Thursday, October 1, 2009

ரொம்ம்ம்ப நாள் பொறுத்து ஒரு முதுகெலும்புள்ள டெமாக்ரட் பிரதிநிதி.


மருத்துவ சீர் திருத்தம் தற்போது அமெரிக்காவின் மிக முக்கியமான உள்நாட்டுக் கொள்கையாக விவாதிக்கப் பட்டு வருகிறது. அடிப்படை மருத்துவ வசதிக்குக் கூட வழியில்லாத, ஏறக்குறைய நாற்பது மில்லியன் அமெரிக்க மக்களுக்கு உதவுவதற்காகவும், மருத்துவ இன்சூரன்ஸ் கம்பெனிகளின் அரக்கப் பிடியில் சிக்கி வீடு வாசலை இழந்து கொண்டிருக்கும் நடுத்தர வர்க்க மக்களுக்கு கை கொடுக்கவும் ஒரு நல்ல திட்டத்தைக் கொடுக்குமாறு, ஒபாமா, சட்ட மன்றத்தைக் கேட்டிருக்கிறார். எதிர்க் கட்சியான பணக்கார வெள்ளையர்கள் அடங்கிய கன்சர்வேடிவ் ரிபப்ளிக்கன் செனேட்டர்கள் ஒட்டு மொத்தமாகவும், டெமாக்ரட் கட்சியில் இருக்கும் சில முதுகில் குத்தும் துரோகிகளும், தனியாருக்குப் போட்டியாக வரும் எந்த திட்டத்தையும் கொண்டு வர விடாமல் முட்டுக் கட்டைப் போட்ட வண்ணம் இருக்கிறார்கள். இவர்களைப் பின்னாலிருந்து இயக்கும் கார்ப்பரேஷன்களும், ஓயாமல் பொய்ப்பிரச்சாரம் செய்யும் fox news போன்ற ஊடகங்களும் பிரமிக்க வைக்கின்றன. இவர்கள் எப்போதுமே வரலாற்றின் தவறான பக்கத்திலேயே இருந்திருக்கிறார்கள்.



டெமாக்ரட் கட்சியில் செநேட்டிலும், பிரதிகள் சபையிலும் போதிய மெஜாரிட்டி இருக்கிறது. இருந்தாலும் எந்த ஒரு திட்டத்தையும் நிறைவேற்ற தைரியம் இல்லாமல் கேனத்தனமாக புலம்பிக் கொண்டிருக்கிறார்கள். எதிர்க்கட்சியினர் மைனாரிட்டியாக இருந்தாலும், கறாராகப் பொய் பேசுவார்கள். பதிலுக்கு இவர்கள் ஒரே வழ வழா கொழ கொழா. இந்த நிலையில்தான், இரண்டு நாட்களுக்கு முன் புளோரிடா மாகாணத்து டெமாக்ரட் பிரதிநிதி, ஆலன்-கிரே-ஸ்பான் உரையாற்றினார். இவர் பிரநிதிகள் சபைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டு எட்டு மாதங்கள்தான் ஆகிறது. தன்னுடைய உரையில், "எங்களுடைய திட்டங்கள் அனைத்தையும் குற்றம் சொல்லும் ரிபப்ளிக்கன் கட்சியினர் என்ன திட்டம் வைத்திருக்கிறார்கள்? அவர்களுடைய மருத்துவ சீர்திருத்த திட்டம் இதுதான்... மக்களே, வியாதி வராமல் பார்த்துக் கொள்ளுங்கள். அப்படி வந்தால், சீக்கிரம் இறந்து போய் விடுங்கள்.. என்றார். உடனே ரிபப்ளிக்கன் கட்சியினருக்குக் கோபம் பொத்துக் கொண்டு வந்து விட்டது. வழக்கமாக நமக்குதானே இப்படியெல்லாம் பேச உரிமை இருக்கிறது, இப்போது இவனுங்களும் கிளம்பிட்டங்கனா நம்ம வியாபாரம் என்ன ஆவது? 'வரம்பு மீறிப் பேசிய ஆலன்-கிரே-ஸ்பான் உடனே மன்னிப்புக் கேட்க வேண்டும்' என்றுக் கேட்டார்கள்.
அதற்கு பதிலளித்த அவர், " நான் மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன். ஆனால் யாரிடம் தெரியுமா? சொல்கிறேன் கேளுங்கள். ஹார்வர்ட் பல்கலை நேற்றுதான் ஒரு அறிக்கையை வெளியிட்டிருக்கிறது. ஒவ்வொரு ஆண்டும் சுமாராக நாற்பத்து நாலாயிரம் அமெரிக்கர்கள், அடிப்படை மருத்துவ வசதிகள் கிடைக்காமல் மடிகிறார்கள். இப்படி மரணமடைபவர்கள் எண்ணிக்கை, ஈராக்கில் இதுவரை இறந்த அமெரிக்கர்களைவிடவும், செப்-11 இல் இறந்தவர்களை விடவும் பத்து மடங்கு அதிகம். இப்படி ஒவ்வொரு ஆண்டும் நடக்கிறது. இப்படி, மக்கள் பிரதிநிதிகளான நம்மைப் போன்ற அயோக்கியர்களால் இறக்கும் அந்த அமெரிக்க மக்களிடம் நம் சார்பில் மன்னிப்புக் கேட்கிறேன்" என்று முழங்கினார். இப்படி ஒரு அரசியல்வாதிக்குத்தான் டெமாக்ரட் கட்சியினர் காத்துக் கொண்டிருந்தார்கள். ஒரு வழியாக, முதுகெலும்பு உள்ள ஒரு டெமாக்ரட் பிரதிநிதி கிடைத்து விட்டார். இப்போது இவரைக் கார்ப்பரேஷன்கள் எப்படி ஒழித்துக் கட்டப் போகின்றன என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்கவேண்டும்.

No comments:

Post a Comment