Tuesday, May 18, 2010

பிரியத்துக்குரிய சாருவுக்கு...

எழுத்தாளர் சாரு அவர்கள் ஏ.ஆர். ரஹ்மானுக்கு திறந்த மடல் ஒன்றை எழுதினார். அதையொட்டி சாருவுக்கு நான் எழுதும் திறந்த மடல்... 

=====================================

 ( இந்தக் கடிதத்தைப் பிரபல எழுத்தாளர்களுக்கு அனுப்பினால் நிச்சயம் நிராகரிக்கப்பட்டு விடும் என்பதால் என்னுடைய வலைப்பக்கத்திலேயே கவர் ஸ்டோரியாக மிகுந்த அவமானத்துடன் பதிவேற்றம் செய்கிறேன் )

அன்புள்ள சாரு...
அஸ்ஸலாமு அலைக்கும். (அ) ஜெய் சாய்ராம் (அ) எக்கிஸ்து சாமியார்  (அ) நித்தியானந்தம் .. விடுங்க சார், எனக்கும் குழப்பமா இருக்குது.

ஒரு கால கட்டத்தில் ஏனைய தமிழக எழுத்தாளர்களின் எழுத்துக்கள் சத்தை இழந்து வெறும் பேனா மையாக மாறியபோது ' கோணல் பக்கங்க' ளுடன் உள்ளே வந்தீர்கள்.  தமிழகம் மட்டுமில்லாமல் ஐரோப்பா, தென்னமெரிக்கா எல்லாமே உங்களைக் கொண்டாடியது.  அதிலிருந்து உங்களுடைய ராஜ்யம்தான்.  வாசகர்கள், கட்டுரைகளை அச்சுக் கோர்ப்பவர்கள் உள்பட கட்டுரையில் பங்கேற்பவர்கள் அனைவரின் பெயரும் (ஆபிதீன், ரமேஷ்,  நீங்கலாக ) உங்களால்தான் வெளியே தெரிய வந்தது. கடிதம் எழுதுவதில் பிரபலமான 'மாலாவி ஆனந்த்' பெயரைக்கூட உங்கள் நூலில் நீங்கள்தான் வெளியிட்டு கெளரவித்தீர்கள் என்று தெரிந்தது.

நாடி வந்த வாசகர்களுடன் உட்கார்ந்து 'தண்ணி' அடிக்கக் கூட மனம் இல்லாதவர்கள் பெருமளவில் நிறைந்திருக்கும் எழுத்து உலகில் நீங்கள் வித்தியாசமாக இருந்தீர்கள்.  உங்களிடமிருந்துதான் தன்னடக்கம் என்ற பண்பைக் கற்றேன் (ச்சும்மா.. ஒரு கோர்வையா வரணும்னு..). உங்கள் ஆன்மீக ஈடுபாடு மனித நேயம் கொண்டதாக இருந்தது. உங்களிடமிருந்து அறிந்து கொண்ட பிறகுதான் நான் ஏகப்பட்ட சாமியார்களை தரிசித்து வந்தேன்.  உங்களுடைய 'தப்புத்தாளங்கள்' நூலில் உங்கள் மனித நேயம் வெளிப்பட்டது.   பிரான்சிலும் இன்னபிற கடல் கடந்த பிரதேசங்களிலும் உங்கள் அளவுக்குப் புகழப்பட்ட எழுத்தாளர்கள் இருக்க மாட்டார்கள் என நினைக்கிறேன்.  உங்கள் உங்கள் கோணல் பக்கங்கள் வந்தபோதே உங்களுக்கு புக்கர் பரிசோ புலிட்சர் பரிசோ கிடைக்கும் என என் போன்ற வாசகர்கள் நினைத்தார்கள். இரண்டு பரிசுகளும் விரைவில் கிடைக்கும்.

உங்கள் திறமை வெளிப்பட தமிழை விட மலையாள எழுத்துலகம் அதிக இடம் கொடுத்தது.  அதைப்பற்றி நேரம் கிடைத்தபோதெல்லாம் நீங்கள் எழுதுவதைப் படித்தபின்னர், உங்களுக்கு வாசகர் உலகின் பல்வேறு மொழி பேசுவோரிடமும் இருந்த ஆழ்ந்த ஆளுமை தெரிய வந்தது. (கேரளத்தில் சிம்பு, விஜய் இவர்கள் எல்லாம்  சூப்பர் ஸ்டார்களாமே?  சுறா சூப்பர் ஹிட்டாமே? )  தப்புத்தாளங்களில் ஒரு கட்டுரையில் இரானிய இலக்கியத்தின் சாயலைப் பார்த்தேன்.  ஒருசில சினிமா விமர்சனங்களைப் படித்துக் கொண்டாடியிருக்கிறேன்.

