Tuesday, June 28, 2016

எந்த நாளும் திருவிழா - பாகம் 2

சென்ற பகுதியில் முதல்நிலை வேட்பாளர் தேர்தல் முறையைப் பார்த்தோம்.   எளிமையாகத் தெரிந்தாலும் அது உள்ளபடியே மிகவும் குழப்பமான, அர்த்தமில்லாத முறை.  1968 வாக்கில்தான் அந்த முறை வந்தது. வருடம் முழுதும் நடக்கும் தேர்தலினால் டி.விக்களுக்கு எக்கச்சக்கமான விளம்பர வருமானம்.  ஒரு பரபரப்பை ஏற்படுத்தி, அந்த சூடு தணியாமல் பார்த்துக்கொண்டால்தான் டி.விக்களுக்கு நல்ல வருமானம்.  இது போக, ரேடியோ, இன்டர்நெட் விளம்பரம்,சம்பளத்துக்கு வேலை செய்யும் ஆலோசகர்கள்,  பயணச் செலவு, கூட்டத்திற்கான செலவு என்று பெரிய பட்ஜெட் வேண்டும்.  ஒரு ஜனாதிபதி வேட்பாளர் சுமாராக 1 பில்லியன் டாலர் செலவழிக்க வேண்டும்.  அதற்கு நிதி திரட்ட வேண்டும்.


ஒரு தனி நபர் நேரடியாக இவ்வளவுதான் நன்கொடை அளிக்கலாம் என்ற வரையறை இருப்பதால், சட்டத்தில் ஓர்  ஓட்டையைப் போட்டிருக்கிறார்கள்.  சூப்பர் PAC என்னும் பொலிடிகல் ஆக்ஷன் கமிட்டி.  இதற்கு எவ்வளவு வேண்டுமானாலும், எங்கிருந்து வேண்டுமானாலும் (பாகிஸ்தான், சவுதி, உள்பட) பணம் வரலாம்.  எங்கிருந்து வருகிறது என்ற கேள்வியே இல்லை.  இதில்தான் பிசினெஸ் மற்றும் பிற நாட்டு லாபி ஆட்கள் தங்கள் பேச்சைக் கேட்கக்க் கூடிய அரசியல்வாதிகளை ஜெயிக்க வைக்கப் புகுந்து விளையாடுவார்கள்.

இனி, வாக்களிக்கும் முறையின் தில்லுமுல்லுகளைப் பார்க்கலாம்.  தேர்தல் நெருக்கத்தில் ஏதேனும் தீவிரவாத தாக்குதல் நடந்தால் அதை வாக்குகளாக மாற்றுவதில் ரிபப்ளிக்கன் கட்சியினர் வல்லுநர்கள்.  அப்போதெல்லாம் ரஷ்யர்கள், ஜெர்மனியினர் பூச்சாண்டிகளாகப் பயன்படுத்தப் பட்டனர். இப்போது முஸ்லிம்கள் மற்றும் குடியேறிகள் (immigrants). 
 
இந்தியா போன்று இங்கு நாடு முழுதும் ஒரே மாதிரி தேர்தல் நடப்பதில்லை.  ஒவ்வொரு County (மாவட்டம் மாதிரி) க்கும் விதிகள் மாறுபடும்.  பல இடங்களில் மின்னணு இயந்திரங்கள், சில இடங்களில் பன்ச் கார்டு.  அதிபர் முதல், ஜட்ஜ் ஊடாக அந்த ஊர் முனிசிபாலிட்டி ஊழியர்கள் வரை தேர்தல் நடக்கும் அனைத்துப் பதவிகளுக்கும் வாக்காளர்கள் பெயர்கள்  ஒரே படிவத்தில் இருக்கும்.  தேடித் பிடித்துப் பதிவு செய்வது சவால்தான்.  பல ஊர்களில் தேர்தலுக்குப் பல நாட்கள் முன்பே Early Voting செய்யும் வசதி உள்ளது.  சில ஊர்களில் தபாலில் வாக்களிக்கலாம்.  வாக்குப் பதிவு நேரமும் மாறுபடும்.  எதுவுமே Standard இல்லை.  வழக்கம் போல இளைஞர்கள் அவ்வளவாக வாக்களிப்பதில்லை.  குறை சொல்வதோடு சரி.

தேர்தல் தில்லுமுல்லு என்பது ரோமானிய காலம் அளவுக்குப் பழமையான விஷயம்.  இங்கு அதை மொத்தமாகக் குத்தகைக்கு எடுத்திருப்பவர்கள் புஷ்-ஷின்  ரிபப்ளிக்கன் கட்சியினர்.  அதில் சிலவற்றை இங்கு பார்ப்போம்.

