Thursday, August 6, 2009

கனவெனும் மாயா லோகத்திலே - அமெரிக்கா

போன வாரம் இங்கு நடந்த beer summit பற்றிக் கேள்விப்பட்டீர்களா? கறுப்பரான ஹார்வர்ட் பல்கலை பேராசிரியர் ஹென்றி கேட்ஸ், சீனப் பயணத்திலிருந்து திரும்பி வந்து, தன் வீட்டுக்கதவைத் திறக்க முயன்றிருக்கிறார். பயணக் களைப்போ என்னவோ, கதவைத் திறக்க முடியாமல் டாக்சி டிரைவருடன் முயற்சி செய்திருக்கிறார். மாலை அரையிருட்டில் இதைப் பார்த்த பக்கத்து வீட்டுப் பெண்மணி, பொறுப்பாக போலீசுக்குத் தகவல் சொல்ல, விரைந்து வந்த போலீசிடம் ப்ரொபசர் என்னவோ வாக்குவாதம் செய்யப்போக, தன்னுடைய அடையாள அட்டையைக் காட்டி, அதைத் தன் வீடு என்று உறுதி செய்த பின்பும், அவரை போலீஸ்காரர் கைது செய்தார். மிகவும் செல்வாக்கான ஹார்வர்ட் ப்ரொபசருக்கே இந்த நிலைமை. அவர் கருப்பராக வேறு இருந்ததால் பிரச்னை நாடு முழுதும் பேசப்பட்டது. ஒபாமாவிடம் ஒரு நிருபர் இது குறித்துக் கேட்க, அவர், போலீசின் இந்த நடவடிக்கை முட்டாள்தனமானது என்று சொன்னார். Fox News போன்ற வெறுப்பை மட்டுமே உமிழும் வலது சாரி மீடியாக்களுக்கு இதை விடப் பெரிய தீனி தேவையா? ஒபாமா எந்த வகையில் அமெரிக்காவுக்கு ஆபத்தானவர் என்று 'ஆய்வுகள்', கருத்தரங்கங்கள். நிற வெறுப்பை ஊதி ஊதிப் பற்ற வைத்தார்கள். சோ வும் சு.சாமியும் கேட்டார்கள் போங்கள். பார்த்தார் ஒபாமா. உடனே சம்பத்தப்பட்ட இருவரையும் வெள்ளை மாளிகைக்கு அழைத்து ஒரு பியர் மீட்டிங் வைத்து, பிரச்னை பெரிதாகாமல் 'சாந்தி' செய்து அனுப்பினார். அடிப்படையில், இது நிறப் பிரச்னையே அல்ல. ஒரு ஈகோ பிடித்த போலீசுக்கும், ஒரு கிறுக்குக் கிழவருக்கும் நடந்த சண்டை. அமெரிக்க மனோபாவப்படி ஒருவரும் மன்னிப்பு கேட்கத் தயாராகவில்லை. ஆமாம். அமெரிக்கர்கள் யாரிடமும் எதற்கும் மன்னிப்பு கேட்க மாட்டார்கள். பிரச்னைகள்தான் பெரிதாக வளர்ந்து போகும். இந்த இடத்தில், இப்படி ஒரு தலைவர்தான் தேவை.


இதைப்போல தமிழகத்தில் ஒரு parallel ஸ்டோரி நிகழ்வதாக நினைத்துப் பாருங்கள்..... வேண்டாம்ப்பா! இந்த ஆட்டத்துக்கு நான் வரல.

