Wednesday, August 17, 2011

வேதபுரத்து வியாபாரிகள்

இந்த ஜூலை கோடை விடுமுறையில் தென் தமிழகத்தின் திற்பரப்பு, பத்மநாபபுரம், குத்தாலம் உள்ளிட்ட, பரவச அனுபவம் அளித்த இடங்களுக்கு முதலில் சென்றோம். ஒரு மணி நேரத்துக்கு மேல் குளித்தாலும் வெளியே வர மறுத்த என் 7 வயது மகளை மிகவும் சிரமப்பட்டுத்தான் திற்பரப்பு அருவியில் இருந்து வெளியே வர வைத்தோம். குத்தாலம் ஐந்தருவியில் தலையை நனைக்க மிகவும் சிரமப்பட்டோம். ஒரு பெரிய கும்பல் எல்லா இடங்களையும் ஆக்கிரமித்துக் கொண்டு பிறரை நெருங்கவே விடவில்லை. பிறகு மெயின் அருவிக்குச் சென்று ஆசை தீரக் குளித்து வந்தோம். எங்கள் அதிர்ஷ்டம், சாரலுடன் நல்ல சீசன் போலிருந்தது. நாற்பதாண்டு காலத்தில் இப்போதுதான் முதல் முறையாக இங்கெல்லாம் செல்ல முடிந்திருக்கிறது என்பது வருத்தப்பட வேண்டிய விஷயம்.

எல்லா அருவிகளிலும் நான் பார்த்த மகிழ்ச்சி தந்த விஷயம், அங்கு குளித்தவர்களிலே என்னுடைய தொந்திதான் மிகச் சிறியதாக இருந்தது. என்ன ஆயிற்று தமிழர்களுக்கு?

நெல்லையப்பர் கோயில் சென்றால், கத்தியைக் காட்டாத குறையாக, அர்ச்சகர்கள் எல்லாம் தட்டை முகத்தில் மோதுவது போல நீட்டி, 'தட்சணை போடுங்கள்' என்று மிரட்டுகிறார்கள். திருச்செந்தூரில் இன்னும் மோசம். தரகு பிடிப்பவர்கள் போல அர்ச்சகர்கள் 'ஸ்பெஷல் தரிசனத்துக்கு' ஆள் பிடிப்பதில் பிசியாக இருக்கிறார்கள். இந்த அனுபவமெல்லாம் அவர்களுக்கு வேறு சில தொழில்களுக்கும் பயன்படலாம். மற்றபடி, முன்னைப்போலவே நெல்லை நகரம் (எம் தமிழர் பழக்கத்துக்கு விரோதமாக) குப்பைகள் இன்றித் தூய்மையாக இருக்கின்றது.

இப்படியாகத்தானே தென் தமிழகத்தைப் பார்த்துவிட்டு, சொந்த ஊரான புதுச்சேரிக்குப் புறப்பட்டோம். தினமும் ஆம்னி பஸ்கள் ஆங்காங்கே கவிழ்ந்து கிடந்தாலும், ரயில் டிக்கட் கிடைக்காததால் நாங்களும் ஒரு ஸ்லீப்பர் வசதி கொண்ட பஸ்ஸில் புறப்பட்டோம்.

சரக்கு வண்டி போல, பயணிகள் கம்மி, சரக்கு ஜாஸ்தி. என்னுடைய நாத்திகக் கொள்கையை சோதனை செய்து பார்ப்பது போலவே பஸ்சும் தாறுமாறாகச் சென்றது. இடையில் மதுரையில் இரண்டு இடங்களில் நின்றது. முன்னது ஒரு மூத்திர சந்து, அடுத்தது ஒரு மூத்திரக் குட்டை. இந்தப் பதினான்கு ஆண்டுகளாக இந்தியப் பயணத்தின் போது எனக்கு எந்த உடல் கோளாறும் வந்ததில்லை என்பதால் நானும் தைரியமாக அந்த நிறுத்தத்திலிருந்த ஒரு டிபன் கடையில் சாப்பிட்டேன். அன்றைய தினம்தான் கைப்புள்ள நித்தியானந்தன், குண்டலினியை மேலே கிளப்பிப் பறக்கப் போவதாக விளம்பரம் செய்திருந்தான். அது என்ன ஆயிற்று என்று நான் பிறகு பார்க்கவில்லை, ஆனால், திருச்சியைத் தாண்டியதுமே, பஸ் ஆடிய ஆட்டத்தில், என்னுடைய குண்டலினி சக்தி அடி வயிற்றிலிருந்து கிளம்பி, வாய் வழியே வெளியேறி, காலையில் ஊர் போய்ச் சேர்ந்ததுமே வைரஸ் காய்ச்சலையும் வரவழைத்து விட்டது.


