இரண்டு வாரங்களுக்கு முன்னர், என்னுடைய நண்பர் ஒருவர், மிகவும் சிறப்பான, வித்தியாசமான ஓர் தமிழ்ப்படம் வந்திருப்பதாகவும், அதை நான அவசியம் பார்க்க வேண்டும் என்றும் சிபாரிசு செய்தார். எப்போதுமே என்னை வம்பில் மாட்டி விடுவது அவரது பொழுது போக்கு என்பதையும் மறந்து அந்தப் படத்தைப் பார்த்தேன். அந்த பாதிப்பில் எழுதப்படுவதுதான் இந்த கோனார் நோட்ஸ். இந்தக் கையேடு, அசிஸ்டன்ட் டைரக்டர்களுக்கு உதவும் நோக்கில் எழுப்படுகிறது.
முதலில் பார்க்க வேண்டியது பட்ஜெட். பெரிய அளவில் நிதியுதவி கிடைத்தால், வெளிநாடு லொக்கேஷன்கள் மற்றும் நூறு ரவுடிகள் என்று திட்டம் போடலாம். ஆனால், வித்தியாசமானப் படம் எடுக்க வருபவரிடம் அவ்வளவாகப் பணம் இருக்காது என்பதால் மிகவும் பின் தங்கிய கிராமத்தை லோக்கேஷனாகவும், கதாநாயகனையே ரவுடியாக மாற்றுவதும் சாலச் சிறந்தது.