ. ராஜேந்தர், விஜய்,தல, விஷால், சிம்பு, தனுஷ் போன்ற கோமாளிகளைக் கொண்டாடும் குறைப் பட்டப் பிறவிகளாய்ப் போனது ஏன் என்று யாராவது ஆராய்ச்சி செய்தால் நன்றாக இருக்கும்.

Wednesday, July 22, 2009

கண்ணதாசனின் ரசவாதம் - 2

நாம் படிக்கும் பருவத்தில் இதைப் பார்த்திருப்போம். சிலர் வாழ்க்கையில் நன்றாக மேலே வருவர் என்றும், சிலர் தேற மாட்டர்கள் என்றும் பரவலாக அபிப்பிராயம் இருக்கும். வருடங்கள் வேகமாக உருண்டோடிய பின்னர் திரும்பிப் பார்த்தால், அனுமானங்கள் பெரும்பாலும் தவறாகிப் போயிருக்கும். என்னுடைய ஊரில், மீசை அரும்பிய பருவத்தில் ஒன்றாக விளையாடியவன். ஊரைச் சொன்னாலும் பேரைச் சொல்லக் கூடாது. நன்று தேர்ந்த ரசனையும் கூர்மையான அறிவும் ஆளுமையும் உடையவன்.
"நம்ம மேற்படி ஆளு ஒன்னு மந்திரியா வருவான், இல்லாட்டி பிரான்ஸ் போய் செட்டில் ஆவான் பாத்துக்கோயேன்" , என்பது அவனைப் பற்றிப் பொதுவான பேச்சாக இருக்கும். நான் மற்றும் இன்னொரு நண்பன் பொறியியல் கல்லூரிக்கும், அவன் அங்கே கலைக் கல்லூரியிலும் படிக்கப் போனோம். இடையில் என்ன ஆயிற்று என்று தெரியவில்லை. அவன் படிப்பையும் முடிக்கவில்லை, ஆளும் உருக் குலைந்து இருந்தான். ஆனால் எந்தக் கெட்ட சகவாசமும் இல்லை. பல நாள் வேளை கிடைக்காமல் அலைந்து விட்டு தன் அண்ணன் உதவியில் சின்ன வெற்றிலைக் கடை வைத்து உட்கார்ந்து விட்டான். கிண்டலும் புன்னகையும் மட்டும் மாறவில்லை. கடையில் அக்கௌன்ட் வைத்திருப்பவர்கள் மேலும் கடன் கேட்டால், " 'பற்று' மிகுந்து வரப் பார்க்கின்றேன்.... என் அண்ணனால் பட்டு வரும் இம்சைகள் பேசி முடிவதில்லை... " என்று பாரதியின் கண்ணன் பாட்டின் உல்ட்டா வேறெ.

சரி, விஷயத்துக்கு வருவோம். கம்ப ராமாயணம் படித்தவர்கள் மிகவும் சிலாகிக்கும் தத்துவ வரிகள். இராமனைக் காட்டுக்கு அனுப்பும் செய்தி கேட்டு இலக்குவன் அதீதக் கோபம் கொண்டபோது, அவனுக்கு இராமன் கூறியது இது.
"நதியின் பிழையன்று நறும்புலன் இன்மை, அற்றே
பதியின் பிழையன்று, பயந்து நமைப்புரந்தாள்
மதியின் பிழையன்று, மகன் பிழையன்று, மைந்த,
விதியின் பிழை நீ இதற்கு என்கொல் வெகுண்டதென்றான்"

-- ஆற்றில் நல்ல தண்ணீர் இல்லாமல் போனால் அது அந்த ஆற்றின் குற்றம் இல்லை. ( அரசியல்வாதியின் குற்றமா என்று கேட்காதீர்கள். அது போன மாசம், இது இந்த மாசம் ). நம்முடைய தந்தையின் பிழையோ நம்மை வளர்த்த தாயின் அறிவின் பிழையும் அன்று.
அந்த்தத் தாயின் மகன் பரதனின் பிழையும் அன்று.
இது விதியின் பிழை. இதற்கு ஏன் பெரும் கோபம் கொள்கிறாய்.

இதை, கம்பனின் தீராக் காதலனான நம் கவிஞர் கண்ணதாசன் அற்புதமாக உள் வாங்கி நமக்குக் கொடுத்திருப்பார். 'தியாகம்' படத்தில் வரும்
"நதி வெள்ளம் காய்ந்து விட்டால் நதி செய்த குற்றமில்லை,
விதி செய்த குற்றமின்றி வேறு யாரம்மா"
என்ற பாடலைக் கேட்டதுண்டா ?


மன வலிமை மிக்கத் துணைவி:
தன் கணவன் வலிமையானவனாக இருக்க வேண்டும் என்று மனைவி நினைப்பது போல், தன் மனைவிக்கும் மன உறுதி வேண்டும் என்றும் கணவனும் நினைப்பான். அப்படி ஒரு மன உறுதி வாய்ந்த ஒரு பெண்ணை சங்கப் பாடல் படம் பிடித்துக் காட்டுவதைப் பாருங்கள்.

பின்னணி:
சோழ மன்னன் கரிகாலனின் மகள் ஆதிமந்தி; ஆடல் பாடலில் வல்லவள். சேரநாட்டரசனான ஆட்டனத்தி இவளுடைய கணவன். இருவரும் காவிரியின் புதுப்புனல் விழாவில் நீராடி மகிழ்ந்தபோது, நீர்ப்பெருக்கு ஆட்டனத்தியை இழுத்துச் சென்றுவிடுகிறது. அழுது சிவந்த கண்களோடு கணவனைத் தேடுகிறாள் ஆதிமந்தி. அவளுடைய நிலையைக் கண்டு காவிரியே ஆட்டனத்தியைக் கடற்கரையில் சேர்க்கிறது. காவிரி கடலில் கலக்கும் இடத்தில் ஒரு பெண்ணால் காப்பாற்றப்பட்ட கணவனைக் காண்கிறாள் ஆதிமந்தி.

பாடல் :

மள்ளர் குழீஇய விழவி னானும்
மகளிர் தழீஇய துணங்கை யானும்
யாண்டுங் காணேன் மாண்டக் கோனை
யானுமோ ராடுகள மகளே யென்கைக்
கோடீ ரிலங்குவளை நெகிழ்த்த
பீடுகெழு குரிசிலுமோ ராடுகள மகனே.

-- குறுந்தொகை

பாடல் விளக்கம்:
" அவனை எங்கும் காணவில்லை, வீர விளையாட்டு விளையாடும் மல்லர்கள் மத்தியிலும் காணவில்லை
அழகாக, ஜோடியாக, நெருக்கமாக ஆடும் நடனப் பெண்கள் மத்தியிலும் அவனைக் காணவில்லை
ஏன் காதலனை எங்கு தேடியும் மறைந்த என் மன்னனைக் காணவில்லையே.
நானும் ஆடல் மகள்தான். மெலியும், என் கையில் அணிந்த சங்கு வளையல்கள், வருத்தத்தால் நெகிழ்ந்து விழுகின்றனவே.
அவனை எங்கேனும் கண்டால் சொல்லுங்கள். அவனும் ஒரு ஆடல் மன்னன்தான் "

இப்போது இது கண்ணதாசன் கைவண்ணத்தில் அற்புதமான திரைப் பாடலாக உருமாறுவதைப் பாருங்கள். சங்க இலக்கியத்தை நாமெல்லோரும் ரசிக்கக் கொடுத்த அந்தக் கவிஞன்வாழ்க.
படம்: மகாதேவி. தன் கணவன் எந்த நிலையில் இருக்கிறான் என்று தெரிந்து கொள்ள இயலாமல் பத்மினி உருகிப் பாடுகிறார்.

கண்கள் இரண்டும் என்று உம்மைக் கண்டு பேசுமோ
காலம் இனி மேல் நம்மை ஒன்றாய்க் கொண்டு சேர்க்குமோ
பச்சைக் கிளியானால் பறந்தேனும் தேடுவேன்
பாடி வரும் தென்றல் தேரேறி ஓடுவேன்
சென்ற இடம் காணேன்.. சிந்தை வாடலானேன்
சேதி சொல்லும் யாரும் தூது செல்லக் காணேன்

நின்ற இடம் யாவும் நிழல் போலத் தோணுதே
அன்று சொன்ன வார்த்தை அலை போல மோதுதே
கணையாழி இங்கே மணவாளன் அங்கே
காணாமல் நானும் உயிர் வாழ்வதெங்கே

தொடர்புடையது: கண்ணதாசனின் ரசவாதம்-1

Monday, July 13, 2009

நெஞ்சம் மறப்பதில்லை... அது நினைவை இழப்பதில்லை

" இருவது வருஷத்துக்கு முந்தி நடந்ததெல்லாம் இப்போ எதுக்கு மாஞ்சி மாஞ்சி எழுதறீங்க? ஒருத்தரும் அதப் படிக்கிறதுமில்ல, படிச்சாலும் ஒன்னும் திருப்பி எழுதறதுமில்ல. கார்பெட் க்ளீன் செய்யலாம், இல்லன்னா, போய் அந்த lawn -ஐ யாவது கொஞ்சம் mow பண்ணலாமில்ல" என்ற நியாயமான கோரிக்கையை நேற்று என் சகதர்மினி வைத்தாள்.
"இல்லம்மா, நீயும் நானும் எங்கெங்கியோ படிச்சாலும், அடிக்கடி நம்ம ஸ்கூல் மேட்டர் எல்லாம் பேசறமில்ல, அதத்தான் நான் எழுதி வக்கிறன். நானென்ன professional எழுத்தாளனா என்ன, அவங்க படிச்சிட்டுக் கருத்து சொல்றத்துக்கு? பாவம், இந்த வயசில எல்லாருக்கும் என்னென்னவோ பெரிய பெரிய வேலைங்க, பிரச்சினைங்க. அதில்லாம, ரொம்பப் பேரு பெரிய உத்தியோகத்தில எல்லாம் இருக்காங்க தெரியுமா? வந்து எட்டிப் பாத்தாலே பெரிய விஷயம்", என்று எனது 'தெளிந்த' ஞானத்தை உரைத்தேன்.
"ஹ ஹ்..... " எல்லாம் தெரியும் என்ற பாவனையில் உள்ளே போனாள். No man is his wife's hero.

