Tuesday, May 4, 2010

'சுறாக் கடிக்கு மருந்து' (அ) 'கோடம்பாக்கத்துல இன்னுமா இதக் காப்பியடிக்கல ?'

ஓரிரு வாரங்களில் இங்கு ஆஸ்டின் நகரில் 'சுறா' திரையிடப்படலாம் என்றும், அப்படி வந்தால் போய்ப் பார்த்து விட்டு வரலாமா  என்றும் இரண்டு நாட்களுக்கு முன் என் சகதர்மினி கேட்டாள். ஏற்கனவே இணையத்தில் ஆளாளுக்கு சுறாவை அடித்துப் புட்டு வைத்திருப்பதைப் பார்க்கவில்லை போலும்.  என்னடா இது வம்பாகப் போகிறதே என்று, இன்னும் இரண்டு மாதங்களுக்கு எனக்கு ஆபீஸ் வேலை அதிகம் இருப்பதாகச் சொல்லி வைத்தேன்.  ஒருவேளை தன் தோழியரோடு போய்  அதைப் பார்த்து வரக்கூடும் என்ற ஆபத்தும் இருப்பதால் எதற்கும் இருக்கட்டும் என்று 'தங்கப்பதக்கம்' பாடலை மனப்பாடம் செய்து கொண்டேன்.  இந்த மாதிரி சூழ்நிலைகளை எதிர்கொள்ள கவியரசர் அப்போதே பாடிவிட்டார் பாருங்கள்.


ஆதாரம் இல்லையம்மா ஆறுதல் சொல்ல
நான் அவதாரம் இல்லையம்மா தத்துவம் சொல்ல
பரிகாரம் தேடி இனி எவ்விடம் செல்ல
எனக்கு அதிகாரம் இல்லையம்மா வானகம் செல்ல
ஒரு நாளும் நான் இது போல் அழுதவனல்ல
அந்த திருநாளை கடன் கொடுத்தவன் யாரிடம் சொல்ல ..
அடி தாங்கும் உள்ளம் இது.. இடி தாங்குமா..

இந்தத் தாக்குதலில் இருந்து தற்காலிகமாகத் தப்பிக்க, 'Hangover' என்ற ஒரு ஆங்கிலப் படம் போட்டு வைத்தேன். 'Cheech & Chong ', 'Harold   & Kumar' போன்ற ''stoner " வகைப் படங்களுக்குள் இதை அடக்கலாமா  என்று தெரியவில்லை.  ஆனால் படத்தையோ சிரிப்பையோ  நிறுத்த முடியாத அளவுக்கு அருமையான காமெடி படம். இந்தப் படத்தில் கதைதான் கதாநாயகன்.

கதைச்சுருக்கம்: இன்னும் இரண்டு நாட்களில் திருமணம் செய்யப்போகும் நண்பனுக்கு பேச்சிலர் பார்ட்டி கொடுக்க மூன்று பேர் அவனை லாஸ் ஏஞ்சல்சில் இருந்து லாஸ் வேகஸ் நகர் அழைத்துச் செல்கிறார்கள். இதில் ஒருவர் பள்ளி ஆசிரியர், ஒருவர் பல் வைத்தியர் அப்புறம் மணப்பெண்ணின் அண்ணன். இவர்கள், லாஸ் வேகஸின் 'சீசர் பேலஸ்'  ஓட்டலில் அதி நவீன சொகுசு ரெசார்ட் ஒன்றை வாடகைக்கு எடுக்கிறார்கள். அன்று இரவு அந்த ஓட்டலின் மொட்டை மாடியில் ஏறி ஒவ்வொருவரும் தாம் எந்த அளவு நட்பை நேசிக்கிறோம் என்று சொல்லி நட்பு வளர மது 'டோஸ்ட்' கொடுக்கிறார்கள். அந்த மதுவில் மணமகளின் அண்ணன், 'மிதப்பதற்காக' எதையோ கலந்து விடுகிறான்.

மறுநாள் காலையில் இவர்கள் எழுந்திருக்கும்போது, அந்த ரேசார்ட்டே பேச்சிலர் ஹாஸ்டல் மாதிரி அலங்கோலமாகக் கிடக்கிறது.   குளியலறைக்குச் சென்றால் அங்கு புலி உறுமிக் கொண்டிருக்கிறது.   பயந்து ஹாலுக்கு வந்தால், குறுக்கும் நெடுக்குமாக கோழி ஓடுகிறது.  தாண்டி வந்தால், அலமாரியிலிருந்து குழந்தை அழுகுரல் கேட்கிறது.  தரையில் குப்புறப் படுத்துக் கிடக்கும் பல் வைத்தியருக்கு ஒரு பல் பிடுங்கப்பட்டிருக்கிறது.   குழம்பிப் போயிருக்கும்  ஒருவருக்கும் முன்னிரவு குடித்ததற்கும் இப்போது எழுந்ததற்கும் இடைப்பட்ட நேரத்தில் என்ன நடந்தது என்று தெரியவில்லை.  எல்லாவற்றுக்கும் மேலாக இன்னும் இரண்டு நாட்களில் கல்யாணம் ஆகப் போகும் மணமகனைக் காணவில்லை.  அவன் செல்போன் இங்கேயே இருக்கிறது.  சரி, கீழே போய்த் தேடிப்பார்க்கலாம் என்று இறங்கி வந்து 'valet -பார்க்கிங்' பணியாளரிடம் தம் காரைக் கேட்க, அவன் ஒரு போலீஸ் காரைக் கொண்டு வந்து நிறுத்துகிறான். மேலும் குழம்பிப் போகும் நண்பர்கள் அடுத்த இரு நாட்களுக்குள் மணமகனைக் கண்டுபிடித்துத் திருமணத்துக்கு அழைத்துச் செல்ல வேண்டும்.  இதை எப்படிச் செய்கிறார்கள் என்பதுதான் படம்.  ஒண்ணரை மணிநேர சிரிப்பு மழை. அவசியம் பாருங்கள்.  பெண் பாத்திரங்கள் ஏதோ மொத்தமாக பத்து நிமிடங்கள்தான் வந்திருக்கும்.

இந்தப் படம் வந்தது போன ஆண்டு.  கோடம்பாக்கத்தில் எப்படி இன்னும் இதைக் காப்பியடிகாமல் (ஆனால் ஐந்து வருடங்களுக்கு முன்பே இவர்களுக்கு இந்தக் கதை தோன்றியிருக்கும்! ) இருக்கிறார்கள்?  கமல்ஹாசன் + ரமேஷ் அரவிந்த்+ ஜெயராம் +  கே.எஸ்.ரவிகுமார் என்ற காப்பி(ய)க் கலைஞர்கள் கூட்டணியில் இந்தக் கதையை எப்படியெல்லாம் மாற்றி இருப்பார்கள் என்று கற்பனை செய்து பார்த்தால் அடி வயிறு கலங்குகிறது. அந்த வேலையை, அதில் கைதேர்ந்த மற்றப் பதிவர்களிடம் விட்டு விடுகிறேன்.

1 comment:

பட்டாபட்டி.. said...

இன்னக்கே பார்க்கனும் சார்.. நிசமாவே சுறா கடிக்கு, நல்ல மருந்தை சொல்லியிருக்கீங்க..
டாங்ஸ்..ஹே..ஹே..ஹி..ஹீ

Post a Comment