Thursday, December 31, 2020

விட்டுச் செல்லும் பாடங்கள்

 நம்முடைய காலத்தில், நினைவு தெரிந்த வரையில் இது போல ஒரு வருஷத்தைப் பார்த்ததே  இல்லை என்று சொன்னால் அது 2020 ஆகத்தான் இருக்கும்.  ஒரு ஃபேன்சி நம்பராக அமைதியாக ஆரம்பித்து, பத்து வருஷங்களுக்குண்டான அனுபவத்தைத் தந்துவிட்டு நம்மைக் கடந்து செல்கிறது 2020.

மேலை நாடுகள் என்று சொல்லப்படும் மேற்கு நாடுகளே அண்ணாந்து பார்க்கும் அமெரிக்கா எப்படிக் கிழித்துத் தொங்க விடப்பட்டது  என்று மட்டும் இங்கு பார்ப்போம்.

முதலில் இந்த ஆண்டின் மிகப் பெரிய வில்லன் (??)
15 நபர்களுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டது என்று மார்ச் 2020ல் முதன் முதலாக அதிகார பூர்வமாக அறிவிக்கப்பட்டது.  டிரம்ப், அது ஒரு நோயே இல்லை என்றும், வந்த வழியே மந்திரம் போட்டது போல, சில நாட்களில் காணாமல் போய் விடும் என்றும் பேட்டி அளித்தார்.  நாளாக ஆக தொற்றின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே போனதும் பல மாநிலங்கள் லாக்கடவுன், கடை அடைப்பு, மாஸ்க் அணிய அறிவுறுத்தல் போன்ற அடிப்படை நடவடிக்கைகளை எடுத்தனர். 


ஃபாக்ஸ் நியூஸ் உள்ளிட்ட வலதுசாரி ஊடகங்கள் வழக்கம்போல், இது வெறும்  சளிக்காய்ச்சல்.  டிரம்ப்பின் நற்பெயருக்குக்  (?!) களங்கம் விளைவிக்க எதிர்க்கட்சிகளும் படித்தவர்களும் சேர்ந்து செய்யும் பொய்ப் பிரச்சாரம் என்றும், முகக்கவசம் அணியத் தேவை இல்லை என்றும் உச்சகட்டப் பிரச்சாரம் செய்தனர்.  அதற்கு ஏற்றாற்போல அவர்கள் ஆதரவாளர்கள் ஆங்காங்கே போராட்டங்கள் நடத்தினர்.  மிஷிகன் மாநிலத்தில் ஆயுதம் ஏந்திய அமைப்புகள் அந்த மாநில கவர்னரையே கடத்திச் சென்று கொலை செய்யத்  திட்டமிடும் அளவுக்கு வந்தனர்.

ஒரு கட்டத்தில் டிரம்புக்கே கொரோனா தோற்று ஏற்பட, உலகிலேயே மிகவும் சிறந்த, வெளியில் யாருக்கும் கிடைக்காத, ஸ்டெம் செல் மருத்துவ சிகிச்சை  அவருக்கு அளிக்கப்பட்டது.  ஆனால் வெளியே வந்த மனிதர் திருந்தினாரா என்றால் இல்லை.. "இதெல்லாம் ஒரு பாதிப்பே இல்லை.  தாராளமாக வெளியே நடமாடுங்கள்" என்று மீண்டும் பொய்ப் பிரச்சாரம்., அவருக்குக் கிடைத்த சிகிச்சை எத்தனைப் பேருக்குக் கிடைக்கும் என்ற அடிப்படை அறிவு கூட இல்லாத ஒரு கூட்டம்.  டிரம்பின் கருத்துக்கு மாறாக அறிவுரைகள் வழங்கிய, நாட்டின் தலைசிறந்த தொற்றுநோய் நிபுணர் டாக்டர் ஃபௌச்சி போன்றவர்களுக்குக் கொலை மிரட்டல்கள் வந்தன.