சிலசமயம், பின் மதிய வேளை மூன்று மணி வாக்கில், கண்கள் சொக்கும் முன். பழைய நினைவுகளை அசைபோடும்போது தற்போதைய துன்பங்கள் கொஞ்சம் விலகி நிற்கின்றன. பள்ளிப் பருவத்தில், டவுசர் கிழிந்தும் கிழியாத மாலைப் பொழுதுகளில் பாண்டிச்சேரி பொட்டனிக்கல் தோட்டத்தில் நாவற் பழம் பொறுக்கியது, ஸ்கூல் எதிர்ப்புறம் இருந்த மாந்தோப்பில் மாங்காய் திருடியது, எல்லாம் பசுமையாக நினைவிருக்கிறது. கோவில் தோப்பில் உடன் கில்லி விளையாடியவர்கள் சிலர் உயர்ந்தும், பலர் தாழ்ந்தும், வெகு சிலர் இறந்தும் போயினர். இப்போதெல்லாம் அந்த இடங்களில் பலர் செல்போனில் தனித் தனியே பேசிக்கொண்டிருப்பதைப் பார்க்கும்போது,
கவலையற்ற அக்கால நினைவுகள் ஆளை அழுத்தாமல் விடுவதில்லை.

இந்த உணர்வை ஒரு முதியவர் மூலம் புறநானூற்றுப் பாடல்
அற்புதமாகப் படம் பிடித்துக் காட்டுவதைப் பாருங்கள். இந்தப் பாடல்தான் கோப்பையிலே குடியிருந்து, கோலமயில் துணையிருந்த நம் கண்ணதாசனையும்
' பசுமை நிறைந்த நினைவுகளே பாடித் திரிந்த பறவைகளே....
....................

குரங்குகள் போலே மரங்களின் மேலே தாவித் திரிந்தோமே
'
எனப் பாட வைத்தது.


இனி நினைந்து இரக்கம் ஆகின்று; திணி மணல்
செய்வுறு பாவைக்குக் கொய் பூத் தைஇ
தண் கயம் ஆடும் மகளிரொடு கை பிணைந்து,
தழுவுவழித் தழீஇ, தூங்குவழித் தூங்கி,
மறை எனல் அறியா மாயம் இல் ஆய்மொடு
உயர் சினை மருதத் துறை உறத் தாழ்ந்து,
நீர் நணிப் படி கோடு ஏறி, சீர்மிக,
கரையவர் மருள, திரையகம் பிதிர,
நெடு நீர்க் குட்டத்துத் துடுமெனப் பாய்ந்து,
குளித்து மணற் கொண்ட கல்லா இளமை
அளிதோ தானே! யாண்டு உண்டு கொல்லோ--
தொடித் தலை விழுத் தண்டு ஊன்றி, நடுக்குற்று,
இரும் இடை மிடைந்த சில் சொற்
பெரு மூதாளரேம் ஆகிய எமக்கே?


- புறநானூறு


பாடல் விளக்கம்:

இப்பொழுது நினைத்துப் பார்த்தாலும் வருத்தம் மேலிடுகிறது
மணல் பிடித்து பொம்மை செய்து,
பூப்பறித்து அதற்குச் சூட்டியும்
ஆற்றில் வாலைப் பெண்களின் கைகோர்த்து மகிழ்ந்ததும்
அவர் தழுவும் பொழுது தழுவியும், ஆடும்போது ஆடியும்
ஒளிவு மறைவோ, வஞ்சமோ, ஏதுமில்லாத அன்பு
நண்பர்களோடு நேரம் போவது தெரியாமல் விளையாடி மகிழ்ந்தும்
வளைந்து நீரைத் தொடும் மருத மரத்தின் கிளைகள் பற்றி ஏறி
உச்சிக் கிளை அடைந்து
கீழே நிற்போர் மருள, அவர் மீது நீர்த் திவலைகள் விழும்படி
'தொப்' என நீரில் குதித்து, மூழ்கி
ஆற்றின் ஆழத்திலிருந்து மணலை அள்ளி வந்து காட்டியும்
இப்படிப் பலவாறாக களிப்புற்றிருந்த
இளமைப் பருவம் கழிந்து சென்று விட்டதே !
ஊன்று கோலை ஊன்றி, நடுக்கத்துடனும்
இருமலுக்கிடையேயும் சிரமத்துடன் பேசும்
வயோதிகனான எனக்கு
கடந்து சென்ற அந்தக் காலம் இனி எப்போது வாய்க்கும்?

Related: கண்ணதாசனின் ரசவாதம் - 1

Thursday, July 9, 2009

கண்ணதாசனின் ரசவாதம் - 1



Disclaimer: கீழ்கண்டவை முழுமையும் என் சொந்த சரக்கல்ல. நான் பல புத்தகங்களில், பல இடங்களில் படித்தவற்றின் பாதிப்பே ஆகும்.

புகழ் பெற்ற இரண்டு ஒப்பாரிப் பாடல்களைக் கவியரசு கண்ணதாசன் அழகிய காதல் பாடல்களாக ரசவாதம் செய்யும் வித்தையை இங்குப் பார்ப்போம்.

1. மன்னன் பாரியின் பெண்கள், அங்கவை, சங்கவை. இவர்கள், தந்தையையும், நாட்டையும் இழந்து, ஆதரவற்ற நிலையில் ஆற்றாமையில் குமையும் கீழ்கண்ட காட்சியைப் பாருங்கள். ஒரு மதிய வேளையில் தனியே உட்கார்ந்து படித்தால், அப்படியே கண்ணீர் வருகிறது.



"அற்றைத் திங்கள் அவ்வெண் நிலவின்
எந்தையும் உடையேம்; எம் குன்றும் பிறர் கொளார்;
இற்றைத் திங்கள் இவ்வெண் நிலவின்
வென்று ஏறி முரசின் வேந்தர் எம்
குன்றும் கொண்டார்; யாம் எந்தையும் இலமே!"
(புறநானூறு)

விளக்கம்:
அன்றொரு நாள் இந்த வெண்ணிலவு வானில் நீந்தி வருகையில்
எங்கள் தந்தையின் அருகாமையில் இருந்தோம்.
எங்கள் பறம்பு மலையையும் பிறர் கவராமலிருந்தார்.
அன்று காய்ந்த அதே வெண்ணிலவு தான் இன்றும் காய்கிறது.
நிலவு இருக்கிறதே தவிர, இப்போது எம் தந்தை இல்லை எமதருகில்..
பகை வேந்தர், எம் குன்றையும் (நாட்டையும் ) கைப்பற்றிக் கொண்டார், ஐயா!

இதோ கவியரசின் ரசவாதம். ஒப்பாரி, அழகான காதல் பாடலாகிறது பாருங்கள்.

"அன்றொரு நாள் இதே நிலவில் அவர் இருந்தார் என் அருகில்
நான் அடைக்கலம் தந்தேன் என் அழகை, நீ அறிவாயே வெண்ணிலவே.
அந்த ஒரு நாள் ஆனந்தத் திருநாள், இன்று நினைத்தால் என்னென்ன சுகமோ
பாதி விழிகள் மூடிக் கிடந்தேன், பாவை மேனியிலே..
நீ பார்த்தாயே வெண்ணிலவே."

ஐயோ........... எங்கேயோ சும்மா சொக்கித் தூக்கிக்கொண்டு போகிறதே!


====================================================

2. இப்போது, நெஞ்சை உருக்கும் ஒரு நாட்டுப்புற ஒப்பாரி.
"சில்லென்று பூத்த சிறு நெரிஞ்சிக் காட்டினிலே
நில்லென்று கூறி நிற்க வழி போனீரே"

வாழ்க்கை எனும் பாதையின் இரு பக்கத்திலும் மரகதப் பாய் விரித்தது போல் பசும்புல் தரை. அதன் மேல் ஆங்காங்கே நெரிஞ்சியின் மஞ்சள் பூக்கள் மங்களகரமாகக் கண்ணுக்குக் குளிர்ச்சியாக இருக்கிறது. கணவன் அவளைத் தனித்து விட்டுச் சென்று விடுகிறான் ( இறந்து விடுகிறான் ). இவளோ செல்லும் வழி தெரியாமல், கண்ணுக்குக் குளிர்ச்சியாக இருக்கும் நெரிஞ்சி முள்ளின் மேல் காலை வைத்து விடுகிறாள். முள் குத்தி, கால்கள் காயம் படுகின்றன. கணவனுடன் இருந்தபோது மஞ்சள் பூப்போல இருந்த உறவினர்கள், அவன் இறந்ததும், முட்களாகக் குத்துகின்றனர். நம் வாழ்விலே எத்தனையோ பேரை இதுபோல துன்பமான சூழ்நிலையில் பார்த்திருப்போம். இயலாமையில் கண்ணீர்தான் வருகின்றது.

கவியரசு இதை விருத்தமாக வைத்து எழுதி, டீ.ஆர். மகாலிங்கம் தன்னுடைய ட்ரேட் மார்க் சிரிப்புடன், காதல் பாட்டாகப் பாடுவார். அப்போதெல்லாம் இது ஒரு பிலாக்கணப் பாட்டு என்றே எனக்குத்தெரியவில்லை.
"சில்லென்று பூத்த சிறு நெருஞ்சி காட்டினிலே
நில்லென்று கூறி நிறுத்தி வழி போனாளே
நின்றது போல் நின்றாள் நெடுந்தூரம் பறந்தாள்
நிற்குமோ ஆவி நிலைக்குமோ நெஞ்சம்.....
செந்தமிழ் தென் மொழியாள்.. நிலாவென சிரிக்கும் மலர்க் கொடியாள்..
பைங்கனி இதழில் பழரசம் தருவாள், பருகிட தலை குனிவாள்"

எச்சரிக்கை: மேலும் தொடரலாம்...

Tuesday, July 7, 2009

பாடல் பெற்ற ஸ்தலங்கள் - GCE Days - 5

GCE மக்களைப் பற்றிப் பினாத்துவதை சிறிது இடைவெளி விட்டுப் பின்னர் தொடருவேன். அதற்கிடையில் நாம் உலாவிய அந்த மண்ணைக் கொஞ்சம் பார்த்து வருவோமா? இதோ, வந்துட்டோம்ல...

அட்மின் பிளாக்
அடையாளம் - ஒரு புராதன கார் நிறுத்தி வைக்கப்பட்டிருக்கும். அது கல்லூரி முதல்வரின் கார். இன்னும் இருக்கிறதா என்று தெரியவில்லை. அரசாங்க அலுவலகத்தின் அத்தனை விசேஷங்களையும் கொண்டு, உள்ளே நுழைந்ததும் கொட்டாவி வரவழைக்கும், வெகுவாக போர் அடிக்கும் இடம். வருடத்தில் இரண்டு அல்லது மூன்று முறை மட்டுமே அக்கவுண்ட்ஸ் பார்க்க செல்ல வேண்டியிருக்கும். ஸ்ட்ரைக் மற்றும் இதர கலக நாட்களில் மட்டும் ஜேஜே என்று இருக்கும்.

