நவம்பர் 8 எப்போது வரும், கடந்த இரண்டு ஆண்டுகளாகக் கண்டு வரும்
இந்தக் கொடுங்கனவு எப்போது முடியும் என்று தேசமே காத்திருக்கிறது.
எப்படிப் பார்த்தாலும் அமெரிக்க வரலாற்றில் இடம் பிடிக்கப் போகும் தேர்தல்
இது. முதன்முறையாக ஒரு பெண் வேட்பாளர் அதிபர் பதவிக்குப் போட்டியிடும்
தேர்தல் இது. பாகிஸ்தான், வங்காளதேசம் போன்ற நாடுகளிலேயே பெண்கள்
பிரதமர்களாக இருந்திருக்கிறார்கள். மிகவும் முன்னேறிய நாட்டில்
இப்போதுதான் சாத்தியமாகியுள்ளது. சக்தி வாய்ந்த செனேட்டின்
உறுப்பினர்களில் 5ல் ஒரு பங்கு மட்டுமே பெண்கள். அரசியல் அதிகாரம் என்பது
இங்கு வெள்ளை ஆண்களின் ஏக போக உரிமையாகவே இருந்து வருகிறது. பரவலாகி வரும்
கல்வி, பிறநாட்டிலிருந்து வந்த குடியேறிகள், தொழில் நுட்பம்,
பொருளாதாரம், ஆகிய காரணிகளால் அந்தக் கண்ணாடித் தளம் விரிசல் விட
ஆரம்பித்துள்ளது.