1290ல் டில்லியில் பதவியைப் பிடித்த 'ஜலாலுதீன் கில்ஜி' இரக்க
குணம் கொண்ட மென்மையான சுல்தான். 'நான் ஆணையிட்டால், அது நடந்து
விட்டால், இங்கு ஏழைகள் வேதனைப் படமாட்டார். உடல் உழைக்கச் சொல்வேன்,
அதில் பிழைக்கச் சொல்வேன், அவர் உரிமைப் பொருள்களைத் தொட மாடடேன்" என்று
ஆட்சி புரிந்து வந்தவர். எளிதில் உணர்ச்சி வசப்படும் இவர், தம் சகோதரன்
மகனும், பின்னாளில் மருமகனுமான 'அலாவுதீன் கில்ஜி' யை குழந்தையிலிருந்து
வளர்த்து வந்தவர். பக்கத்து நாடுகளின் மீது அடிக்கடி படையெடுத்துச்
சென்று, சூறையாடிய செல்வங்களை சுல்தானின் காலடியில் குவித்தான் அலாவுதீன்.
"வெற்றி மீது வெற்றி வந்து என்னைச் சேரும், அதை வாங்கித் தந்த பெருமை
எல்லாம் உன்னைச் சேரும்" என்று புளங்காகிதம் அடைந்தார் ஜலாலுதீன். இந்த
நம்பிக்கையினால், சுல்தானின் அனுமதி இல்லாமலேயே தனிப்படை வைத்துக் கொண்டு
மேலும் பல நாடுகளின் மீது படையெடுத்து அலாவுதீன் செல்வத்தையும் மேலும்
படையையும் குவித்துக்கொண்டான்.