Saturday, January 23, 2010

ஒரு தேர்தலும், வேதாள உலகமும்


இந்த வாரத்தில் முக்கியமான இரண்டு சம்பவங்கள் நடந்தன. முதலாவது, செனேட் தேர்தலில் டெமாக்ரட் கட்சிக்குக் கிடைத்த அடி.
திரு ஒபாமா, தேர்தலின் பொது கொடுத்த வாக்குறுதிகளில் ஒன்றைக் கூடச் செய்யவில்லை. எல்லாவற்றையும் வேக வேகமாக ஆரம்பித்து விட்டு, சட்டமியற்றும் அதிகாரம் கொண்ட செனேட் மற்றும் பிரநிதிகள் அவையிடம் விட்டு விட்டார். அவர்களோ, பழம் தின்று, கொட்டையையும் தின்பவர்கள். 'உன்னால முடிஞ்சதப் பாத்துக்க' என்பது போல, தமது கார்ப்பரேட் முதலாளிகள் காட்டிய வழியில் ஒவ்வொரு சட்ட மசோதாவையும் முதலாளிகளுக்குச் சாதகமாக எழுத ஆரம்பித்து விட்டனர். மேடை ஏறி ஆறு போலப் பேசிய திரு ஒபாமா, தம்மை அதீத நம்பிக்கையுடன் தேர்ந்தெடுத்த மக்களிடம் அல்லவா சென்றிருக்க வேண்டும்? அவர் சொன்னால், அவருடன் சேர்ந்து போராடபெருவாரியான மக்களும் காத்திருந்தனர். அவரோ, வரலாறு தந்த அற்புதமான வாய்ப்புகளைக் கை கழுவி விட்டு, தன்னுடைய தவறான ஆலோசகர்கள் தந்த தவறான ஆலோசனைகளுக்குச் செவி சாய்த்தார். தலை நகரில் நடக்கும் எந்த விதமான கேவலமான அரசியலை மாற்றுவேன் என்று சபதமிட்டு வந்தாரோ,
அதே வழிக்குச் செல்ல ஆரம்பித்தார். எமகாதக வங்கிகளின் நலனே பெரிதாக கவனிக்கப் பட்டது. எஞ்சி இருக்கும் ஒரு சில நல்லவர்கள் சொல்வதையோ, ஆதரவு தந்த பத்திரிகைகள் குரலையோ கேட்டதாகத் தெரியவில்லை. வங்கி அதிகாரிகளின் வானுயர போனஸ், மேலும் மேலே உயர, அமெரிக்க மக்களின் அன்றாடப் பாடு, பெரும்பாடாக ஆகி வருகிறது. வேலை இல்லாத் திண்டாட்டம் நாளுக்கு நாள் மோசமாகிக் கொண்டு வருகிறது. இதன் முக்கிய காரணம் முந்தைய புஷ், கிளிண்டன், ரீகன், ஆகியோர் என்றாலும், அதை சரி செய்வேன் என்று சொன்னவர், ஒரு கல்லையும் நகர்த்தவில்லை.

இந்த நிலையில் இவ்வாரம், சமீபத்தில் மறைந்த எட்வர்ட் கென்னடியின் மசாசுசெட்ஸ் செனேட் சீட்டுக்கு விசேஷ தேர்தல் வந்தது. அந்த மாகாணத்தில் ரிபப்ளிக்கன் யாரும் ஜெயிப்பதில்லை. பெடரல் அரசாங்கத்தின் தவறான அணுகுமுறையால் மக்களின் கோபம் அதிகமாக, ஏராளமான டெமாக்ரட் கட்சியனர் அன்று வாக்களிக்கச் செல்லவில்லை. டெமாக்ரட் வேட்பாளர் தோற்றார், ஒரு பிற்போக்குவாதியான ரிபப்ளிக்கன் (படத்தில் உள்ளவர் ) ஜெயித்தார். மசாசுசெட்ஸ் செனேட் சீட் ஏறத்தாழ அரை நூற்றாண்டுக்குப் பின்னர் ரிபப்ளிகன் வசம் சென்றது. ஒபாமா பதவி ஏற்ற முதல் ஆண்டுக்குப் பரிசாக அவரது கட்சிக்கு இப்படி ஒரு அடி கிடைத்தது. மக்கள் அவ்வப்போது விழித்துக் கொள்ளுவார்கள் போலிருக்கிறது. இனி அடுத்த வாரம், ஆட்சியில் இருக்கும் டேமாக்ரட்டுகள் போக்கில் ஏதேனும் மாற்றம் தெரிகிறதா என்று பார்க்க வேண்டும்.


