Saturday, August 29, 2009

இயற்கை என்னும் இளைய கன்னி ஏங்குகிறாள் நிலையை எண்ணி...


ஓர் உறுப்பின் அத்தனை ரத்த நாளங்களும் வெட்டப்பட்டது போல, சுற்றிலும் உள்ள நீர் ஆதாரங்கள் தடுக்கப்பட்டு, வெகு விரைவில் பாலைவனமாகும் நிலையில் உள்ளது தமிழகம். கணக்கற்ற ஏரிகளும் குளங்களும் தூர்ந்து, காணாமல் போய் விட்டன. உயிரை லேசாகப் பிடித்துக் கொண்டிருந்த ஒரு சில சிற்றாறுகளும் பெரிய மனிதர்களால் தூர்க்கப்பட்டு, கல்லூரிகளாகவும் கல்யாண மண்டபங்களாகவும் மாறி விட்டன. ஆற்று மணல் கொள்ளை பற்றிக் கேட்கவே வேண்டாம்.
"காவிரி தென்பெண்ணை பாலாறு தமிழ் கண்டதோர் வைகை பொருனைநதி
எனும் மேவிய ஆறு பலவினிலும் உயர் வெள்ளை மணல் கொண்ட தமிழ்நாடு "
( கண்ணதாசனின் spoof )


நான்கு ஆண்டுகளுக்கு முன் திருச்சி, விராலிமலை வழியாக தேசிய நெடுஞ்சாலையில் சென்றபோது வழியெங்கும் அடர்த்தியான மரங்கள். வண்டியின் மேல் கூரை சுட்ட மாதிரியே தெரியவில்லை. இரண்டு
ஆண்டுகளுக்கு முன் இதே வழியில் சென்றால் எல்லா மரங்களையும் வெட்டி விட்டு சாலை போட்டுக் கொண்டிருந்தார்கள். வெட்டப் பட்ட அந்த மரங்களுக்கு மாற்று என்ன என்ன செய்தார்கள் என்று தெரியவில்லை. இதில் ஏனும் அரசு அதிகாரி சம்பந்தப் பட்டிருந்தால் அவ்வளவுதான். 'ஒரு புளிய மரத்தின் கதை' யில் வருவது போல மரத்தை வெட்டிச் செடி நட்டக் கதை நடக்கும். நிஜத்திலேயே இப்படி ஒரு சம்பவம் பாண்டிச்சேரியில் நடந்தது. ஓர் பத்து வருடங்களுக்கு முன் என் நண்பர் ஒருவரைப் பார்க்க அவர் பணியாற்றும் விவசாயத் துறை அலுவலகத்துக்குப் போனேன். அப்போது அவர் மேற்பார்வையில் அரசுப் பண்ணையில் ஒரு நாலைந்து பேர் பெரிய அரச மரங்கள் மூன்றை வெட்டிக் கொண்டிருந்தார்கள். நான் பதைத்துப் போய் ஏன் அப்படி செய்கிறார்கள் என்று கேட்டேன். அதற்கு எந்த உணர்ச்சியும் இல்லாமல் என் நண்பர் சொன்ன பதில்,
"அடுத்த வாரம் சென்ட்ரல் மினிஸ்டர் வந்து இங்க மரம் நடப்போறார். அதுக்குத்தான் இடத்த ரெடி பண்றோம்".
"சரி, அதுக்கு ஏம்பா வளந்த மரத்த வெட்டுறீங்க?"
"ஜோசியர் வாஸ்துப் படி இந்த இடத்தான் எங்க டைரக்டர் கிட்ட சொன்னாரு"
"என்ன கேவலமா இருக்குது. நீதான் அக்ரி-ல பி.எச். டி வாங்கி இருக்கியே, நீயாவது சொல்லலாமில்ல? "
"பாஸ்கரு, நீ கவர்மென்ட்ல வேல பாத்ததில்ல. உனக்கு இதெல்லாம் புரியாது.."

இதுதான் நாகரிகம் வளர்ந்த அடையாளம். இப்போது சங்க காலத்தைப் பார்ப்போம். பரிசு வேண்டிப் பாடினாலும், மிகப் பெரும்பாலான புறநானூற்றுப் பாடல்கள் சமூகச் சிந்தனை சார்ந்ததாகவே உள்ளன. இயற்கை வளத்தைப் பெருக்கிப் பாதுகாக்க,
பாண்டியன் நெடுஞ்செழியனிடத்தில் விண்ணப்பம் வைக்கும் இந்தப் பாடலைப் பாருங்கள். இது எக்காலத்துக்கும், குறிப்பாக இன்றைக்கும், பொருந்தும்.

