Tuesday, October 25, 2016

எந்த நாளும் திருவிழா - பாகம் 3 (அல்லது ) 2016 - Are You Not Entertained ?


நவம்பர் 8 எப்போது வரும், கடந்த இரண்டு ஆண்டுகளாகக் கண்டு வரும் இந்தக் கொடுங்கனவு எப்போது முடியும் என்று தேசமே காத்திருக்கிறது.  எப்படிப் பார்த்தாலும் அமெரிக்க வரலாற்றில் இடம் பிடிக்கப் போகும் தேர்தல் இது.  முதன்முறையாக ஒரு பெண் வேட்பாளர் அதிபர் பதவிக்குப் போட்டியிடும் தேர்தல் இது.   பாகிஸ்தான், வங்காளதேசம் போன்ற நாடுகளிலேயே பெண்கள் பிரதமர்களாக இருந்திருக்கிறார்கள்.  மிகவும் முன்னேறிய நாட்டில் இப்போதுதான் சாத்தியமாகியுள்ளது.   சக்தி வாய்ந்த செனேட்டின்  உறுப்பினர்களில் 5ல் ஒரு பங்கு மட்டுமே பெண்கள்.  அரசியல் அதிகாரம் என்பது இங்கு வெள்ளை ஆண்களின் ஏக போக உரிமையாகவே இருந்து வருகிறது.  பரவலாகி வரும் கல்வி, பிறநாட்டிலிருந்து வந்த குடியேறிகள், தொழில் நுட்பம், பொருளாதாரம்,  ஆகிய காரணிகளால் அந்தக் கண்ணாடித் தளம் விரிசல் விட ஆரம்பித்துள்ளது.



இந்த 2016 தேர்தல் உலக அளவில் கவனிக்கப்படுவதன் மற்றொரு முக்கியமான காரணம் ரிபப்ளிக்கன் கட்சி சார்பில் போட்டியிடும்' டொனால்டு ட்ரம்ப்' .  பெரிய கட்சியின் வேட்பாளர் என்று எந்த ஒரு வரைமுறைக்குள்ளும் அடங்காதவர், எந்த சமயத்தில் என்ன பேசுவார், என்ன செய்வார் என்று எவராலுமே கணிக்க முடியாதவர்.  எந்த அரசியல் கட்சியிலும் சேராமல் இருந்த, நியூயார்க் நகரின் மிகப் பெரிய ரியல் எஸ்டேட் தொழிலதிபர்.  2008ல் ஒபாமா ஜெயித்தபோது, ஒபாமாவின் பிறப்பிடத்தைப் பற்றிய புரளிகளைக் கிளப்பி விட்டு, கன்சர்வேட்டிவ் வெள்ளைக்காரர்களைக் கவர்ந்தார்.  கல்வியிலும் பொருளாதாரத்திலும் பின்தங்கியிருந்த 'தெற்கத்திய'  வெள்ளையர்கள் மற்றும் இழந்த பழம் பெருமையை நினைத்து ஏங்கிக் கொண்டிருந்த வெள்ளையர்கள் ஆகியோரின் நாடியை நன்றாகப் புரிந்து கொண்டார்.  'Make America Great Again' என்ற சுலோகம் அவருடைய ஆதரவாளர்களிடம் மந்திரம் போல் ஒட்டிக் கொண்டது.  அவர்களின் பொருளாதார இடர்கள் அனைத்துக்கும் 'வெளிநாட்டில் இருந்து வரும் மெக்சிகோ தேசத்துக் குடியேறிகளும், முஸ்லிம்களும், தொழில்முறை அரசியல்வாதிகளும்தான் காரணம்' என்ற பிரச்சாரம் மிக நன்றாகவே எடுபட்டது.  கட்சிக்குள்ளேயே நடக்கும் வேட்பாளர் தேர்தலில், வாதம் செய்யும் மேடைகளை சர்க்கஸ் போல் மாற்றி, எதிர்த்துப் போட்டியிடட 15 வேட்பாளர்களையும்,  தன்னுடைய முற்றிலும் புதிய அதிரடி பண்ணிப் பிரச்சாரத்தில் காணாமல் அடித்தார்.  கட்சி உறுப்பினர்கள் மட்டுமே வாக்களிக்கும் அந்தத் தேர்தலில் வென்று ரிபப்ளிக்கன் கட்சியின் அதிபர் வேட்ப்பாளர் ஆனார்.