முதலாவது, Gerrymandering என்று அழைக்கப்படும் தொகுதி மறு-அமைப்பு.  தம் கட்சி வாக்காளர்களே பெரும்பான்மையாக வருமாறு தொகுதிகளை  வடிவமைப்பது.  ஒரு மாநிலத்தில் பெரும்பான்மை இருக்கும்போது முடிந்தவரை தொகுதிகளை இப்படி மாற்றி அமைப்பதில் ரிபப்ளிக்கன் கட்சியினர் மிகத் திறமைசாலிகள்.

 யாரெல்லாம் தமக்கு வாக்களிக்க மாட்டார்கள் என்று கண்டுபிடித்து, அவர்கள்   பெயர்களைப் பெருமளவில் 'தவறுதலாக' நீக்குவது இவர்களுக்குக் கைவந்த கலை.  ஊனமுற்றவர்களுக்கு உதவுகிறேன் பேர்வழி என்று பல சாவடிகளில் நிற்கும் தன்னார்வலர்களிடம் எச்சரிக்கையாக இருப்பது நலம்.

 
'தவிர்க்க இயலாத சூழ்நிலையில்' வாக்குப் பதிவு நேரத்தையும் இடத்தையும் கடைசி நேரத்தில்  மாற்றும் அதிகாரம் County அதிகாரிகளுக்கு உண்டு.
 2000 அதிபர் தேர்தலில் பிளோரிடாவில் 'கேத்தலின் ஹாரிஸ்' என்ற அதிகாரி, ஜார்ஜ் புஷ்ஷுக்கு ஆதரவாக,  ஆயிரக்கணக்கான வாக்குகள் செல்லாது என்றும், வாக்கு எண்ணிக்கையையே ஒரு குறிப்பிட்ட நேரத்தில் முடித்தும், வைத்தார்.  அதற்குப் பரிசாக அவருக்கு புஷ் அரசில் சிறப்பான பதவி கிடைத்தது.

2008 தேர்தலில், டெமாக்ரட் வாக்காளர்கள் என் அறியப்படடவர்களுக்கு, அவர்கள் நவம்பர் 5 அன்று (தேர்தல் நாள் நவ 4 க்குப் பதிலாக )  வாக்களித்தால் போதும் எனவும் , இது வாக்குகளை சுலபமாக எண்ணுவதற்கு வசதியாக இருக்கும் எனவும் அரசு உத்தரவு இட்டதாக மோசடிக் கடிதங்கள் அனுப்பப்பட்டன.

மைனாரிட்டியினர் வாக்குப்பதிவைத் தடுக்க, தேர்தலின் போது அவர்கள் வண்டிகளைக் காவல் துறையினர் தேவைக்கதிகமாக ஓரம் கட்டுவது, வாக்குச் சாவடிகளைக் குறைப்பது, மாற்றி வைத்து அலைக்கழிப்பது, மாணவர்கள் வாக்களிக்கச் செல்ல நிர்வாகம் அனுமதி மறுப்பது, சாதகமில்லாத இடங்களில் ஒரே பெயரில் பல வேட்பாளர்களை நிறுத்திக் குழப்பியடிப்பது, எனப்  பல வகைகளிலும் தமக்கு எதிரான வாக்குப்பதிவைக் குறைப்பது வழக்கமான நடைமுறை.

தேர்தல் நாளன்று வாக்களிக்கச் செல்லுமாறு கட்சி ஆர்வலர்கள் தொலைபேசியில் வாக்காளர்களை அழைப்பது வழக்கம்.  2002 நியூ-ஹேம்ப்ஷயர் செனேட் தேர்தலின் போது, மாநில ரிபப்ளிக்கன் கட்சியினர், ஒரு போலி கால் சென்டர் மூலம், செயற்கையாக தொலைபேசி அழைப்புகளை உருவாக்கினர்.  பின்னர்  அதன் மூலம் எதிர்க்கட்சியினரின் தொலைபேசி இணைப்புகளை ஜாம் செய்தனர்.   இந்தக் குற்றத்திற்காக ஜேம்ஸ் டோபின்   உள்ளிட்ட மூவர் சிக்கிக் கொண்டு, பின்னர் விடுவிக்கப்பட்டனர்.

இப்படி என்னதான் குறைகள் இருந்தாலும், ட்ரம்ப் பொன்ற கஷ்மலங்கள் ஆட்சிக்கு வரும் அபாயம் இருந்தாலும்,  4 அல்லது 5 ஆண்டுகளில் இவர்களைத் தூக்கி எறியும் வசதி இருக்கிறது என்பதே ஓரளவு ஆறுதலான விஷயம்

1 comment:

Unknown said...

Very nice info, Basker... Keep rocking... Manivannan

Post a Comment