முழங்கு முந்நீர் முழுவதும் வளைஇப்
பரந்து பட்ட வியன் ஞாலம்
தாளின் தந்து, தம்புகழ் நிறீஇ:
ஒருதாம் ஆகிய உரவோர் உம்பல்!
ஒன்றுபத்து அடுக்கிய கோடிகடை இரீஇய

பெருமைத்து ஆக நின் ஆயுள் தானே!

நீர்த் தாழ்ந்த குறுங் காஞ்சிப்
பூக் கதூஉம் இன வாளை,
நுண் ஆரல், பரு வரால்,
குரூஉக் கெடிற்ற, குண்டு அகழி;

வான் உட்கும் வடிநீண் மதில்;
மல்லல் மூதூர் வய வேந்தே!

செல்லும் உலகத்துச் செல்வம் வேண்டினும்,

ஞாலம் காவலர் தோள்வலி முருக்கி,
ஒருநீ ஆகல் வேண்டினும், சிறந்த
நல்இசை நிறுத்தல் வேண்டினும், மற்றதன்
தகுதி கேள், இனி, மிகுதியாள!
நீர்இன்று அமையா யாக்கைக்கு எல்லாம்
உண்டி கொடுத்தோர் உயிர்கொடுத் தோரே;
உண்டி முதற்றே உணவின் பிண்டம்;
உணவெனப் படுவது நிலத்தோடு நீரே;
நீரும் நிலனும் புணரியோர் ஈண்டு
உடம்பும் உயிரும் படைத்திசி னோரே;
வித்திவான் நோக்கும் புன்புலம் கண்ணகன்

வைப்புற்று ஆயினும், நண்ணி ஆளும்
இறைவன் தாட்குஉத வாதே; அதனால்,
அடுபோர்ச் செழிய! இகழாது வல்லே
நிலன்நெளி மருங்கின் நீர்நிலை பெருகத்
தட்டோர் அம்ம, இவண்தட் டோரே;
தள்ளா தோர்இவண் தள்ளா தோரே.


பாடல் விளக்கம்:

ஆர்ப்பரிக்கும் கடல் சூழ்ந்த
இந்தப் பரந்த உலகை வென்று தம் புகழை நிலைநாட்டியவர் மரபில் வந்தவனே
உன் வாழ்நாட்கள் ஒன்று, பத்து, கோடி எனப் பல்கிப் பெருகட்டும்.
ஆற்றங்கரையில் பூவரச மரம் பூத்து,
வாளை, விரால், கெளிறு மீன் வகைகளுடன்
ஆழமான அகழிகளும், வானளாவிய மதில்களும் கொண்ட
வளமான தேசத்தின் மன்னனே,
சொர்க்கத்துக்குச் செல்லவோ, அல்லது
உலகெங்கும் உள்ள அத்தனை மன்னர்களையும் வென்று பேரரசனாக விரும்பினாலோ,
அதற்கான தகுதி என்ன என்று கேள்.
எல்லா வளமும் மிக்கக் கொண்ட மன்னனே,
நல்ல நீர் இல்லாமல் உடல் இல்லை
உடலுக்கு உணவு கொடுத்தவர்கள், உயிர் கொடுத்தவர்கள்
உணவு என்பது நிலமும் நீரும் சார்ந்தது.
நீரையும் நிலத்தையும் பெற்றவர்கள்தான்
உடம்பையும் உயிரையும் காக்க முடியும்
தரிசு நிலம் எவ்வளவு பரந்து இருந்தாலும்
அதனால் மன்னனுக்கு எந்தப் பயனும் இல்லை.
சிறிதும் கால விரயம் செய்யாமல்
நிலத்தில் பயிர்கள் வளர வேண்டிக்
குளங்களைத் தோண்ட ஏற்பாடு செய்
அவ்வகையில்தான் மன்னர் உண்மையான புகழ் பெற முடியும்.


1 comment:

Jegadeesh Kumar said...

அருமையான பயனுள்ள கட்டுரை.
பழந்தமிழின் கவித்துவம் நம்மால் எட்டவே முடியாததோ என்று தெரிகிறது.

Post a Comment