Friday, May 20, 2016

மகேசன் தீர்ப்பு எனும் மாம்பழம்

ஐந்தாண்டுகளாக பக்கவாதம் வந்து படுத்துக்கொண்டிருந்த அரசாங்கத்தையே மறுபடியும் மக்கள் எப்படி தேர்ந்தெடுத்தார்கள் என்பது,  டாக்டரேட் செய்யக்கூடிய ஒரு சப்ஜெக்ட்.  வசூலைத் தவிர வேறு எந்த வகையிலும் செயல்பாடு இல்லை.  சின்னச்சின்ன நியாயமான போராட்டங்களைக் கூட போலிசை வைத்து அடக்குவது,  பத்திரிக்கைகளுக்கு அவதூறு வழக்குகள் மூலம் வாய்ப் பூட்டு போடுவது,  எந்த அமைப்பையும் நம்பாமல், ஒய்வு பெற்ற சில குறிப்பிட்ட அதிகாரிகளை மட்டுமே வைத்துக்கொண்டு ஆட்சி செய்வது, என்று  ஜனநாயக அமைப்பே கேலிக்கூத்தாக மாறியது.  
 இயற்கைப் பேரிடர்கள் எதுவும் தன் வாசலைத் தீண்டாததால் அவரும் தன் வாசலைத் தாண்டவில்லை.  எப்போதேனும் அலுவலகம் வருவதையே திருவிழாவாக கட்-அவுட் வைத்துக் கொண்டாடியது தமிழகத்தில் மட்டுமே நடந்தது.  எனினும், இதிலும் ஒரு நல்ல விஷயம்,  மக்களின் கடைசி நம்பிக்கையான நீதித்துறையில் புரையோடியிருக்கும் ஊழலை நாட்டுக்கே வெளிச்சம் போட்டுக் காட்டியதுதான்.   பக்கத்தில் பாண்டிச்சேரியில் ஏறக்குறைய 50% இதேபோன்று நடந்த அரசாங்கத்தை வீட்டுக்கு அனுப்பி விட்டார்கள்.  தமிழகத்தில் மட்டும் எப்படித்தான் ஜெயித்திருப்பார் என்று பலரும் இப்போது குடலாப்பரேஷன் செய்கிறார்கள்.   தேவையற்ற போர்களில் நாட்டை இழுத்து விட்டு, உலகப் பொருளாதாரத்தையே சிதைத்த, ஜார்ஜ் புஷ் இரண்டாம் முறை வென்றதை விட இது பெரிய விஷயம் இல்லை.  சரி, நாமும்தான் பார்ப்போமே.... 

முதலாவது, நீக்கமற நிறைந்த ஊழல் பற்றி யாரும் பெரிதாகவே எடுத்துக் கொள்ளவில்லை.  பிற நாட்டவரை ஒப்பிடும்போது ஆசிய மக்கள் கொஞ்சம் நேர்மை குறைந்தவர்கள்தான்.  உடனே சண்டைக்கு வராமல், யோசித்துப் பாருங்கள்.  மக்கள் பிரதிநிதிகள் மக்களைப் போலத்தானே இருப்பார்கள்?  வானத்திலிருந்தா குதித்திருக்கிறார்கள்?  மேலுக்கு வெறுத்தாலும்,  அதிகம் 'சம்பாதிப்பவர்'களே திறமைசாலிகள் என்று உள்ளுக்குள் வியக்கப் படுகிறார்கள்.  பெரும்பாலான ஊர்களில், பணப் பட்டுவாடாவைத் தடுத்துப் புகார் கொடுத்தவர்களிடம் அந்தந்த ஊர்ப் பெண்கள், 'கொடுப்பதைக் கெடுக்கிறானே பாவி' என்று சண்டை பிடித்திருக்கிறார்கள்.   வாக்களிக்கும்போது அந்தக் கோபத்தைக் காட்டியிருக்கிறார்கள்.  வேறு சில ஊர்களில், பஞ்சாயத்துக் கூடி, மொத்தமாக விலை பேசி வாங்கியிருக்கிறார்கள்.  அவர்கள் சொல்லும் நியாயம், 'இவனுங்க கிட்ட இப்ப வாங்கினாத்தான் உண்டு'..

