Monday, August 17, 2009

பசங்க ....

இன்னும் ஒரு வாரத்தில் என் மகள் பாரதி கிண்டர்-கார்டன் வகுப்பில் சேரப் போகிறாள். நாள் முழுதும் கட்டுப்பாடுகள் ஏதுமின்றி விளையாடிக் கொண்டிருந்தவள் இப்போது ஏழு மணி நேரத்துக்கு ஆசிரியர் மேற்பார்வையில் இருக்க வேண்டும். வீட்டிலிருந்து இரண்டு மைல் தொலைவில்தான் அரசுப் பள்ளி, இருந்தாலும் மனது லேசான பதற்றத்துடன் குறு குறுவென்று இருக்கிறது. வயது போன காலத்தில் பிள்ளை பெற்றால், பெற்றோருக்கு இப்படித்தான் இருக்குமோ?

நான் வசிக்கும் டெக்சஸ் மாநிலத்தில், தம் அதிகாரத்துட்பட்ட எல்லைக்குள் சொத்து வரி விதித்துக் கொள்ள 'ஒருங்கிணைந்த பள்ளிகள் நிர்வாகத்துக்கு' உரிமை உண்டு. இது தவிர அரசாங்கம் சிறிதளவு நிதி உதவி அளிக்கும். இது ஒருவகையில் உள்ளாட்சி அமைப்பு மாதிரி. வரி விதிக்கும் அதிகாரம், கல்வித்துறைக்கு மிகவும் அவசியம். ஏதாவது பற்றக்குறை என்றால் மாநில அரசு கை வைக்கும் முதல் துறை, கல்விதான். இங்கு பள்ளிகளுக்கும், அங்கு படிக்கும் மாணவர்கள் திறமையை வைத்து ரேட்டிங் முறை உண்டு. நம் விருப்பப்படி விரும்பிய பள்ளியில் சேர முடியாது. நம் வீட்டு முகவரிக்கு ஏற்றார் போல் இன்னின்ன பள்ளியில் தான் சேர முடியும். ஒவ்வொரு பள்ளிக்கூடத்துக்கும் எல்லைக் கோடுகள் உண்டு. இந்த எல்லையும் சில வருடங்களுக்கு ஒரு முறை என்று மாற்றி அமைக்கப்படும். அடிப்படைக் காரணங்கள் இரண்டு. முதலாவது, சிறு குழந்தைகள் கல்வி கற்பதற்காக நிறைய தூரம் செல்லக்கூடாது, இரண்டாவது, அந்தந்த எல்லைக்குள் அடங்கும் மக்கள் இடப்பெயர்ச்சி. மேலும் நடுநிலைப் பள்ளி, உயர்நிலைப் பள்ளி என்று போகப்போக, எல்லைக்கோடுகள் விரிவடைந்து கொண்டு போகும். இந்தக் காரணங்களால் சிறந்த பள்ளிகளின் எல்லைக்குள் வரும் வீடுகள் விலை மிக அதிகமாக இருக்கும். இதன் பக்க விளைவு, அவ்வளவு விலையில் வீடு வாங்க, வசிக்க, இயலாதவர்கள் பிள்ளைகள், மோசமான பள்ளிகளுக்குப் போய் சேருகின்றனர். இது முடிவில்லாத சுழற்சி. இதில் பாதிக்கபடுபவர்கள் பெரும்பாலும் கறுப்பின மக்கள், மற்றும் ஸ்பானிஷ் மொழி பேசும் தென்னமெரிக்கப் புலம் பெயர்ந்தவர்கள்.


நான் பள்ளிக்குச் சென்ற முதல் நாள் இன்னும் நினைவு இருக்கிறது. சென்னை சைதாப்பேட்டை டாட்-ஹன்டர் நகர் ஒட்டி இருக்கும் அரசு மாடல் பள்ளியில்தான் என் வித்யாப்யாசம் ஆரம்பமானது. மிகவும் விஸ்தாரமான நிலப்பரப்பில் ஆசிரியர் பயிற்சிப் பள்ளியும் அதை ஒட்டியே இருக்கும். அண்ணா சாலையில் சைதாப்பேட்டையைத் தாண்டி செல்பவர்கள், ஆங்கிலேயர் காலத்திய, பிரம்மாண்டமான இந்தப் பள்ளியைப் பார்க்காமல் இருக்க முடியாது.

