Saturday, March 30, 2019

செய்திகளை முந்தித் தருவது

எத்தனை வேலை இருந்தாலும் தினமும் எதிரெதிர் செய்தித் தாள்களை மொழிக்கு இரண்டு வீதம் வேகமாகப் படித்து விடுவது வழக்கம். இதனால் ஏதும் பயனுண்டா என்று கேட்டால் , நிச்சயம் இல்லை.  யோசித்துப் பார்த்தால் நியூஸ் பேப்பர் படிக்கும் இந்தப் பழக்கம் நான் மூன்றாம் வகுப்புப் படிக்கும் போது ஆரம்பித்தது.  சென்னை சைதாப்பேட்டையில் என் பாட்டி வீட்டில் தங்கிப் படித்துக் கொண்டிருந்தேன்.  அங்கிருக்கும் திரௌபதி அம்மன் கோயில்தான் எங்களுக்கு விளையாடுமிடம்.   மாலையில் யாரும் வரமாட்டார்கள். அதன் பக்கத்திலேயே என் பெரியப்பாக்களில் ஒருவர் ஒரு சிறிய லென்டிங் லைப்ரரி நடத்தி வந்தார். சிகரெட் புகைப்பதற்கோ எதற்கோ போவதற்காக என்னை தினமும் சிறிது நேரம் அந்த லைப்ரரியில் காவலுக்கு உட்கார வைத்து விட்டுப் போவார். அப்போது அங்கிருக்கும் நியூஸ் பேப்பர் மற்றும் காமிக்ஸ் புத்தகங்களைப் படிப்பேன். 

'விடுதைலை, 'உண்மை' 'முரசொலி ' , 'ராமகிருஷ்ண விஜயம்'  'விகடன் ' என்று பலவிதமான பத்திரிகைகளும் அங்கு வாடகைக்குக் கிடைக்கும்.  அதில் ஒரு குரூப் தினமும் மாலை அரசியல் தினசரிகளைப் படித்து விட்டு ஆக்ரோஷமாக வாதாடும்.  களைத்துப் போனதும், கடைசியில் ஒன்றாகக் கட்டிங் சாயா சாப்பிட்டு விட்டு, மாலை முரசு படித்து முடித்துக் கலையும்.
அதில் ஒரு கம்யூனிஸ்ட் தோழருக்கு மணிக்கட்டோடு கை துண்டிக்கப் பட்டிருக்கும். கேட்டால், ஒவ்வொரு முறையும் ஒரு காரணம் சொல்வார்.  அவர்தான் எப்படி வேகமாக வாசிப்பது என்று எனக்கு சொல்லிக் கொடுத்தார்.  ஒவ்வொரு செய்தித்தாளும் படித்த பின் என்னென்ன வேலைக்கு உபயோகமாகும் என்று விளக்குவார். அந்த விவரமெல்லாம் பொதுவில் சொல்லக்கூடிய சங்கதி இல்லை.

தேர்தல் நேரம் என்றால், சில ஆண்டுகளுக்கு முன்புவரை பரப்புரைகள் , செய்திகள், கருத்து உருவாக்கம், மற்றும் 'இன்ன பிற' விஷயங்களுக்கு அரசியல் கட்சிகளும் மக்களும் செய்தித்தாள்களையே பெரிதும் நம்பி இருந்தனர் .  தவறான செய்தி நியூஸ் பேப்பரில் அச்சடித்து வந்து விட்டால், மறுப்பு எழுதி, ஆசிரியரால் கவனிக்கப்பட்டு பிரசுரம் ஆவதற்குள் விஷயமே மறந்து விடும்.  தலைவர்களை சாமானியர்கள் யாரும் கேள்வி கேட்டு விட முடியாது.    அது ஒரு காலம்.  அப்போது சென்னை மாநகரம் மட்டுமே பிற ஊர்கள் என்ன விஷயங்களைத் தெரிந்து கொள்ள வேண்டும் என்று முடிவெடுக்கும்.

