Friday, August 7, 2009

ரிபப்ளிகன் கட்சியும் இலவச பிரியாணி பொட்டலங்களும்


தமிழ்கத்தின் நிரந்தர முதல்வரான அகிலாண்ட நாயகி புரட்சித் தலைவியை விமர்சனம் செய்த சு.சாமியையும், மணிசங்கர் அய்யரையும் மேற்படி அம்மையாரின் அடிப்பொடிகள் துரத்தித் துரத்தி அடித்து, மகளிர் அணி 'நடனம்' போன்ற கலை நிகழ்ச்சிகளையும் நடத்தித் தாம் தின்ற பிரியாணி செரிக்கச் செய்ததை எல்லோரும் அறிவோம். ஏறக்குறைய இது போன்ற கேவலமான நிகழ்வுகள் தற்சமயம் அமெரிக்காவில் நடந்து வருகின்றன. இதற்குக் காரணம், ஒபாமா, தன் தேர்தல் வாக்குறுதிகளில் ஒன்றான 'எல்லோருக்கும் மருத்துவ வசதி' யை சட்டபூர்வமாக்க முயன்று வருகின்றார். இதற்கு ஏன் 'எய்த அம்புகளான அறியா வெள்ளையர்கள்' எதிர்ப்பு தெரிவிக்கிறார்கள் ? காரணங்களைக் கீழே பார்ப்போம்.

முன்னேறிய நாடுகளில் ஒன்றான அமெரிக்காவில், ஒரு காலத்தில், அதாவது நிக்சன் ஜனாதிபதியாவதற்கு முன்வரை,
வியாதிக்கு வைத்தியம் பார்த்துக் கொள்வது ஒரு சாதாரண விஷயமாகத்தான் இருந்தது. எல்லாவற்றிலும் ஆதாயம் தேடும் நிக்சனை கெய்சர் என்பவர் சந்தித்து, HMO போன்ற புதிய மருத்துவ இன்சூரன்ஸ் திட்டங்களையும் லாபங்களையும் விவரிக்க, வந்தது வினை. 'ரத்தம் குடிக்கக் கூலியா?' என்று அகமகிழ்ந்தார் நிக்சன். மருத்துவ மனைகளும், இன்சூரன்ஸ் கம்பெனிகளும், மருந்து கம்பெனிகளும், நோயாளிகளின் ரத்தத்தை உறிஞ்சி, அவர்களை அதீத மன அழுத்தத்துக்கு ஆளாக்கி, அவர்களை ஆண்டிகளாக்கின. மேலதிக விபரங்களுக்கு, மைக்கேல் மூரின் sicko டாக்குமெண்டரி பாருங்கள். ( http://www.michaelmoore.com/sicko/index.html). உங்களுக்கு ஒரு ஜூரம் வந்தது என்று வைத்துக்கொள்ளுங்கள். முதலில் மருத்துவரிடன் நேரம் வாங்கி அவரைப் பார்ப்பதற்கே, உங்கள் இன்சூரன்சைப் பொறுத்து இரண்டு வாரம் முதல் பல மாதம் ஆகலாம். இன்சூரன்ஸ் இல்லாவிட்டால் பேச்சே கிடையாது. பிறகு, டாக்டர் சொல்லும் பரிசோதனை எல்லாம் உங்கள் இன்சூரன்ஸ் பாலிசியில் வருகிறதா என்று பார்ப்பார்கள். இல்லையென்றால் செய்ய மாட்டர்கள். என்னென்ன வைத்தியம் பார்க்கலாம் என்று இன்சூரன்ஸ் கம்பெனிதான் முடிவு செய்யும். நிறைய பேர் பாலிசியில் கேன்சர் டெஸ்ட் செய்ய முடியாது. தமக்கு வந்தது கேன்சர் என்று தெரியாமலே பலர் இருக்கிறார்கள். வேளையில் இருப்பவர்களுக்குப் பெரும்பாலும் அவர்கள் பதவியைப் பொறுத்து கம்பெநியிலிருந்தே இன்சூரன்ஸ் காப்பீடு கிடைக்கும். கடைச் சிப்பந்திகள், உணவு விடுதிச் சிப்பந்திகள் ஆகியோருக்கு இதெல்லாம் இல்லை. சிறு சுய தொழில் செய்வோர், மற்றும் தனி நபர் காப்பீடு உள்ளவர்களுக்கோ, வேலை போனவர்களுக்கோ வியாதி வந்தால், தீர்ந்தது கணக்கு. தன் வாழ்நாள் முழுதும் சேர்த்த சொத்து எல்லாம் காலி. அவ்வளவு செலவாகும். பாலிசி புதிதாக எடுக்கும்போதோ, மற்றம் செய்யும்போதோ, ஏற்கனவே உள்ள வியாதிகளுக்குக் காப்பீடு இல்லை. இதன் மூலகாரணம், எக்கச்சக்கமாக விலை உயர்ந்த மருந்துகளும் மருத்துவமனை பில்களும். உதாரணமாக, பைசர் கம்பெனியின் வலி மாத்திரை கனடாவில் ஒரு டாலர் என்றால் அதே மாத்திரை அமெரிக்காவில் இருபத்து டாலர் வரை ஆகும். மருந்து கம்பெனிகள் அடிக்கும் கொள்ளையைப் பாருங்கள். வைத்தியம் பார்க்க வாய்ப்பில்லாமல் எத்தனையோ குழந்தைகள் அமெரிக்காவில் இறந்து போகின்றன. வசதி வாய்ப்பற்ற சிறுவர்களுக்கு மருத்துவ உதவி தரும் ஒரு திட்டத்தை (CHIP) முன்னாள் ஜனாதிபதி புஷ் மனசாட்சியே இல்லாமல் வீட்டோ செய்தான். உலக தாதாவான அமெரிக்காவின் மருத்துவ வசதி வாய்ப்பு , மொரோக்கோ நாட்டை விடவும் பின் தங்கி இருக்கிறது. நிறைய பணமில்லாவிட்டால் சாகத்தான் வேண்டும்.

