Saturday, July 31, 2010

சாதி கேட்டோ.... சாதி கேட்டோ....

புலம் பெயர்ந்த மகளிரின் சாதி ஆர்வம்

சில நாட்களுக்கு முன்னர் எழுத்தாளர் ஜெமோவின் வலைத்தளத்தில் சாதியுடன் புழங்குதல் பற்றி விவாதங்கள் நிகழ்ந்தன.  அதில் பலர், பெண்கள் அவ்வளவாக சாதியைப் பற்றிக் கவலைப் படுவதில்லை என்று குறிப்பிட்டிருந்தனர்.  என்னுடைய அனுமானத்தில் ஆண்களை விடப் பெண்களே, அதிலும் குறிப்பாக அமெரிக்க வாசி மாமிகள் மிக அதிகமாகவே ஆர்வம் காட்டுகின்றனர்.  ஒரு விருந்தினர் வீட்டுக்குப் போனால், புதிதாக வந்தவரின் சாதி என்னவென்று அறிந்துகொள்ள விரும்புவார்கள்.  கொஞ்சம் நாசூக்கான பெண்கள், அருமையாகப் பேச்சுக் கொடுத்து விபரத்தை நம் வாயிலிருந்து பிடுங்கி விடுவார்கள். நான் பார்த்த சில சுவையான சம்பவங்கள் கீழே.


புதிதாகக் கல்யாணம் முடித்துக் கொண்டு வந்திருந்தார் ஒரு நண்பர்.  அப்போது பேச்சிலராக இருந்த எங்களில் சிலபேரை அவர் வீட்டுக்கு விருந்துக்கு அழைத்தார்.  மிகவும் நவநாகரீகமான யுவதியான அவர் மனைவி, உணவுக்குப் பின், சொந்த ஊர், கல்லூரி என்று  எங்களுடன் சகஜமாகப் பேசிக்கொண்டிருந்தார்.  அப்போது, அங்கு வந்திருந்த ஓர் நண்பரின் அண்ணனும் இந்தப் பெண்மணியின் ஒரு உறவினரும் இந்தியா அரசில் ஒரே அலுவலகத்தில் பணி புரிவது தெரிய வந்தது.  உடனே இவர், "எப்படி இருக்கிறார் உங்க அண்ணன் கவுடர் (கர்நாடகாவில் பெருமளவில் உள்ள ஒரு சாதியினர் )...? என்று கேட்டார்.  என் நண்பர் லேசாக அதிர்ந்து, பின்னர் சமாளித்துக் கொண்டு, "நாங்க கவுடர் இல்லை. ."  என்றார்.  "பின்னர்?"  அந்தப் பெண்மணியும் விடவில்லை.  அப்புறம் ஒரு வழியாக அசடு வழிந்த நண்பர், தன் சாதியைச் சொல்லிவிட்டுத்தான் தப்பித்தார்.

குழுமும் நபர்களில் யாரேனும் பிராமணர் இருந்து விட்டால் ஒரு மடந்தை (நபர் 2) அங்கு அசைவம் சாப்பிட மாட்டார்.  பேச்செல்லாம் பூஜை, புனஸ்காரம் பற்றியே இருக்கும்.  இவரே வேறு குழுவில் கோழியின் பாதம், இறக்கை, என்று எதையும் விட்டு வைக்காமல் சாப்பிடுவார்.  இந்த 'நபர் 2'  கலந்து கொண்ட நண்பர்கள் சந்திப்பில் ஒரு சம்பவம்.  விருந்து வைத்த பெண்மணியும் நம்மூர் மேட்டுக்குடிப் பெண்.  அவர் வறுத்த மீனையும் மாமிசத்தையும் கையாண்ட வகையைப் பார்த்த நபர் ௨, "உங்க ரெட்டியார் வகையராவுல அசைவமெல்லாம் சாப்பிடுவீங்கள?"  என்று முகத்தை அப்பாவியாக வைத்துக் கொண்டு கேட்டார்.   அதற்கு அவர் தாம் ரெட்டியார் அல்லவென்றும், இன்ன சாதிதான் என்றும் சொல்ல வேண்டியிருந்தது.  கேட்டவருக்கும் சந்தேகம் தீர்ந்த திருப்தி.

