சமீபத்தில் பதிவர் விருட்சம் தனியார் பள்ளி நிர்வாகத்துடன் தாம் நடத்தும் போராட்டம் பற்றி எழுதியுள்ளார். அவர் கோரிக்கை நியாயமானதே. அதற்கு பின்னூட்டமிட எழுதியபோது பதில் நீண்டு விட்டதால் அதனை அப்படியே தனிப் பதிவாக எழுதுகிறேன். தனியார் பள்ளிகளின் போக்கு அப்படியொன்றும் ஆச்சரியம் அளிப்பதாக இல்லை. நினைவு தெரிந்த நாளாக அப்படித்தான் இருக்கிறார்கள். கல்வி வர்த்தகமாகிப் போனதால் பள்ளிகளும் demand - supply முறையில் இயங்குகின்றன. Demand இருப்பதால் தரமான பொருளைத் தரவேண்டும் என்ற எண்ணம் இந்த வணிகர்களுக்கு வருவதில்லை. கும்பகோணம் நிகழ்ச்சிக்குப் பிறகு எத்தனைப் பள்ளிகளில் கல்வித்துறை ஆய்வுகள் செய்து நடவடிக்கை எடுத்திருக்கிறார்கள்?
புதுவையில் எங்கள் வீட்டுக்குப் பின்புறம் இருக்கும் ஒரு தனியார் பள்ளியில் மூன்றாவது மாடியில்தான் எல்.கே.ஜி. வகுப்புகள் நடைபெறுகின்றன. சுற்றியிருக்கும் கிராமங்களில் இருந்து ஏராளமான குழந்தைகள் அங்கு வந்து படிக்கிறார்கள். 'மெட்டி ஒலி' சீரியலின் போது மின் தடை ஏற்பட்டதால் வெளியே வந்து போராடிய மக்கள், இதைப் பற்றி எத்தனை முறை கேட்டிருப்பார்கள்? பல தனியார் பள்ளிகளில் மதிய உணவு கூட பள்ளியில்தான் வாங்கி சாப்பிட வேண்டும். இதில் உள்ள லாபத்தால் கல்வியாளர்கள் பள்ளிகளை நடத்துவது போய், குண்டர்கள் நடத்துகிறார்கள்.
தனியார் பள்ளிகளின் இத்தகைய போக்குக்கு முக்கிய காரணம், குழந்தைகளின் பெற்றோர்கள்தான் என்பேன். தமிழகத்தின் முன்னாள் முதல்வர் திரு. காமராஜர், ஆரம்பப் பள்ளிக்குச் செல்லும் குழந்தைகள் இரண்டு மைல்களுக்கு மேல் பயணப் படக்கூடாது என்று ஏராளமான பள்ளிகளைத் திறந்தார். காலையிலேயே நெடுந்தூரம் பயணம் செய்யும் சிறு குழந்தைகள் களைப்படைந்து எப்படிப் படிப்பார்கள்? என்ன ஒரு தொலை நோக்கு சிந்தனை! ஏன் பெற்றோர்கள் தம் பிள்ளைகளை வண்டிகளில் அடைத்துப் பதினைந்து மைல் தள்ளியிருக்கும் தனியார் ஆங்கிலப் பள்ளிகளில் சேர்க்கிறார்கள்? அரசுப் பள்ளிகள் என்ன அத்தனை மோசமா? பாண்டிச்சேரிக்கு வந்து பாருங்கள். எத்தனை சாதனை மாணவர்கள் அரசுப்ப் பள்ளிகளில் இருந்து வெளியே வருகிறார்கள். இதற்குப் பெற்றோர்களின் உடனடி பதில், 'எம் புள்ள மட்டும் இங்கிலீஷ் படிக்க வேணாமா ? '. படிக்கட்டும், ஐந்தாவது வகுப்புக்கு மேலே படிக்கட்டும். முதல் ஐந்து ஆண்டுகள் தம் சொந்த மொழியில்தான் படிக்க வேண்டும். கணக்கும் ஆரம்ப எழுத்துக்களும் தாய் மொழியில் படித்தால்தான் அதன் அர்த்தம் மனதில் படிந்து நிரந்தரமாக நிற்கும். அப்படித்தான் நானும் படித்தேன். அரசுப் பள்ளி எனக்குக் கொடுத்த கொடை பற்றி இங்கே பார்க்கவும். அர்த்தம் புரியாமல் 'டேபிள்ஸ்' மனப்பாடம் செய்து ஒப்பித்து எப்படி மேல் படிப்பில் சிறக்கப் போகிறார்கள்? வேலூர் போன்ற வறண்ட பூமிகளின் பள்ளிகளில் 'ரெயின் ரெயின் கோ அவே' என்று பாடுவது அபத்தமாக இல்லை? நான (அரசு) பொறியியல் கல்லூரியில் படித்த கல்லூரியிலும் அப்படித்தான். 'இங்கிலீஷ் மீடியம்' படித்து வருபவர்களின் ஆரம்ப கால கேலியை மீறி, வருடா வருடம், அனைத்துத் துறைகளிலும் முதலாவதாக வந்தவர்கள் 'டமில் மீடியம்' பள்ளிகளில் இருந்து வந்தவர்களே! ஒவ்வொரு முறை பத்தாம் வகுப்பு, +2 தேர்வுகளில் யார் முதலில் வருகிறார்கள்?