இதையெல்லாம் பார்த்து, நற்கல்வி கற்றவர்கள் தொடர்ந்து குரலெழுப்பி வந்தாலும், அசுர சக்தி வாய்ந்த மருந்து கம்பெனிகளையும், இன்சூரன்ஸ் கம்பெனிகளையும் ஒன்றுமே செய்ய முடியவில்லை. கொள்ளை லாபத்துக்காக மனித உயிர்களை தூசாக மதிக்கும் கம்பெனிகள் இவை. கட்சி பேதமில்லாமல் அனேகமாக, அத்தனை செனேட் மற்றும் மக்களவை உறுப்பினர்கள்அந்தக் கம்பெனிகளின் பாக்கெட்டுக்குள். இப்போது, ஒபாமா தன் வாக்குறுதியை நிறைவேற்ற ஒரு பொது மருத்துவக் காப்பீட்டு திட்டத்தை முன வைத்து, அதற்கு ஒப்புதல் தருமாறு செனேட்டையும் மக்களவையையும் கேட்டார், இது தனியார் துறைக்குப் போட்டிதானே தவிர மாற்று இல்லை. தனியார் மருத்துவம் சார்ந்த துறைகளின் தலைவர்கள், தங்களுடைய வருடாந்திர போனஸ் மில்லியன்கள் லேசாகக் குறைய வாய்ப்பிருப்பதைக் கண்டார்கள். கொஞ்சமும் நேரத்தை வீணாக்காமல் பின்னணியிலிருந்து சூத்திரக் கயிறுகளை ஆட்ட ஆரம்பித்தார்கள். ஒபாமாவின் புரட்சிகரமான திட்டத்துக்கு அவர் சார்ந்த டெமாக்ரட் கட்சியிலேயே எதிர்ப்பு கிளம்பியது. அவர்களை சமாளிக்கவே புதிய சுகாதார திட்டத்தில் பல மாற்றங்கள் செய்யப்பட்டன. எதிர்க் கட்சியான ரிபப்ளிக்கன் கட்சியயைப் பற்றிக் கேட்க வேண்டாம். வலது சாரி Fox நியூஸ் மற்றும் இதர வெள்ளை நிறவெறி ரேடியோக்களும், ஒபாமாவை ஒரு தேச விரோதி என்றும், அமெரிக்காவை சோஷலிச நாடாக மாற்றி அழிவுப் பாதைக்கு இட்டுச் செல்கிறார் என்றும், வாங்கிய காசுக்கு வஞ்சனை செய்யாமல், கத்த ஆரம்பித்தன. அதென்னவோ தெரியவில்லை, ஒபாமா என்ன சொன்னாலும், செய்தாலும், உடனே 'நாட்டைக் காட்டிக் கொடுக்கும் தேசத் துரோகி' என்று வெறுப்பை உமிழ்பவர்களால் வசை பாடப்படுகிறார். ஒபாமா அப்படி ஒன்றும் இல்லாதவர்களுக்கு அள்ளித் தரவில்லை. கிள்ளித்தர முயற்சி செய்கிறார். அதற்கே இப்படி.

