Sunday, October 30, 2011

கடலுக்கப்பால் காந்தியப் போராட்டம் - வரலாற்றுத் தருணம்


எகிப்தில் துவங்கிய அரபு வசந்தத்தின் பாதிப்பில் இந்த செப்டம்பர் இரண்டாம் வாரம் நியூயார்க் நகரில் 'வால்ஸ்ட்ரீட் ஆக்கிரமிப்புப் போராட்டம்'  சில நூறு பேர்களுடன் தொடங்கியது.   பொதுப் பிரச்னைக்காக அமெரிக்க மக்கள் சாதாரணமாகப் போராட்டங்கள் எதுவும் நடத்துவதில்லை.  சனி-ஞாயிறு கிழமைகளில் மதியம் ஆரம்பித்து இரவு வரை தொலைக்காட்சியில் விளையாட்டுப் போட்டிகள் காட்டி மக்களைக் காயடித்து வைத்திருப்பார்கள்.   வம்பு வழக்குகளில் சிக்கினால் கடைசி வரை எழுந்திருக்கவே முடியாது என்ற பயமும் ஒரு காரணம்.   ரீகன் காலம் தொடங்கி கட்டுப்பாடுகள் நீங்கிய பகாசுர நிதி நிறுவனங்களின் கார்ப்பரேட் மெகா ஊழல்கள் படிப்பவர் கண்களைப் பிதுக்க வைக்கும்.  மக்களின் வாழ்வாதாரங்களை இவர்கள் சுரண்டிய விதம் ஹாலிவுட் படங்களை மிஞ்சிய சாகசங்கள்.  இவர்கள் போடும் எலும்புத் துண்டுகளுக்காக அனைத்து சட்டங்களை இயற்றியும் வளைத்தும் செநேட்டர்களும் ஜட்ஜுகளும் பணிந்து கிடக்கிறார்கள் .  தேர்ந்த கணித விற்பன்னர்களையும் பிசிக்ஸ் நிபுணர்களையும் வைத்து இவர்கள் ஆடிய சூதாட்டங்கள் மனிதக் கற்பனைகளுக்கு அப்பாற்பட்டவை.  கடனில் சிக்கி வீடிழந்தவர்களும், உற்பத்தியை வேறு நாடுகளுக்குக் கொண்டு சென்றதால் வேலை இழந்தவர்களும் இத்தனை நாட்கள் கார்ப்பரேட்-அரசாங்க-நீதிமன்ற கூட்டுச் சதிக்கு ஈடு கொடுக்க முடியாமல் உள்ளுக்குள் குமுறியபடியே விதியை நொந்தபடியே நாட்களைத் தள்ளி வந்தார்கள்.  ஐரோப்பிய நாடுகளைப் போலெல்லாம் அமெரிக்காவில் ஒருநாளும் மக்கள் வெளியே வந்து போராட மாட்டார்கள் என்றே பலரும் நம்பி வந்தோம்.  ஏனென்றால் நிஜத்தில் அமெரிக்கர்கள் மிகவும் பயந்தவர்கள்.