போன வாரம் பாண்டியில் உறவினர்களோடு பேசியபோது, "என்னப்பா இது அநியாயமா இருக்கு.
நாராயணசாமி எலெக்ஷன்ல நிக்காம சி.எம். ஆயிட்டாரு. எங்கெல்லாம் எப்பதான்
அமேரிக்கா மாதிரி வரப்போவுதோ தெரியல". என்றனர். "சரி, இங்க எப்படி எலக்ஷன்
நடக்குது தெரியுமா?" என்றேன். "அவ்வளவா தெரியாது" என்று பதில் வந்தது.
அவர்களுக்காகவும், மற்ற நண்பர்களுக்காகவும் உலகின் இரண்டாவது பெரிய
மக்களாட்சியின் தேர்தல் கூத்துகளை இங்கு
பதிவேற்றம் செய்கிறேன்
மற்ற நாடுகளில் சில ஆண்டுகளுக்கொருமுறை தேர்தல் என்றால், உலகின்
இரண்டாவது பெரிய ஜனநாயக நாடான அமெரிக்கா (USA) வில் வருடம் முழுதும்
எங்காவது தேர்தல் நடந்தவாறே இருக்கும் . உள்ளாட்சி, உள்ளூர் கல்வி
வாரியம், காவல் ஷெரீப், ஏதேனும் விசேஷ மசோதாக்கள் (பூங்காவில் கொசு
மருந்து அடிக்கலாமா?), ரோடு போட, புது வரி விதிப்புகள், எனப் பல சிறு,
குறு தேர்தல்கள். நடந்தவண்ணம் இருக்கும். இவற்றில் 50 சதம் வாக்குப் பதிவு
நடந்தால் சாதனை. மாவட்ட நீதிபதி தேர்தலில் நிற்கும் ஒருவர் நிதி கேட்டு
தொலைபேசியில் யாசகம் கேட்பது சாதாரணமான விஷயம். அந்தந்த வேலைக்கேற்ப
வேட்பாளர் செலவும் மாறும். உதாரணமாக, போன மாதம் ஆஸ்டின் நகரில் UBER
போன்ற நிறுவன ஓட்டுனர்கள் பின்புல சோதனைக்கு (Background check ) உட்பட
வேண்டுமா இல்லையா தேர்தல், இதற்கு மறுத்த UBER 10 மில்லியன் டாலர் வரை
விளம்பர செலவு செய்தது. கடைசியில் தேர்தலில் தோற்றதால் கோபித்துக் கொண்டு
UBER ஆஸ்டினை விட்டேப் பறந்து போயிடுத்து.
வேட்பாளர் தேர்தல்கள் மார்ச் மாதம் துவங்கி, பல கட்டங்களாக பல மாநிலங்களில் நடக்கும். அந்தந்த மாநிலக் கட்சி அமைப்புகள் அந்தத் தேர்தல்கள் நடத்தப் பொறுப்பேற்கும். ஒரு வகையில் பார்த்தால் இவை தமிழகத்தில் நடக்கும் உள்கட்சித் தேர்தல் போல. அதனால் பதிவு செய்த கட்சி உறுப்பினர்கள் மட்டுமே வாக்களிக்க முடியும். இத்தனை நீண்ட தேர்தல் மராத்தன் ஓட்டத்தைத் தாக்குப் பிடிக்க முடியாமல் பல தேறாத கேஸ்கள் முதல் இரண்டு மாதங்களிலேயே மூட்டைக் கட்டிவிட்டு, ஜெயிக்கும் வாய்ப்பு இருக்கும் வேட்பாளர்களுடைய ஜீப்பில் ஏறிக் கொள்வார்கள்.
வேட்பாளருக்கான தேர்தல் முறைகளும் சட்டங்களும் மாநிலத்துக்கு மாநிலம் வேறுபடும். பல இடங்களில் சாதாரண வாக்களிப்பு முறை, சில இடங்களில் caucus எனப்படும் கட்சியின் தீவிர உறுப்பினர்கள் பங்குபெறும் குரல் வாக்கெடுப்பு முறை. தேர்தல் நடைபெறும் பல மாநிலங்களுக்கும் பயணம் செய்வது, பிரசாரம் செய்வது, வாக்காளர்களைத் தொடர்பு கொள்வது என்று ஓராண்டுக்கு மேலாக உழைப்பதும், ஆகும் செலவும், யாரையும் சோர்வடையச் செய்து விடும். பெரும் செல்வந்தர்களின் ஆதரவு இல்லாத வேட்பாளர்கள், ஆதரவாளர்கள் சிறு தொகைகளாக அளிக்கும் நன்கொடையை நம்பியே உள்ளனர். டெமாக்ரட் கட்சி சார்பாகப் போட்டியிடும் 'பெர்னி சேண்டர்ஸ்' ஆதரவாளர்கள், தோராயமாக, தலைக்கு $27 அளித்த தொகையே பல மில்லியன்கள் ஆனது.
சிறப்புரைகள், வாக்காளர்கள் பங்கு பெற்றுக் கேள்வி கேட்கும் டவுன் ஹால் வகைக் கூட்டங்கள் மற்றும் அனைத்து வேட்பாளர்களும் ஒரே மேடையில் பங்குபெறும் விவாத நிகழ்ச்சிகள், தபால், மின்னஞ்சல், தொலைபேசி என்று பல வகை உத்திகள் இருந்தாலும், தேர்தல் நாளன்று எத்தனை வாக்காளர்களை வெளியே அழைத்து வாக்களிக்க வைக்கிறார்கள் என்பதில்தான் வெற்றி தோல்வி நிச்சயிக்கப் படுகிறது. பெரும்பாலும் ஜூன் முதல் வாரத்தில் யார் எந்தக் கட்சியின் அதிபர் வேட்பாளர் என்பது தெரிந்து விடும். அதன் பின்னர் ஒவ்வொரு கட்சியும் ஜூலை மாதத்தில் முறைப்படி தம் வேட்பாளரை அறிவிக்கும். தேர்ந்தெடுக்கப்பட்ட ஜனதிபதி வேட்பாளர், துணை ஜனாதிபதி வேட்பாளரைத் தம் விருப்பபடித் அறிவிப்பார். இனிமேல் பொதுத் தேர்தல் ஆரம்பமாகும். பொதுக்கூட்ட முறையெல்லாம் முன் கண்டது போல்தான்.
தொடரும் ...
No comments:
Post a Comment