Wednesday, September 15, 2010

நானே நல்ல ஏய்ப்பன்

தலைப்பைப் பார்த்ததும், ஏதோ பைனான்ஸ் அல்லது சுவிசேஷ கம்பெனி பற்றிய மற்றொரு மொக்கை என்று நினைக்க வேண்டாம்.   இது இந்தப்பக்கம் அமெரிக்காவில் தினந்தினம் நடக்கும் மக்கள் போராட்டங்கள் பற்றிய பதிவு.  பொதுமக்கள் நடத்தும் ஜனநாயக முறைப் போராட்டங்கள் நடத்த அமெரிக்காவில் காரணங்கள் நிறைய உள்ளன.  முடிவில்லாத யுத்தங்கள், வரலாறு காணாத வேலையில்லாத் திண்டாட்டம், பங்குச்சந்தை சரிவு, ஒரே வாரத்தில் வீட்டையும் சொத்தையும் இழப்பது, பெரும் செல்வர்கள் மேலும் செல்வந்தர்களாவது, இப்படிப் பல.  ஆனால் இந்த நியாயமான காரணங்களுக்காக இங்கு எந்த மக்கள் போராட்டமும் நடப்பதில்லை.  ஒரு  கலப்பின ஆசாமி அமெரிக்க ஜனாதிபதியாக ஆனாலும் ஆனார், வாரம்தோறும் சனி ஞாயிறு வருகிறதோ இல்லையோ, நாட்டின் தலைநகர், மாநிலத் தலை நகர், இங்கெல்லாம் கோவக்கார வெள்ளைக்காரர்கள் தொடர்ந்து ஊர்வலங்களும், போராட்டங்களும் நடத்தி வருகின்றனர்.  நேரடியாக 'கறுப்பர் அதிபரானது பிடிக்கவில்லை' என்று சொல்ல முடியாது.  அதனால் லூசுத்தனமாக வேறு காரணங்களை முன்வைக்கின்றனர்.



முதலில், மருத்துவக் காப்பீடு திட்டத்தைக் கொண்டு வந்தபோது நாடெங்கும் வரலாறு காணாத போராட்டங்கள்.   ஒபாமாவை, அமெரிக்காவை அழிக்க வந்த ஹிட்லராகவும் சாத்தானகவும் சித்தரித்துத் தொடர் போராட்டங்கள். தமிழக அரசியலில் கூடக் காண முடியாத அவதூறுப் பிரச்சாரங்களால் தம்முடைய உண்மையான நிறத்தைக் காட்டினர்.  பிறகு திடீரென்று ஒரு நாள் ஒபாமா வெள்ளையரிடமிருந்து துப்பாக்கிகளைப் பிடுங்க வருகிறார் என்று பீதியைக் கிளப்பி விட்டு வாஷிங்கடனில் பல்லாயிரக்கணக்கான வெள்ளையர்கள் துப்பாக்கி ஏந்தி ஊர்வலம் வந்து தம்முடைய அரசியல் சட்ட உரிமையை நிலை நாட்டினார்கள்.  இதுவே ஒரு பத்தாயிரம் கருப்பர்கள் இப்படித் துப்பாக்கி ஏந்தி வாஷிங்கடனில் ஊர்வலம் நடத்தினால் ஊடகங்கள் என்ன செய்திருக்கும்?  இத்தனைக்கும் 'துப்பாக்கி' என்ற ஒரு வார்த்தையைக்கூட இந்த டெமாக்ரட் ஜனாதிபதி சொன்னதில்லை.  ஏன், எந்தத் தொடை நடுங்கி டேமாக்ரட்டும் சொன்னதில்லை.    சும்மா இவர்களாக வாரா வாரம் ஏதாவது ஒரு 'கலக்கப் போவது யாரு' என்ற பாணியில் ஒரு தலைப்பை எடுத்துக் கொண்டு, தலைநகரில் கூட்டம்/போராட்டம் நடத்துவார்கள்.  எந்தப் போராட்டமாக இருந்தாலும் சரி, 'லிபர்ட்டி', 'சுதந்திரம்', 'இயேசு கிறிஸ்து', 'தீவிரவாதம்', 'அல்-கைதா 'கம்யூனிஸ்ட்' என்ற வார்த்தைகளை மாற்றி மாற்றிப் போட்டு நிறைய தட்டிகளைத் தயார் செய்தால் போதும்.