புலம் பெயர்ந்த இந்தியர்களின் வவ்வால் வாழ்க்கை
இன்றைய தேதியில் அமெரிக்காவில் தலையாய இரண்டு கவலைகள், காலையில் ஆபீஸ் போனால், அங்கு வேலை இருக்க வேண்டும். மாலையில் வீட்டுக்குப் போனால் அங்கு மனைவி இருக்க வேண்டும் ( இது வெள்ளையர்களுக்கு ). இரண்டும் எந்த நேரத்தில் யாருக்குப் போகும் என்று சொல்ல முடியாது. இந்த அழகில், மற்ற இனத்தவரை, இருபது வருடம் சேர்ந்து வேலை செய்தாலும், வீட்டுக்கு அழைப்பதில்லை. அதே போல் இந்திய புலம் பெயர்ந்தவரும் கறுப்பினத்தவரை வீட்டுக்கு அழைப்பதில்லை. இருபது சொச்ச வயதில் அமெரிக்க மண்ணை மிதிக்கும் இந்திய இளைஞர்கள் (தேசி), வேற்றுக் கிரகவாசிகள் போல், பெரும்பாலும் தரையில் கால் பதிய நடப்பதில்லை. பேச்சு, தொனி, நடை, பாவனை எல்லாம் மாறிவிடுகிறது. தனக்கு ஒரு ஐந்து அல்லது பத்து வருடம் பின்னால் வருபவர்களைப் பார்த்தால், 'இவனுங்களும் வந்துட்டானுங்களா..... ' என்று ஓர் அலட்சியப் பார்வை. நானும் ஒரு வழியாக, '97 வாக்கில் அடித்த Y2K காற்றில்தான் இங்கு வந்து சேர்ந்தேன். முதல் பஸ்ஸில் வந்தவர்கள், அடுத்த பஸ்ஸில் வந்தவர்களுடன் பேசுவதையே பெரிய உபகாரமாய் நினைப்பார்கள். பிறகு காலம் ஓடும்.. வெள்ளைக்காரங்க பார்ட்டியில் அழைப்பு இருக்காது, மெல்ல தம்முடைய சமூக இருப்பையும், இழந்த காலங்களையும் அசை போட்டுக் கொண்டு பழைய நண்பர்கள் ஞாபகத்தில் வருவார்கள். ( நான் அப்படி எல்லாம் செய்யவில்லை .. ஹீ ஹீ ). தன் மொழி பேசும் குடும்பங்களுடன் வாராந்தர கூட்டாஞ்சோறு, இந்திய கேபிள் டீ.வீ . சீரியல்கள், பிள்ளைகளின் படிப்பு, இங்கும் ஒட்டாமல், அங்கும் போகாமல், ஒரு வவ்வால் வாழ்க்கை.

மிகப்பெரிய அறிவாளிகளை இந்திய அரசாங்க அமைப்பு வஞ்சித்து விட்டது என்றும், அதனால்தான் அவர்கள் அமெரிக்கா வந்து விட்டார்கள் என்றும் யாரும் புலம்பினால், அதைவிடவும் சிறந்த காமெடி இல்லை. இந்தியாவை விட்டு இங்கு வந்தவர்களால் இந்தியாவுக்கு நஷ்டமே இல்லை. பசையான பச்சை வேண்டி என் போன்ற பலரும், அந்தஸ்து காட்ட வேண்டும் என்று சிலரும்தான் பொதுவில் இங்கு வருகிறார்கள். இங்கு வந்து, வெட்டி-ஒட்டும் வேலை செய்து விட்டு, இந்தியாவில் போய்க் காலடி வைத்ததுமே, அமெரிக்காவில் தன் வேலை பற்றிக் கலர் கலராய் ரீல் சுற்றினால், அண்ணன் கவுண்டமணியிடம் அனுப்பி வைக்கவும். ஏதோ ஒரு ஐந்து, பத்து சதவீதம்தான் இந்தியர்கள் தொழில்நுட்பத்தில் innovative ஆக இருக்கிறார்கள். மற்றபடி, breakthrough innovation எல்லாம் வெள்ளையர்களும், இஸ்ரேலியர்களும், ரஷ்யர்களும், பிற ஆசியர்களும்தான் செய்கிறார்கள்.

தொடர்புடையது : என் ஜன்னலின் வெளியே -- 1

No comments:

Post a Comment