" இருவது வருஷத்துக்கு முந்தி நடந்ததெல்லாம் இப்போ எதுக்கு மாஞ்சி மாஞ்சி எழுதறீங்க? ஒருத்தரும் அதப் படிக்கிறதுமில்ல, படிச்சாலும் ஒன்னும் திருப்பி எழுதறதுமில்ல. கார்பெட் க்ளீன் செய்யலாம், இல்லன்னா, போய் அந்த lawn -ஐ யாவது கொஞ்சம் mow பண்ணலாமில்ல" என்ற நியாயமான கோரிக்கையை நேற்று என் சகதர்மினி வைத்தாள்.
"இல்லம்மா, நீயும் நானும் எங்கெங்கியோ படிச்சாலும், அடிக்கடி நம்ம ஸ்கூல் மேட்டர் எல்லாம் பேசறமில்ல, அதத்தான் நான் எழுதி வக்கிறன். நானென்ன professional எழுத்தாளனா என்ன, அவங்க படிச்சிட்டுக் கருத்து சொல்றத்துக்கு? பாவம், இந்த வயசில எல்லாருக்கும் என்னென்னவோ பெரிய பெரிய வேலைங்க, பிரச்சினைங்க. அதில்லாம, ரொம்பப் பேரு பெரிய உத்தியோகத்தில எல்லாம் இருக்காங்க தெரியுமா? வந்து எட்டிப் பாத்தாலே பெரிய விஷயம்", என்று எனது 'தெளிந்த' ஞானத்தை உரைத்தேன்.
"ஹ ஹ்..... " எல்லாம் தெரியும் என்ற பாவனையில் உள்ளே போனாள். No man is his wife's hero.
சிலசமயம், பின் மதிய வேளை மூன்று மணி வாக்கில், கண்கள் சொக்கும் முன். பழைய நினைவுகளை அசைபோடும்போது தற்போதைய துன்பங்கள் கொஞ்சம் விலகி நிற்கின்றன. பள்ளிப் பருவத்தில், டவுசர் கிழிந்தும் கிழியாத மாலைப் பொழுதுகளில் பாண்டிச்சேரி பொட்டனிக்கல் தோட்டத்தில் நாவற் பழம் பொறுக்கியது, ஸ்கூல் எதிர்ப்புறம் இருந்த மாந்தோப்பில் மாங்காய் திருடியது, எல்லாம் பசுமையாக நினைவிருக்கிறது. கோவில் தோப்பில் உடன் கில்லி விளையாடியவர்கள் சிலர் உயர்ந்தும், பலர் தாழ்ந்தும், வெகு சிலர் இறந்தும் போயினர். இப்போதெல்லாம் அந்த இடங்களில் பலர் செல்போனில் தனித் தனியே பேசிக்கொண்டிருப்பதைப் பார்க்கும்போது, கவலையற்ற அக்கால நினைவுகள் ஆளை அழுத்தாமல் விடுவதில்லை.
இந்த உணர்வை ஒரு முதியவர் மூலம் புறநானூற்றுப் பாடல் அற்புதமாகப் படம் பிடித்துக் காட்டுவதைப் பாருங்கள். இந்தப் பாடல்தான் கோப்பையிலே குடியிருந்து, கோலமயில் துணையிருந்த நம் கண்ணதாசனையும்
' பசுமை நிறைந்த நினைவுகளே பாடித் திரிந்த பறவைகளே....
....................
குரங்குகள் போலே மரங்களின் மேலே தாவித் திரிந்தோமே '
எனப் பாட வைத்தது.
