Saturday, November 13, 2010

சென்ற வார இடைத்தேர்தல் - குடலாப்பரேஷன்சென்ற வாரம் இடைத்தேர்தலில் வாக்களிக்க நாங்கள் வரிசையில் நின்றபோதே முடிவு ஓரளவு தெரிந்து விட்டது.  அந்த வரிசையில் நாங்கள் இருவர் மட்டுமே பழுப்பு நிறத்தவர்.  பல வாக்குச்சாவடிகளில், அதிகாலையில் இருந்தே வயதான வெள்ளையர்கள் குவியத் தொடங்கி விட்டனர்.  ரிப்பப்ளிக்கன் கட்சியினரின் 'பயங்காட்டும்' பலமுனைப் பிரச்சாரம் நன்றாக வேலை செய்திருந்தது.  மாலையில் பிரதிநிதிகள் அவையில் பெரும்பாலான இடங்களை டெமாக்ரட் கட்சியினர் இழந்த செய்திகள் வரத்தொடங்கி விட்டன.  அவையின் உறுப்பினர்களுக்கும், விட்டுப்போன மற்றும் காலியான செனேட் இடங்களுக்கும் இரண்டாண்டுகளுக்கு ஒரு முறை அமெரிக்காவில் தேர்தல் வருவதால் இங்கு தேர்தல் நிதி திரட்டுவதும்,  பிரச்சாரம் செய்வதும் பல வடிவங்களில் வருடம் முழுதும் நடந்து கொண்டே இருக்கும்.  இதனால் ஊடகக் கூத்தாடிகளுக்கும், காத்தாடிகளுக்கும், கருத்துரைஞர்களுக்கும் எப்போதும் திருவிழாதான்.  போதாக்குறைக்கு அனைத்து ஊடகங்களிலும் நாளொன்றுக்கு இரண்டு மூன்று கருத்துக் கணிப்புகள் (திணிப்புகள்!).


2008 அதிபர் தேர்தலில் கறுப்பரான ஒபாமா ஜெயிக்க வாய்ப்பில்லை என்று நாட்டின் 'ஆண்ட வம்சம்' சற்று அசிரத்தையாக இருந்து விட்டது.  ஒபாமா பதவி ஏற்ற நாளிலிருந்தே அவர்களின் தேர்தல் பிரச்சாரம் தொடங்கி விட்டது.  ஏறக்குறைய காணாமலே போய்விட்ட ரிபப்ளிக்கன் கட்சியை உயிர்ப்பிக்கப் பல இயக்கங்கள் உருவாக்கப்பட்டன.  ரிட்டையரான ரிபப்ளிக்கன் தலைவர்கள், மற்றும் பழமைவாத தலைவர்கள் இந்த இயக்கங்களை நடத்தப் பணிக்கப்பட்டனர்.  நாட்டையும் மக்களையும் உறிஞ்சி வாழும் பெரும் செல்வந்தர்கள் பின்னணியில் இருந்து கொண்டு ஏராளமான டீ-பார்ட்டி போராட்டங்களை வாரந்தவறாமல் நடத்தினார்கள்.  பதவி ஏற்ற நான்காம் மாதமே, 'ஒபாமாவின் ஊழல்கள்' என்று சில புத்தகங்களே வந்து விட்டன.  இந்த ரவுடி இயக்கங்களின் தொண்டர்கள், வயதான கிராமப்புற வெள்ளையர்கள் (WORMS-White Old Rural Male Southerners).  அரசாங்கத்தின் உதவிப்பணத்தில் வாழ்ந்து கொண்டே,  'அரசாங்கம் என்பது வரி விதித்து, மக்களுக்குத் தீமை செய்யும் கொடூர இயக்கம்' என்பது இவர்களின் சித்தாந்தம்.  அது என்னவோ, ரிபப்ளிக்கன் கட்சியினர் பதவி இழக்கும் போதெல்லாம் இவர்கள் திடீரென்று விழித்தெழுவார்கல், மற்றபடி உறங்கச் சென்று விடுவார்கள்.  ஒவ்வொரு வாரமும், ஏதாவது காரணம் சொல்லி, 'ஒபாமாவின் கொடுமையை முடிவுக்குக் கொண்டு வர' ஊர்வலம் நடத்துவார்கள்.  இவர்களை ஒன்றிணைப்பதில் fox news பெரும் சேவை புரிந்தது.  இத்தகைய இயக்கங்களுக்கு வெளிப்படையாக நிதி உதவி செய்பவர்கள் கோக் (Koch) சகோதர்கள் எனப்படும் நிலக்கரி முதலாளிகள்.  போதாக்குறைக்கு, இந்த ஆண்டு ஆரம்பத்தில்தான், கார்ப்பரேஷன்கள் எவ்வளவு வேண்டுமானாலும் தேர்தல் செலவு செய்யலாம் என்று சுப்ரீம் கோர்ட்டின் பழமைவாத மெஜாரிட்டி  தீர்ப்பளித்து விட்டது.  வெளிநாட்டுப் பணம் வெள்ளமாகப் பாய ஆரம்பித்துவிட்டது.  இந்தியா மற்றும் சீனக் கம்பெனிகள் ரிபப்ளிக்கன் கட்சி வேட்பாளர்களுக்கு சேம்பர் மூலம் பணத்தை அள்ளி வீசின.  மற்ற நாட்டுத் தேர்தல்களில் எல்லாம் அமெரிக்க விளையாடுவது போய், இப்போது அமெரிக்கத் தேர்தலில் வெளிநாட்டுப் பணம் விளையாடுகிறது.

