Saturday, December 31, 2016

தமன்னாவும் தமிழ்நாடும்

1290ல் டில்லியில் பதவியைப் பிடித்த 'ஜலாலுதீன் கில்ஜி' இரக்க குணம் கொண்ட மென்மையான சுல்தான்.  'நான் ஆணையிட்டால்,  அது நடந்து விட்டால், இங்கு ஏழைகள் வேதனைப் படமாட்டார்.  உடல் உழைக்கச் சொல்வேன், அதில் பிழைக்கச் சொல்வேன், அவர் உரிமைப் பொருள்களைத் தொட மாடடேன்" என்று ஆட்சி புரிந்து வந்தவர்.  எளிதில் உணர்ச்சி வசப்படும் இவர், தம் சகோதரன் மகனும், பின்னாளில் மருமகனுமான 'அலாவுதீன்  கில்ஜி' யை குழந்தையிலிருந்து வளர்த்து வந்தவர்.  பக்கத்து நாடுகளின் மீது அடிக்கடி படையெடுத்துச் சென்று, சூறையாடிய செல்வங்களை சுல்தானின் காலடியில் குவித்தான் அலாவுதீன்.  "வெற்றி மீது வெற்றி வந்து என்னைச் சேரும், அதை வாங்கித் தந்த பெருமை  எல்லாம் உன்னைச்  சேரும்" என்று புளங்காகிதம் அடைந்தார் ஜலாலுதீன்.  இந்த நம்பிக்கையினால், சுல்தானின் அனுமதி இல்லாமலேயே தனிப்படை வைத்துக் கொண்டு மேலும் பல நாடுகளின் மீது படையெடுத்து அலாவுதீன் செல்வத்தையும் மேலும் படையையும் குவித்துக்கொண்டான்.

Tuesday, October 25, 2016

எந்த நாளும் திருவிழா - பாகம் 3 (அல்லது ) 2016 - Are You Not Entertained ?


நவம்பர் 8 எப்போது வரும், கடந்த இரண்டு ஆண்டுகளாகக் கண்டு வரும் இந்தக் கொடுங்கனவு எப்போது முடியும் என்று தேசமே காத்திருக்கிறது.  எப்படிப் பார்த்தாலும் அமெரிக்க வரலாற்றில் இடம் பிடிக்கப் போகும் தேர்தல் இது.  முதன்முறையாக ஒரு பெண் வேட்பாளர் அதிபர் பதவிக்குப் போட்டியிடும் தேர்தல் இது.   பாகிஸ்தான், வங்காளதேசம் போன்ற நாடுகளிலேயே பெண்கள் பிரதமர்களாக இருந்திருக்கிறார்கள்.  மிகவும் முன்னேறிய நாட்டில் இப்போதுதான் சாத்தியமாகியுள்ளது.   சக்தி வாய்ந்த செனேட்டின்  உறுப்பினர்களில் 5ல் ஒரு பங்கு மட்டுமே பெண்கள்.  அரசியல் அதிகாரம் என்பது இங்கு வெள்ளை ஆண்களின் ஏக போக உரிமையாகவே இருந்து வருகிறது.  பரவலாகி வரும் கல்வி, பிறநாட்டிலிருந்து வந்த குடியேறிகள், தொழில் நுட்பம், பொருளாதாரம்,  ஆகிய காரணிகளால் அந்தக் கண்ணாடித் தளம் விரிசல் விட ஆரம்பித்துள்ளது.

Tuesday, June 28, 2016

எந்த நாளும் திருவிழா - பாகம் 2

சென்ற பகுதியில் முதல்நிலை வேட்பாளர் தேர்தல் முறையைப் பார்த்தோம்.   எளிமையாகத் தெரிந்தாலும் அது உள்ளபடியே மிகவும் குழப்பமான, அர்த்தமில்லாத முறை.  1968 வாக்கில்தான் அந்த முறை வந்தது. வருடம் முழுதும் நடக்கும் தேர்தலினால் டி.விக்களுக்கு எக்கச்சக்கமான விளம்பர வருமானம்.  ஒரு பரபரப்பை ஏற்படுத்தி, அந்த சூடு தணியாமல் பார்த்துக்கொண்டால்தான் டி.விக்களுக்கு நல்ல வருமானம்.  இது போக, ரேடியோ, இன்டர்நெட் விளம்பரம்,சம்பளத்துக்கு வேலை செய்யும் ஆலோசகர்கள்,  பயணச் செலவு, கூட்டத்திற்கான செலவு என்று பெரிய பட்ஜெட் வேண்டும்.  ஒரு ஜனாதிபதி வேட்பாளர் சுமாராக 1 பில்லியன் டாலர் செலவழிக்க வேண்டும்.  அதற்கு நிதி திரட்ட வேண்டும்.