என்னுடைய உறவினர்/நண்பர்களின் பிள்ளைகளில் பல பேரைப் பார்த்திருக்கிறேன். தொலை தூர கிராமங்களிலிருந்து புளிமூட்டை மாதிரித் தம் பிள்ளைகளை பஸ்களில் அடைத்து 'இங்கிலீஷ்' பள்ளிகளுக்கு அனுப்பிப் படித்துப் பின்னர் கல்லூரியிலும் சேர்ந்தவர்கள் பலருக்கு இரண்டு வாக்கியங்கள் கூட ஆங்கிலத்திலோ தமிழிலோ எழுதத் தெரியவில்லை. கடல் மண்ணின் மீது அலங்காரமாக வீடு கட்டியவர்கள் போலிருக்கிறது அவர்கள் நிலை. நான சொல்வது இதுதான். குறைந்தது ஐந்தாவது வகுப்பு வரையாவது அரசாங்கப் பள்ளிகளில் சேருங்கள். மிச்சமாகும் பணத்தை வைத்து அரசுப் பள்ளிகளுக்கு அடிப்படை வசதி போல ஏதாவது செய்து கொடுங்கள். அல்லது, சிறப்பாகப் படிப்பிக்கும் ஆசிரியர்களுக்கு வருடா வருடம் அந்தப் பணத்தில் பரிசு கொடுக்கலாம். பெற்றோர்களின் ஈடுபாடு இருந்தால் அரசுப்பள்ளி ஆசிரியர்களும் சிறப்பாகப் பணி புரிவார்கள். சிறந்த ஆசிரியர்கள் சிறந்த மாணவர்களை உருவாக்குவது போல சிறந்த பெற்றோர்களும் சிறந்த ஆசிரியர்களை உருவாக்காலாம், ஊக்கப்படுத்தலாம்.
'அதெல்லாம் சரி, உன் குழந்தை எங்கே படிக்கிறது' என்று கேட்கிறீர்களா? நான டெக்சஸ் மாநிலம் ஆஸ்டின் நகரில் வசிக்கிறேன். இங்குள்ள அரசுப் பள்ளியில்தான் ஏன் ஆறு வயது மகள் படிக்கிறாள். அமெரிக்கப் பள்ளிகளின் நிலைமை ரொம்ப சோகம். அது பற்றி விரிவாக வேறு ஒரு முறை எழுதுகிறேன். தமிழகத்தில் இருப்பவர்கள் அதிர்ஷ்டசாலிகள். காமராஜர் மற்றும் கருணாநிதி உருவாக்கிய அற்புதமான கல்வி அமைப்பு இருக்கிறது. அதை இடையில் செம்மைப் படுத்தாமல் விட்டு விட்டார்கள். அதை சரிப்படுத்துவது பெற்றோர்கள் கையில்தான் உள்ளது. 'அது தணிக்கும் வாய்நாடி வாய்ப்பச் செயல்.'
5 comments:
கல்வியாளர்களைக் குறைக்கூறி என்ன பயனும் எழும்பாது.சமீப்பத்தில் ஒரு தனியார் பள்ளி வேன் மோதியதில் ஏற்பட்ட கொந்தளிப்பு ஒரு நிறுவனத்தையே அடித்து நொறுக்கியது.அதுபோண்ற பாதிப்புகள் ஏற்படும் போது மட்டுமே முட்டாள்கள் போல செயல் பட்டு நாம் நம் எதிர்ப்பை வெளிப்படுத்துகிறோம்.. மேலும் நம்மிடம் தரம் என்பது ஐ.க்கு வெளிப்பாட்டில் இல்லை... அது வெறும் மதிப்பெண் சார்ந்தாகவே உள்ளது.. என்று மதிப்பெண் சாராத... ஒரு மதிப்பீட்டு முறை வெளிப்படுமோ அன்று தான் நம் தமிழ்நாட்டு மாணவர்களின் உண்மையான அறிவு வெளிப்படும் .. அவர்கள் பெற்றொர்களாகும் போது எல்லாம் சாத்தியம் ஆகும்... அது வரை ..நாம் குறைக் கூறவேண்டியது தான்..