எட்டாண்டுகளாக புஷ் கட்சியினரால் அழிக்கப்பட்ட பொருளாதாரத்தை இரண்டாண்டுகளிலேயே ஒபாமா தீர்த்து வைக்கவில்லை என்று பெருவாரியான மக்களுக்குக் கோபம்.  பதவி ஏற்றதிலிருந்து, 'வால் ஸ்ட்ரீட்'  பிரச்னைகளை மட்டும் ஓடி ஓடித் தீர்த்து வைத்தார்கள்.  மக்கள் பெருவாரியாக வீடுகளை இழப்பது,  10% வேலையின்மை,   நீண்ட கால வேலை இல்லாத் திண்டாட்டம், ஏழில் ஒருவர் வறுமைக் கோட்டுக்குக் கீழே இருப்பது இவையெல்லாம் சேர்ந்து கொண்டதால் பிரச்னை மேலும் பெரிதாகியது.   மைனாரிட்டியாக இருந்து கொண்டே எடுத்ததெற்கெல்லாம் மிரட்டும் ரிபப்ளிக்கன் கட்சியினரைப் பார்த்து டெமாக்ரட் கட்சியினர் நடுங்கிக் கொண்டே இருந்தனர்.  முன்னெடுக்கும் கொள்கைகளை எல்லாம் திட்டங்களாகத் தீட்டுவதற்கு முன்பே கோழைகள் போல சரணடைந்துப் பின் வாங்கினர்.  இதனால் எரிச்சலடைந்த, தம் வழக்கமான ஆதரவாளர்களையும் டெமாக்ரட்கள் இழந்தனர். 

நாட்டுக்கும் நாட்டு மக்களுக்கும் ஏற்பட்ட அத்தனைத் தீமைகளுக்கும் ஒபாமாதான் காரணம் என்ற எதிர்க்கட்சியினரின் பிரச்சாரத்தை எதிர் கொள்ளாமலேயே ஒபாமா 'ஜென்டில்மேன் (a) கோழை'  போல் நடந்து கொண்டதால், தேர்தலில் கடைசி நேர ரிப்பேர் முயற்சிகள் ஏதும் எடுபடவில்லை.  இக்காட்டான நேரத்தில் தைரியம் அளிக்க, மக்களுக்குத் தலைவர்கள் தேவை.  முதுகெலும்பு அற்றவர்கள் எவ்வளவு நல்லவர்களாக இருந்தாலும் தூக்கி எறிவார்கள் என்று இந்தத் தேர்தல் உணர்த்தியது.  ஹாலிவுட் துணை, திறமையான ஆதரவாளர்கள் என்று பலர் இருந்தாலும்,  எதையும் பயன் படுத்தவில்லை.  தமக்கு வாக்களித்துப் பதவியில் அமரச் செய்த பல மில்லியன்  இளைஞர்களையும் அவர்களது திறமை மற்றும் சக்தியையும் உபயோகப் படுத்தாமல் அப்படியே விட்டு விட்டார்.  தாம் செய்த சாதனைகளைக் கூட பிரச்சாரம் செய்யத் தவறிவிட்டார் ஒபாமா.   ரிபப்ளிக்கன் கட்சியினரோ மிகவும் திறமை வாய்ந்த பொய்யர்கள்.  அவர்கள் செய்யும் அவதூறுப் பிரச்சாரங்களைப் பார்த்தால் தமிழ்நாட்டின் கழகக் கட்சியினரே கூச்சத்தால் நெளிவார்கள்.  எதிராளியின் கன்னத்தில் அறைந்து விட்டு, தன் உள்ளங்கையைக் கன்னத்தால் அடித்ததாகக் குற்றம் சாட்டும் பிரச்சாரங்கள் எல்லாம் இங்கு சாதாரணம்.

மெஜாரிட்டி இருந்தபோதே எல்லாவற்றுக்கும் வளைந்து கொடுத்து வழிவிட்டுப் போகும் டேமாக்ரட்டினர் இப்போது என்ன செய்வார்கள் என்று தெரியவில்லை.  செல்வந்தர்களின் நலனைப் பற்றியே கவலைப்படும் ரிபப்ளிக்கன் கட்சியினர், இப்போது எஞ்சி இருக்கும் ஓரிரண்டு மக்கள் நலத் திட்டங்களையும் ஒழித்து விடுவார்கள்.  ஏற்கனவே ஒரு சில மாகாணங்களின் புதிய கவர்னர்கள், அரசுப் பள்ளிக்கூடங்களைப் படிப்படியாக மூடப் போவதாக அறிவித்துள்ளார்கள்.  வழக்கம்போல சிறைத்துறை மற்றும் ராணுவ பட்ஜெட் அதிகரிக்கும்.  உலகின் அனைத்து நாட்டு ராணுவ பட்ஜெட்டுகளையும் கூட்டினாலும் அமெரிக்க ராணுவ பட்ஜெட் அதிகம்.  இத்தனைக்கும், கல்லையும் குச்சியையும் வைத்துக் கொண்டும் போராடுபவர்களுடன் எட்டு ஆண்டுகள் சண்டை போட்டும் இன்னும் ஜெயித்தபாடில்லை.

No comments:

Post a Comment