முந்தய செய்தி அதிபர் ஒபாமாவுக்கு எச்சரிக்கை என்றால், அதற்கு இரண்டு நாட்கள் கழித்து நடந்த விஷயம், மக்களாட்சிக்கே சாவு மணி அடிப்பதாக அமைந்து விட்டது. ஒரு கம்பெனியோ கார்ப்பரேஷனோ, நாட்டில் நடக்கும் தேர்தல்களில் நேரடியாக செலவு செய்ய ஒரு உச்ச வரம்பு இருந்து வந்தது. அமெரிக்க சுப்ரீம் கோர்ட் என்னும் ஒரு 'வேதாள உலகம்', 5 -க்கு 4 என்ற ஓட்டில், அத்தகைய உச்ச வரம்பை நீக்கியது. இனிமேல் முனிசிபாலிடி தேர்தலில் இருந்து ஜனாதிபதி தேர்தல் வரை அனைத்திலும் கார்ப்பரேட் கம்பெனிகள் பணம் வெள்ளமாகப் பாயும். வாக்காளர்களிடம் ஏதோ ஒரு பத்து சதவிகிதம் இருந்த பயம் கூட வேட்பாளர்களுக்கு சுத்தமாகப் போய் விடும். இனிமேல் தேர்ந்தெடுக்கப் பட்ட பிரதிநிதிகளிடம் நேரத்தையும் பணத்தையும் செலவு செய்து லாபி செய்வதை விட்டு விட்டு, முதலாளிகளே நேரடியாகத் தம் அடிமைகளைக் தேர்ந்தெடுத்து விடுவார்கள். இந்தத் தீர்ப்புக்கு, வழக்கம் போல ரிபப்ளிக்கன் கட்சி உறுப்பினர்கள் அமோகமாக வரவேற்பு அளித்துள்ளார்கள். முதலாளிகளின் காலில் விழும் வைபவத்துக் இப்போதே வரிசை கட்டி நிற்கிறார்கள். இனிமேல் கலிபோர்னிய செனேட்டர், டெக்சஸ் செனேட்டர் என்பதற்கு பதில், G E செனேட்டர், ஷெல் ஆயில் செனேட்டர் என்றே அழைக்கப் படலாம். மக்களும் மூட்டைக் கட்டிக்கொண்டு, அருகில் இருக்கும் மெக்சிகோ அல்லது கனடா நோக்கிப் போகலாம்.


அமெரிக்க சுப்ரீம் கோர்ட், உலகில் வேறு எங்கும் இல்லாத வகையில் ஒரு வினோதமான வேதாள உலகம். இதன் ஒன்பது ஜட்ஜுகள், யாருக்கும் பதில் சொல்லக் கடமைப் பட்டவர்கள் அல்ல. இவர்களுக்கு ரிட்டயர்மென்ட் கிடையாது. சாகும் வரை, நூலாம்படை மேலே சுற்றினாலும், பதவியை விட்டுப் போகவே மாட்டார்கள். யாராவது இறந்தால்தான் பதவி காலி ஆகும். ஜனாதிபதிகள் மூலம், கட்சி, முதலாளிகள் சிபாரிசு, மத அதிபர்கள் (தேவாலயங்கள் ) சிபாரிசு, அடிப்படையில் நியமிக்கப் படுகிறார்கள். வரலாறு முழுக்க இந்த வேதாளங்கள் அமெரிக்காவின் மக்களாட்சித் தத்துவத்தின் குரல் வளையை நெரித்தபடியே இருக்கிறார்கள். அரசியலமைப்பை வெகுவாகத் திருத்தினால் மட்டுமே இவர்களின் அதிகாரங்களைக் கட்டுப் படுத்த முடியும்.

3 comments:

Anonymous said...

You read too much huffington post baski!...

clayhorse said...

Dear Anonymous, of course I read that blog a lot, and also get my news from the air (radio). For sheer fun, I do visit redstate and drudgreport. For even more fun, saint Sarah's facebook is the best. So, what do you read?

Gopinath said...

I read blogs on both end of the political spectrum but form my opinions independently. I am basically a liberal in social issues (gay marriage, legal immigration etc) but a conservative in fiscal issues.

Post a Comment