"பெடரல் அரசாங்கமே வேண்டாம்" என்று கூறிக்கொண்டு, அந்த பெடரல் அரசாங்கம் தரும் உதவித்தொகையில் உண்டி பெருத்து,  பெடரல் அரசின் சலுகை டிக்கெட்டில் ரயிலேறியும், போதாதற்கு ஏராளமான பஸ்களில் வரும் இவர்கள் யார்.   வருமானமே இல்லாமல், வாரா வாரம் இவ்வளவு தூரம் பயணம் செய்து வர, தட்டிகள் செய்ய,  யார் எதற்காகப் பணம் கொடுக்கிறார்கள் என்று பார்த்தால் விபரம் புரியும்.  அடிப்படையாக, ஒரு வெள்ளையர் அல்லாதவர் அமெரிக்க அதிபர் ஆனதில் கலவரம் அடைந்துள்ளவர்களை ஒரு பிரிவில் அடக்கலாம்.  அவர்கள், பெரும்பாலும் உயர்நிலைப்பள்ளி தாண்டாத, சிற்றூர்களில் வசிக்கும் பழமைவாத (கன்சர்வேடிவ் ) கருத்துக்கள் உடைய வெள்ளையர்கள்.  இவர்களின் இனந்தெரியாத பயத்தை  மூலதனமாக்கி அவற்றை ஓட்டுகளாக மாற்றுவதில் பல பேர் முயற்சி செய்கிறார்கள்.  இந்த மக்கள் 'டீ-பார்ட்டி' (பாஸ்டன் டீ பார்ட்டி போல ) எனப்படும் இயக்கத்தில் தம்மை இணைத்துக் கொள்கிறார்கள்.  நட்சத்திர மீனைப் போல இந்த 'டீ-பார்ட்டி' இயக்கங்கள் எந்த விதமான மையக் கட்டுப்பாடும் இல்லாதவை. ஏறக்குறைய தமிழ்நாடு காங்கிரஸ் போல கணக்கற்ற கோஷ்டிகள்.  எல்லாம் சரி, ஒபாமாவுக்கு ஓட்டுப் போட்ட லிபரல்கள் எங்கே என்று கேட்கலாம்.  முதல் விஷயம், தேர்தலில் ஜெயித்தவுடனே, எல்லோரையும் அரவணைக்கிறேன் பேர்வழி என்று, தமது ஆதரவு வாக்காளர்களை ஒபாமா கழட்டி விட்டு விட்டார்.  என்னதான் தலைகீழாகத் தண்ணீர் குடித்தாலும் பழமைவாத வெள்ளையர்கள் ஒபாமாவை நம்பவோ, ஆதரவு தரவோ போவதில்லை என்று பைபிளின் மீது சத்தியம் செய்திருக்கிறார்கள்.  இரண்டாவது, இந்த டீ-பார்ட்டி இயக்கங்களுக்கு, எண்ணெய், நிலக்கரி, ஆயுதம் முதலான தொழில் முதல்வர்கள் தாராளமாக நிதி உதவி செய்கின்றனர்.  மூன்றாவது, ஊடகங்களுக்கும் வேடிக்கை, விவகாரம் தேவைப்படுவதால் இந்தக் கலவரக்காரர்களுக்கு இலவச விளம்பரம் போல செய்திகளில் முக்கியத்துவம் தருகிறார்கள்.  'fox -news ' போன்ற சேனல்கள், வெளிப்படையாகவே நாளொன்றுக்கு இருபத்து நான்கு மணி நேரப் பிரச்சாரம் செய்கின்றன.