திரு பாஸ்கி
உங்கள் தளத்தில் எனது பதிவு குறித்து கருத்து வெளியிட்டமைக்கு நன்றி.
உங்கள் கருத்துக்கள் உண்மை தான். பெற்றோர்களிடம் ஒரு இயந்தரத்தனம் அல்லது பொது புத்தி இருக்கிறது. பள்ளி துவங்கிய நாள் முதல் நான் பள்ளியிடம் எழுப்பும் கேள்விகள் பலரும் அறிந்தது தான். பள்ளியின் கதவுக்கு வெளியில் புலம்பும் பெற்றோர் அதை முன்னெடுத்துச் செல்ல முன் வருவதில்லை. பலருக்கும் எது அடிப்படைத் தேவை என்பது புரிவதில்லை. எது தரமான கல்வி என்றும் தெரிவதில்லை. நிறைய சொல்லித் தருவது, அதுவும் முந்தைய வகுப்புகளிலேயே சொல்லித் தருவது என்பது தான் தரமான கல்வியின் அடையாளமாக பெற்றோர் பார்க்கிறார்கள்.
ஆனால் அது LKG வகுப்பில் துவங்குவது என்பது மிகப் பெரிய வன்முறை என்பது என் கருத்து. அடித்தாவது அவர்களை எழுத வைத்து விட வேண்டும் என்று தான் நினைக்கிறார்கள்.
வகுப்பில் சரியான வெளிச்சம் காற்றோட்டம் இல்லை என்பது குறித்து யாரும் கவலைப் படுவதே இல்லை. கிட்டத்தட்ட 50 பிள்ளிகளை ஒரே வகுப்பில் வைத்து ஒரு ஆசிரியை எப்படி சமாளிக்கிறார் என்பது குறித்தும் யாரும் யோசிப்பது இல்லை. பள்ளி சொல்வதை கேட்பது தான் பிள்ளைகளின் எதிர்கலதுக்கு நல்லது என்பது ஏற்றுக் கொள்ளப் பட்ட கருத்தாகவே இருக்கிறது. அல்லது எல்லாப் பள்ளியும் இப்படித் தான் இருக்கிறது என்று பொதுப் படுத்தி விடவும் தயங்குவதில்லை. இதை படித்தவர்களும் செய்வது ஆச்சர்யம் அளிக்கிறது. அவ்வளவு ஏன் நான் புகார் அளிக்க சென்ற பொது IMS (Inspector ஒப் Matric System ) அவரும் அதையே தான் சொன்னார். பெரும்பான்மைப் பள்ளிகள் இப்படி தான் இயங்கிகின்றன என்று .
பல ஆண்டுகளுக்கு முன்பு பல தனியார் பள்ளிகளில் +1 வகுப்பில் +2 பாடங்களை நடத்தி 'ரிசல்ட்' காட்டும் ரேசில் இருந்தனர். இப்போது L.K.G. யிலேயே இப்படியா? அதிர்ச்சியாக உள்ளது. இது ஒரு புறமிருக்க, இந்தியாவில் இருக்கும் என்னுடைய உறவினர்களிலேயே பல பேர், குழந்தை வீட்டில் 'ரொம்பப் படுத்துது, நிம்மதியா சீரியல் பார்க்க முடியல, தூங்க முடியல', என்று தமது இரண்டு வயதுக் குழந்தைகளையே பள்ளிகளில் 'தள்ளி விடும்' கொடுமையைப் பார்க்கிறேன். அவர்களிடம் ஒன்றும் பேச முடியவில்லை. நாம் ஏதாவது சொன்னால், 'அங்க இருந்துக்கிட்டு சொல்லுவாங்க. இங்க வந்து பாக்கட்டும்' என்று வாயை அடைத்து விடுகிறார்கள். பெற்றோர்கள் இந்த அழகில் இருக்க, நான் எப்படிப் பள்ளி நிர்வாகங்களைக் குறை சொல்வது?
உண்மையில் matric syllabus nursery வகுப்புகளுக்கு வெகு அருமையாக அமைக்கப் பட்டு இருக்கிறது. ஆனால் பள்ளிகள் அதை முறையாக பின்பற்றுவதில்லை. முக்கியமாக என் மகன் படிக்கும் பள்ளி சுத்தமாக பின்பற்றுவதில்லை.
Post a Comment