இன்னொரு பெண்மணி (நபர் 3)  சாதி தெரிந்துகொள்ளும் முறை வித்தியாசமானது.  முதலில் தமக்கு அறிமுகமாகும் தோழிகளிடம், தமது கசின் ஒருத்தி கலப்புத் திருமணம்  செய்து கொண்டவள் என்றும்,  அறிமுகமாகும் பெண்கள் கலப்புத் திருமணம் செய்தவரா என்று விசாரிப்பார்.   அதன் பிறகு உரையாடல் நடையில் விசாரணை ஆரம்பிக்கும்.
"நமக்கெல்லாம் இந்தியா கவர்மெண்ட்ல வேலை கெடச்சிருந்தா நல்லா இருக்கும்.   எங்க தர்ரானுங்க?  அதுக்கு நிறைய கோட்டா, அது, இதுன்னு இருக்கு.."  என்று ஆரம்பிப்பார்.  இதற்கு யார் எந்த வகையான பதிலை சொன்னாலும், உடனே பிடி கிடைத்து நான்காவது கேள்விக்குள் சாதியைத் தெரிந்து கொள்வார்.

பிராமணப் பெண்களின் ஸ்டைலே தனி.  ஒருவரைப் பார்த்த இரண்டு நிமிடத்தில் "வாங்கோ, போங்கோ, அவாள், இவாள்" வகைப் பேச்சுதான்.  அதற்கு வரும் பதிலை வைத்து அடுத்தவர் பிராமணனா இல்லையா என்று தெரிந்து கொள்வார்கள்.  அதற்கு மேல் உள்ளே செல்ல அவர்களுக்கு ஆர்வம் இருப்பதில்லை.  பிராமணர் அல்லாத மகளிர்தான் மிகவும் துருவிக்கேட்டு, இன்ன சாதியில் இன்ன பிரிவு என்று நுண்ணிய விவரங்களைத் தெரிந்து கொள்வார்கள்.  நம் நிறம் கருப்பாகவோ அல்லது நல்ல சிவப்பாகவோ இருந்து விட்டால், நம் சாதி என்ன என்று தெரிந்து கொள்ளும் வரை அவர்களுக்கு மண்டையே வெடித்து விடும்.  இரண்டுக்கும் மத்தியில் இருக்கும் பழுப்பு நிறம் அவர்களது ஆர்வத்தை அந்த அளவு தூண்டுவதில்லை. 

என்னுடைய சாதியைத் தெரிந்துகொள்ள முயற்சி செய்பவர்களுடன் விளையாடுவது எனக்கு மிகவும் பிடிக்கும்.  "நிறைய விஷயம் பேசறான், நல்லா ஜோக்கடிக்கிறான்.  ஆனா, ஆள் கொஞ்சம் லேசாக் கருப்பு..., 'மேற்படி' சாதிக்காரனா இருப்பானோ?... இல்லையே, இங்க வந்த பிறகுதானே அசைவம் சாப்பிட ஆரம்பிச்சிருக்கான்.."  என்று அவர்கள் குழம்பி அவஸ்தைப் படுவதைப் பார்க்க எனக்கு மிகவும் பிடிக்கும்.  எதற்கும் இருக்கட்டும் என்று ஒவ்வொருவரிடமும் ஒவ்வொரு சாதியைச் சொல்லி வைப்பேன்.  சில பெண்மணிகள் முரட்டுத்தனமாக நேரடியாகவே "ஆமா, நீங்க என்ன கேஸ்ட்? "  என்று கேட்டுவிடுவார்கள்.   சில ஆண்டுகளுக்கு முன் ஒரு நண்பரின் வீட்டுக்குச் சென்றிருந்தோம்.  பல ஆண்டுகள் கழித்து அவரை மறுபடியும் அப்போதுதான் சந்திக்கிறேன்.  வழக்கம் போல சாப்பாட்டுக்குப் பின் விசாரணையை ஆரம்பித்தார் அம்மணி.
"ஆமாம், நீங்க எந்த ஊரு?"
"பாண்டிச்சேரி.."
"ப்ராப்பர் சிட்டியா, பக்கத்துல எங்கியாவதா?
"பாண்டில இருந்து ஒரு பத்து கிலோமீட்டர்ல இருக்குற xxxxxx "
"அப்டியா?  ஆமா, அங்க நீங்க யார் வீடு ? "
"அந்த ஊருல இருக்கறவங்கள உங்களுக்குத் தெரியுமா ?!!!
"ஆமா, நிறைய சொந்தக்காரங்க இருக்காங்க.."
இடையில் அவர் கணவர் "உனக்கு அப்படி ஒரு ஊரு இருக்கறதே தெரியாது...  யாரு சொந்தக்காரங்க? சொல்லு பாப்போம்." 
கேள்வியின் நாயகி அசரவில்லை.  அதைக் காதில் வாங்காமல்,  "நீங்க xxxxx..யாரா? " என்று நேரடியாக அஸ்திரத்தைத் தொடுத்தார்.
அசடு வழிந்த நண்பரின் முகத்தைப் பார்த்துக் கொண்டு நான், "இல்லீங்க, நாங்க வேற.." என்று சொல்லிவிட்டுப் பேச்சைத் திருப்பினேன்.
அடுத்த சில நாட்களிலேயே என் மனைவியிடம் நேரடியாக சாதி கேட்டுத் தெளிவடைந்தார்.  அதுவரை அம்மணி என்ன பாடு பட்டிருப்பாரோ!
இதில் இன்னொரு சுவாரஸ்யம். என் மனைவியின் சகோதரிகள் அனைவரும் வெவ்வேறு வர்ணத்தவரையும், நால்வகை வர்ணத்திற்கு வெளியே இருப்பவர்களையும் மணந்தவர்கள்.  இந்த விஷயத்தை அறிந்தவர்கள் என்ன வித்தையெல்லாம் பிரயோகித்து அந்த விவரத்தைப் பெற்றார்களோ அறியேன்!  அந்தக் கதையெல்லாம் இன்னும் சுவாரஸ்யமாக இருக்கும்.

தொடர்புடைய சுட்டிகள்
1. சாதி பேசலாமா
2. சாதியுடன் புழங்குதல் 
3. Why Women Dominate the Right-Wing Tea Party  - alternet article

2 comments:

ஜெகதீஷ் குமார் said...

அன்புள்ள பாஸ்கர்
+1 படிக்கும்போது எனக்கும் என் நெருங்கிய நண்பன் பிரபாகரனுக்கும் (இப்போ லண்டனில் இருக்கிறான்) பெரியார் பற்றி வாக்குவாதம் வந்தது. அப்போது நான் என் தாயும் தந்தையும் கலப்புத்திருமணம் செய்ததை அவனிடம் சொன்னேன். அவன் முகம் சட்டென்று இருண்டது இன்னும் ஞாபகமிருக்கிறது. யாராவது நம்மிடம் என்ன ஜாதி என்று கேட்டால் இன்னும் ஏற்படுகிற அந்த உணர்வுக்குப் பெயர் கோபமா கூச்சமா என்று தெரியவில்லை. ஆனால் என் தாத்தா, அப்பா, நான் மூன்று தலைமுறையுமே கலப்புத்திருமணம் செய்து கொண்டவர்கள்தான் என்று நினைக்கும்போது என்னமோ சாதித்தமாதிரி இருக்கிறது.

clayhorse said...

ஜெயகாந்தனுடைய (??) ஒரு கதையில் "ஆணும் பெண்ணும் திருமணம் செய்து கொண்டதை ஏன் கலப்புத் திருமணம் என்று சொல்கிறீர்கள்? நான் மனித இனத்தை விட்டு, ஒரு கொரில்லா குரங்கைக் கட்டிக் கொண்டிருந்தால் அதைக் கலப்புத் திருமணம் என்று நீங்கள் சொல்லலாம்" என்று கதாநாயகி சொல்லுவாள். இந்தியர்களின் முகத்தை வைத்து இவர் இன்ன சாதி என்று சொல்ல முடியாததினால்தான் இத்தனை சுவாரஸ்யம். மனுநீதி புழக்கத்துக்கு வருவதற்கு முன்பு ஒருவர் சில காரியங்கள் அல்லது சடங்குகள் மூலம் சாதியில் ப்ரோமோஷன் அல்லது டிமோஷன் வாங்கலாமாம். அதற்குப் பின்னரே அதிகாரத்தைக் கட்டுக்குள் இருத்த வேண்டி சாதிக்கட்டுக்களை இறுக்கினர். அமெரிக்காவில் இந்த சங்கடமெல்லாம் இல்லை. ஒருவர் தோற்றத்தை வைத்து, வெள்ளையரா, யூதரா, லேட்டினோவா, என்று எளிதாகக் கண்டுபிடித்து, தேவைக்கேற்ப உடனே விரும்பவோ வெறுக்கவோ ஆரம்பித்து விடுவார்கள். நேற்று நடந்த 'செல்சி கிளிண்டன்' திருமணத்தில்கூட, யூதரை மணந்து அவரை மதம் மாற்றாதப் பெருந்தன்மைக்காகப் பலரும் மணமகளைப் பாராட்டினர்.

Post a Comment