Tuesday, May 11, 2010

ஹம்மரும் தமிழ் சினிமா நாயகர்களும்

முதலில் ஒரு டிஸ்க்ளைமர்: இசையை ரசிப்பதில் நான் ஒரு ஞான சூன்யம் என்பதால்,   சினிமா பாடலில் குறைந்தபட்சம் 50 சதவிகிதமாவது புரிந்தால்தான் கேட்பேன்.  அதனாலேயே இளையராஜாவுக்குப் பின்னர் வந்த எவரையும் ரசிக்க முடியவில்லை.
போன வாரம் ஒரு நண்பருடன் அவரது காரில் சென்று கொண்டிருந்தேன்.   என் நண்பரோ, புரியுதோ இல்லையோ, தமிழ், இந்தி என்று கலந்து கட்டி,
புதுப் பாட்டுகளாக ஓட விட்டுத் தன்னை ஒரு 'யூத்'தாக வைத்திருப்பவர் (அல்லது அப்படி நினைத்துக் கொண்டிருப்பவர் :) ).  அப்படித்தான் அன்று சமீபத்தில் வெளிவந்த ஒரு படத்தின் பாடல்களை தனது காரில் ஓட விட்டிருந்தார்.  ஒரு பாடலைக் கேட்டபோது மதுரை மன்னர் சுந்தர பாண்டியருக்கும் வராத சந்தேகங்கள் எனக்கு வந்தது.   அதைப் பாடுவது ஆணா, பெண்ணா அல்லது அலியா என்பது முதல் சந்தேகம்.   அது தமிழா, ஹிந்தியா, அல்லது யாகவா முனிவரின் இனன்யா மொழியா என்பது இரண்டாவது சந்தேகம்.  பாடலை ரசித்துக் கொண்டிருந்த நண்பருக்கும் தெரியவில்லை.  இப்படி ஒரு சர்வதேசப் பிரச்னையில் சிக்கியிருந்தபோது, திடீரென்று ஆண்கள் கோரஸ் ஒன்று, "தல போல வருமா.... நம் தல போல வருமா.." என்று பாட்டின் ஊடாக வந்ததும் நிச்சயமாக இது ஒரு தமிழ்ப் பாட்டுதான் என்று தெரிந்து விட்டது.  உடனே ஒரு சவாலாக எடுத்துக் கொண்டு மிச்சப் பாட்டையும் கேட்டு முடிந்தவரைத் தமிழ்ப் படுத்திக் கொண்டேன்.  அடடா எத்தனைத் இலக்கியச் செல்வத்தினை நான் அலட்சியத்தால் இழந்திருக்கிறேன் என்று பின்னர்தான் தெரிந்தது.  நளவெண்பாவில் கூட இத்தனைத் தத்துவங்களும் வாழும் முறைகளும் சொன்னதில்லை.   இதோ அந்தப் பாடல்களில் நான் மூழ்கி எடுத்த சில முத்துக்கள்.

"குதிக்கும் குதிரையை குறிவச்சி  அடக்கும் புஜவலி உனக்கு, நிஜவலி எனக்கு..
... கண்களால் தொட்டதும் கற்பு பதறுது..டொட்ட டொய்ங்...  "
;;;;;;;;;
"ரெண்டு பேரும் குடிக்கணுமே ரெட்ட இதழ் தேம்பால்,
எத்தன நாள் திம்ப இட்லி வட சாம்பார் ? ..டொட்ட டொய்ங்... "


அடங்கொய்யால.. முடியலடா சாமி.  இந்தக் குப்பய எல்லாம் எழுதக் காசு வேறத் தராங்களா?

நிறைய பெருக்கு 'ஹம்மர்' SUV வகைக் கார் தெரிந்திருக்கும்.  அமெரிக்க ராணுவ வண்டியின் சிவிலியன் வகைக் கார்கள் ஐம்பதினாயிரம் டாலரில் தொடங்கி இங்கே கிடைக்கும்.  'மேற்படி உருப்படி'  உபயோகமில்லாமல் சிறுத்துப் போயிருப்பவர்கள்தான் சும்மா 'பிலிம்' காட்ட அந்தக் காரை வாங்கி ஓட்டுபவர்கள் என்பது ஆய்ந்தறிந்த காமெடி சான்றோர்களின் கருத்து.  தமிழ்ப் படக் கதாநாயகர்களின் 'என்ட்ரி சாங்' பார்க்கும்போது எனக்கும் மேற்கண்ட சந்தேகம் வரும்.  நாக்குப்பூச்சி சைசிலிருந்து நமீதா சைஸ் வரை இருக்கும் ஹீரோக்கள், அப்பன் காசில் முதன் முதலில் காமிரா முன் தலை காட்டும் ஹீரோக்கள், எல்லோரும் 'அறிமுக' சீனில் எங்கிருந்தோ பறந்து வந்து குதிப்பது.  பின்னர் குரூப் டேன்சர்கள் எங்கெங்கிருந்தோ வந்து குதித்துப் பின்னர் கைலியை மடித்துக் கட்டிக்கொண்டு ஆடும் ஆட்டங்களையெல்லாம் இனிமேல் மிஸ் பண்ணுவதில்லை என்று முடிவு செய்திருக்கிறேன்.  அந்தப் பாடல்களை எழுதும் 'புலவர்'களை என் வாழ்நாளில் ஒருமுறையாவது தரிசனம் செய்வது என்று கங்கணம் கட்டி உள்ளேன். இதோ, சில சமீபத்தைய முத்துக்கள்.

காற்றில் ஏறியும் நடப்பான்.. கட்டாந்தரையில் படுப்பான்.. எமனுக்கு ??? கொடுப்பான்..
"பூமிப்பந்தின் ஒருபக்கம் மோதி மறுபக்கம் தோன்றுவான்.."

"நான் நடந்தால் அதிரடி, என் பேச்சு சரவெடி,...  "

" குளிரும் பனிமலை குமுறும் எரிமலை, "


அடப்போங்கடா.  இந்த சினிமா நாயகர்களுக்கு எல்லாம் 'அந்த' ஹம்மர் பிரச்னைதான் போலிருக்கு.

2 comments:

Baski.. said...

நல்ல ஒப்பீடு...

clayhorse said...

தங்கள் வருகைக்கு நன்றி..

Post a Comment