
இன்னும் ஒரு வாரத்தில் என் மகள் பாரதி கிண்டர்-கார்டன் வகுப்பில் சேரப் போகிறாள். நாள் முழுதும் கட்டுப்பாடுகள் ஏதுமின்றி விளையாடிக் கொண்டிருந்தவள் இப்போது ஏழு மணி நேரத்துக்கு ஆசிரியர் மேற்பார்வையில் இருக்க வேண்டும். வீட்டிலிருந்து இரண்டு மைல் தொலைவில்தான் அரசுப் பள்ளி, இருந்தாலும் மனது லேசான பதற்றத்துடன் குறு குறுவென்று இருக்கிறது. வயது போன காலத்தில் பிள்ளை பெற்றால், பெற்றோருக்கு இப்படித்தான் இருக்குமோ?
நான் வசிக்கும் டெக்சஸ் மாநிலத்தில், தம் அதிகாரத்துட்பட்ட எல்லைக்குள் சொத்து வரி விதித்துக் கொள்ள 'ஒருங்கிணைந்த பள்ளிகள் நிர்வாகத்துக்கு' உரிமை உண்டு. இது தவிர அரசாங்கம் சிறிதளவு நிதி உதவி அளிக்கும். இது ஒருவகையில் உள்ளாட்சி அமைப்பு மாதிரி. வரி விதிக்கும் அதிகாரம், கல்வித்துறைக்கு மிகவும் அவசியம். ஏதாவது பற்றக்குறை என்றால் மாநில அரசு கை வைக்கும் முதல் துறை, கல்விதான். இங்கு பள்ளிகளுக்கும், அங்கு படிக்கும் மாணவர்கள் திறமையை வைத்து ரேட்டிங் முறை உண்டு. நம் விருப்பப்படி விரும்பிய பள்ளியில் சேர முடியாது. நம் வீட்டு முகவரிக்கு ஏற்றார் போல் இன்னின்ன பள்ளியில் தான் சேர முடியும். ஒவ்வொரு பள்ளிக்கூடத்துக்கும் எல்லைக் கோடுகள் உண்டு. இந்த எல்லையும் சில வருடங்களுக்கு ஒரு முறை என்று மாற்றி அமைக்கப்படும். அடிப்படைக் காரணங்கள் இரண்டு. முதலாவது, சிறு குழந்தைகள் கல்வி கற்பதற்காக நிறைய தூரம் செல்லக்கூடாது, இரண்டாவது, அந்தந்த எல்லைக்குள் அடங்கும் மக்கள் இடப்பெயர்ச்சி. மேலும் நடுநிலைப் பள்ளி, உயர்நிலைப் பள்ளி என்று போகப்போக, எல்லைக்கோடுகள் விரிவடைந்து கொண்டு போகும். இந்தக் காரணங்களால் சிறந்த பள்ளிகளின் எல்லைக்குள் வரும் வீடுகள் விலை மிக அதிகமாக இருக்கும். இதன் பக்க விளைவு, அவ்வளவு விலையில் வீடு வாங்க, வசிக்க, இயலாதவர்கள் பிள்ளைகள், மோசமான பள்ளிகளுக்குப் போய் சேருகின்றனர். இது முடிவில்லாத சுழற்சி. இதில் பாதிக்கபடுபவர்கள் பெரும்பாலும் கறுப்பின மக்கள், மற்றும் ஸ்பானிஷ் மொழி பேசும் தென்னமெரிக்கப் புலம் பெயர்ந்தவர்கள்.