இனி நினைந்து இரக்கம் ஆகின்று; திணி மணல்
செய்வுறு பாவைக்குக் கொய் பூத் தைஇ
தண் கயம் ஆடும் மகளிரொடு கை பிணைந்து,
தழுவுவழித் தழீஇ, தூங்குவழித் தூங்கி,
மறை எனல் அறியா மாயம் இல் ஆய்மொடு
உயர் சினை மருதத் துறை உறத் தாழ்ந்து,
நீர் நணிப் படி கோடு ஏறி, சீர்மிக,
கரையவர் மருள, திரையகம் பிதிர,
நெடு நீர்க் குட்டத்துத் துடுமெனப் பாய்ந்து,
குளித்து மணற் கொண்ட கல்லா இளமை
அளிதோ தானே! யாண்டு உண்டு கொல்லோ--
தொடித் தலை விழுத் தண்டு ஊன்றி, நடுக்குற்று,
இரும் இடை மிடைந்த சில் சொற்
பெரு மூதாளரேம் ஆகிய எமக்கே?
- புறநானூறு
பாடல் விளக்கம்:
இப்பொழுது நினைத்துப் பார்த்தாலும் வருத்தம் மேலிடுகிறது
மணல் பிடித்து பொம்மை செய்து,
பூப்பறித்து அதற்குச் சூட்டியும்
ஆற்றில் வாலைப் பெண்களின் கைகோர்த்து மகிழ்ந்ததும்
அவர் தழுவும் பொழுது தழுவியும், ஆடும்போது ஆடியும்
ஒளிவு மறைவோ, வஞ்சமோ, ஏதுமில்லாத அன்பு
நண்பர்களோடு நேரம் போவது தெரியாமல் விளையாடி மகிழ்ந்தும்
வளைந்து நீரைத் தொடும் மருத மரத்தின் கிளைகள் பற்றி ஏறி
உச்சிக் கிளை அடைந்து
கீழே நிற்போர் மருள, அவர் மீது நீர்த் திவலைகள் விழும்படி
'தொப்' என நீரில் குதித்து, மூழ்கி
ஆற்றின் ஆழத்திலிருந்து மணலை அள்ளி வந்து காட்டியும்
இப்படிப் பலவாறாக களிப்புற்றிருந்த
இளமைப் பருவம் கழிந்து சென்று விட்டதே !
ஊன்று கோலை ஊன்றி, நடுக்கத்துடனும்
இருமலுக்கிடையேயும் சிரமத்துடன் பேசும்
வயோதிகனான எனக்கு
கடந்து சென்ற அந்தக் காலம் இனி எப்போது வாய்க்கும்?
Related: கண்ணதாசனின் ரசவாதம் - 1
6 comments:
Hai Bhaskar, Who said that we dont read your postings man. Atleast I never miss even one of your postings. It reminds me of those good old days we spent at GCE. I wonder how you keep yourself updated with so much of Tamil literature man, that too being in US. We guys who live in India hardly do it. Kudos to you and pl. tell your wife that you do really have fans.
Thanks for your feedback Logs. I'll proudly tell my wife about your comment. Cheers!
Baskar:
I enjoy reading what you write. You have a gift for writing, and please do write.
Raja
படிப்பித்தல் போல் இல்லாமல், கலந்துரையாடல் போல் பாடம் நடத்திய என்னுடைய தமிழாசிரியர்களுக்குதான் ( பெலேவேந்திரன், ஸ்டாலின் ) ஆகியோருக்குத்தான் நான் நன்றி சொல்ல வேண்டும். அப்பொழுதெல்லாம் பள்ளியில் வகுப்பில் பாடத்தை கவனிப்பதோடு சரி. chemistry, maths, biology தவிர வேறு பாடங்களை நாங்கள் யாரும் வீட்டில் படிப்பது இல்லை. அந்த வகையில் அதிர்ஷ்டம் என்றுதான் சொல்லவேண்டும்.
Hi Baski,
I am intoroduced to your blog ("pidhatral?) and it is interesting.This is really good and want you to be lil careful when writing about chinna ("Kutti") matters.("Kudhugalama irukira kudumbathula kummi adichidhainga anne").
Cheers,
Anamadheyam (anonymous?)
கட்டுரையை மிகவும் சுவைத்துப்படித்தேன் அய்யா! வாழ்த்துக்கள். அழகிய எழுத்து நடையில் சிறப்பான கட்டுரை.
Post a Comment