முதல் நாள் காலை, கையில் ஒரு பொறையும் ( ?!) பையில் ஒரு சிலேட்டு, இட்டிலிப் பொட்டலம், இவற்றுடன், பக்கத்துப் போர்ஷன் எட்டாங்கிளாஸ் படிக்கும் ஒரு அக்கா அழைத்துச் செல்ல, நானும், மேலும் மூன்று குளுவான்களும் புறப்பட்டோம். நான் படித்த காலத்தில் அந்தப் பள்ளியின் பாடமுறை அமெரிக்க முறையைப் போல இருந்தது. முதல்வர் கலைஞர் யோசனையில், நாவலர் கல்வி அமைச்சராக இருந்தபோது அந்த பரிசோதனை செய்யப்பட்டது. காலை வேளையில்தான் புத்தகப் படிப்பு. மதியத்துக்கு, பாட்டு, நாடகம், ஓவியம், கைவினை, கதை சொல்லுதல், இப்படி. பெரிய பை தூக்கிக் கொண்டு போகத் தேவை இல்லை. 'ஹோம் வொர்க்' இல்லை. ஒவ்வொரு வகுப்பு அலமாரியிலும் டெஸ்ட் நோட் வைத்திருப்போம். சர்ப்ரைஸ் டெஸ்ட் நடக்கும். சமயங்களில் மாணவர்களை விட்டுப் பாடம் எடுக்கச் சொல்லுவார்கள். பள்ளிக்கூடமே சொர்க்கமாக இருக்கும். பிறகு, தொலை நோக்கு இல்லாத ஆட்சியாளர்களால் எல்லாம் தடம் மாறிப் போனது என்றுகேள்விப்பட்டேன். .
( இந்தப் பள்ளியை ஒட்டினார்போலுள்ள இடத்தில் நரிக்குறவர் நல்வாழ்வுக்காக, கலைஞர் நிறைய தொகுப்பு வீடுகள் கட்டிக் கொடுத்தார். வீட்டில் குடியேறியவர்கள் முதலில் செய்த காரியம், வீட்டுக்குள் எம்.ஜி.ஆர். படம் மாட்டி விட்டு, வெளியே சுவற்றில் 'கருணாநிதி ஒழிக ' என்று எழுதியதுதான். இதைத்தான் அவர் முகராசிஎன்பார். )

கல்வியைப் பற்றித் தொலை நோக்கில் சிந்தித்த மற்றொரு தலைவர் பெருந்தலைவர் காமராஜர். பள்ளி செல்லும் சிறார்கள் நீண்ட தூரம் நடக்கக் கூடாது என்று எல்லா ஊர்களிலும் ஏராளமான ஆரம்பப் பள்ளிகள் தொடங்கியவர் காமராஜர். படிக்க வரும் குழந்தைகள் பட்டினியுடன் எப்படிப் படிக்க முடியும் என்று மதிய உணவுத் திட்டத்தையும் கொண்டு வந்தார். மக்களின் இன்றைய ஆங்கிலப் பள்ளி, இன்ஸ்டன்ட் ரிசல்ட், மோகத்தில் இதைப் பற்றி மேற்கொண்டு பேசுவதில் என்ன உபயோகமும் இல்லை.

தந்தை தன் பெண்ணிடம் கூறுவது -- பாவேந்தர் பாரதிதாசன்:

தலைவாரிப் பூச்சூடி உன்னைப் -- பாட
சாலைக்குப் போ என்று சொன்னால் உன் அன்னை!
சிலைபோல ஏனங்கு நின்றாய்? -- நீ
சிந்தாத கண்ணீரை என்சிந்து கின்றாய்?
விலைபோட்டு வாங்கவா முடியும்? -- கல்வி
வேளை தோறும் கற்று வருவதால் படியும்!
மலைவாழை அல்லவோ கல்வி? -- நீ
வாயார உண்ணுவாய் போ என் புதல்வி!
படியாத பெண்ணாயிருந்தால் -- கேலி
பண்ணுவார் உன்னை இவ்வூரார் தெரிந்தால்!
கடிகாரம் ஓடுமுன் ஓடு! -- என்
கண்ணல்ல? அண்டைவீட்டுப் பெண்களோடு!
கடிதாய் இருக்குமிப் பொது -- கல்வி
கற்றிடக் கற்றிடத் தெரியும் அப்போது!
கடல்சூழ்ந்த இத்தமிழ் நாடு -- பெண்
கல்வி பெண்கல்வி என்கின்றதன் போடு!

1 comment:

Information said...

நல்ல கவிதையை ஞாபகப் படுத்தியமைக்கு மிக்க நன்றி

Post a Comment