மிக உயர் பதவிகளில் இருந்த, மற்றும் இருக்கும் அதிகாரிகள் பெரும்பாலும் ஒரு கட்சி சார்பாகவே இருந்து இந்த வெற்றியை எளிதாக்கியிருக்கிரார்கள்.  தேர்தல் நடத்தும் அமைப்பும் எந்த முறைகேடுகளையும் கண்டு கொண்டதாகவே தெரியவில்லை.

பல எதிர்க்கட்சிகள் பல முனைகளில் தாக்கியது பல பெண்களிடம் அவருக்கு அனுதாபத்தைத் தேடித் தந்திருக்கிறது என்று நினைக்கிறேன்.
இதில் உளவியல் சார்ந்த வேறொரு முக்கியமான விஷயம்.  எத்தனை தகுதி இருந்தாலும், இந்தியப் பெண்கள் காலங்காலமாக இரண்டாந்தரப் பிரஜைகளாகவே நடத்தப் பட்டு வந்திருக்கிறார்கள்.  இதில் தமிழக கிராமப் பெண்கள் நிலை இன்னும் மோசம்.  இப்போது ஒரு பெண்மணியின் காலில் எப்பேர்ப்பட்ட உயரத்தில் இருக்கும் ஆணும்,  பொது இடத்தில் காலில் விழும் நிகழ்வு அவர்களை சந்தோஷப்படுத்துகிறது.   ஒரு வகையில் இந்த ஆண்கள் தம் காலில் விழுவதாகவே எண்ணுகிறார்கள்.  அதுவே அவர்களை இலையின் நிரந்தர வாக்காளர்களாக மாற்றியுள்ளது.  கொலு பொம்மைக் குரங்குகள் போல் வாய் பொத்திக் கீழ் வரிசையில் வேட்பாளர்கள் உட்கார்ந்திருப்பது பெண் வாக்காளர்களுக்கு போதை தரும் காட்சியே. 

திமுக ஸ்டாலின் அவர்களின் பலமாத பயணங்கள் ஓரளவு நல்ல பலனைத் தந்திருக்கிறது.  ஆனால் திமுகவின் மிகப் பெரும் பலவீனம் அவர்களது குறுநில மன்னர்கள்தான்.  யாரையும் கட்டுக்குள் வைக்கத் தலைமையால் முடியவில்லை.  ஓட்டுக் கேட்டு வரும் கூட்டம் கழுத்தில் தாம்புக் கயிறு போல சங்கிலியும், பரட்டைத் தலையுமாக வந்தால் கொஞ்சம் பயமாகத்தான் இருக்கிறது.  
 
கலைஞர், வெகு காலம் முன்பே ஒய்வு பெற்றிருக்க வேண்டும்.  ஒன்றுமே முடியாத நிலையில் இருப்பவரை முதல்வர் வேட்பாளராக முன்னிறுத்தியது, கட்சி சாராத என்னைப் போல பலருக்குப் பிடிக்கவில்லை.  விஜயகாந்தை சேர்த்திருந்தால் மனைவியும் மச்சானும் நிறையவே குடைச்சல் கொடுத்திருப்பார்கள்.  நடந்த மக்களவைத் தேர்தலின்போதே மோடியிடம் தன் மனைவிக்கோ, மச்சானுக்கோ துணைப் பிரதமர் பதவி கேட்டாராம்.  நல்ல வேளை, அப்போது கடவுள் காப்பாற்றினார்.  இப்போது, அந்த பலூனின் காற்றை இறக்கி விட்டப் புண்ணியம் வைகோவுக்கே. 
இளைஞர்கள் வழக்கம் போல தன்னைச் சுற்றி நடப்பதைத் தெரிந்து கொள்ளாமல், பங்கு கொள்ளாமல் ஜாலியாக இருக்கிறார்கள்.   Elections have consequences என்று அவர்களுக்குத் தெரியவில்லை.
வயதான தலைவர்கள் கிளம்பிப் போய்  காலியாகும் திண்ணைக்காக அன்புமணி காத்திருக்கிறார்.  யாரிடமும் சேர மாட்டாராம்.  எவ்வளவு நாள் இப்படி ஓடும் தெரியவில்லை.  உடனிருப்பவர்கள் கரைந்து போய்விடுவார்கள்.  தமிழகம் மீண்டு வர, ஸ்டாலின், திருமா மற்றும் அன்புமணி ஆகியோர் இணைய வேண்டும்.

A wise Yogi once said: It is hard to make a prediction, especially about the future

No comments:

Post a Comment