எகிப்தில் துவங்கிய அரபு வசந்தத்தின் பாதிப்பில் இந்த செப்டம்பர் இரண்டாம் வாரம் நியூயார்க் நகரில் 'வால்ஸ்ட்ரீட் ஆக்கிரமிப்புப் போராட்டம்' சில நூறு பேர்களுடன் தொடங்கியது. பொதுப் பிரச்னைக்காக அமெரிக்க மக்கள் சாதாரணமாகப் போராட்டங்கள் எதுவும் நடத்துவதில்லை. சனி-ஞாயிறு கிழமைகளில் மதியம் ஆரம்பித்து இரவு வரை தொலைக்காட்சியில் விளையாட்டுப் போட்டிகள் காட்டி மக்களைக் காயடித்து வைத்திருப்பார்கள். வம்பு வழக்குகளில் சிக்கினால் கடைசி வரை எழுந்திருக்கவே முடியாது என்ற பயமும் ஒரு காரணம். ரீகன் காலம் தொடங்கி கட்டுப்பாடுகள் நீங்கிய பகாசுர நிதி நிறுவனங்களின் கார்ப்பரேட் மெகா ஊழல்கள் படிப்பவர் கண்களைப் பிதுக்க வைக்கும். மக்களின் வாழ்வாதாரங்களை இவர்கள் சுரண்டிய விதம் ஹாலிவுட் படங்களை மிஞ்சிய சாகசங்கள். இவர்கள் போடும் எலும்புத் துண்டுகளுக்காக அனைத்து சட்டங்களை இயற்றியும் வளைத்தும் செநேட்டர்களும் ஜட்ஜுகளும் பணிந்து கிடக்கிறார்கள் . தேர்ந்த கணித விற்பன்னர்களையும் பிசிக்ஸ் நிபுணர்களையும் வைத்து இவர்கள் ஆடிய சூதாட்டங்கள் மனிதக் கற்பனைகளுக்கு அப்பாற்பட்டவை. கடனில் சிக்கி வீடிழந்தவர்களும், உற்பத்தியை வேறு நாடுகளுக்குக் கொண்டு சென்றதால் வேலை இழந்தவர்களும் இத்தனை நாட்கள் கார்ப்பரேட்-அரசாங்க-நீதிமன்ற கூட்டுச் சதிக்கு ஈடு கொடுக்க முடியாமல் உள்ளுக்குள் குமுறியபடியே விதியை நொந்தபடியே நாட்களைத் தள்ளி வந்தார்கள். ஐரோப்பிய நாடுகளைப் போலெல்லாம் அமெரிக்காவில் ஒருநாளும் மக்கள் வெளியே வந்து போராட மாட்டார்கள் என்றே பலரும் நம்பி வந்தோம். ஏனென்றால் நிஜத்தில் அமெரிக்கர்கள் மிகவும் பயந்தவர்கள்.
இப்படியாகத்தான் செப்டம்பர் 17 -ந்தேதி மாகாளி பராசக்தி கடைக்கண் வைத்தாள். அமைதியாகத்தான் எழுந்தது யுகப் புரட்சி. ட்விட்டர், பேஸ்புக் மூலமாக, படித்து வேலை கிடைக்காத இளைஞர்கள், வேலை இழந்த, வேறு விதங்களில் பாதிப்படைந்த மற்ற பிறரும் சேர்ந்து நியூயார்க் வால்ஸ்ட்ரீட் ஆக்கிரமிப்பு இயக்கமாக, சாத்வீகப் போராட்டமாக ஆரம்பித்தது. மேல்தட்டு 1 சதவீத வர்க்கம், நாட்டின் 90 சதவீத வளத்தை நியாயமற்ற முறைகளில் கைப்பற்றி வைத்திருப்பதைக் கேள்வி கேட்டு தட்டிகள் ஏந்தி, விவாதங்கள் அடங்கிய அமைதிப் போராட்டம் ஒன்றை ஆரம்பித்தார்கள். இதில் ஏதும் சர்க்கஸ் விவகாரங்கள் இல்லாததால் மீடியாக்கள் இவர்களைக் கண்டுகொள்ளவில்லை. ஏழை மக்களை எப்போதும் கிண்டலடிக்கும் ரிபப்ளிக்கன் கட்சியினர்கள், நக்கலாக சிரித்து வைத்தார்கள். கொஞ்ச நாட்கள் இருந்து விட்டுப் போய் விடுவார்கள் என்றே எல்லோரும் நினைத்தார்கள். அரபு நட்டு மக்கள் போராட்டங்களை நேரடி ஒளிபரப்பு செய்யும் PBS போன்ற நடுநிலை ஊடகங்கள் கூட, தம் கொல்லைப் புறத்தில் நடக்கும் இந்த வினோதமான போராட்டத்தைக் கண்டு கொள்ளவில்லை. போராட்டக் குழுவினருக்கு மைக் வைத்துக் கொள்ள அனுமதி இல்லாததால் 'human -மைக்' உபயோகிக்கிறார்கள். கார்ப்பரேட் ஸ்பான்சரில் நடந்த டீ-பார்ட்டி போராட்டம் போல பேருந்தில் அழைக்கப்பட்டு வந்து அன்று மாலையில் திரும்பும் மாதிரி இல்லாமல், முழு நேரமும் அங்கேயே இருக்கிறார்கள்.
தலைவர் இல்லாத இந்தப் போராட்டம், இன்றோடு ஒன்றரை மாதம் ஆனபின், அமெரிக்கா முழுவதும் பரவியுள்ளது. பழமைவாத மாகாணங்களான டெக்சஸ் போன்றவற்றிலும் பல நகரங்களில் இப்போராட்டம் பரவியுள்ளது. முதலில் புறக்கணித்த வலதுசாரி அரசியல்-அறிவு-ஜீவிகள் இப்போது இப்போராட்டங்களை அவதூறு செய்கிறார்கள். காலமாற்றத்தை உணராத மீடியாக்கள் முதலில் புறக்கணித்தாலும், இன்டர்நெட் மூலம் பரவி வரும் இப்போராட்டங்களின் வீச்சைத் தவிர்க்க முடியாமல் இப்போது கவர் செய்கிறார்கள். கார்ப்பரேஷன்கள் சும்மாவா இருக்கும்? பணத்தை அள்ளி வீசி எதிர் குழுக்களை உருவாக்கி இப்போராட்டத்தை மலிவுப் படுத்த ஆரம்பித்து விட்டார்கள். போலீஸ்கார்களும் எஜமான விசுவாசம் காட்டத் தயங்கவில்லை. முன்பு போல் இல்லாமல் செல்போன், இன்டர்நெட் உதவியுடன் போலீஸ் அராஜகங்களை உடனே மக்கள் யூ-ட்யூப் போன்றவற்றில் பதிவேற்றம் செய்கிறார்கள். இதன் மூல்டம் ஓரளவு போலீஸ் அத்துமீறல்கள் கட்டுக்குள் வைக்கப் படுகிறது.
காந்தி சொன்ன கீழ்க்கண்ட வாக்கியங்களை இந்தப் போராட்டம் மெய்ப்படுத்துகிறது
First they ignore you.
Then they ridicule you.
Then they Fight you.
Then you win.
http://occupywallst.org/
http://en.wikipedia.org/wiki/Occupy_Wall_Street
http://www.facebook.com/OccupyWallSt
http://www.youtube.com/results?search_query=occupy+wall+street&aq=0&oq=occup
No comments:
Post a Comment