கோளரங்கம் ( planetarium )
எந்தக் கல்லூரியிலும் இல்லாத அற்புதமாக எங்களிடம் மட்டும் இருந்தது இந்த planetarium. ஆனால், உள்ளே யார் போய் பார்த்தார்கள்! அதைவிட சுவாரஸ்யமான விஷயங்கள் கட்டிடத்துக்கு வெளியே நடந்து கொண்டிருக்கும்.
'பனி விழும் மலர்வனம் .. உன் பார்வை ஒரு வரம்.. ' என்று எதோ ஜோடி கால்களைப் பார்த்து மெதுவாகப் பாடிக் கொண்டிருப்பார்கள். உதடுகள் அசையும், ஓர் வார்த்தையும் வெளி வராது. சிலர் தனியே யாரையோ ஆவலாக எதிர்பார்த்தபடி
' காற்று வாங்கப் போனேன்.. ஒரு கவிதை வாங்கி வந்தேன்.. அதைக் கேட்டு வாங்கிப் போனாள்.. அந்தக் கன்னி என்னவானாள்.. ' என்று பாடிக் கொண்டிருப்பார்கள். அந்த சமயம் வேறு யாருமே அவர்கள் கண்ணில் படமாட்டார்கள். கிட்டே போய்,
'என்னடா மச்சி, என்ன சேதி ?'
'ஹம்.. ஒண்ணுமில்ல. அதுசரி, உன்ன அங்க யாரோ கூப்புடறாங்க, போய்ப் பாரு '

இதற்கு மேல் அங்கே நின்றால் நமக்கு உதைதான் விழும். அந்தக் கட்டிடம் நிறைய மரம்-செதுக்கும் கலைஞர்களையும் உருவாக்கியிருந்த்தது. அங்கிருக்கும் மரங்களின் மேல் பட்டையைப் பார்த்தால் என்ன மரம் என்றே சொல்ல முடியாத அளவுக்கு அத்தனை உளியின் வேலைகள். கோயில் மரத்தில் தொங்கும் பிரார்த்தனை முடிச்சுகள் போல எத்தனையோ பெயர்கள். கல்லூரியின் சமூக கலாச்சாரமே அதிலிருக்கும்.
முதலாம் ஆண்டு எங்களை ஒரு டெமோ காட்ட அங்கு அழைத்துச் சென்ற போது, அங்கே மரத்தடியில், வின்னர் கைப்புள்ள போல் ஒரு சீனியர். 'எதிர்பார்த்த ஆள் ' வராத கடுப்பில் இருந்த அவன், இருந்ததிலேயே நோஞ்சானாக இருந்த என்னைக் கூப்பிட்ட்டான். "ஏண்டா, லெக்சரர் கூப்பிட்டா இங்க வந்துடறதா ? இன்னைக்குத்தான் கடைசி, இனிமேல் 'பிள்ளைங்க' தவிர யாராவது இங்க வந்தீங்க, மவனே தொலைஞ்சீங்க" என்று சொல்லித் தலையில் தட்டி அனுப்பினான். எனக்குத் தெரிந்து, பாவம், அவன் கடைசி வருடம் வரை, அப்படித் தனியாகத்தான் இருந்தான்.
ஒரு தடவை பார்த்த அணி, அடுத்த இரண்டு மாதத்துக்கும் அப்படியே இருந்தது என்று சொல்ல முடியாது. ஆறு மணி மெகா சீரியலில் அண்ணன்- தங்கையாக வருபவர்கள், எட்டு மணி மெகா சீரியலில் பிசினஸ் எதிரிகள் ஆவது போல்தான் இங்கும் மாதா மாதம் அணி மாற்றம் நடைபெற்றபடி இருக்கும். என்ன கொடும சார் இது? ( நம்ம G.K. சொல்றார்.. " பல்லிருக்கிறவன் பட்டாணி தின்றான். நமக்கென்ன வந்தது? சும்மா பாத்து என்ஜாய் பண்ணிட்டுப் போடா " ).

சென்ட்ரல் கேட்
பெயர்க்கு ஏற்ற மாதிரி 'central' கேட். நாங்கள் படித்த காலத்தில் கூரை வேய்ந்த இரண்டு (நாயர்தான்!) டீக்கடைகள். வருத்தப்பட்டு பாடம் படிப்பவர்களுக்கு இளைப்பாறுதல் தரும் இடம். அந்த மாஸ்டர் போடும் அற்புதமான டீ போல வெகு சில இடங்களில்தான் சாப்பிட்டிருக்கிறேன். ஆனால் அவர் கையை மட்டும் பார்க்கக்கூடாது. அப்போதெல்லாம் லேடீஸ் அங்கு வரமாட்டார்கள் என்பதால் பல ஊர் வட்டார வசைகள் பிரவாகமாக ஓடும். அந்த டீக்கடை நாயர், காலேஜைச் சுற்றி நிறைய இடம் வாங்கிப் போட்டதாகக் கேள்விப்பட்டேன். விட்டால் காலேஜையே வாங்கியிருப்பான்.

ஆடிட்டோரியம்
'நானும் ரௌடிதான், ஆனா ஒரு பயலும் மதிக்க மாட்ரானுங்களே' என்றபடி டவுசர் கிழிந்த டார்ச்சர் வகையறாக்கள் பகலில் சுற்றும் இடம் இது. இதில் சில பேருக்கு ஜீப்பில் முண்டியடித்து ஏறி விடும் வாய்ப்பு கிடைத்து planetarium போய்ச்சேர்ந்து விடுவதும் உண்டு. நிறைய புதுக் கவிஞர்களை உருவாக்கும் ' ஸ்பெஷல் சிகரெட்' சுருட்டப் படுவதும் ஆடிட்டோரியம் பின்பகுதியில்தான். வருடத்துக்கு மூன்று கலை நிகழ்ச்சிகள் நடந்தால் பெரிய விஷயம். வெளியே 'கோயிந்து' போலிருக்கும் என்னைப் போன்றவர்கள் எல்லாம் உள்ளே போனால் ரகளைதான். பாட்டுக் கச்சேரி மேடையில் நடக்கும்போது, கீழே எங்களுடைய டேன்ஸ் கச்சேரி பட்டையைக் கிளப்பும். மேடையிலேயே இங்கிலிஷ் நடனம் ஆடக்கூடிய 'திறமை' வாய்ந்தவன் P.சுரேஷ். அதென்னவோ எப்பொழுதும் இளமாறன் சைசில் உள்ளவர்களிடம் இரவல் வாங்கிய பேண்டில்தான் சுழன்று சுழன்று டான்ஸ் ஆடுவான். பிறகுதான் தெரிந்தது, டான்ஸ் முடிந்ததும், பேன்ட் பெரும்பாலும் கிழிந்து விடும் என்ற ரகசியம். ஒரு முறை அஷோக் தனி ஆளாக பெரிய நிகழ்ச்சி ஏற்பாடு செய்து அசத்தி இருந்தான். என்னவோ அதற்கப்புறம் மவுன சாமியாராகிவிட்டான். அந்த மவுன சாமி இங்கு Portland பக்கத்தில் ஆசிரமம் அமைத்திருப்பதாகக் கேள்வி.

டாக்டர் மஞ்சமுத்து கிளினிக்
ஹாஸ்டலுக்கு உள்ளேயே இப்படி ஒரு இடம் இருந்ததே ரொம்பப் பேருக்குத் தெரியாது. இந்த இலவச க்ளினிக்குக்கு மாதத்திற்கு மூன்று பேஷன்ட் வந்தாலே அபூர்வம். ஒருமுறை வயிற்று வலிக்கும், அடுத்த முறை ஜூரத்துக்கும் போனேன். இரண்டு தடவையும் அதே மாத்திரையையே கொடுத்தார். இருந்தாலும் கைராசிக்காரர் என்பதால் உடம்பு சரியாகிவிட்டது. இங்கு அமெரிக்காவில் மட்டும் என்ன வாழ்கிறதாம்?

தாபா
மெஸ்ஸில் சாப்பிட்டு நாக்கு செத்தவர்களுக்கும், பணம் கட்டாததால் மெஸ்ஸிலிருந்து விரட்டப் பட்டவர்களுக்கும் தாபாதான் புகலிடம். இங்கே ஐந்து ரூபாயில் சாப்பிட்ட முட்டைப் பொரியலும், மீல் மேக்கரும், கொடுத்த சுவையும் திருப்தியும் வேறு எங்கும் எனக்குக் கிடைக்கவில்லை. ஆனால், அடிக்கடி சாப்பிட்டால் மேலே குறிப்பிட்ட கிளினிக் தான் செல்ல வேண்டும்.

லைப்ரரி
பிரிட்டிஷ்காரர்கள் இந்தியாவுக்கு சுதந்திரம் கொடுத்து விட்டுப் போனபோது அவர்கள் கொண்டு வந்த புத்தகங்களையும் இந்த லைப்ரரியில்தான் விட்டு விட்டுப் போனார்கள் போலிருக்கிறது. சோவியத் யூனியன் மிர் பப்ளிஷர்ஸ் புத்தகங்கள் கொஞ்சம் கிடைக்கும். அது தவிர, உள்ளே நல்ல காற்று வரும். லைப்ரரியன்தான் முதன் முதல் குருவிக்கூடு ஹேர் பாஷன் அறிமுகம் செய்தவர். அவர், அசிஸ்டன்ட், படிக்க வந்தவர்கள், எல்லோரும் பாரபட்சமின்றி தூங்குவார்கள். இப்போது ஏ.சி. வசதி செய்துவிட்டார்களாம். சுகம். அப்படியே கொஞ்சம் புத்தகங்களையும் வாங்கிப் போட்டா, பசங்க படிப்பாங்கல்ல ?

கருப்பூர் கேட்
மாலை வெயில் மங்கியதும், சில ஆட்கள் வருவதும் போவதுமாக இருப்பார்கள். சிலசமயம், பஞ்சரான உடம்பும், ஆஸ்பத்திரி கட்டுமாக ஓரிருவர் கருப்பூரிலிருந்து திரும்பி வருவர் ( சண்டையின்னு வந்தா சட்ட கிழியறது சகஜந்தானே ) . மேலும் விபரமாக எழுதினால் ஆட்டோ வரும் என்ற பயத்தில், இதை இப்படியே விட்டு விடுகிறேன். இப்பொழுதெல்லாம் ஆட்டோவில் உருட்டுக் கட்டைக்கு பதிலாக தமிழ் பட டிவீடீக்களைக் கொண்டு வருகிறார்களாமே ( லூசுப் பையன் சொல்றான் ). நானெல்லாம் வார இறுதி மதியங்களில் மோர் சாப்பிட்ட மயக்கத்தில், வழி தவறி இந்தப் பக்கம் வருவதோடு சரி.