இது இவ்வாறு இருக்க, டெமாக்ரட் கட்சியின் வேட்பாளர் தேர்தலில் ஹிலாரியை எதிர்த்து, கட்சி உறுப்பினர் அல்லாத 'பெர்னி சேண்டர்ஸ்' என்ற முற்போக்கு சோழியலிஸ்ட் செனேட்டர் போட்டியிட்டார். 76 வயதான அவர், 18-30 வயது இளைஞர்களை மிகவும் கவர்ந்தார்.  பல மாகாணங்களில் ஆச்சர்யப்படும் வகையில் பெர்னி  வென்றார்.  இருந்தாலும் அரசியலில் நீண்ட காலம் ஊறிய ஹிலாரி கட்சித் தேர்தலில் வென்று அதிபர் வேட்பாளர் ஆனார்.

2016 ஜூலை மாதத்தில் இருந்து இரண்டு கட்சி வேட்பாளர்களுக்கிடையில் நேரடித் பிரச்சார மோதல் .  ட்ரம்ப் ஒரு  சிறந்த கேளிக்கையாளர் (Entertainer).  அவர் செல்லும் கூட்டங்களுக்குப் பல்லாயிரக்கணக்கில் மக்கள் கூடினார்கள்.  அவர் வாயிலிருந்து வரும் பேச்சுகள் பிரச்னைக்குரியதாகவே இருந்ததால் தொலைக்க காட்சி சேனல்களுக்கு, அவர் பேச்சை ஒட்டி விவாதங்கள், கண்டனங்கள் என, நல்ல விருந்தாக அமைந்தது.  வேறு வகையில், ட்ரம்ப்புக்கும் இது இலவச விளம்பரங்களாக அமைந்தன.  பரஸ்பர லாபத்தினால் கேட்க வேண்டுமா?  ஊடகங்களில் எங்கு பார்த்தாலும் ட்ரம்ப்..  ஹிலாரி இதற்கு நேர் எதிர்.  அவர் சிறந்த மேடைப் பேச்சாளர் அல்ல.  பேச ஆரம்பித்தால் 5 நிமிடங்களில் தூக்கம் உத்தரவாதமாக வரும். பெரு வெள்ளமென வந்த ட்ரம்ப் செய்திகளால் ஹிலாரி முதலில் காணாமலே போய் விட்டார்.   ஆனால்  அவரும் அவர் கணவர் பில் கிளிண்டனும் பழம் தின்ற அரசியல்வாதிகள்.  சத்தம் போடாமல் களப்பணி அமைப்புகளை அமைத்தனர்.

"நான் 5th அவென்யுயூவில் பட்டப்பகலில் ஒருவரை சுட்டாலும் ஒரு ஓட்டுக்கு கூட எனக்கு குறையாது " என்று குரும் அளவுக்கு ட்ரம்பின் ஆதரவாளர்கள் உணர்ச்சி வசப்படடவர்களாக ஆனார்கள்.  கண்டவரையும் கண்டமேனிக்கு டிவிட்டரில் திட்டுவது, போலி பல்கலைக்கழகம் நடத்தி ஏராளமான வழக்குகளில் சிக்கியது, என எதுவும் அவர் ஆதரவாளர்களை அசைக்கவில்லை.

அப்போதுதான் எதிர்க்கடசிகள் மோதும் முதல் விவாதம் வந்தது.   நடுவர் முன்னிலையில், வேட்பாளர்கள் நேருக்கு நேர் 3 விவாதங்கள் செய்ய வேண்டும் என்பது ஒரு வழக்கம்.  அப்போது அவர்களின் கொள்கைகள், திறன்கள் , குணாதிசயங்கள் ஆகியவை அலசப்படும்.   அரசியலை கவனிக்காதவர்கள்,  கட்சி சாராதவர்கள் ஆகியோருக்கு இந்த விவரங்கள் போய்ச் சேர இது வாய்ப்பு.  பொதுவெளியில் கேட்பார் இல்லாமல் தன்னிஷ்டத்துக்குப் பேசி வந்த ட்ரம்பால், ஓர் ஒழுங்குமுறையில், கொள்கைகள் அடிப்படையில் வகுக்கப்பட்ட  விவாதத்தில் 10 நிமிடங்களுக்கு மேல் தாக்குப் பிடிக்க முடியவில்லை.  கோர்வையாக இலக்கணத்துடன் இரண்டு வாக்கியங்கள் கூட பேச வராது.   ஹிலாரியோ முப்பது ஆண்டுகளுக்கு மேல் இந்தக் கலையில் தேர்ந்தவர். புள்ளி விவரங்களுடன் தெளிவாகப் பேசும் திறன் உடையவர்.  ட்ரம்பை எளிதாக வீழ்த்தினார்.  

