Sunday, April 11, 2010

நித்தி கிறித்துவ மதத்தில் இணைப்பா?

போன மாதம் முழுதும் கால்ப் வீரர் டைகர் உட்சுடன் படுத்தப் பொன்னிறக் கூந்தல் அழகிகளின் பட்டியல் வளர வளர, அது நாள் வரை புத்தர் வேஷம் போட்ட டைகர் உட்சுக்கு எதிர்பாராத இடமாக, பாக்ஸ் (பொய்) நியூஸ் (fox News ) அறிவிப்பாளர் ஒருவரிடமிருந்து அறிவுரை வந்தது.  அதாவது, அவர் உடனே தன்னுடைய புத்த மதத்தை விட்டு, கிறித்துவ மதத்துக்கு வந்தால், அவர் எதிர்பார்ப்பதை விட அதிகம் பாவ மன்னிப்புக் கிடைக்கும் என்பதாகும். மார்க்கெட் சந்தர்ப்பத்தை எப்போதும் நழுவ விடாத பல சர்ச்சுகள் போட்டி போட்டுக் கொண்டு டைகருக்கு கவர்ச்சிகரமான ஆபர்கள் வழங்கின.  டைகர் தம் சர்ச்சுக்கு வந்தால் பாவமன்னிப்பு வழங்கத் தேவையான தொகையில் 50% வரைத் தள்ளுபடி
தரப்படும் என்றும்,  டைகர் தன் கால்ப் சட்டையில் தம் சர்ச் லோகோவைப் போட்டால், அவருக்கு அனைத்து சர்வீஸ்களும் இலவசம் என்றும் அறிவித்தன.  இவை எதற்கும் பதில் சொல்ல இயலாத நிலையில் டைகர் நம் நித்தியைப் போலத் தலைமறைவாக இருந்தார்.



ஏறக்குறைய அதே சமயத்தில், விஸ்கான்சின் சர்ச் ஒன்றில், சர்ச்சிலேயே வளரும் காது கேளா சிறுவர்களை, சுமார் முப்பது ஆண்டுகளாக வன்புணர்ச்சி செய்து வந்த ஒரு கேத்தலிக் பிஷப்பின் அட்டூழியம் வெளியே வந்தது.  சர்ச் பாதிரிகள் சிறுவர்களை பலாத்காரம் செய்வது ஏசு கிறிஸ்து பிறப்பதற்கு முன்பிருந்தே நடைமுறையில் இருந்து வருவதால் யாரும் பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை.  ஆனால், அந்த பிஷப்பை, தற்போதைய போப்பாண்டவர் பெனெடிக்ட், பல ஆண்டுக்காலமாகக் குற்றச்சாட்டுகளை மறைத்துக் காப்பாற்றி வந்திருப்பது, ஆவணங்கள் மூலமாகத் தெரிய வந்திருக்கிறது.  இந்த செய்தி வெளிவந்ததும், நியாயமாக போப் பதவி விலகி இருக்க வேண்டும்.  ஆனால், அவருடைய அல்லக்கைககளோ (மற்ற பிஷப்புகள்), திராவிடக் கட்சிகள் ரேஞ்சிற்கு சவால் விடுவதும், குற்றம் சாட்டியவர்களையே கிண்டல் செய்வதுமாக இருக்கிறார்கள்.  வழக்கமாக பாலியல் பாதிப்புக்கு உண்டானவர்கள், தலைக்கு அறுபதினாயிரம் டாலர் வாங்கிக் கொண்டு 'தடையில்லாச் சான்றிதழ்' வழங்கி விடுவார்கள்.  இப்போது என்ன நூதனமாக குற்றம் சாட்டுகிறார்கள்? எல்லாம் அரசியல் சதி என்று ரெகார்டைப் போடுகிறார்கள்.



