இரண்டு வாரங்களுக்கு முன்னர், என்னுடைய நண்பர் ஒருவர், மிகவும் சிறப்பான, வித்தியாசமான ஓர் தமிழ்ப்படம் வந்திருப்பதாகவும், அதை நான அவசியம் பார்க்க வேண்டும் என்றும் சிபாரிசு செய்தார். எப்போதுமே என்னை வம்பில் மாட்டி விடுவது அவரது பொழுது போக்கு என்பதையும் மறந்து அந்தப் படத்தைப் பார்த்தேன். அந்த பாதிப்பில் எழுதப்படுவதுதான் இந்த கோனார் நோட்ஸ். இந்தக் கையேடு, அசிஸ்டன்ட் டைரக்டர்களுக்கு உதவும் நோக்கில் எழுப்படுகிறது.
முதலில் பார்க்க வேண்டியது பட்ஜெட். பெரிய அளவில் நிதியுதவி கிடைத்தால், வெளிநாடு லொக்கேஷன்கள் மற்றும் நூறு ரவுடிகள் என்று திட்டம் போடலாம். ஆனால், வித்தியாசமானப் படம் எடுக்க வருபவரிடம் அவ்வளவாகப் பணம் இருக்காது என்பதால் மிகவும் பின் தங்கிய கிராமத்தை லோக்கேஷனாகவும், கதாநாயகனையே ரவுடியாக மாற்றுவதும் சாலச் சிறந்தது.
இந்தக் கையேட்டின் மிக முக்கியமான விஷயம் என்னவென்றால், 'கதை எங்க எளுதறான்....' என்று ஓஹோ ப்ரொடக்ஷன்ஸ் செல்லப்பா மாதிரி அலைய வேண்டாம் (இது தமிழ்ப்படம் என்பதற்காக அல்ல! ). எடுக்கப்போவது 'வித்தியாசமான' படம். ஒரு அட்டெம்ப்ட் அடிப்போம். முதலில், தமிழ்நாட்டில் வெளியாகாத, அல்லது வெளியானாலும் ஓடாத ஒரு அயல்மொழிப் படத்தை ( இந்தப் பரிசோதனைக்கு, "3 :10 to yuma ") எடுத்துகொள்வோம். இந்தப் படத்தின் கதை, ஒரு பிரபல கொள்ளையனை 'யுமா' என்ற சிறைக்கூடத்தில் அடைக்க, 3 :10 க்கு வரும் ரயிலில் ஏற்றி அனுப்ப வேண்டும். அவன் பிடிபட்ட ஊரிலிருந்து அந்த ரயில் நிலையம் பல மைல் தூரம், இடையில் பல இடர்கள்.. சிறைக்குச் செல்லும் அந்த ரயிலில் ஏற்றி விட அவனைக் கொண்டு செல்வதுதான் கதை. வழியெங்கும் சாகசங்கள், விபத்துகள், கிளைக்கதைகள், கடைசியில் எதிர்பாராத இடத்தில் வெளிப்படும் மனித நேயம் என்று போகும். இந்தக் கதையில் முதல் காட்சியில் உணவு பரிமாறும் ஒரு பெண், மற்றும் மதுக்கடையில் பரிமாறும் சில பெண்கள். அவ்வளவுதான். இது போன்ற வறட்சி, தமிழ்ப்படத்துக்கு உதவாது. ஆகவே கீழ்வருமாறு தமிழ்ப்படுத்துவோம்.
முக்கியமான ரூல், 'வித்தியாசமான ' தமிழ்ப் படத்து நாயகர்கள் படித்தவர்களாகவோ, நல்லவர்களாகவோ, சாதனை புரிந்தவர்களாகவோ, சமூகத்துக்கு எந்த வகையிலும் உபயோகமானவர்களாகவோ, உதாரண புருஷர்களாகவோ தப்பித் தவறியும் இருக்கக் கூடாது. ஆகவே நம் கதாநாயகனை, படிக்காத, அப்பா அம்மாவை உதைக்கும், யாரையும் மதிக்காத முரடனாக சித்தரிப்போம். பிறகு, இந்த விளங்காத நாயகனுக்கு ஒரு காதலி வேண்டும். அவர்கள் சிறுவர்களாக இருக்கும்போதே நட்பு ஆரம்பிக்க வேண்டும் ( பார்க்க: பருத்தி வீரன் ).. இரண்டு அல்லது மூன்று பாடல்கள், மழையில் பட்டாம்பூச்சி பிடிப்பது போல் காட்சிகள் இருந்தால் உத்தமம். இந்த வெளங்காத கதாநாயகனுக்குக் கூடவே 'சைடு கிக்' காக ஒரு வெளங்காத பொடிப்பயல் இருக்க vendum (பார்க்க, பருத்தி வீரன் படத்தில் ஆயுதம் எடுத்துக் கொடுக்கும் பொடியன் ).