Tuesday, June 21, 2016

எந்த நாளும் திருவிழா - பாகம் 1

 
போன வாரம் பாண்டியில் உறவினர்களோடு பேசியபோது,  "என்னப்பா இது அநியாயமா இருக்கு.  நாராயணசாமி எலெக்ஷன்ல நிக்காம சி.எம். ஆயிட்டாரு.  எங்கெல்லாம் எப்பதான் அமேரிக்கா மாதிரி வரப்போவுதோ தெரியல". என்றனர்.  "சரி, இங்க எப்படி எலக்ஷன் நடக்குது தெரியுமா?" என்றேன்.  "அவ்வளவா தெரியாது" என்று பதில் வந்தது.   அவர்களுக்காகவும், மற்ற நண்பர்களுக்காகவும் உலகின் இரண்டாவது பெரிய மக்களாட்சியின் தேர்தல் கூத்துகளை இங்கு பதிவேற்றம் செய்கிறேன்

Friday, May 20, 2016

மகேசன் தீர்ப்பு எனும் மாம்பழம்

ஐந்தாண்டுகளாக பக்கவாதம் வந்து படுத்துக்கொண்டிருந்த அரசாங்கத்தையே மறுபடியும் மக்கள் எப்படி தேர்ந்தெடுத்தார்கள் என்பது,  டாக்டரேட் செய்யக்கூடிய ஒரு சப்ஜெக்ட்.  வசூலைத் தவிர வேறு எந்த வகையிலும் செயல்பாடு இல்லை.  சின்னச்சின்ன நியாயமான போராட்டங்களைக் கூட போலிசை வைத்து அடக்குவது,  பத்திரிக்கைகளுக்கு அவதூறு வழக்குகள் மூலம் வாய்ப் பூட்டு போடுவது,  எந்த அமைப்பையும் நம்பாமல், ஒய்வு பெற்ற சில குறிப்பிட்ட அதிகாரிகளை மட்டுமே வைத்துக்கொண்டு ஆட்சி செய்வது, என்று  ஜனநாயக அமைப்பே கேலிக்கூத்தாக மாறியது.  

Monday, March 28, 2016

மெட்ராஸ் ஷேத்ரே



  
Disclaimer: எழுத்தாளர் ஜெயமோகனின் நெல்லை ஜங்க்ஷன் கீதையை சென்னை எக்மோருக்கு மாற்றியுள்ளேன்...
"ஹல்லோ,  துலுக்கானமா?  கிண்டி கெஜாவ எக்மோர் டேசன் கேட்டாண்ட ஸ்கெட்ச் போட்டுத் தூக்கறன்னு அட்வான்ஸ் வாங்கிக்னு 'கொக்கி அர்ச்சுனனும்'  'கோனாரு கோவாலும்' போனானுங்க.  இன்னாடா பண்றானுங்க இவ்வ்வ்ளோ நேரம்?" என்று பேட்டை பழைய வஸ்தாது, 'நொள்ளக்கண்ணு கபாலி', தன் மச்சானிடம் செல்போனில் கேட்டான்.
பழக்கப்பட்ட பெட்டிக்கடை பின்னால் மறைந்து நின்று கொண்டு செல்போனில் மெல்லிய குரலில் துலுக்காணம்: "தோ, மாமு,  நாகர்கோயிலு எஸ்ப்ரஸ்ல இருந்து கெஜாவும், மாமங்காரன் கன்ஸாமியும், கூட கொஞ்சம்பேரும் செட்டா வர்றானுங்கபா.  கோனாரு இப்ப கொக்கியக் கூட்டிக்னு டேசன் நடு சென்டர்ல நிறுத்தராம்பா.  அப்ப கோவாலு  சொன்னத நான் உன்னாண்ட சொல்றேன்.