மேற்படி விஷயங்களை இன்டர்நெட் மூலமாகக் கேள்விப்பட்ட நம்ம நித்தியானந்தம், 'அடடா, அவசரப்பட்டு ஆசிரமப் பதவியை ராஜினாமா செய்து விட்டோமே.  இருந்தாலும் இந்தத் தமிழ்மக்கள் ரொம்ப சொரணை உள்ளவர்களாக இருக்கிறார்களே' என்று வருந்தி இருக்கிறார்.  பலவிதக் குழப்பங்களில் இருந்த அவர், போப்பாண்டவரை சந்தித்துக் கிறித்து மார்க்கத்தில் இணையப் பேச்சுவார்த்தை (டீலிங்) நடத்தப் போயிருப்பதாகத் தகவல்கள் கிடைத்துள்ளன.  ஏற்கனவே அங்கு செல்லவிருந்த லெக்சரர் சிரியார்தாசனை வேறு ஒரு மார்க்கத்தினர், 'பிசினஸ் கிளாஸ்' டிக்கெட்டில் அரேபியா அழைத்துச் சென்று, ஐந்து நட்சத்திர ஓட்டலில் தங்க வைத்து மதம் மாற்றியதால், மேற்படி கேத்தலிக் சாமியார்கள், நித்தி விஷயத்தை மிகவும் ரகசியமாக வைத்திருக்கிறார்கள்.  இருந்தாலும், தமக்குப் போட்டியாக நித்தி வரக்கூடும் என்ற பயத்தில் இருக்கும் சில பாதிரிகள் விஷயத்தை லீக் செய்தபடி இருக்கிறார்கள்.  'டீலிங்'  விபரங்கள் அவ்வளவாகத் தெரியவில்லை. எந்தெந்த அமௌன்ட் எங்கெங்கே செல்லும் என்று தெரியவில்லை.  இருந்தாலும், இந்தியாவின் கேத்தலிக் அமைப்பின் இளைஞர் அணித் தலைவராக ஒப்புக் கொண்டதாக மட்டும் தெரிகிறது.  மற்றபடி, காங்கிரசின் 'அறிவிக்கப் படாத' சிறுபான்மை எம்.பி.க்களைத் தேர்ந்தெடுக்கும் அதிகாரம் கொடுக்கப்படும் என்றும் சோனியாஜி தரப்பில் கிசு கிசுக்கப் படுகிறது.  பாதிரிகள் பேன்ட் போடுவது விதி என்பதால் காங்கிரஸ் ஆபீஸுக்குச் செல்லும்போது வேட்டி கிழியும் அபாயம் இல்லை என்பது ஆறுதலான விஷயம்.

சோனியாஜியின் ஆசிர்வாதம் நித்திக்குக் கிடைத்திருக்கு விஷயம், கலைஞரின் காதுகளுக்கு எட்ட, அவர், சிறுபான்மை இனத்தைக் காக்க வந்த நித்தியின் சேவை தமக்குப் பெருமை அளிக்கிறது என்றும், அவர் புகழைக் குலைக்கும் வண்ணம் யாரேனும் செயல்பட்டால் அரசு பார்த்துக் கொண்டு சும்மா இருக்காது என்றார்.  நித்திக்கு 'சிறுபான்மைச் செம்மல்' பட்டம் வழங்க இருப்பதாகவும்,  இதற்காக நித்தி தமக்கு உடனே பாராட்டு விழ நடத்துவது அவசியமில்லை, ஒரு மாதம் போகட்டும் என்றும் சொன்னார்.  மேலும், ஒரு திரைப்பட விழாவுக்குச் சென்று கொண்டிருப்பதால் விரிவாகப் பேட்டியளிக்க நேரமில்லாதது குறித்து வருத்தம் தெரிவித்தார்.  இந்த விஷயத்தைக் கேள்விப்பட்ட ஜெயலலிதா, இந்த அந்நிய நாட்டு சதிக்கு சோனியாவும் கருணாநிதியும் காரணம் என்றும், தாம் பதவிக்கு வந்த உடன் இதில் சம்பத்தப்பட்ட எல்லோரும் உடனடியாகக் கைது செய்யப்படுவார்கள் என்றும் தெரிவித்தார்.  சு.சுவாமி, இதில் கசகஸ்தான், அர்மேனியா, அல்ஜீரியா, நைஜீரியா ஆகிய நாடுகளின் சதி இருப்பதை ஜூன் முப்பத்தைந்தாம் தேதி இஸ்ரேலில் நிரூபிக்கப் போவதாக விகடனுக்கு ஈமெயில் அனுப்பியுள்ளார்.  இந்த விஷயம் அவருக்கு 1970 ஜனவரி மாதமே தெரியுமாம். வழக்கம் போல் என்ன செய்வது என்று தெரியாமல் விழிக்கும் கோபால்சாமி பாத யாத்திரை போகிறார்.