பிள்ளையார் கோயில்
இந்த மிகச் சிறிய கோயில் மிகவும் ரம்மியமான ஒரு லொக்கேஷனில் அமைக்கப்பட்டிருக்கிறது. வெட்டவெளியில் வீசும் காற்றில் கோயில் மணி தானாக லேசாக ஆடி, அடித்துக்கொள்ளும். வழக்கம்போல பரீட்சை சமயங்களில்தான் எல்லோருக்கும் நினைவு வரும். எனக்குத் தெரிந்து, செந்தில் நாயகம்தான் ரெகுலர் விசிட்டர். நானும் அவ்வப்போது உடன் சென்று மணியடித்து விட்டு வருவேன்.

லேடீஸ் ஹாஸ்டல்
இருந்திருந்தால் நன்றாக இருந்திருக்கும். நாங்கள் வெளியே போனதும் அடுத்த ஆண்டே வந்து விட்டது. ( நல்லா இருப்பிங்களா ? உக்காந்து யோசிச்சான்களோ ... )

முன் பதிவு: சேலத்து சித்தர்கள் - GCE days part 4.

Sunday, June 21, 2009

சேலத்து சித்தர்கள் -- GCE days part 4

GCE Salem Siddhar

GCE Salem Hostel Days .. cont



ஒரு வாரமாக சித்தர்கள் தொடர்பான சில மின்னஞ்சல்களும் குறுஞ்செய்திகளும் எனக்கு வந்து கொண்டிருந்தன. படிக்கிற காலத்தில் கடுமையான வறுமையின் காரணமாக விரக்தி மேலிட்டு சித்தர் பாடல்கள் படித்திருக்கிறேன். மத்திய வயதைக் கடந்த பின்னர் மறுபடியும் படித்துப் பார்த்தால் அவற்றின் perspective வேறு மாதிரி இருக்கிறது. நான் வளர்ந்து திரிந்த பாண்டிச்சேரியும் சித்தர்கள் உலவிய மண்தான். ஜிப்மரிலிருந்து மூன்று கி.மீ. தூரத்தில் இரும்பை என்னும் கிராமத்தில் மகா காளீஸ்வரர் கோயில் உள்ளது. இங்குதான் கடுவெளி சித்தர் இருந்தார். அவருடைய கீழ்கண்ட பாடலை அறியாதவர்கள் யாரும் இருக்க முடியாது.
நந்தவனத்தில் ஓர் ஆண்டி. அவன்
நாலாறு மாதமாய்க் குயவனை வேண்டிக்
கொண்டு வந்தான் ஒரு தோண்டி. அதைக்
கூத்தாடிக் கூத்தாடிப் போட்டுடைத்தாண்டி.

பாமரர்களோடு நெருங்கிப் பழகிக் கொண்டு, கட்டமைப்புக்கு அடங்காத, எளிதில் விளங்கிக் கொள்ள முடியாத social scientist -களை சித்தர் என்று சொல்வார்கள். புதுச்சேரியில் வாழ்ந்தபோது, மகாகவி பாரதியும் ஒரு சித்தர் என்றே அறியப்பட்டார். என்னைப்போன்ற பகுத்தறிவுக் குஞ்சுகளுக்கு ( பறவைக் குஞ்சு என்பது போலப் பொருள் கொள்க ) முன்னோடி சிவவாக்கியர். இவர் பாடல்கள் இன்றைய தேதிக்கும் புரட்சிதான்.

இப்போது தலைப்புக்குள்...

சேலம் அ.பொ.கல்லூரியில் காமெடி சித்தர்களுக்கும் கலக்கல் சித்தர்களுக்கும் பஞ்சமே இருந்ததில்லை. இதில் பெயர்களை மட்டும் விடுகதை போல் உங்கள் யூகத்துக்கு விட்டு விடுகிறேன்.

ஒரிஜினல் குகை சித்தர் : சேலம் நாகா-மினி வழியாகப் போகும்போதெல்லாம் ( படம் பார்க்க அல்ல ) இந்த சித்தரைப் பார்த்து, ' என் இந்த ஆள் இங்கேயே இருக்கான்' என்று யோசிப்பேன். அவரது வாசமே அங்கே அருகில் தான் என்பது பிறகுதான் தெரிந்தது. பெரும்பாலும் இங்கிலீஷ் பேசும் கோடீஸ்வர சாமியார்களின் புத்தகங்கள் வாசிப்பார். கலா ரசிகர்.

குடும்ப சித்தர் - (குதம்பை சித்தரின் மரூவு ) 'கருமமே' கண்ணாயினார். மற்ற எவர் அருமையும் பாரார். இவர் திருப்பாதங்கள் படாத சேலம் முட்டுச் சந்துகளும் மூவன்னா சந்துகளும் மிகக் குறைவு. தற்சமயம் சாமி ஒடுங்கி, பெரிய பொறுப்பான பதவியில் இருப்பதாகக் கேள்வி.

அழுக்கணி சித்தர் - பிறரின் phermone ஹார்மோன்களுக்கு அதிகம் வேலை வைத்தவர். எந்த மொழியிலும் இவருக்குப் பிடிக்காத வார்த்தை 'சோப்பு'. மற்றவருக்காக இரங்கும் தயாள குணம் மிக்கவர். எலக்ட்ரான் அலைகள் போல் அங்கிங்கெனாதபடி எங்கும் எப்போதும் இன்று வரை அமைதியற்று அலைந்து கொண்டிருப்பவர்.

கைலாசநாதர் : பெரும்பாலும் கால்கள் தரையில் பாவாது ஒரு அடி மேலேயே நடப்பவர். மற்றபடி யாருக்கும் தீங்கிழைக்காதவர். என்னிடம் மட்டும் இவருக்கு ஏதோ வாஞ்சை. தற்சமயம் கீழிறங்கி பூமியில் கால் பதித்து நடப்பதாகக் கேள்வி.

புலிப்பாண்டி சித்தர் : சதா அங்குமிங்கும் அலைந்து கொண்டு, எதிர்பட்டவர்களிடம் பந்தா செய்வதா, அல்லது பயப்படுவதா என்று குழம்பி, எக்ஸ்பிரஸ் வேகத்தில் பேசுவார். செல்வச் செழிப்பான வீட்டில் இருந்து வந்தாலும், இந்தப் புண்ணியவான் தயவால் சென்ட்ரல் கேட்டில் கணேஷ் பீடி விலை ஏறியது. பில்டர் சிகரெட்டின் இறுதி வரை இழுத்து இன்பம் கண்டவர்.

பாம்பாட்டிச் சித்தர்: இவர் திறந்த சோடா பாட்டில்களுக்குக் ( குடிப்பதற்கு அல்ல) கணக்கே இல்லை. கழகக் கட்சித் தலைவர் ஆவதற்குரிய எல்லா சிறப்புத் தகுதிகளும் நிரம்பியவர். அரசியலுக்குச் சென்று கும்மி அடிப்பார் என்று நான் நம்பிய சிலரில் இவரும் ஒருவர்.

அககறைசித்தர் : ஹாஸ்டலில் எல்லோரும் நலமாக இருக்கிறார்களா என்று தினமும் இரண்டு வேலை ரவுண்ட்ஸ் வருவார். காசு வாங்காமல் 'வார்டன்' வேலை பார்த்தவர், நான்கு வருடங்களும்! .

புத்தக சித்தர்கள் : ஒருவர் குணத்தில் ரத்தினம், கணக்கில் புலி. மற்றவர், பேசினால் வசந்தம் வீசும். இருவர் கையிலும் எப்போதும் புத்தகம் இருக்கும். புத்தகம் இல்லாத போது, குளியலறை டவல் இருக்கும் ( அனேகமாக, குளிப்பதற்கு என்று நினைக்கிறேன் ) .


கீழே உள்ள வரிகள் யாரைக் குறிப்பிடுகின்றன என்று தெரிகிறதா? தெரிந்தால் எனக்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்.

ஒரிஜினல் சித்தர் பாடல்கள் :

1. தாவாரம் இல்லை, தனக்கொரு வீடில்லை
தேவாரம் ஏதுக்கடி குதம்பாய் தேவாரம் ஏதுக்கடி

2. மாங்காய்ப் பால் உண்டு மலை மேல் இருப்பார்க்கு
தேங்காய்ப் பால் ஏதுக்கடி குதம்பாய் தேங்காய்ப் பால் ஏதுக்கடி

3. செத்தாரைப் போலத் திரியும் மெய்ஞானிக்கு
கைத்தாளம் எதுக்கடி - குதம்பாய் கைத்தாளம் எதுக்கடி

4. பட்டணம் சுற்றிப் பகலே திரிவோர்க்கு
முட்டாக்கு எதுக்கடி - குதம்பாய் முட்டாக்கு எதுக்கடி.

உல்டா வரிகள்:
5. 'பாட்டில்' கலந்திடவே அங்கே ஒரு
பத்தினிப் பெண் வேணும் - எங்கள்
'கூட்டுக் களி'யினிலே - கவிதைகள்
கொண்டு தரவேணும்.

6. எங்கிருந்தோ வந்தான் 'இடைப்பாடி' நான் என்றான்
இங்கிவனை யான் பெறவே என்ன தவம் செய்து விட்டேன்.



=========
முன்பதிவு : நித்தமும் நாடகம் .. நினைவெல்லாம் காவியம் - GCE days part 3..