கார்ப்பரேட்டுகளின் பிடியிலும், சர்ச்சுகளின் பிடியிலும் இருக்கும் ரிபப்ளிக்கன் கட்சி இப்போது, புது விதமான போராட்டம் நடத்துகின்றது. ஆகஸ்ட் மாதம் செனேட்டுக்குக் கோடை விடுமுறை. மக்கள் பிரதிநிதிகள் தத்தமது தொகுதிகளுக்குப் போய், தான் ஏன் இந்த புதிய சுகாதார திட்டத்தை ஆதரிக்கிறேன் அல்லது எதிர்க்கிறேன் என்று விளக்க ஆரம்பித்துள்ளார்கள். அந்த கூட்டங்களுக்கு, எதிர்க் கட்சியினர் பஸ்களில் ஆட்களை ஏற்றி வருகிறார்கள். பெரும்பாலும் படிக்காத, வேலையற்ற, மற்றும் அதீத வெள்ளை நிறவெறி உள்ளவர்கள். அவர்கள் வந்து இத்தகைய விளக்கக் கூட்டங்களில், கூச்சல் போட்டுக் குழப்பம் செய்வதும், மற்றவரைத் தாக்குவதுமாக, தி.மு.க,, அ.தி.மு.க. பாணி செயல் புரிகின்றார்கள். இந்தத் திட்டமே அவர்களைப் போன்ற படிப்பறிவில்லா, வசதி, வேலையில்லா, மக்களின் நலனுக்காகத்தான் என்று, பாவம், அவர்களுக்குப் புரியவில்லை. அவர்கள் வெறும் 'பிரியாணி பொட்டல அம்புகள்தானே'. 'ஒபாமா = ஹிட்லர்' என்றெல்லாம் சின்னக் குழந்தைகளின் கையில் தட்டிகள் கொடுத்து நிற்க வைத்துள்ளார்கள். இப்படித்தான் எட்டாண்டுகளுக்கு முன்பு, புளோரிடா மயாமியில் தேர்தல் முடிந்து ஒட்டு எண்ணும்போது, அங்கே பஸ்களில் கூட்டம் கூட்டமாக ஆட்கள் வந்து, கலவரம் செய்து, ஒட்டு எண்ணிக்கையை 'முடித்து' வைத்துப் பின் புஷ் ஜெயித்ததாக அறிவிக்கப் பட்டது. மு.க. அழகிரி எல்லாம் எவ்வளவோ தேவலாம்.

நம்மூர் கலைஞர் மாதிரி எல்லோரிடமும் நல்ல பேர் வாங்க முயற்சி செய்யாமல், இந்த திட்டத்திலாவது, புஷ் மாதிரியோ, ஜெ.ஜெ, மாதிரியோ, துணிவைக் காட்டினால்தான் ஒபாமாவால் இந்த குறைந்த அளவு திட்டத்தையாவது செயல்படுத்த முடியும். He should cease to be a gentleman at least for now.

1 comment:

அமுதா கிருஷ்ணா said...

இப்ப தமிழ்நாட்டில் அரசு செயல்படுத்தி இருக்கும் மருத்துவ காப்பீட்டு திட்டம் அமெரிக்கா மாதிரி பிற்காலத்தில் மக்களை கஷ்டப்படுத்த போகிறதா??

Post a Comment