புதுச்சேரி:
 ஒரு காலத்தில், இருபது வருடங்களுக்கு முன் அழகான ஊர்தான். இப்போது, பார்க்க சகிக்கவில்லை. வாழும் காமராஜர் ரங்கசாமிதான் (நடிகைகள் மீனா, சுகன்யா ஆகியோரின் புதுச்சேரி பண்ணை வீடுகளைப் பார்த்தும் பார்க்காதது போல சென்றால் உடல் காயம் மிச்சமாகும் ) மீண்டும் முதலமைச்சர். கோவணம் சைஸ் ஊருக்கு, எத்தனை ச.ம.உ., கவர்னர், கலெக்டர், போலீஸ் அதிகாரிகள், சிவில் அதிகாரிகள் ... ஒரு நிர்வாகம் எப்படி நடக்கக் கூடாது என்பதற்குப் புதுவை சிறந்த உதாரணம். எந்தக் கட்சி ஆட்சியிலிருந்தாலும் இதே நிலைதான். அரசு ஊழியர்கள் ஒரு பயலும் தன் சீட்டில் இருப்பதில்லை. மந்திரிகளுக்கு மெயின் அல்லக்கைகளே அரசு ஊழியர்கள்தான். காசு கொடுத்தாலும் அரசு அலுவலகங்களில் வேலை நடக்காது. அரசு ஊழியர்கள் எங்காவது அகால மரணம் அடைந்த செய்தி பேப்பரில் வந்தால் மக்கள் சந்தோஷப்படுவதைப் பார்த்திருக்கிறேன்.


மத்திய அரசின் நிதி உதவியில் ஓடும் இந்தப் பிரதேசம், சோம்பேறிகளின் சொர்க்கம். அனைத்து வருவாய்ப் பிரிவினருக்கும் இலவச அரிசி உண்டு. இலவச அரிசி கொள்முதலில் கிலோவுக்கு இரண்டு ரூபாய் ஊழல் செய்யும் முதல்வர்கள் அதை எப்படி விடுவார்கள். அது போக, முதியோர்கள், விதவைகள், மொழித்தியாகிகள், சுதந்திரப் போராட்ட தியாகிகள், தாழ்த்தப்பட்ட வகுப்பினர், என்று பலருக்கும் பலவித பென்ஷன்கள். இதில், அரசாங்க நெளிவு சுளிவு தெரிந்த அரசு ஊழியர் குடும்பங்களில் மாதம் பத்தாயிரம் வரை இலவசப் பணம் வாங்குவார்கள். எழுத்துக்கூட்டிப் படிக்கும் ஒரு பெண்மணி (ஓர் ஆசிரியரின் மனைவி ) மொழித்தியாகி பென்ஷன் வாங்குகிறார். இதனாலெல்லாம், ஒரு வேலைக்கும் ஆள் வருவது இல்லை. வீட்டுத் தென்னை மரங்களில் காய்கள் முற்றித் தானாக விழுந்தால்தான் உண்டு. இளநீர் வேண்டும் என்றால், அடுத்த முறையாவது மரம் ஏறக் கற்றுக்கொள்ள வேண்டும்.  கட்டுமானப் பணிகளில் பீகார், உ,பி சிறுவர்கள்தான் ஈடுபட்டுள்ளார்கள். இதனால் பின்னாளில் என்ன விதமான சமூகப் பிரச்னைகள் வரும் என்று தெரியவில்லை.