Wednesday, June 17, 2009

போன மாசம் பார்த்த மொக்கைகள்



என்னுடைய சகதர்மிணி தமிழ் திரையில் வரும் படங்கள் எல்லாவற்றையும் பார்த்து விடுவார்கள். சுட்டது, சுடாதது, தேய்ந்தது, காய்ந்தது எதவும் விதி விலக்கு இல்லை. அத்தோடு நில்லாமல் என்னையும் அவ்வப்போது சில படங்களைப் பார்க்க வைத்து விடுவார்கள். இப்படித்தான் போன மாதம் பார்த்த படங்களில் இரண்டைப் பற்றிப் பதிய வேண்டியுள்ளது.
முதலில் பார்த்தது கமலின் தசாவதாரம். ( பேரக் கேட்டா சும்மா அதிருதில்ல ?) . பத்து வேஷத்தில் கமல் தானும் கஷ்டப் பட்டு, பார்ப்பவர்களையும் 'என்ன கொடும சார் இது ' என்று கேட்க வைத்துள்ளார். ஆமாம், உணமைலேயே என்ன ஆயிற்று கமலுக்கு? வழக்கமாக இங்கிலிஷ் படங்களை உல்டா பண்ணிக் கொண்டு, இது வரைக்கும் நல்லாதான போயிக்கிட்டு இருந்தாரு... இப்ப ஏன் இப்படி இந்த கொல வெறி? சிவாஜி நவராத்திரியில ஒன்பது வேஷம் போட்டா, நாங்களும் பத்து வேஷம் போடுவோம்ல ? உலக நாயகன் , ஆஸ்கார் நாயகன், அப்படீன்னு சொல்லி சொல்லி உசுப்பேத்தியே இவரை இப்படி பஞ்சர் ஆக்கியிருக்கிறார்கள். இனிமேல் உலக்கை நாயகன், சாரி, உலக நாயகன், கே.எஸ். ரவிக்குமார் போன்றவர்களிடம் இருந்து ஒரு ஐம்பது மைல் தள்ளி இருக்க வேண்டும். இல்லாவிட்டால் டைரக்டர் பேரரசு போன்றவர்களிடம் சான்ஸ் கேட்க வேண்டிய நிலை வரும்.

தசாவதாரம் பார்த்ததில் வந்த காய்ச்சல் சரியானவுடன் நான் சற்று ஜாக்கிரதையாக இருந்திருக்க வேண்டும். ஆனால் கெட்ட நேரம் என்று இருக்கிறது பாருங்கள், அது தன் பவரைக் காட்டி விட்டது. ஒரு நாள், விஜயகாந்த் நடித்த 'மரியாதை' படத்தைப் பார்க்கும் நிலைமை வந்து விட்டது. சில வருடங்களாகவே 'கேப்டன்' தமிழக மக்களை உண்டு இல்லை என்று பண்ணிக் கொண்டு வருகிறார். ' கஜேந்திரா , வல்லரசு, தருமபுரி ' என்று, ' எவ்ளோ அடிச்சாலும் தாங்கறாங்க, இவங்க ரொம்ப நல்லவங்க ' அப்படி என்று பிய்த்து உதறுகிறார். எல்லாவற்றுக்கும் உச்சக் கட்டமாக ' மரியாதை '. ஒரே சிட்டிங்கில் பத்து மணி நேரம் மெகா சீரியல் பார்க்க முடியுமா? அதை விட அதிகம் தம் கட்டினால்தான் இந்தப் படத்தைப் பார்க்க முடியும். கேப்டன் சாப்பாட்டுக்குத் தொட்டுக் கொள்ள சாப்பாட்டைத்தான் பயன்படுத்துவார் போலிருக்கிறது. தாடைக்குக் கீழே மினி சைஸ் தொப்பை. வயிற்றுக்கு மேலேயும் கீழேயும் தலா ஒரு தொப்பை. நல்ல வேளை இதில் அவர் பட்டதாரி! காலேஜ் ஸ்டூடண்டா வந்தாலும் தமிழர் இதயம் இதையும் தாங்கும். இவர் சைசுக்குப் பொருத்தமா மீரா ஜாஸ்மின். இவர்கள் இருவரும் பொன்னிறக் கூந்தல் அழகிகள் பின்னணியில் ஆஸ்திரேலியாவில் அதிர்ந்து ஆடுகிறார்கள். பார்ப்பவர்களும் அதிர்கிறார்கள். இதற்கான பாடல் ' இன்பமே.. உந்தன் பேர் பெண்மையோ ' என்ற பாடலின் ரீ-மிக்ஸ். அந்தக் காலத்தில் தார் பூசி இந்தியை அழித்தப் பாவம், உதித் நாராயணனை வடக்கிலிருந்து இங்கு அனுப்பி, தமிழைக் கொல்லுகிறார்கள்.
மொத்தத்தில் எல்லோரும் சேர்ந்து, நல்லா.. பேதியை, ஐ மீன், பீதியைக் கிளப்புகிறார்கள். என்ன கொடும சார் இது! மறுபடியும் உடம்பு சரியில்லாமல் போய் என் குலசாமி டீ. ஆருக்கு. முடி கொடுக்கிறதாக வேண்டிக் கொண்டிருக்கிறேன்.
இந்திய ராணுவத்திற்கு ஒரு நல்ல யோசனை. டைரக்டர் பேரரசு படங்கள், தனுஷ், சிம்பு, விஜயகாந்த் படங்கள், தசாவதாரம், குசேலன், போன்ற படங்களின் டீவீடீ க்களை ஆயிரக்கணக்கில் பாகிஸ்தான் எல்லை, காஸ்மீர் எல்லை, பங்களாதேஷ் எல்லை, இங்க்கெல்லாம் கார்பெட் பாம் மாதிரி போட்டு விட வேண்டும். இதை எடுத்துப் பார்ப்பவர்கள் சும்மா கைப்புள்ள கணக்காக இந்தப் பக்கமே தலை வைத்துப் படுக்க மாட்டார்கள்.

Wednesday, June 3, 2009

நித்தமும் நாடகம் .. நினைவெல்லாம் காவியம் - GCE days part 3

GCE Salem Hostel BBB

GCE Salem Hostel Days 2


ஹாஸ்டல் தினங்கள் தொடர்கிறது...
என்னுடைய க்ளாஸ்மேட் பத்ரி ஹாஸ்டல் எதிரிலிருந்த பனைமரத்தடிக்கு அழைத்துச் சென்ற புண்ணியவான். பெரும்பாலான மெக்கானிகல் மக்களுக்கு அது ஒரு தீர்த்த யாத்திரை ஸ்தலம். நயம் சரக்கு. அந்த சுர் என்று ஏறும் அனுபவம் வேறு எதிலும் வரவில்லை. அந்தப் பரமானந்தத்தை எனக்கு அறிமுகம் செய்து வைத்த மகான் பத்ரி வாழ்க! ஒவ்வொரு வெள்ளிக்கிழைமையும் மாலை குரூப் குரூப்-ஆக பாட்டும் சிரிப்புமாக மக்கள் மெஸ் பக்கம் வந்தால், பனைமரத்தடியான் நல்ல கல்லா கட்டியிருக்கிறார் என்று அர்த்தம். இன்னும் சில கோஷ்டி (BJM, DS ), காலையில் உற்சாகப் பானம்
சாப்பிட்டு விட்டு வகுப்பறை போன கதைஎல்லாம் உண்டு.

நிலையில்லாமல் ஓடுவதும்
நினைவில்லாமல் பாடுவதும்
பகைவர் போலே பேசுவதும்
பருவம் செய்யும் கதையல்லவா

இப்போது பலர் திருமணம், குழந்தைகள் என்று ஆன பின் எல்லாவற்றையும் விட்டு விட்டதாகக் கேள்வி. திருந்துங்க, ஆனா ரொம்ப திருந்தாதீங்க.

என்னுடைய மூன்றாம் ஆண்டு ரூம் மேட் சேகர் அந்தக் காலத்தில் ஒரு அப்பாவி. அநியாயத்துக்கு சாந்த சொரூபி, பயந்த சுபாவம். உருவத்துக்கும் உள்ளத்துக்கும் சம்பந்தமே இல்லாத வேலூர் வள்ளலார். அவனை மிரட்டும் ஒல்லியான நபர்கள் ரவிசங்கர் , நமச்சிவாயம் ஆகியோரைப் பார்த்தால் நமக்கே பாவமாக இருக்கும். ரெண்டு பேருக்கும் மம்முட்டியின் கணேஷ் பிராண்ட் தான் பிரியம். இதில் நமச்சிவாயம் இலந்தைப் பழம் பாடலையே மேலும் பக்திப் பரவசமாக மாற்றிப் பாடியவர். நமசிவாயம் எங்கள் ரூமுக்குள் வரும்போதெல்லாம், ஏதோ தசாவதாரம் படம் பார்க்கக் கூப்பிட்டது போல சேகரின் முகம் வெளிறிப் போகும். ரவிசங்கர் அப்போதே படிப்பாளி.
ஒரு முறை வேலை நிமித்தம் வேலூர் சென்றபோது சேகர் என்னை வந்துப் பார்த்தான். உடனே எனக்கு அந்த ஹோட்டலில் பயங்கர மரியாதை. சேகர், வேலூரில் மிகப் பெரிய கோடிச்வரர் பெண்ணைக் கல்யாணம் செய்திருந்த விஷயம் அப்போதான் தெரிந்தது. அவர்கள் தொழுவத்தில் இருபதுக்கும் மேற்பட்ட கார்கள். பிறகு நான் பெரியார் பஸ்ல ஊருக்கு வந்து சேர்ந்தேன்.

விடுதி கேம்பஸில் பலர் பல விதங்களில் வசீகரமானவர்களாக இருந்தனர். யாரையும் காயப்படுத்தாத ஜி.கே. கண்ணன், முக்கியமான கிரிக்கெட் பிளேயர். நாடகங்களில் சிவன் வேஷம், வினு சக்கரவர்த்திக்கு டூப் போட ஏற்ற ஆகிருதி. ஹாஸ்டல் வாழ்க்கையை நன்றாக அனுபவித்து வாழ்ந்தவன். சினிமாவில் சேருவான் என்று நினைத்தேன், இப்போது சென்னையில் பிசினஸ் செய்வதாகக் கேள்வி. பலாப்பழத்து மேல் ஈக்கள் போல் ரவிராஜைச் சுற்றி எப்போதும் நண்பர்கள். சரமாரியான டைமிங் ஜோக்குகள். நெற்றியில் ஜோக் எழுதி ஓட்டியதைப் போல பார்த்ததுமே சிரிப்பு வரும். மிகவும் சுவாரஸ்யமான ஆள். இவனும் சினிமா துறைக்கு செல்வான் என்று நினைத்திருந்தேன். இப்போது ஓஹையோவில் வாசம். ரவிராஜ் குரூப்-ல இருந்த இன்னொரு ஆள் : " இந்த இது இதுன்றதுக்கு அந்த இது சரி வராது. வேற இத வெச்சி இதுன்னம். போன தடவ இது பண்ணாத லைட்டா இதுன்னா கூட போறும்".. இத இதுன்றது யார் தெரிகிறதா? என்னோட neighbor all-round sportsman நம்ம இளங்கோ தான். ennudaiya க்ளாசில் என்னுடைய பெஞ்ச்-மேட். என்னைப் பலமுறை மேடத்திடம் மாட்டிக் கொள்ளாமல் தப்பிக்க வைத்ததற்கு நன்றி உடையவன் ஆவேன்.

