Saturday, December 31, 2016

தமன்னாவும் தமிழ்நாடும்

1290ல் டில்லியில் பதவியைப் பிடித்த 'ஜலாலுதீன் கில்ஜி' இரக்க குணம் கொண்ட மென்மையான சுல்தான்.  'நான் ஆணையிட்டால்,  அது நடந்து விட்டால், இங்கு ஏழைகள் வேதனைப் படமாட்டார்.  உடல் உழைக்கச் சொல்வேன், அதில் பிழைக்கச் சொல்வேன், அவர் உரிமைப் பொருள்களைத் தொட மாடடேன்" என்று ஆட்சி புரிந்து வந்தவர்.  எளிதில் உணர்ச்சி வசப்படும் இவர், தம் சகோதரன் மகனும், பின்னாளில் மருமகனுமான 'அலாவுதீன்  கில்ஜி' யை குழந்தையிலிருந்து வளர்த்து வந்தவர்.  பக்கத்து நாடுகளின் மீது அடிக்கடி படையெடுத்துச் சென்று, சூறையாடிய செல்வங்களை சுல்தானின் காலடியில் குவித்தான் அலாவுதீன்.  "வெற்றி மீது வெற்றி வந்து என்னைச் சேரும், அதை வாங்கித் தந்த பெருமை  எல்லாம் உன்னைச்  சேரும்" என்று புளங்காகிதம் அடைந்தார் ஜலாலுதீன்.  இந்த நம்பிக்கையினால், சுல்தானின் அனுமதி இல்லாமலேயே தனிப்படை வைத்துக் கொண்டு மேலும் பல நாடுகளின் மீது படையெடுத்து அலாவுதீன் செல்வத்தையும் மேலும் படையையும் குவித்துக்கொண்டான்.

தேவகிரியை வென்று பெரும் செல்வத்துடன் திரும்பிய அலாவுதீனை வரவேற்க சென்ற சுல்தான் ஜலாலுதீன், முன்புறம் மருமகன் பணிந்து வணங்க,  பின்புறம் மருமகனின் வீரனால் தலை துண்டிக்கப் பட்டு விழுந்தார்.  ஆரம்பத்தில் வெற்றிகள் குவிந்தாலும் கடவுளின் தண்டனை அலாவுதீனுக்குக் காத்திருந்தது.  என்ன, கொஞ்சம் காலம் பிடித்தது.

பின்னாளில் தனக்கு எதிரியாகக் கூடியவர் என்று நினைத்த எவரையும் விட்டு வைத்ததில்லை.  மிக மிக நெருங்கிய விசுவாசிகளைத் தவிர யாரையும் அவர் நம்பியதில்லை.  தன்னைத் தவிர இன்னொருவர் பிரபலமாகக் கருதப் படுவதை அலாவுதீனால் தங்க முடிந்ததில்லை.  தன்னுடைய தளபதி, மாவீரன் ஜாபர்கான் மங்கோலியர்களுடனான போரில் வீழ்ந்தபோது, ' அப்பாடா ஒழிந்தான்' என்று சந்தோஷமே அடைந்தான்.  ஒருமுறை, சந்தேகத்தின் பேரில் ஒரே இரவில் முப்பதாயிரம் மங்கோலிய முஸ்லிலிம்கள் வெட்டிச்  சாய்க்கப் பட்டனர்.  இந்த விஷயத்தில் அலாவுதீன் சாதி மத பேதமே பார்த்ததில்லை.

குஜராத் மீதான போரில் 'மாலிக் கபூர் ' எனும் ஓர் 'ஆயிரம் தினார் அடிமை' (https://en.wikipedia.org/wiki/Malik_Kafur) வந்து சேர்ந்தான். 'அலி'  மாலிக் கபூரின் கவர்ச்சியிலும் அழகிலும் தந்திரங்களிலும் மனதைப் பறிகொடுத்த அலாவுதீன், அவன் மீது முழு நம்பிக்கையையும் வைத்துப் பிரதம தளபதியாகவும் ஆக்கினான்.  ராஜபுத்திர சித்தூர் தொடங்கி, மங்கோலியர், ஹொய்சளர், காகதியார் உள்ளிடட அனைவரையும் வென்று,  தெற்கே மதுரை வரை வந்து, சுந்தரபாண்டியன் - வீரபாண்டியன் சகோதர சண்டையாலும் பெரும் லாபமடைந்து திரும்பினான்.  முதன்முறையாக தமிழகம் டெல்லியின் அதிகாரத்தின் கீழ் வந்தது.  இந்த மாபெரும் வெற்றிகளால் குளிப்பாட்டப்பட்ட அலாவுதீன் 'தன்னை மீறி எதுவும் இல்லை, தானே ஓர் 'இறைத் தூதர்' என்றும் நம்பத்தலைப்பட்டான். 

போகப் போக, அடிமையாக வந்து சேர்ந்து சேனாபதியான மாலிக் கபூர் வைத்ததே சட்டம் என்று ஆகி, எதனாலோ  மயங்கிப்போய் அவனது கைப்பாவையாகவே மாறினான் சுல்தான். செய்த பாவங்களுக்குப் பலனாக சுல்தானை ஏராளமான வியாதிகள் பிடித்தன. கை கால்களெல்லாம் வீங்கி, ஒரேயடியாகப் படுக்கையில் வீழ்ந்தான் அலாவுதீன் கில்ஜி.  மகாராணியும் குடும்பமுமே சிறையில் வைக்கப் பட்டனர்.  நாட்டில் ஆங்காங்கே அரசுக்கு எதிராகப் போராட்டங்கள் பெருகியது.  இதனால் மனமும் முறிந்து படுக்கையில் கிடந்த மன்னனின் வாயில் வலுக்கட்டாயமாக விஷத்தை ஊற்றினான் அடிமையாக வந்து அந்தரங்கத் தோழனாக மாறிய மாலிக் கபூர்.  அந்தக்காலத்தில், மன்னரின் உடல்நிலை பற்றி அரசு அதிகாரத்தில் இருப்பவரைக் கேள்வி கேட்க முடியாத நிலையில்,  உறவினர் யாரும் அருகில் நெருங்க முடியாமல் அநாதையாக மாண்டுபோனான், எல்லோரையும் தன் காலில் விழ வைத்த இரும்பு மனிதனான சுல்தான் அலாவுதீன் கில்ஜி.

சுல்தான் இறந்த இரண்டாவது நாளே, மன்னர் எழுதியதாக சொல்லப்பட்ட உயிலின் பிரகாரம், ஒரு குழந்தை இளவரசனை அரியணையில் அமர்த்தி அவனுக்கு கார்டியனாக தன்னையே நியமித்துக் கொண்டான் மாலிக் கபூர்.  ஆனால், மிச்சமிருந்த வேறு ஓர் இளவரசனின் வீரர்கள், சுல்தான் இறந்த 35-வது நாளில், துரோகி மாலிக் கபூரை வெட்டிக் கொன்றார்கள்.  அதன் பிறகு வந்த பல நாதாரிகள் மாறி மாறி நாட்டைக் கேவலமாக ஆண்டு, 1321ல் கியாசுதீன் துக்ளக் ஆட்சிக்கு வர வழி செய்தனர்.

- நன்றி - 'வந்தார்கள் வென்றார்கள்',
'நமது எம்ஜியார்_ 1', 
'நமது எம்ஜியார்_ 2 (தினமணி)',
'நமது எம்ஜியார்_ 3 (குமுதம்),
மற்றும் 'தந்தி டீவி' பாண்டே  

No comments:

Post a Comment