இப்போது, கையில் ஸ்மார்ட் போன் வைத்திருக்கும் ஒவ்வொருவருமே ஒரு பதிப்பகத்தையும் டிவி ஸ்டேஷனையும் வைத்துள்ளனர்.  சாலையில்லாத கிராமத்தில் வசிக்கும் ஓர் இளைஞன், பிரதம மந்திரி வரை கேள்வி கேட்டு, கேலிச்சித்திரம் போட்டு, கருத்துகளைக் கலைத்து,  பெரும் பிம்பங்களைக் கிழித்துத் தொங்க விட்டுப் போகிறான்.  கிரீடக் கனவுகளுடன் வந்த சினிமா சூப்பர் ஸ்டார்களை எல்லாம் காமெடி பீஸ்களாக்கிக் குப்பையில் எறிந்ததைக் கண்ணாலேயே பார்த்தோம்.  அதே சமயம், செய்திகள் முந்தித்தரும் ஆர்வக்கோளாறில் ஃபேக் நியூஸ் இணைய வேகத்தில் பரப்பப்பட்டு அதே வேகத்தில் மறக்கப்படுகின்றன.

மாறும் தொழில்நுட்ப வசதிகளுக்கேற்ப, அரசியல் கட்சிகளும் செய்தி நிறுவனங்களும் தம்மை மறுவடிவமைக்கத் தொடங்கியுள்ளன.  
நாம் மறந்து போவதற்கு முன், பழகிய தோஷத்துக்காக, சில பத்திரிகைகளின் குணாம்சங்களைப் பார்ப்போம்.

தி ஹிந்து: "மவுண்ட் ரோட் மகாவிஷ்ணு" என்று பரவலாக அறியப்பட்ட பேப்பர். அதன் ஆபிஸ் வாசலில் கொலை விழுந்தால் கூட, தீர விசாரித்து, ஒரு 10 நாள் போன பின்தான் செய்தி போடும். 8 பக்கம் நியூஸ், 20 பக்கம் விளம்பரம், எத்தனை பேர் படித்தாலும் கிழியாத 'வெயிட்டான' பேப்பர்.  அதன் Letters To the Editor ( Dear Sir, I would like to bring to your kind attention the situation of stray dog menace in Karpagam colony in Mylapore.  Whereas... ) பகுதி மிகவும் பிரசித்தி பெற்றது.

தினமணி: இதன் மணிப்பிரவாள நடையை ஓரளவு பழகிக்கொண்டால், நல்ல பேப்பர் (70 களில்).  ஒரு காலத்தில் அரசியல்வாதிகளை நடுங்க வைத்த பேப்பர்.  இப்போது வெறும் ஜால்ரா சத்தம்.

தினத்தந்தி: செய்திகளை (நடப்பதற்கு முன்பே) முந்தித் தருவது.  டீக்கடை, சலூன், சைக்கிள் ரிக்ஷா ஸ்டேண்ட், என எங்கும் காணப்படும்.  அடித்தள மக்களையும் படிக்க வைத்தது.  கொஞ்சம் படித்து நாசூக்கான வேலையில் இருப்பவர்கள் "சிலோன் லைலா கேஸ்' போன்ற செய்திகளைத் திட்டிக்கொண்டே விடாமல் படித்தார்கள்.  பழைய பேப்பர் கடைக்குப் போவதற்குள் பேப்பரே பங்கமாகி விடும். மேலும், பக்கோடா, பஜ்ஜி மடிக்க நல்ல பேப்பர்.  எண்ணெயை நன்றாக இழுக்கும்.

மாலை முரசு: தினத்தந்தியின் நோயாளி சகோதரன்.  பெரும்பாலும் மானபங்கச் செய்திகள், மற்றும் அரசியல் புரளிகள்.

முரசொலி, மக்கள் குரல், அலை ஓசை : கட்சிக்கார்கள் வாங்குவார்கள்.  படிப்பார்களா என்று தெரியாது.

தினமலர் : 80கள் தொடக்கத்தில் கூட  கேள்விப்பட்டது இல்லை.  அது எப்பொழுது பரவலாக அறியப்பட்டது என்றும் தெரியவில்லை.  வித்தியாசமான தலைப்புகள்,  30% செய்தி - 70% பிரச்சாரம் என,  இன்று தமிழக அளவில் ஒரு முக்கியமான பேப்பராக மாறி விட்டது.  இன்றைக்கு இணையவெளியில் பரவும் ஃபேக் செய்திகளுக்கான முன்னோடி அச்சு வடிவம்.

தினகரன் : தினமலர் போன்ற பிரச்சார பத்திரிகை.  யாரும் வாங்குகிறார்களா என்று தெரியவில்லை.  நல்ல 'லே-அவுட்' ஆர்டிஸ்ட், எடிட்டர் போன்றவர்களை  காசு கொடுத்து வேலைக்கு வைத்தால் மக்கள் ஓரளவு வாங்கிப் பார்ப்பார்கள்.

No comments:

Post a Comment