 ஆனால், உங்களுடைய 'மம்மி ரிட்டர்ன்ஸ்'  கட்டுரைகள் வந்த பிறகு உங்கள் கட்டுரைகள் மிகவும் பலவீனமாக இருந்தது. என்னதான் விரோதி, தொழில் போட்டி, என்றாலும் இப்படியா ஐம்பது பக்க அளவில் வன்மத்துடன் எழுதுவது?  போதாதற்கு சம்பந்தா சம்பந்தம் இல்லாமல் இளையராஜாவை சந்தடி சாக்கில் மட்டமாக விமர்சனம் செய்வது... அதன் பின் வந்தவை பெரும்பாலும் சப்பையாக, படிக்கும்படியாகவே இல்லை.

அப்போது எனக்கு உங்கள் மீதான ஆர்வம் குறைந்தது.  இனிமேல் நீங்களும் ஜெயகாந்தனைப் போல பென்ஷன் வாங்குவோர் பட்டியலில் சேர்ந்து விடுவீர்களோ என்று நினைத்தேன்.  அடுத்து வந்த 'கடவுளைக் கண்டேன் ', 'வரம் தரும் கல்ப தரு ' போன்றவற்றைப் பார்த்தபோது அந்த சந்தேகம் வலுத்தது.  ஒரே அல்லேலூயா கோஷம் போல 'நித்திகோஷம் '. நாராசமாக இருந்தன என்பதற்கு மேல் வேறு எதுவும் எழுத முடியவில்லை.  உதாரணமாக, சென்னை- பாண்டிச்சேரி கடற்கரைச் சாலையில் எதிரில் காரில் சென்றபடி நித்தி காட்சி கொடுத்ததாக எழுதியது சகிக்க  முடியவில்லை.  நித்தி மாட்டிக்கொண்ட பின் குமுதம் ரிப்போர்ட்டரிலும் விஜய் தொலைக்காட்சியிலும் கிடைத்த வாய்ப்புகளைப் பயன்படுத்தி ஒரு குறைந்த பட்சம் வருத்தமாவது தெரிவிக்காமல் நீங்கள் மிக பலவீனமான ஆட்டத்தை ஆடியிருக்கிரீர்கள்.

சாரு, நீங்கள் எந்த உலகத்தில் இருக்கிறீர்கள்? இண்டர்நெட்டிலதான் ஏதாவது இசகு பிசகாகச் செய்தால் உடனே பலபேர் பிய்த்து உதறி காயப்போட்டு விடுகிறார்களே?

மதுரையில் இருந்தும் அதற்குத் தெற்கில் இருந்தும், உலகெங்கும் இருந்தும் சத்தம் போடாமல் தமிழில் பல துறைகளில் இருப்பவர்கள் உன்னத விஷயங்களை எழுதிக் கொண்டிருக்கும் புரட்சி பற்றி அறிவீர்களா?  அவற்றை எல்லாம் படித்தீர்களா?  அவர்களைத் தாண்டுவதாகக் கூட வேண்டாம், அவர்களின் பக்கத்தில் கூட நீங்கள் செல்வதாகத் தெரியவில்லையே?  உங்களுடைய கால்பக்கக் கட்டுரைகளைப் பார்க்கும்போது நீங்கள் இருபது ஆண்டுகள் பின் தங்கி இருப்பது புரிகிறது.

இந்தத் தேக்கத்தை நீங்கள் நிச்சயமாகத் தாண்ட முடியும்.  ஆனால் அதற்கு நீங்கள் உங்களுக்குப் பிடிக்காதவர்களை எல்லாம் காரணத்துடனோ காரணம் இல்லாமலோ வசை பாடுவதை நிறுத்தி விட்டு சில உலகத்தரமான  படைப்புகளைப் படிக்க வேண்டும் (புத்தகங்களின் பெயர் மட்டும் சொன்னால் போதாது).

உங்கள் மீது மிகுந்த பிரியம் கொண்ட ஒருவனின் ஆதங்கமாகவே இதை நீங்கள் எடுத்துக் கொள்வீர்கள் என்ற நம்பிக்கையுடன்,

பாஸ்கி.

7 comments:

Anonymous said...

charu'vukke vaa?