மேற்கண்ட அலப்பறைக் கூட்டத்தில் வேறு முக்கியமான ஆள் நம்முடைய இம்சை அரசன், 'வைத்தி' விஜயராமச் சந்திரன். இந்த வைத்தியின் க்ளோன் பற்றி ஒரு பெரிய புத்தகமே போடலாம். எந்தக் கூட்டத்திலும் புகுந்து சேதாரம் இல்லாமல் வெளியே வரக்கூடிய ஆள். நாரதர் வேஷமா? உடனே புக பண்ணலாம். பேசி ஜெயிக்க முடியாது. எனக்கும் ரொம்ப தோஸ்த். கொஞ்சம் முயற்சி செய்திருந்தால் வடிவேலுக்குப் போட்டியாக வந்திருக்கலாம். எல்லா வஸ்துக்களையும் தயங்காமல் பரிசோதனை செய்து பார்த்தவன். இப்படிப் பட்ட மகான் சென்னைக்குக் குடி பெயர்ந்ததால் ஸ்வாமி மலை தப்பித்தது. விஜயராமனின் சமீபத்திய புகைப்படம் பார்த்தேன். அதே கண்கள்!


இன்னும் வருவார்கள்.....

Saturday, May 16, 2009

புத்தகம் பையிலே.... புத்தியோ பாட்டிலே - GCE days - part 2

GCE Salem Admin Block

GCE Salem Hostel Days


நான் சுற்றிய நண்பர்கள் மற்றும் என்னுடைய ரூம் மேட்ஸ் பற்றி கொஞ்சம். ஒரு சின்ன பெட்டி, தலையணை மற்றும் போர்வையுடன், எனக்குத் தந்த ரூமுக்குள் நுழைந்த போது ஏற்கனவே வந்து சேர்ந்த நான்கு பேர் திருவென்று விழித்துக் கொண்டு உட்கார்ந்திருந்தார்கள். பாண்டிசேரிக்காரர்கள் புவனேஸ்வரன், முனாவர், இமாச்சல் தேவிராம், மணிப்பூர் சரத் சந்த். இதில் நான்தான் பூச்சி மாதிரி ரொம்ப சின்னதாக இருந்தேன்.
புவனேஸ்வரன் ஏற்கனவே என்னுடைய ஸ்கூலில் கிளாஸ்மேட். நல்ல படிப்பாளி, அறிவாளி. அதைவிட நல்ல முன்கோபி. இப்போது புதுவை ப்ளானிங் துறையில் வேலை. முன்பே சொன்னது போல, 'சகல' கலைகளையும் சேலம் கற்றுத் தந்தது.
முனாவர், எங்களோட போட்டி ஸ்கூல். ரொம்ப ப்ரில்லியன்ட். எஞ்சினியரிங் மேத்ஸ் எல்லாம், சும்மா ஒரு லுக் விட்டுட்டு பிரமாதமா போடுவான். நல்ல செஸ் பிளேயர். ரஷ்யப் பத்திரிகையில் வரும் செஸ் புதிர்களை சால்வ் செய்வது இவன் பொழுது போக்கு. கோபமே வராத ஜென்டில்மேன். இப்போது சுவிஸ் நாட்டுல ஆல்ப்ஸ் மலை அடிவாரத்துல குடும்பம். அடிக்கடி ஈமெயில் போக்குவரத்து உண்டு.
தேவிராம் இமாச்சல் பிரதேசத்தில் மண்டி என்ற ஊரிலிருந்து வந்தவன். மிக மிக மிக டைட் ஆக ட்ரஸ் போடும் ஆள். எங்கே இவன் பேன்ட் கிழிந்து விடுமோ என்று நாங்கள் பயப்படாத நாளே இல்லை. இவனது ஒரே ஆசை, எப்படியாவது நடிகை ஸ்ரீதேவிக்கு ஒரு முத்தம் கொடுப்பது, முடிந்தால் கல்யாணம் செய்து கொள்வது என்பதுதான். அதற்காகவே படிப்பதற்காக வந்தானாம். வாரம் ஒருமுறை இண்லேண்டு லெட்டரில் ஸ்ரீதேவிக்கு லவ் லெட்டர் எழுதி, அதை எனக்குப் படித்து, பொருள் சொல்லி பாடாய் படுத்துவான். அதன் பிறகு ஸ்ரீதேவியைச் சந்தித்தானா என்று தெரியவில்லை. இப்போது வேண்டுமானால் மறுபடியும் முயற்சி செய்து பாக்கலாம்.
சரத் சந்த் எங்களுக்கு பாடி கார்ட் மாதிரி. அவன் கூட சென்றால் சீனியர்கள் எங்களைக் கண்டுகொள்ள மாட்டார்கள். தன்னுடைய தம்பியை எம். எல்.ஏ. ஆக்கப் போவதாகச் சொல்லிக்கொண்டிருப்பான்.

எங்கள் பக்கத்து ரூமில், சுஜித், குமரன், மதியழகன், அண்ணாமலை ஆகியோர் இருந்தனர். அப்போது கல்லூரியிலேயே நன்றாக இங்கிலீஷ் பேசத் தெரிந்தவர்களில் சுஜித் முக்கியமான் ஆள். சுஜித்தைப் பார்த்து, 'ஒன்றானவன்.... உருவில் இரண்டானவன்' என்று பாட்டுப் பாடி, குமரனிடம் அடி வாங்கியது இன்னும் நினைவில் இருக்கிறது. சுஜித் இப்போ ஒரு பிசினஸ்மேன். கொடிகாத்த குமரன் திருப்பூருக்கு பெருமை சேர்த்தவர் என்றால், குடியாத்தம் குமரன் கருப்பூருக்கு பெருமை சேர்த்தவர். 'எங்கெல்லாம் தேடுவதோ.. எழில் மேவும் குமரா நின் அருள் வேண்டி தினமும் நான்...... ' என்று பாடினால், புளங்காகிதம் அடைந்து சென்ட்ரல் கேட் கடையில் டீ வாங்கித் தருவான். ஆனால் இந்த ட்ரிக் நிரம்ப நாள் ஓடவில்லை. அதே ரூமில் இருந்த மதியழகனை, 'சரோஜா தேவி ' என்ற அடைமொழியாலே ரொம்ப நாள் அழைத்தார்கள்.

எங்கள் ரூமுக்கு frequent visitor வெங்கி ( விருத்தாசலம் வெங்கடேசன் ). நல்ல புட்பால் பிளேயர், பாடகன், ரசிகன், நல்ல நண்பன். என்னுடைய ரூமில் அடிக்கடி பாட்டுக் கச்சேரி நடக்கும். இவன் பந்தாட்டத்துக்கு நிறைய ரசிகர்கள் என்றால், பாட்டுக்கு நிறைய ரசிகைகள். 'பாவை என் பதம் காண நாணமா... உந்தன் பாட்டுக்கு நான் ஆட வேண்டாமா...... ' எனக் காத்துக்கிடந்தவர்களை நான் அறிவேன். விடுமுறையில் ஊருக்குப் போகும்போது சக பயணி. டவுனுக்குப் போய் நிறைய எம் .ஜி.ஆர் படங்களாகப் பார்த்திருக்கிறோம். 'ஆயிரத்தில் ஒருவன்' பார்த்து விட்டு, நல்ல மழையில் குதிரை வண்டியில் நாலு-ரோடு வந்தது நினைவு இருக்கிறதா?
கடைசியாக என்னுடைய ஸ்கூல் கிளாஸ்மேட் கல்யாணத்தில் பார்த்தது ( வெங்கியின் முறைப் பெண், இப்போது என் கிளாஸ்மேட்டின் மனைவி ) .

இன்னும் வருவார்கள்......
முன் பதிவு: Baski's lounge: எண்ணமே சுமைகளாய்.. இதயமே பாரமாய் - GCE நாட்கள்

Thursday, May 14, 2009

இவ்வருடப் பயணப் பதிவுகள் - 2009

இந்த வருடம் எந்க கம்பெனியில் எல்லாரையும் கட்டாய விடுப்பு எடுக்கச் சொன்னதால் சீசன் கெட்ட சீசன்ல ஊருக்குப் போக வேண்டியதாச்சு. கிளம்பி துபாய் வழியா போனோம்.
முதல் ஸ்டாப் துபாய்:
துபாய்ல மூணு நாள் வசந்த பவன் ஹோடெல்ல ஸ்டே. அப்படியே இந்தியாவுல இருக்க பீலிங்! தக்காளி... அங்கங்க எச்சி துப்பி வச்சிருக்கானுக! நடக்கறப்ப பாத்து நடக்காட்டி கால் வழியே கிருமி வந்துரும். இந்தியனுங்கள விட அங்க பாகிஸ்தான் காரனுங்க ரொம்ப துப்பரானுங்க. கிட்டப் போன அப்படி ஒரு கப்பு. சிங்கப்பூர்'லயும் இதே மாதிரி நம்ம ஜனங்க இருக்க எடம் எல்லாம் கவர்மென்ட் கண்டுக்காம இருக்குது. எனக்குத் தெரிஞ்சி இங்க நியூ ஜெர்சில குஜராத்திங்க கடைக்கு முன்னாடி சாக்கட ஓடுது!.நீங்கள்ளாம் திருந்தவேமாட்டீங்களாடா?
எங்க சொந்தக்காரத தம்பி ஒன்னு துபாய சுத்திக் காட்டுச்சு. பத்தடிக்கு பத்தடி ரூம்ல எட்டுப் பேரு. அங்கேயே சமையல். காலைல இருந்து நைட் வரைக்கும் வேலை. அங்கிருந்து ரொம்ப தூரத்துல வேல பாக்கிறவங்க வாரத்துக்கு ஒரு தடவ துபாய் சிட்டி வந்து வேண்டிய பொருள வாங்கிட்டு பஸ் ஏற (வடிவேலு அண்ணே, துபாய்ல நெசமாலுமே பஸ் ஸ்டாண்டு இருக்கு, துபாய் போற பஸ் அங்க நிக்குது!) நீண்ட லைன்ல நிக்கறாங்க. கண்ணெல்லாம் பஞ்சடஞ்சு பாக்கவே பாவமா இருக்கு. எப்படியும் வட்டிக்கு வாங்கி, காட்ட, வீட்ட வித்து புரோக்கர் மூலமா வந்திருப்பாங்க. சம்பளமும் அவ்வளவு சொல்லிக்கிற மாதிரி இல்ல. இப்படி கஷ்டப்பட்டு சம்பாதிக்கிறத ஊர்ல இருக்கறவங்க சென்ட் அடிச்சி செலவழிக்கறாங்க. என்னத்தச் சொல்றது? இன்னொரு பக்கம் பளபளன்னு வெள்ளக்காரங்க துபாய். அது நமக்கு வாணாம்.

