Monday, August 10, 2009

மயக்கமா.. கலக்கமா .. - அமெரிக்கா

மயக்கமா ? கலக்கமா ? மனதிலே குழப்பமா ? வாழ்க்கையில் நடுக்கமா ?
நாகரீக அவசர உலகின் மனிதர்கள் எவரிடமும் 'விக்ஸ் ஆக்ஷன்- 500' ஸ்டைலில் மேற்கண்ட கேள்விகள் கேட்கப்பட்டால் வரும் பதில் 'ஆமாம் சார் ஆமாம் ' என்பதுதான். நம் வாழ்வில் சிலமுறையாவது மனச்சிக்கலை எதிர்கொண்டே இருப்போம். இதற்கு எளிமையான பக்க விளைவுகள் இல்லாத தீர்வைத் தருகிறார் கண்ணதாசன்.
' வாழ்க்கை என்றால் ஆயிரம் இருக்கும்
வாசல் தோறும் வேதனை இருக்கும்
வந்த துன்பம் எதுவென்றாலும்
வாடி நின்றால் ஓடுவதில்லை

உனக்கும் கீழே உள்ளவர் கோடி
நினைத்துப் பார்த்து நிம்மதி நாடு '




கொள்ளை லாபமடிக்கும் பேராசைக்கார அமெரிக்க மருந்துக் கம்பெனிகள் வேறு வழியைக் காட்டுகின்றன. தூக்கமின்மை, பரபரப்பு, மனச்சோர்வு, மன அழுத்தம், அலைபாயும் மனம், கோபம், வெட்கம், இன்னபிற மனிதனின் இயற்கையான மன நிலைகள், அறிகுறிகள் அனைத்துக்கும் வித விதமான மருந்துகளை மருத்துவர்கள் மூலம் சிபாரிசு செய்கிறார்கள். மருத்துவர்களுக்கோ நோயாளிகளுடன் அதிகபட்சமாக ஐந்து நிமிடம் பேசிவிட்டு உடனே மருந்துகள் கொடுத்து விடுகிறார்கள். 'நோய் நாடி நோய் முதல் நாடி, அது தணிக்கும் வாய்நாடி வாய்ப்பச் செயல்' இல்லை. வருடத்தில் பல ஆயிரங்கோடி டாலர் மதிப்புள்ள மன-அழுத்த மாத்திரைகள் அமெரிக்காவில் விற்பனையாகின்றன. இந்த மருந்துகளின் பக்க விளைவுகள் பற்றி ஏராளமான ஆராய்ச்சி முடிவுகள் வந்துள்ளன. இதில் கவலையுடன் கவனிக்க வேண்டிய பக்க விளைவுகள், தற்கொலை மற்றும் கொலை செய்யத் தோன்றுவது. prozac, antidepressant என்று கூகுளில் தேடுங்கள். இது போதாது என்று, Booster for anti depressant என்று புதிய கொடுமைகளும் வருகின்றன. தொலைக்காட்சியில் வரும் விளம்பரங்களில் மூன்றில் ஒரு பகுதி இது போன்ற மருந்துகளுக்குத்தான்.

இதையெல்லாம் தூக்கி சாப்பிடும் படியான அதிர்ச்சியான விஷயம் என்னவென்றால், பள்ளிக்குச் செல்லும் ஆறு வயதுக் குழந்தைகளுக்கும் ADHD என்ற முத்திரை குத்தி, இது போன்ற மருந்துகளைப் பள்ளி நிவாகம் சிபாரிசு செய்வதுதான். காரணம், குறிப்பிட்ட சிறுவனோ சிறுமியோ பாடத்தை ஒழுங்காக கவனிக்காமல் விளையாடிக் கொண்டிருப்பதும், ஆசிரியை சொல்வதைக் கேட்காததும், நிறையக் குறும்பு செய்வதும்தான். அந்த வயதுக் குழந்தைகள் பின் எப்படித்தான் இருப்பார்கள் ? இது குழந்தைகளின் இயற்கையான வளர்ச்சியின் ஒரு பகுதி. அதை எப்படி சமாளிப்பது என்ற அடிப்படை அறிவு கூட இல்லாத ஆசிரியர்களும், தொல்லை விட்டால் போதும் என்று நினைக்கும் பெற்றோரும் இருக்கும் வரை இது போன்ற குழந்தைகளின் தலைவிதி என்ன ஆகும்? இவர்களெல்லாம் பின்னாளில் சமூகத்தை எப்படி எதிர் கொள்வார்கள் ? இதெல்லாம் வெகுஜன மீடியாவில் விவாதிக்கப் படுவதில்லை.
( இதை விடக் கொடுமை, அதாவது எல்.கே.ஜி படிக்கும் குழந்தைகளை மாலை ட்யூஷனுக்கு அனுப்பி விட்டு சீரியல் பார்க்கும் தாய்மார்களை, இப்போது தமிழகத்தில் பார்த்தேன் ).