இந்த டெக்னிக் தமக்குத் தெரியாமல் போயிற்றே என்று, பெயிலில் இருக்கும் ஜெயேந்திரர் புலம்பிக் கொண்டிருக்கிறார்.  இதற்குத்தான் சங்கர மடத்தில் இன்டர்நெட் இணைப்புக் கொடுக்க வேண்டும் என்று பல நாட்களாகத் தாம் வற்புறுத்தி வந்ததாக விஜயேந்திரர் சொன்னார்.  இதற்கிடையில் ராம கோபாலன்,  தம்முடனுள்ள நாற்பத்தியிரண்டு இந்து முன்னணயினருடன் நாடு தழுவிய போராட்டம் நடத்தப் போகிறார்.  எழுத்தாளர் ஜெயமோகன் இரண்டு நீண்ட கட்டுரைகளைத் தயார் செய்து விட்டார்.  நித்தியின் நீண்ட நாள் சிஷ்யர் சாருவுக்கும் எல்லா டீ.வீ. சேனல்களிருந்தும் அழைப்பு வந்து விட்டது.

கடைசியாகக் கிடைத்த தகவல்: இந்த விஷயம் எப்படிப் போனாலும், கவிஞர் மனுஷ்யபுத்திரன் மட்டும் இது பற்றித் தம்மை ஆதரித்தோ விமர்சித்தோ, இன்ன பிற விதமாகவோ எந்தக் கருத்தும் தெரிவிக்கக் கூடாது என்று, நித்தியின் வழக்கறிஞர்கள்  நீதிமன்றம் மூலம் அவசரமாகத் தடை உத்தரவு வாங்கியிருக்கிறார்கள்.

சுகம் பிரம்மாஸ்மி! சேசு மேரி சூசை துணை!

7 comments:

Anonymous said...

படு சூப்பர் ... யாரையும் விட்டு வைக்காம கலாய்ச்சிடிங்க போங்க - ப்ளேடு பக்கிரி

முனைவ்வ்வர் பட்டாபட்டி.... said...

ரைட்.. மியூசிக் ஸ்டார்ட்..

Rajan said...

ஒரு நாயகன் உதயமாகிறான் !

உமர் | Umar said...

ஊரார்களின் இதயமாகிறான்

clayhorse said...

சார்லஸ் டாக்கின்ஸ் என்ற புகழ்பெற்ற கடவுள் மறுப்பாளர், போப்பாண்டவர் செப்டம்பரில் இங்கிலாந்து வரும்போது அவரைக் கைது செய்ய வேண்டும் என்று தம்முடைய வழக்கறிஞர் துணையுடன் ஏற்பாடுகள் செய்து வருகிறார். 'பரிசுத்த ஆவியால் இட்லி வேகுமா?' என்று போஸ்டர் ஒட்டும் 'வீர' மணிக்கு அந்த தைரியம் இருக்கிறதா?

சாமக்கோடங்கி said...

நித்தி மதம் மாறீட்டா அப்புறம் எங்களுக்கு யார் இருக்கா...

clayhorse said...

என்னங்க இது, நம்மூர்ல சாமியாருங்களுக்கா பஞ்சம்? காவி கட்டத் தெரிசா, தாடி வளந்தா நாமளும் சாமியார்தான். கூடவே வெகுஜனப் பத்திரிகையில் ஆன்மீகத் தொடர் எழுதித்தர ஒரு மார்க்கெட் போன எழுத்தாளர், வெளிநாட்டு பக்தர்களைப் பிடிக்க ஓர் வெப்சைட், அப்புறம் கொஞ்சம் வெய்ட் பண்ணனும்.

Post a Comment