Sunday, May 16, 2010
நாளொன்றுக்குப் பத்து லட்சம் கேலன் எண்ணெய்...
கேத்தரினா சூறையாடிய லூசியானா மாகாணக் கடற்கரையை ஒட்டி அமைந்துள்ளது BP எண்ணெய்க் கம்பெனியின் ஆழ்கடலில் எண்ணெய்த் தோண்டும் நிலையம். போன மாதம் ஏற்பட்ட ஒரு வெடிப்பினால் அங்கே வரலாறு காணாத எண்ணெய்க் கசிவு ஏற்பட்டு, ஒரு நாளில் சராசரியாக பத்து லட்சம் கேலன் எண்ணெய், கடலில் கலக்கிறது. ஒரு மாதமாக
அந்தக் கசிவை அடைக்கப் பலவிதமான முயற்சிகள் செய்து வருகிறார்களாம். BP நிர்வாகிகள் வழக்கம் போல அரசுக்கும் மக்களுக்கும் தவறாக தகவல்களை அளித்துப் பிரச்னையை திசை திருப்பிய வண்ணம் உள்ளனர். முதலில் ஏதோ சொற்ப அளவே கசிகிறது, நிலைமை விரைவில் சீராகிவிடும் என்று அறிக்கை அளித்தனர். வால்வ் இணைப்பை சரியாக அடைக்கவில்லை என்று BP காண்ட்ராக்ட் கம்பெனியான ஹாலிபர்ட்டனைக் கைகாட்ட, அவர்கள், கண்ட்ரோலர் செய்யும் கம்பெனியைக் கைகாட்ட, அந்தக் கம்பெனி, வால்வ் கண்ட்ரோலரில் இருக்கும் பேட்டரியை சரியான கவனிக்காமல் விட்ட BP -யைக் கைகாட்டுகிறது. எது எப்படியோ, இன்னும் கசிவை அடைத்தபாடில்லை. இவர்களை எல்லாம் கண்காணிக்க வேண்டிய MMS என்ற அரசுத்துறை வழக்கம் போல 'மாமூலாக' எல்லா ஆய்வுகளையும் 'திருப்தியுடன்' முடித்து சான்றிதழ்களும் வழங்கியுள்ளனர். செனேட்டர்களும் பிரதிநிதிகளும் ஆயில் கம்பெனி பாக்கெட்டில். BP -யின் தலைவர், 'கடலின் பரப்பளவோடு ஒப்பிட்டால், இந்தக் கசிவு மிகவும் சிறிதுதான்' என்று திருவாய் மலர்ந்திருக்கிறார். சர்வ வல்லமை படைத்த கார்ப்பரேஷனை, ஓட்டுப்பொறுக்கி அரசாங்கத்தால் என்ன செய்து விட முடியும்?
கசிவை அடைக்க அவர்கள் எடுக்கும் ஒவ்வொரு நடவடிக்கையும் சின்னப்புள்ளத்தனமாக இருக்கிறது. வெடித்த பகுதியின் மேல் முதலில் ஒரு தொப்பி மாதிரி போட்டுப் பார்த்தார்கள். அது வேலைக்கு ஆகவில்லை என்றதும் சிறிய நீர்மூழ்கி ரோபோக்களை அனுப்பிப் பார்த்தார்கள்.. பிறகு எண்ணெயை எரித்துப் பார்த்தார்கள்.. அப்புறம் என்னென்னவோ செய்தும், கசிவு நிற்கவில்லை. ஒரு மைல் ஆழமும் மூன்று மாகாணங்கள் பரப்பளவும் என்ற அளவுக்குக் கடலில் கச்சா எண்ணெய் மிதக்கிறது. மேலும் அது ஏற்கனவே கடற்கரை ஓட்டியுள்ளா சதுப்பு நிலங்களை வந்து அடைந்துள்ளது. ஏராளமான கடல் வாழ் இனங்கள், பறவைகள் முதலியன எண்ணெயில் தோய்ந்து, இறந்து கரையில் ஒதுங்கிய வண்ணம் இருக்கின்றன. மிகப்பிரம்மாண்டமான அளவில் சுற்றுச்சூழல் பாதிக்கப்பட்டாலும் உடனடி பாதிப்புக்குள்ளானவர்கள் அந்தக் கடற்பகுதியை ஒட்டிய மீனவர்கள். அவர்கள் மீன்பிடி தொழில் பாதிக்கப்பட்டதுடன், எந்த இழப்பீடும் கிடைக்காது. இது என்ன ஐரோப்பாவா அல்லது இந்தியாவா, உடனே அரசாங்கம் இவர்களுக்கு நிவாரணம் வழங்க.. அடுத்துப் பல மாதங்களுக்கு இவர்களால் மீன்பிடித் தொழிலுக்குச் செல்ல முடியாததால், இவர்களுக்குக் கிடைக்ககூடிய வேலை கடலில் மிதக்கும் எண்ணெயைச் சுத்தம் செய்வதுதான். அதற்கு அவர்கள், இதனால் ஏதேனும் வியாதி வந்தால், BP அதற்குப் பொறுப்பாகாது என்று கையெழுத்திட்டுத் தரவேண்டும். சிறைக் கைதிகளையும் சுத்தப் படுத்தும் வேலைக்குப் பயன் படுத்தப் போகிறார்கள்.
அதிகாரத்தில் உள்ளவர்கள் பெரிதாக ஏதும் கண்டு கொண்டது மாதிரி தெரியவில்லை. இந்த அழகில் இந்த வாரம்தான் ஆர்க்டிக் பகுதியில் புதிய கிணறுகளைத் தோண்ட ஷெல் கார்ப்பரேஷனுக்குக் கோர்ட் அனுமதி அளித்துள்ளது. கன்சர்வேட்டிவ்கள் மற்றும் வலதுசாரிகளைப் பற்றிச் சொல்லவே தேவை இல்லை. இவற்றை எல்லாம் இயேசு பார்த்துக் கொள்வார் என்றும், மேலும் பல எண்ணெய்க் கிணறுகளைத் தோண்ட உடனே ஆரம்பிக்க வேண்டும் என்றும் கூவ ஆரம்பித்து விட்டனர். ஆமாம், இவர்கள் அப்படி என்னத்தைதான் சாப்பிடுகிறார்கள்?
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment