எத்தனை
வேலை இருந்தாலும் தினமும் எதிரெதிர் செய்தித் தாள்களை மொழிக்கு இரண்டு
வீதம் வேகமாகப் படித்து விடுவது வழக்கம். இதனால் ஏதும் பயனுண்டா என்று
கேட்டால் , நிச்சயம் இல்லை. யோசித்துப் பார்த்தால் நியூஸ் பேப்பர்
படிக்கும் இந்தப் பழக்கம் நான் மூன்றாம் வகுப்புப் படிக்கும் போது
ஆரம்பித்தது. சென்னை சைதாப்பேட்டையில் என் பாட்டி வீட்டில் தங்கிப்
படித்துக் கொண்டிருந்தேன். அங்கிருக்கும் திரௌபதி அம்மன் கோயில்தான்
எங்களுக்கு விளையாடுமிடம்.
மாலையில்
யாரும் வரமாட்டார்கள். அதன் பக்கத்திலேயே என் பெரியப்பாக்களில் ஒருவர் ஒரு
சிறிய லென்டிங் லைப்ரரி நடத்தி வந்தார். சிகரெட் புகைப்பதற்கோ எதற்கோ
போவதற்காக என்னை தினமும் சிறிது நேரம் அந்த லைப்ரரியில் காவலுக்கு உட்கார
வைத்து விட்டுப் போவார். அப்போது அங்கிருக்கும் நியூஸ் பேப்பர் மற்றும்
காமிக்ஸ் புத்தகங்களைப் படிப்பேன்.