இரவில் தூங்குவதற்கு மாத்திரை, காலையில் விழிப்பதற்கு மாத்திரை, சிறுநீர் வர, கழிவறை சுகமாக, மேலும் மாத்திரை, கோபம் அடங்க, வெட்கம் போக, கவலை தீர, கலவி நீள, இப்படி எல்லாவற்றுக்கும் மருத்துவர்கள் பரிந்துரைக்கின்றார்கள். சென்ற முப்பத்தாறு வருடங்களில், அமெரிக்காவில் நோயாளிகளின் விகிதம் இரட்டிப்பாகி உள்ளதாக ஆய்வுகள் சொல்கின்றன. இவற்றுக்கு மூல காரணம் கண்டு கொள்வதில் மக்களுக்கும் நாட்டமில்லை, இதுவரை இருந்த அரசாங்கங்களும் கண்டு கொள்ளவில்லை. வெகு சுகமாக வாழப் பழகி விட்ட மக்களுக்கு, மாத்திரையாலே மாங்காய் விழும் என்ற நப்பாசைதான். பின்னர் அதற்கே அடிமையாகி, தம் கையிருப்பையும் இழந்து ஆண்டிகளாகி விடுகிறார்கள். பேராசை மருத்துவர்களால் தவறாக வழி காட்டப்பட்டு, கிலோ கணக்கில் மருந்து சாப்பிட்டு, அகால மரணமடைந்தான் பாப் மன்னன் மைக்கேல் ஜாக்சன்.

இந்தியாவில் இவ்வளவு மன அழுத்தங்கள் இல்லையென்றாலும், இப்போது பெருகி வரும் மேல்நாட்டுக் கலாச்சார மோகத்தில், மிக அதிக அளவில் குடும்பங்கள் சிதைகின்றன. திருமணமாகி வரும் பெண்கள், கணவன் சம்பாதிப்பது அனைத்தும் தனக்கே வேண்டும் என்ற ஆசையில், எவ்வளவு சீக்கிரம் முடியுமோ அவ்வளவு சீக்கிரம் குடும்பத்தை உடைத்து வெளியே தனிக்குடித்தனம் சென்று விடிகிறார்கள். இதில் பெரும்பான்மையாக, பொருளாதாரத் தோல்வியில் முடிந்து, முன்பு இருந்த moral support -ஐ இழக்கிறார்கள். பிறகென்ன, அமெரிக்கன் ஸ்டைல் வாழ்வுக்கு, அமெரிக்கன் ஸ்டைல் பிரச்னைகள்தான் வரும்.

மகாபாரதம், வனபர்வம், நச்சுப்பொய்கையில் யட்சனுக்கும் தர்மனுக்கும் நடந்த உரையாடலில், நோய் பற்றி வரும் கேள்விகளைப் பாருங்கள்.
யட்சன்: நோயாளிக்கு நண்பன் யார்?
தருமர்: நல்ல வைத்தியன்.
யட்சன்: ஒரு மனிதன் பெறக்கூடிய லாபங்களுள் எது சிறந்தது?
தருமர்: நோயின்மை.
யட்சன்: முடிவே இல்லாத வியாதி எது?
தருமர்: பேராசை

எத்தனை உண்மை. ஒவ்வொருவரும் நிதானமாக யோசிக்க வேண்டிய விஷயம். இன்றைய அவசர உலகில், பேராசையும் கயமைத்தனமும் அல்லவா மக்களின் ஆரோக்கியத்துடன் விளையாடுகின்றன.

1 comment:

அமுதா கிருஷ்ணா said...

//இப்போது பெருகி வரும் மேல்நாட்டுக் கலாச்சார மோகத்தில், மிக அதிக அளவில் குடும்பங்கள் சிதைகின்றன. திருமணமாகி வரும் பெண்கள், கணவன் சம்பாதிப்பது அனைத்தும் தனக்கே வேண்டும் என்ற ஆசையில், எவ்வளவு சீக்கிரம் முடியுமோ அவ்வளவு சீக்கிரம் குடும்பத்தை உடைத்து வெளியே தனிக்குடித்தனம் சென்று விடிகிறார்கள்//

100% உண்மை..

Post a Comment