இவ்வருடப் பயணப் பதிவுகள் - பாண்டிச்சேரி

pondicherry GCE Salem
பாண்டிச்சேரி பதிவுகள்: வேலை விஷயமா வெளி நாடு போறவங்களுக்கு அவங்க ஊரப்பத்தியும் ஜனங்களப் பத்தியும் ஒரு frozen image இருக்கும். கொஞ்சம் வருஷம் கழிச்சுத் திரும்பி வந்து பாக்குறப்ப, அங்க ஏற்பட்ட தவிர்க்க முடியாத மாற்றமெல்லாம் மனசுக்குக் கொஞ்சம் கஷ்டத்தையோ ஏமாற்றத்தையோ தர்றது சகஜமாக இருக்குது. எனக்கும் ஒவ்வொரு தடவை பாண்டிச்சேரி வர்றப்பல்லாம் அதே பீலிங்க்ஸ் தான். என்னவோ எங்க ஊர் தன்னோட பழைய வசீகரத்தை ரொம்பவே இழந்து விட்டதாகவே தோணுது.

ஊரெங்கும் தொடர்ச்சியா இருந்த கலர் கலரான கொன்றை மரங்கள், ரோட்டோரம் அடர்ந்து கிடந்த தென்னை மரமெல்லாம் எங்க போச்சி? எல்லாம் கண்ணாடி வெச்ச ஷோரூமா மாறிடுத்து. கசகசன்னு ஒரே ஜன நெரிசல்.
இதாவது பரவால்ல. நான் படிச்ச ஸ்கூல் எதிர்ல மகாகவி பாரதியார் குயில் பாட்டு, கண்ணன் பாட்டெல்லாம் பாடிய அற்புதமான, ரம்யமான ஒரு தோப்பு, கருவடிக்குப்பம் சித்தானந்த சுவாமி கோயில ஒட்டி இருந்தது. உள்ள போனா, நேரம் போறதே தெரியாது. எப்பவும் வத்தாத நீரோடை, நிறைய மாமரம், கொய்யா மரம். இப்படி. மகா கவிக்கும், பாரதிதாசனும் லாகிரி வஸ்துக்கள் சாப்பிட்டு அதி அற்புதமான காவியங்கள் பாடியிருக்காங்க. அந்த இடத்தைப் பாத்தா எனக்கே பாட்டு வரும். அந்த இடத்த பாதுகாக்காம பிளாட் போட்டு வித்துட்டானுங்க. இதவிட மோசம் பாருங்க. அங்க அரவிந்தர் வீதில இருந்த பெரிய புக் ஸ்டால மூடிட்டு ஒயின் ஷாப் தொறந்துட்டானுங்க.
முன்னாடி தமிழ்நாடும் பாண்டிச்சேரியும் எல்லாத்துலயும் ஏட்டிக்குப் போட்டியா இருக்கும். அதனால் ஊர் நல்லா இருந்துச்சி. இப்பல்லாம் தமிழ்நாட்ல ஜனங்களுக்கு கவர்மென்ட் எட்டு அடி குழி வெட்டினா, பாண்டிச்சேரி கவர்மென்ட் எங்க ஜனங்களுக்குப் பதினாறு அடி குழி வெட்டுது. அங்க ஒரு ரூபாய்க்கு அரிசி தந்தா இங்க இலவசமாத் தரானுங்கோ. வர வர எல்லாருக்கும் வேல செய்யறதே மறந்து போயிடிச்சி. அது சரி.... எம்.ஆர். ராதா சொன்னாப்ல, நாமளே பங்களாக்குள்ள உக்காந்துக்கிட்டு பாலிடிக்ஸ் பேசக்கூடாது.

எங்க வீட்டு மரத்தில் இருந்து இளநீர், நல்ல வாசனைய்டன் வகை வகையா பலா, வாழைப்பழங்கள், நல்ல சாப்பாடு. இன்னும் கொஞ்சம் வெயிட் போட்டாச்சு. போன முறை சன் டீ.வீ. பாத்தா சீரியல் எல்லாம் இன்னும் ஓடிக்கிட்டு இருக்கு. ஜனங்களும் ஆர்வம் குறையாம, உக்காந்து பாத்துக்கிட்டு இருக்காங்க. யாரோ சாபம் விட்டாப் போல இருக்குது. :(

ஊர்ல யாரப் பாத்தாலும்,
'என்னங்க அமெரிக்காவுல இருந்து இந்தியருங்களத் தொரத்தராங்கலாமே ' அப்படின்னு, சந்தோஷத்த கஷ்டப்பட்டு மறைச்சிக்கிட்டு கேள்வி.
'அப்படி எல்லாம் ஒண்ணும் இல்லீங்களே' அப்படீன்னு சொன்னதும், உடனே கேட்டவங்க முகம் ஏமாத்தத்துல வாடிப்போகுது.
அப்படியும் விடாம, 'இல்லிங்களே தினத் தந்தியில விலாவாரியாப் போட்டிருக்காங்களே. நீங்க பாக்கலியா? உங்க ஏரியாவுல இல்ல போலிருக்கு.'
அதற்கு நான், 'தினத் தந்தி எல்லாம் படிக்கிறதா விட்டு அறுவது வருஷம் ஆகுதுங்க. அது சரி, உங்க பெரிய புள்ள இப்ப என்ன செய்றாரு ? '
' இங்க கவர்மென்ட் போஸ்டிங்குக்கு எட்டு வருஷமா வெய்ட் பண்றான். நீங்களே சொல்லுங்க... கஷ்டப்பட்டு அஞ்சி வருஷம் பீ.காம் படிச்சிட்டு ப்ரைவேட் வேலைக்கா போறது? விவசாயத்தைப் பாக்கலாம்னா, ஒரு பயலும் லேபர் வேலைக்கு வர மாட்றானுங்க. சரீ, நீங்க இருக்கறது ப்ரைவேட்டா, கவர்மேன்ட்டா? '
நான், 'அமெரிக்காவுல போலீஸ், மிலிடரி, போஸ்ட் ஆபீஸ் மாதிரி வேலையத் தவிர்த்து எல்லாம் ப்ரைவேட் தான். '
இதக் கேட்டதும் அவருக்கு ரொம்ப சந்தோசம். 'அதானப் பாத்தேன். யாருக்கு என்ன வேல தர்றதுன்னு வெள்ளக்காரனுக்குத் தெரியாதா? நாமப் போயி அவங்கள நிர்வாகம் பண்ண முடியுமா சொல்லுங்க? '
அடேங்கப்பா! அதுல உட்ட சந்தோஷத்த இதுல புடிச்சிட்டாரு!! ஆமா, நாங்கல்லாம் உங்கள என்ன பண்ணோம்? இங்க எல்லாம் நித்திய கண்டம்தான். வேல போனா, கவர்மென்ட் நிவாரண உதவி, ஒரு ரூவா அரிசி, இதெல்லாம் குடுக்காது.

மத்தபடி ஊர்ல கொஞ்சம் பழைய விஷயம் அப்படியே இருக்குது. துடிப்பான மரியாதையான, சின்னப் பசங்க, கள் மணக்கும் கிராமம், கோயில்லையும் ஒயின் ஷாப்லயும் இருக்கும் நெரிசல், குடிச்சிட்டு ரோட்ல விழுந்து கிடக்கற வெளியூர் ஜனங்க. பொதுவா பாண்டிச்சேரி, ரோட்ல போதையில விழுந்து கிடக்கிறதெல்லாம் வெளியூர் ஆளுங்கன்னு சொன்னா நம்புங்க.
அரசு சுற்றுலாத்துறை இப்போ டெய்லி பஸ் டூர் ஏற்பாடு செஞ்சிருக்கு. சீந்துவார் இல்லாம இருந்த ஊஸுடு ஏரி, இப்போ பிரபலமான டூர் ஸ்தலம். பிரபஞ்சன் தன்னோட மானுடம் வெல்லும், வானம் வசப்படும் நாவலுங்கள்ள இந்த ஏரியப் பத்தி எழுதி இருக்கார். அப்புறம் இந்த சுண்ணாம்பாறு இப்படி டூரிஸ்ட் ஸ்பாட் ஆகா மாறி இருக்கும்னு எதிர் பாக்கவே இல்ல. வில்லியனுர்ல ( என்னோட ஊர் !) பெரிய கோயிலும் இப்போ நிறைய ஜனம். இருக்கிற பிரச்னைல ஜனங்கள்ளாம், முதல்ல சிவன் கோயிலுக்குப் போயிட்டு, அப்புறம் மாதா கோயில்ல ஒரு மெழுகு வத்தி ஏத்திட்டு, அப்படியே போய் மசூதியில ஒரு தடவ ஒதிட்டுப் போறாங்க. ஒரு தடவப் போய்ப் பாருங்க.

இவ்வருடப் பயணப் பதிவுகள் - திருநெல்வேலி







அடுத்த
ஸ்டாப் : திருநெல்வேலி - இது என் மனைவியின் ஊர். .. இருந்தாலும் எனக்கு ரொம்பப் பிடிச்ச ஊர். கேரளத்துக்குப் பக்கத்துல இருப்பதாலோ என்னவோ ஊர் படு சுத்தம். ஜனங்களும் ரொம்ப மரியாதைப் பட்டவங்களா இருக்காங்க. வெட்டுக் குத்துன்னு பேப்பர்ல பாக்கறதெல்லாம் தனிப்பட்டவங்களுக்கு இடையிலதான். மத்த ஊர் போக்கிரிங்க மாதிரி பொது மக்களுக்கு இடைஞ்சல் தர்றது இல்ல.
இந்த ஜில்லாவுலதான் தமிழ்க் கவிதையப் புரட்டிப் போட்ட பாரதியார், உரைநடை பிதாமகர்கள் புதுமைப்பித்தன், .ரா., நவீன சிந்தனையாளர் சுந்தர ராமசாமி, கரிசல் மண்ணின் தவப்புதல்வர் எழுத்தாளர் கி. ராஜநாராயணன் உள்ளிட்டவர்கள் பிறந்து வளர்ந்தார்கள்.
நெல்லையச்சுத்தி நிறைய பாக்க வேண்டிய இடங்கள். திருச்செந்தூர், அப்புறம் போற வழியில நவ திருப்பதின்னு ஆழ்வார்கள் அவதரிச்சு வாழ்ந்த ஊர்கள். அந்த ஒண்ணரை மணி நேரப் பயணம் ரொம்ப அற்புதமா இருக்கும். நெல்லை டவுனில் இருக்கும் நெல்லையப்பர் கோயில் ஒரு சிற்றூர் அளவுக்கு இருக்குது. அனால் உள்ளே அவ்வளவா மக்கள் இல்லை. கோயிலின் ஒரு வாசலுக்கு வெளியே திருநெல்வேலியின் பிரசித்திப் பெற்ற இருட்டுக்கடை அல்வா கிடைக்கும். மாலை எட்டு மணிக்குள் போனால் கிடைக்கும்.