 
டிசம்பர் 32 நிலவரப்படி USA வில் மட்டும் கொரோனவால் இறந்தவர்கள் எண்ணிக்கை 353,000.  இது அதிகாரபூர்வமான எண்ணிக்கை. உண்மையில் இதைவிட மேலும் 20 சதவீதம் அதிகமாக இருக்கவே வாய்ப்பு அதிகம்.  நொறுங்கிய பொருளாதாரம், வேலை இழப்புகள் மற்றும் உடைந்த குடும்பங்கள் என்று collateral damage எல்லாம் மிக அதிகம்.  இந்த சிக்கலான நேரத்தில் இப்படி ஒரு ஜனாதிபதியைப் பெற்றது அமெரிக்காவின் துரதிருஷ்டம் என்றோ, பாவத்தின் விளைவுகள் என்ற சொல்லலாம்.  சாவு எண்ணிக்கை 150,000த் தாண்டியதும் அதை பற்றிய பேச்சையே விட்டு விட்டார் டிரம்ப்.

https://www.washingtonpost.com/business/2020/12/10/pandemic-shoplifting-hunger/

நிறவெறியை எதிர்த்து நாடு தழுவிய போராட்டங்கள் 
இது வழக்கமான நிகழ்வு என்றாலும் மே மாதம் 25ல் நடந்த படுகொலை பெருவாரியான  அமெரிக்கர்களின்  அற உணர்வைத் தட்டி எழுப்பியது என்றே சொல்லலாம். ஜார்ஜ் ஃபிளாய்டு என்னும் கறுப்பின மனிதனின் கழுத்தில் காலை வைத்து அழுத்தி, பட்டப்பகலில் பலரும் பார்க்கும் வகையில் வெள்ளைப் போலீஸ் ஒருவன் கொலை செய்தான்.  இந்த வீடியோ உடனடியாக இன்டர்நெட்டில் பரவி நாடெங்கும் அதிர்ச்சி அலையை உண்டு பண்ணியது.  அதைத் தொடர்ந்து பல மாதங்கள் பேரணிகளும் போராட்டங்களும் நடந்தன.  ஒரு கட்டத்தில் வெள்ளை மாளிகை பங்க்கருக்குள் டிரம்ப் ஓடி ஒளியும் அளவுக்கு நிலைமை வந்தது.
 


  
இயற்கைப் பேரழிவுகள்
வருடந்தோறும் வரும் பெரும் புயல்களும் காட்டுத்தீயும் இம்முறையும் தவறவில்லை.  கலிபோர்னியாவில் இந்த ஆண்டு காட்டுத்தீ எண்ணிக்கை சுமாராக 10,000.  எரிந்த நிலப்பரப்பு சுமாராக 4.5 லட்சம் ஏக்கர்கள்.
புவி வெப்பமாவதை இப்போதாவது அதிகாரத்தில் உள்ளவர்கள் ஏற்றுக்கொள்வார்களா?



அதிபர்  தேர்தல்
இந்த வருடம் நடந்த தேர்தல் டிரம்பின் புண்ணியத்தில் மிகவும் வித்தியாசமான முறையில் நடந்தது.  கொரோனா பயத்தால் பெருவாரியான மக்கள் தபால் ஓட்டு போட்டனர்.  அதிக அளவில் வாக்குப் பதிவு நடப்பது எப்போதுமே ரிபப்லிக்கன் கட்சிக்கு பாதகமாக அமையும் என்பதால் வாக்குப் பதிவை மந்தமாகும் முயற்சிகள் எதையும் கைவிடவில்லை.  முக்கியமாக, தபால் வாக்குகளை முடக்கச் செய்த முயற்சிகளை விளக்க ஒரு புத்தகமே போடலாம்.  இருந்தும் மக்கள் பெருவாரியாகத் திரண்டு வந்து வாக்களித்து பைடனைத் தேர்ந்தெடுத்தனர். பல விதங்களில் இது வரலாறு காணாத தேர்தல்.  ஒரு பெண், அதுவும் ஆசிய, கரீபியன் வேர்கள் கொண்டவர் துணை அதிபராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.  ஒரு அதிபரின் தேர்தல் தோல்விக்கு நாடே  தன்னிச்சையாக தெருவில் இறங்கி கொண்டாடி விழாக்கோலம் பூண்டது இதுதான் முதல்முறை.



ஆனால் தன் குணத்துக்கேற்ப, டிரம்ப் இந்த தேதி வரை தன தோல்வியை ஒப்புக் கொள்ளவில்லை.  தான் வென்றுவிட்டதாகவும், எப்படியும் ஜனவரி 6க்கு முன்னர் தேர்தல் முடிவுகளை மாற்றி விடலாம் என்று விடாமுயற்சியில் இருக்கிறார். அவருடைய கட்சியினரே அமெரிக்க ஜனநாயகத்தையும் அரசியலமைப்பையும் கேலிக்குரிய பொருளாக மாற்றி வருகின்றனர்.





No comments:

Post a Comment