முனிசிப்பாலிட்டி குப்பை அள்ளும் ஊழியர்கள் குப்பை அள்ளாததால், ஊரில் குப்பையை அல்ல காண்ட்ராக்ட் விட்டிருக்கிறார்கள். அந்தக் காண்டிரக்டிலும் ஊழல் புகுந்து, அவர்களும் குப்பை வாருவது இல்லை. விண்ணை மறைக்கும் அசிங்கமான அரசியல் பேனர்கள் கீழ் குப்பை மலைகள் இருப்பது ஒரு குட் காம்பினேசன்.
ஆகஸ்டு நாலாந்தேதி ரங்கசாமிக்குப் பிறந்த நாளாம். ஜூலை நாலாந்தேதியில் இருந்தே இடம் பிடித்து ஒரு இன்ச் விடாமல் பேனர் கட்ட ஆரம்பித்து விட்டார்கள். பேனர்களில் ரங்கசாமியை வாழ்த்த, தமிழின் அத்தனை வார்த்தைகளும் செலவாகி இருந்தது.  புதுவையின் கலாச்சாரம் பற்றிப்  படிக்க வருபவர்கள் இங்கிருந்தே ஆரம்பிக்கலாம்.


காது குத்து முதல் கருமாதி வரை, செல்போன் நம்பரோடு இத்தனை பேனர்களை நீங்கள் வேறு எந்த ஊரிலும் பார்க்க முடியாது. ஒவ்வொரு பேனரின் அடியிலும் காணப்படும் இருபதுக்கும் அதிகமான 'வாழ்த்துவோர்' படங்கள் எல்லாம் போலீஸ் ஸ்டேஷனில் இருக்க வேண்டிய படங்கள். ஒரு பதினேழு வயதுப் பையனின் பிறந்த நாளுக்காக 60 அடிக்கு 40 அடி பேனர் வைக்கும் குடும்பத்தினரையும், அவனது நண்பர்களையும் சமூக மற்றும் மன நல ஆய்வாளர்கள் ஆய்வு செய்ய வேண்டும். எல்லாம் ரியல் எஸ்டேட் செய்யத் தம் பாட்டனார்களின் பூர்வீக நிலங்களை விற்ற பணம்.

இதெல்லாம் போதாதென்று தண்ணி அடிப்பதற்கென்றே சென்னையிலிருந்தும் பெங்களூரிலிருந்தும் ஐ.டி பணத்துடன் வரும் வார இறுதிப் பயணிகள் சேர்ந்து புதுச்சேரியை மணக்க வைக்கிறார்கள்.


இடையில் மாமல்லபுரம், சித்தன்னவாசல், திருவரங்கம், அலாம்ப்ற கோட்டை, பிச்சாவரம் ஆகிய இடங்களுக்கு, ஓட்டுனர் கிடைக்காததால் அவர்கள் வசதிக்கேற்ப உச்சி வெயிலில் சென்று வந்ததெல்லாம் தனிக்கதை. மற்றபடி, பக்கத்து மாநிலமான தமிழ்நாட்டில், ஊரில் இருந்தவரை ஊடகங்களில் எல்லாம் சமச்சீர் கல்வி, நில மோசடி என்று ஓடிக்கொண்டிருந்தது. ஐந்தாண்டுகள் ஓய்விலிருந்த அம்மா என்றாலும், குறைந்தபட்சம் ஒரு வருடத்துக்காவது நல்லாட்சி தரும் எண்ணம் அவருக்கு இருக்கட்டும் என்று எங்கள் ஊர் முனியாண்டி விலாஸ் அருகிலிருக்கும் பிள்ளையாரை வேண்டிக் கொள்கிறேன்.

3 comments:

Jegadeesh Kumar said...

நல்ல பகிர்வு.

clayhorse said...

நன்றி ஜகதீஷ். போன மாதம் பக்கத்து கிராமத்துக்கு சென்றபோது, LED சீரியல் லைட் எல்லாம் போட்டு ரோட்டோரத்தில் ஒரு பேனர். அதில் ஒரு பன்னிரண்டு வயது சிறுவன் கையில் செல்போனோடு மோட்டார் பைக்கில் சாய்ந்திருப்பது போல போஸ். கிட்டே போய்ப் பார்த்தால், முதலாம் ஆண்டு நினைவு அஞ்சலியாம், போன வருஷம் பைக் விபத்தில் போய் சேர்ந்திருக்கிறான். கீழே அவனது நினைவுக்கு வருந்தும் நண்பர்கள் இருபது பேர்களின் போட்டோக்கள், செல்போன் நம்பர்களோடு. இதை எப்படி விளக்குவீர்கள்?

vimalanperali said...

வணக்கம்.டூர் போவதை விட அதனைப்பற்றிபடிப்பது மிகவும் இனிமை.

Post a Comment