ஒபாமா நிர்வாகம் என்ன திட்டங்கள் அறிவித்தாலும் உடனே தலைநகரில் போராட்டம்.  இவர்களுக்கு நிதியளித்து, பின்னாலிருந்து இயககும் கோடீஸ்வரர்களுக்கு டெமாக்ரட்கள்  பிடிக்காதா என்ன?  அப்படி ஒன்றும் பெரிதாக ரிபப்ளிக்கன் பழமைவாதிகளுக்கும் டெமாக்ரட்களுக்கும் வித்தியாசம்  இல்லை.   மத்தியதர, குடியேறிகள்,  மற்றும் ஏழை மக்களுக்காக டெமக்ரட்  கட்சியினர், ஒரு ஐந்து சதவிகிதம் நல்லது செய்வார்கள்.  வெறும் 95 % மட்டுமே முதலாளி வர்க்கத்தினருக்கு ஆதரவாக நடந்து கொள்வார்கள்.  இந்த 5 % பிறருக்குப் போவதனால் மேட்டுக்குடியினருக்குக் கோபம்.  மேலும், பெருவாரியான டெமாக்ரட்கள் வெளிப்படையாகத் தம் முதலாளிகளின் கால்களை நக்குவதில்லை.

அறியாமையால், தமது நலனுக்கு எதிராகவே போராடும், கட்டுக்கடங்காதப் போக்கிரி கும்பல்களாக இயங்கும் இந்த டீ-பார்ட்டி மக்களை ஒருங்கிணைத்து, அவர்களுக்குத் தலைமை தாங்கப் போட்டி போடுகிறார்கள் சில முன்னாள் அரசியல்வாதிகளும் தொலைக்காட்சிப் பிரபலங்களும்.  டீ-பார்ட்டியினரின் கீழான உணர்வுகளைத் தூண்டி விட்டுக் குளிர் காயத் துடித்துக் கொண்டிருக்கும் சிலர், திராவிடக் கட்சியினரே கூச்சப்படும் அளவுக்குப் பேசுகிறார்கள்.  இதில் முதன்மையானவர்கள் முன்னாள் து.ஜ. வேட்பாளர்  'சாரா பாலின்', டீ.வீ. கோமாளி 'க்ளென் பெக்',  முன்னாள் சபாநாயகர் கின்க்ரிச், 'ரேடியோ புகழ்' லிம்பா ஆகியோர்.  போன ஞாயிறு அலாஸ்காவில் போராட்டம், அதற்கு முந்திய வாரம் வாஷிங்கடனில்  'அமெரிக்காவின் கௌரவத்தை மீட்கும்' போராட்டம்.  ஆனால் யாரிடம், எப்போது அமெரிக்கா தன் கௌரவத்தை இழந்தது என்று இவர்கள் சொல்லவில்லை!  அதற்கு முந்திய வாரம் நியூயார்க் மசூதி எதிர்ப்புப் போராட்டம்.  இந்தக்கூட்டங்களில் பிரதானமான பேசு பொருள் 'இயேசு தன்னிடம் பேசி, நாட்டைக் காப்பாற்றப் பணித்திருக்கிறார்' என்பதேயாகும்.  'சுதந்திரம்', 'வரி', என்பனவற்றைத் தேவைக்கேற்ப சேர்த்து நன்றாக உணர்வு சூட்டைத் தூண்டி, அதன் பிறகு தாளித்து இறக்கினால் அடுத்தத் தேர்தலுக்கு ஓட்டும், துட்டும் ரெடி.  இத்தகைய கூட்டங்களுக்கும், சுவிசேஷக் கூட்டங்களுக்கும் முக்கிய வித்தியாசம் என்னவென்றால் முன்னதில் உண்டு பெருத்த வெள்ளையர்கள் மட்டுமே இருப்பார்கள்.  இதற்கு முன்னர் ஜார்ஜ் புஷ் உலகத்தையே அழித்துக் கொண்டிருந்தபோது இந்த 'தேசபக்தர்கள்' எங்கிருந்தார்கள் என்று தெரியவில்லை.  இந்தத் தொண்டர்களுடன் ஒப்பிட்டால், தமிழ்நாட்டு டீக்கடை பெஞ்சில் உட்கார்ந்திருப்பவர்கள் பேரறிஞர்கள்.   அமெரிக்காவை அழிக்க வெளியிலிருந்து யாரும் வரத்தேவையில்லை.

For further reading, google these:
David Koch, billionaire backer of the Tea Party movement
Glenn Beck, Sarah Palin, Dick Armey, Michele Bachmann, Rush Limbaugh

2 comments:

Jegadeesh Kumar said...

சுவாரஸ்யமான பதிவு.

மதுரை சரவணன் said...

அருமையா எழுதுறீங்க.. வாழ்த்துக்கள்

Post a Comment