அதிலிருந்தே டிரம்புக்கு இறங்கு முகம்.  அதோடு, ட்ரம்பின் 'ராஸ லீலைகள்' தொடர்பான ஆதாரங்கள் வெளி வர ஆரம்பித்தன.   இத்தனை நாள் அவரை வளர்த்து விட்ட CNN போன்ற ஊடகங்கள் குருதியை முகர்ந்து விட்டன. பிறகென்ன, தினசரி புதிய குற்றச்சாட்டுகளுடன் பெண்கள், உலக அழகிகள் முதல், விமானத்தில் பக்கத்து ஸீட்டில் பயணம் செய்தவர் வரை வெளியே வர ஆரம்பித்து விட்டனர்.  நிலை தடுமாறிய ட்ரம்ப் யாரிடம் சமாதானமாகப் போகாமல், அனைவரையும், தன்  கட்சியினர் உள்பட, தாக்கத் தொடங்கினார்.  போதாக்குறைக்கு காமெடியன்களும் தினப்படிக்கு ட்ரம்பைத் தொலைக்காட்சிகளில் வறுத்தெடுக்கத் தொடங்கினர்.  அதன் பிறகு மேலும் இரண்டு விவாதங்கள்.  அவற்றிலும் டிரம்புக்குப் பெரும் தோல்வியே.  


தேர்தல் காலத்தில் இங்கு மணிக்கொருதரம் கருத்துக்கணிப்புகள், மற்றும் திணிப்புகள் நடைபெறும்.  அனைத்துக் கணிப்புகளிலும் ஹிலாரியே முன்னிலையில் இருக்கிறார்.  தன்னோடு சேர்த்து, தன கட்சியின் செனேட் மற்றும் ஹவுஸ் போட்டியாளர்களையும் கீழே இழுத்துச் சென்றுவிடுவார் என்று பயப்படுகிறார்கள்.   'நான் தோற்றால் அது தில்லுமுல்லுகளால்தான்' என்று போகுமிடமெல்லாம் ட்ரம்ப் பேசி வருகிறார்.   கோபம்  கொண்ட ஆதரவாளர்கள் மத்தியில் மறைமுகமாக வன்முறையைத் தூண்டுவது போன்ற ஜனநாயக முறைக்கே ஆபத்தான பேச்சு இது.  

இது இப்படி இருக்க சமீபத்தைய  BREXIT நிகழ்வுகளையும் சில நோக்கர்கள் மறக்கவில்லை.  இங்கிலாந்திலும் ஏறக்குறைய இதே போல பிரச்னைகள்.  நகரங்களில் வசிக்காத வெள்ளையர்கள் பொருளாதார நசிவுக்கு ஆளானார்கள்.  தம் நிலைக்கு காரணம் வெளிநாட்டிலிருந்து குடியேறியவர்கள் என்று நம்பினார்கள்.  தங்கள் பழைய செல்வத்தையும் பெருமையையும் மீட்டெடுக்க ஐரோப்பிய யூனியனை விட்டு விலக வேண்டும் என்ற பிரச்சாரம் அவர்களிடம் எடுபட்டது.  மாநகர்வாசிகள் வழக்கம் போல, அவர்களை முட்டாள்கள்  என்று உதாசீனம் செய்தார்கள்.  கருத்துக் கணிப்புகளும் Brexit தோற்கும் என்றே சொல்லி வந்தன.  வாக்களிக்கும் தினத்தில் மாநகர்வாசிகள் வீட்டில் ஓய்வெடுத்துக் கொண்டார்கள்.  கோபம் கொண்ட கிராமவாசிகளே தவறாமல் சென்று இங்கிலாந்து வெளியேற வாக்களித்தார்கள்.  அதே பிரச்னைகளும் சவால்களும், நிலவரங்களும்  கார்பன் காப்பி போல இங்கும் இருப்பதால் அவ்வளவு எளிதாக ட்ரம்பை ஒதுக்கித் தள்ளிவிட முடியாது.  நவம்பர் 9 காலை வரை பொறுத்திருக்க வேண்டியதுதான்.

No comments:

Post a Comment