இந்த முறை பாணதீர்த்தம் போனோம். அம்பாசமுத்திரம் போய்ட்டு அங்கிருந்து பாபநாசம் போகணும். பாபநாசம் முண்டந்துறைக்காட்டு உள்ளே போய் மலை ஏறனும். பிளாட் போடாத காடு. ரசீது கொடுக்காம டிக்கெட் பணம் வாங்கிக்கறாங்க. அத மறந்துட்டு மேல போனா, அற்புதமான இடம். ரெண்டு பெரிய அருவி. படகுல ஏறி இருவது நிமிஷத்துல அருவிக்குப் போகலாம். அங்க ஒரு நாடு வயதினர், 'இங்க குளிச்சா எந்த வியாதியும் அண்டாது' ன்னு இருமிக்கிட்டே சொன்னார். பாணதீர்த்ததுலதான் .வே.சு. அய்யர் தன் மகளைக்காப்பாத்த குதிச்சி, ரெண்டு பெரும் இறந்து போனதா படிச்சிருகேன். அந்த அருவிய ஒட்டி பிரமாதமான காரையார் அணை. யாராவது E.B. யில ஆளு தெரிஞ்சா, இன்னும் நல்லா சுத்திப் பாக்கலாம். எனக்கு யாரையும் தெரியாததால்
அவ்வளவா போட்டோ எடுக்கக் கூட விடல.
இன்னொரு முக்கியமான விஷயம்.. சாப்பாடு எதுவும் மலை மேல கிடைக்காது.
கீழ பாபனாசத்துலையே வாங்கிட்டுப் போயிடனும். இது தெரியாம நாங்க மேல போய், இருந்த நொறுக்குத்தீனிய வச்சி அட்ஜஸ்ட் பண்ணிட்டு, கீழ வந்ததும், கண்ணுல பட்ட முதல் ஓட்டல்ல நுழைஞ்சிட்டோம்.
'அடகென்று சொல்லி அமுதத்தை இட்டாள்
கடகம் அணிந்த கையாள்'
அப்படின்னு அவ்வையார் பாடிய மாதிரி அப்படி ஒரு பசி. தனக்கு சாப்பாடு போட்டவளின் முகத்தைக் கூட பாக்க நேரமில்லாம, அந்தக் கையைப் பார்த்ததும் உடனே சாப்பிடத் தொடங்கி விட்டாளாம். பாவம் அவங்களுக்கு அப்படி ஒரு பசி.

Monday, May 4, 2009

எண்ணமே சுமைகளாய்.. இதயமே பாரமாய் - GCE நாட்கள்

Salem GCE days - Part 1


ரெண்டு நாளுக்கு முன்னால மதியம் ரொம்ப போரடிச்சிப் போய் நாமளும் ப்லாக பண்ணலாம்னு ஆரம்பிச்சேன். என்ன எழுதறதுன்னு யோசிச்சப்ப திடீர்னு பழைய claasmate சுந்தர் கிட்டருந்து ஒரு ஈமெயில். என்னடான்னு பாத்தா எங்க சேலம் காலேஜ் மக்கள் லிஸ்ட் சேக்க ஆரம்பிச்சிருக்கார். ஒவ்வொருத்தர் முகமா கண்ணு முன்னால வந்து போகுது. சுந்தர், ரொம்ப நன்றிப்பா . அந்த நாள் ஞாபகம் நெஞ்சிலே வந்ததே நண்பர்களே.. பொக்கிஷமாக நெஞ்சில் சுமந்த நினைவுகள் எல்லாம் ஞாபகம் வருதே.
ஷன்முகேச்வரன் : - திட்டினாலும் சிரித்துக்கொண்டே திட்டியவன். நம்பவே முடியவில்லை இவனது மறைவுச் செய்தி. Prof.கங்காதரின் ஆதர்ச மாணவன். KRP க்கே பிடித்த அதிசயப் பிறவி.
ஹாஸ்டலில் எங்கள் பலருக்கு ஆசிரியராக இருந்தவன். என்னைப்போல மர மண்டைகளுக்கும் பொறுமையாய் சொல்லித் தந்த ஆசான். எங்கள் தகுதி பாராமல் பாசமாய் பழகினாய்.
நேரங்காலம் பார்க்காமல் யார் அழைத்தாலும் சென்று விடுவாயே ஷன்முகேசா, அழைத்தது காலன் என்று தெரிந்துமா சென்றாய் ?

லெஸ்லி, வசந்தன் & co : தமிழ்வாணன் , சாண்டில்யன் படித்துக்கொண்டிருந்த எங்களை நல்ல எழுத்தாளர்களையும் நல்ல தமிழை சுவாசிக்கக் கற்றுத்தந்தவர்கள். . கொஞ்சம் பொறுமை (நமக்கு!) இருந்தால் பழக மிகவும் இனிமையானவர்கள். நீங்கள் எங்கிருந்தாலும் சகலசவுபாக்கியங்களையும் பெற்று வாழுங்கள்.

ஜாலி கோஷ்டி: பாட்டு (?) பாடிக்கொண்டே சமையல் (?) செய்யும் நிமலேந்திரன், வகை வகையாக விசில் அடிக்கும், சரளமாக ஜோக் அடிக்கும் ரவிராஜ், கொசுவையே திருப்பிக் கடிக்கும் விஜயராமச்சந்திரன், என்று நினைவில் இருந்து நீங்காத எத்தனைப்பேர். ஞாயிறு காலை தூர்தர்ஷன் ஹிந்தி ராமாயணத்தை on-the-fly மொழி பெயர்க்கும் இளமாறனுக்கு எத்தனை ரசிகர்கள். அனுமனும் ராவணனும் பேசும் டயலாக் சென்சார் இல்லாமல் இங்கு போட முடியாது.
சுந்தர், சீ.ஜே, அஷோக், கண்ணன், B.J முரளி கிருஷ்ணன் என்று இன்னொரு கோஷ்டி என்று நினைக்கிறேன். ஆடிட்டோரியத்தில் செய்த கலாட்டாக்கள் நினைவில் உள்ளதா BJ? அசராமல் பீலா விடும் ரவிகாந்த் இப்போது என்ன செய்கிறாய்? சிரிக்காமல் ஜோக் அடிக்கும் மனோகர், உனது டெக்ஸ் டைல்ஸ் பிசினெஸ் நலமா?

படிப்பு கோஷ்டி: லோகநாதன், முநாவர், கண்ணன் என்று படித்து முன்னே போனவர்கள் இப்போது எப்படி இருக்கிறீர்கள்?

எப்போதும் ஆல்-பாஸ் செய்யும் மகளிர் அணி நலமாகத்தானே இருக்கறீங்க ? மாலதிக்குக் காலேஜ் போகும் மகள் (அதுவும் tachometer பறக்க விடுதா?) இருப்பது ஆச்சர்யமா இருக்குது. நமக்கெல்லாம் அவ்வளவா வயசு ஆயிடுச்சி? என்னோட பொண்ணு இப்போதான் கிண்டர் கார்டன் போகப்போவுது. காலேஜ் வரை யோசிச்சா இப்பவே கண்ணைக் கட்டுதே !

என்னை இப்போ பாத்தாக்க யாரும் கண்டு பிடிக்க முடியாது. நிறைய வெயிட் போட்டுட்டேன், தலை வெளியேயும் காலி ஆயிடுச்சி. பக்கத்து தெருக்காரன் இளங்கோ இப்போதும் தினமும் டென்னிஸ் தவறுவதே இல்லை. அப்பப்போ அவங்கூட தாக சாந்தி செய்யறபோது எல்லார் பத்தியும் பேச்சு வரும். அடுத்த முறை ஊருக்கு வரும்போது முடிஞ்சவரை ஒரு சந்திப்பு வெச்சுக்கணும்.
அப்புறம் மறுபடியும் பாக்கலாம்.
.......................
மக்கள் லிஸ்ட் வளருது. ஒவ்வொருத்தரும் இத்தன பேருங்கள ஞாபகம் வச்சிக்கிறது ஆச்சர்யமாவே இல்ல. எல்லாரும் அப்படி பழகி இருக்காங்க.
..............
ஆதி இளங்கோ : காலேஜில எனக்கு ரொம்ப தோஸ்த். வன்முறைக் கவிஞன். அதாவது, எதிர்ல ஆளு வந்தா, பிடிச்சி மடக்கி, மிரட்டி ஒரு கவிதையும் தத்துவமும் சொல்லாமல் விடாத தத்துவக் கவி. ( திண்டுக்கல் சாரதி படத்தில் வரும் காக்கை கவிராயர் போல ).
கப்பல்ல உலகம் பூரா சுத்துனதா செவி வழி செய்தி. இப்ப எங்கப்பா இருக்கே?

ஞானசேகரன்: சாந்த சொரூபி. தானே பாடலை இயற்றி, இசை அமைத்து, அதைத் தானே கேட்கும் கலைஞன். வேலை தேடி அலையும்போது ஒருமுறை கடலூரில் பார்த்தேன். நல்ல வாசனையான மீன் குழம்பு சாப்பாடு கிடைத்தது. அதற்காகவாவது மறுபடியும் சந்திக்க வேண்டும்.

சுஜாதா: ஒருமுறை டீ.சி. மோட்டார் பற்றி கட்டுரை எழுதி, அதை பேரா. தனகோடி வகுப்பறையில் படித்துக்காட்டியது நினைவு இருக்கிறதா? அந்தக் காப்பி கோடி பெரும்.

சத்தியமூர்த்தி : மறக்கக் கூடிய முகமா? நமக்குள்ள ஒரு சின்ன கணக்கு இருக்குது. அப்புறம் தனியா பேசுவோம்.

புவனேஸ்வரன்: விவேகானந்தர் நம்ம காலேஜ்ல சேந்து, வெளிய போனப்ப ப்ரேமானந்தாவா போனதப் பாத்துருக்கீங்களா ? புவனேஸ்வரன் எங்க ஊரு விவேகானந்தர். பள்ளியிலும் என்னோட கிளாஸ் மேட். அவரைத் திருத்துன பெரும சேலத்தையே சேரும்.

... இன்னும் வருவார்கள். ..