நாயகன், நாயகி ரெடி. இப்போது லொக்கேஷன். மின்வசதி இல்லாத கிராமமே சாலச் சிறந்தது. மதுரைப் பக்கம் அல்லது அதற்கும் தெற்காக இருந்தால் மிகவும் நல்லது. வசவுகள் அங்குதான் வகை வகையாகக் கிடைக்கும். சண்டைகளுக்கும் பெரிதாகக் காரணம் வேண்டாம். ஏற்கனவே வறண்ட பூமிகள் நிறையப் படங்களில் வந்து விட்டதால், நாம் கொஞ்சம் செழிப்பான பூமியை எடுத்துக் கொள்வோம். கதாநாயகன் எவ்வளவு மோசமானவனாக இருந்தாலும் அவனை யாராவது கொடுமைப் படுத்தினால் தாய்க்குலம் தாங்காது என்பதால் அந்த செண்டிமெண்ட் மிகவும் அவசியம். ஒரு வாரகால்மே பின்னால் சென்றாலும் ஒரு பிளாஷ்பாக் மிக மிக அவசியம். இல்லாவிட்டால் ரசிகர்கள் குழம்பிப் போய் பாதியிலேயே எழுந்து சென்றுவிடும் அபாயம் உள்ளது. உதாரணமாக.. "நேத்தைக்கு ஞாயித்துக் கெழம,,, கறி வாங்கக் காலையில பதினோரு மணிக்குக் கடைக்குப் போனாக்கா, கடை மூடியிருந்தது... அப்போதான் அந்த சம்பவம் நடந்தது..." என்று ஒரு ஸீன் வந்தால், தாயிக்குலத்தின் கண்கள் நீர் சொட்டும் என்று அடித்துச் சொல்லுவேன்.
கதையோட்டத்துக்கு, இப்போது ஒரிஜினல் படத்திலிருந்து காட்சிகளை எடுத்து அவற்றில் அப்படியே செண்டிமெண்ட் சேர்த்து விட வேண்டும். பிறகு, பயணம் போரடிக்காமல் இருக்க வக்கிரமான ஒரு குத்துப்பாட்டு அல்லது ரெக்கார்ட் டான்ஸ் சேர்த்து விட்டால், மண்ணின் மணம் கொஞ்சம் தூக்கலாக வீசும். ஒரிஜினலில் கதாநாயகன் தான் கொடுத்த வாக்கை காப்பாற்ற, தியாகம் செய்வான். நாமும் நம் கதாநாயகனை தியாகம் செய்வது அவசியம். அந்த தியாகம் காதலிக்காக என்றால், தாய்க்குலத்தின் ஆதரவுக்கு நான கியாரண்டி. மிதமான அளவில் குடும்ப சண்டைகள், அரசியல் போன்றவற்றைக் கலந்தால் பார்ப்பவர்களும் படத்துடன் ஒன்றுவதற்கு வாகாக இருக்கும். கொஞ்சம் காசு மீந்தால் காமெடிக்கு கஞ்சா கருப்பு, இல்லாவிட்டால், இருக்கும் நடிகர்களே காமெடி பண்ண வேண்டும். இவர்கள் கடைசியில் கட்டாயம் செண்டிமெண்டும் பொழிய வேண்டும்.
அணுகுண்டு வெடிப்போ, சுனாமியோ, யுத்தமோ, எந்தக் கதையைக் காப்பி அடித்தாலும், அதில் கதையோட்டத்தில், காதல் கண்டிப்பாக இருந்தே ஆக வேண்டும். இல்லாவிட்டால் அந்தப் படத்தை, ராஜ் டிவி, 'மக்கள் டிவி' கூட வாங்காது, ஏன், பிரமிட் வீடியோ கூட வாங்காது.
கடைசியாக, வித்தியாசமான படமாதலால், கூடவே, சினிமா விமரிசனங்கள் எழுதும் பிரபல அறிவுஜீவி எழுத்தாளர்கள் யாராவது கிடைத்தால், அவர்களிடம் சொல்லி (குவார்ட்டர் என்றும் பொருள் கொள்க ) ஒரு விமர்சனம் வெளிக் கொண்டு வருவது சாலச்சிறந்தது.
நான் இந்த ஐடியாவை என் நண்பரிடம் சொல்லி, இதையே நாம் படமாக எடுக்கலாமா என்று கேட்டதற்கு, என்னை உதைக்க வந்தார். இது ஏற்கனவே 'மைனா' என்ற பேரில் வெற்றிகரமாக படமாக்கப் பட்டு ஓடுகிறதாம். நான் மறுபடியும் லேட். இப்படித்தான் 'மகளிர் மட்டும்', 'தெனாலி' போன்ற கமல் படங்களை எடுக்காமல் விட்டு விட்டேன். அடுத்த படத்துக்காவது சீக்கிரம் கதை தயார் பண்ண வேண்டும்.
3 comments:
Baski
Good one
Ravi Raj
சூப்பருங்க.. கடைசியில மைனாவும் திருட்டுப் பறவை தானா...
சூப்பரப்பூபூபூ
Post a Comment