Karikalan said...

பாஸ்கர்:

நீங்கள் சாருவைப் பற்றி எழுதியது முற்றிலும் எதிர் பாராதது. சாரு, தமிழ் எழுத்து உலகத்தின் பாரிஸ் ஹில்டன் (Paris Hilton) - "எந்த வகையில் விளம்பரம் கிடைத்தாலும் சரி தான்" என்ற ரகத்தைச் சேர்ந்தவரோ என்று எண்ணும் வகையில் நடந்து கொள்பவர். நித்யானந்தர் விஷயத்தில், சாரு சொல்வதை அப்படியே ஒருவர் ஏற்றுக் கொண்டாலும், ஒரு போலி சாமியாரை அடையாளம் கண்டு கொள்ள முடியாத சாருவின் அசட்டுத் தனத்தை என்ன என்று சொல்வது? விஷயம் வெளி வந்தவுடன், அப்படியே அந்தர் பல்டி அடித்து, முரட்டுத் தனமாக வார்த்தைகளைச் சிதற விட்டு வாசகர்களின் நியாயமான கேள்விகளை தவிர்த்தது, சாருவின் உண்மையான உள முதிர்ச்சியை அனைவருக்கும் தெள்ளத் தெளிவாக்கி விட்டது. இப்படிப் பட்டவர், எப்படி சக மனிதனின் உள்ளத்தை, வாழ்க்கையைப் புரிந்து, என்ன எழுத முடியும் என்ற சந்தேகமும் எழுகிறது.

நீங்கள் குறிப்பிடும், ஆபிதீன், ரமேஷ், ஆனந்த், போன்றவர்களின் விஷயங்கள் பல வாசகர்களுக்கு தெரியாமல் இருக்கலாம் - அதற்கான சுட்டியைச் சேர்த்தால் இதன் பின்புலம் புரியும்.

கடைசியாக, உங்களுக்கு சாருவின் மேல் அசாத்திய நம்பிக்கை தான் போங்கள்:
"இந்தத் தேக்கத்தை நீங்கள் நிச்சயமாகத் தாண்ட முடியும். "

===P.S.: ஜாக்கிரதை: சாரு, தனக்கு புல்லித்சர் பரிசு கிடைக்கும் என்பதை படித்து உங்களுக்கு தன் வளையத்தில் சுட்டி கொடுத்தாலும் கொடுப்பார் :-)

clayhorse said...

என்னது, எழுத்துலக பாரீஸ் ஹில்ட்டனா? கோணல் பக்கங்கள் எழுதியபோது நேராக இருந்த சாருவின் பேனா, தனி மனித தாக்குதல், சாமியார் மார்க்கெட்டிங், என்றெல்லாம் மார்பிங் ஆனதால் வளைந்து போய், இப்படி ஒப்பிடும் நிலை வந்து விட்டது.

Shanmugam said...

என் அம்மா அடிக்கடி சொல்வார்:
"செவுடன் காதுல ஊதுன சங்கு மாதிரி..."
இருந்தாலும், முயற்சி பெருவினையாக்கலாம்.

-சண்முகம்

ஜெகதீஷ் குமார் said...

i agree 100% with and the comments. in a recent post a young software programmer who works in sydny asked him suggestion about starting a blog. he advisednot to start a blog.the reason he states is one needs to read atleast for 5years day and night before starting a blog.

www.jekay2ab.blogspot.com

clayhorse said...

எவரும் தாம் நினைப்பதை, விரும்புவதை நினைத்தபோது எழுதுவதற்குத்தான் வலைப்பூக்கள். பிரபல பத்திரிகைகளில் எழுத கூச்சப்படுபவர்களுக்கும், வாய்ப்பு கிடைக்காதவர்களும் எழுதிப் பயிற்சி பெற உதவுபவையே இவை. இதற்கு எதற்குத் தனியாகப் பயிற்சி? நாமொன்றும் எழுத்தாளர்கள் இல்லையே :). இதைப் பற்றி வெகு நாட்களுக்கு முன்னரே நான் பதிந்திருக்கும் இந்த சுட்டியைப் பாருங்கள். http://baski-lounge.blogspot.com/2009/09/blog-post.html

பிரகாஷ் (எ) சாமக்கோடங்கி said...

சாருவைக் கிழித்துத் தொங்கப் போட்ட பின்னரும், இன்னும் தொடருதே.. தண்ணியில கண்டம் மாறி இவருக்கு கணிணியில கண்டம் போல இருக்கு..

Post a Comment