Wednesday, August 24, 2011

"I am Sam" - தெய்வத் திருமகள் - ஏழு வித்தியாசங்கள்

எங்கள் வீட்டில் எல்லோருக்கும் Dakota Fanning என்ற குழந்தை நட்சத்திரத்தைப் பிடிக்கும் என்பதால் அவள் நடித்த "I am Sam" என்ற 2001 -ல் வெளியான ஒரு பழைய படத்தைப் போன வாரம் பார்த்தோம்.  அதற்கும், சமீபத்தில் வெளி வந்த புகழ் பெற்ற "தெய்வத் திருமகள்" படத்துக்கும் கீழ்க்கண்ட ஏழு வித்தியாசங்களாவது கண்டு பிடித்தோம்.  நல்ல  வேளை,  தமிழ்ப்படத்தின் மானத்தைக் காப்பாற்றி விட்டார் இயக்குனர். 






 ஒரிஜினல்:  ஹீரோ, ஸ்டார் பக்ஸ் காப்பிக்கடையில் மேஜை சுத்தம் செய்பவன்
காப்பி:  தமிழ்ப்படத்தில் ஹீரோ, சாக்லேட் தொழிற்சாலையில் வேலை செய்பவன்.

ஒரிஜினல்: பெண்ணின் தாய் ஒரு 'homeless ' அனாதைப் பெண்.
காப்பி: தமிழ் செண்டிமெண்டுக்கு அனாதை ஒத்து வராது, அதனால் ஒரு பணக்கார வீட்டுப் பெண்.

ஒரிஜினல்:  குழந்தையின் தாய் பஸ் நிறுத்தத்தில் கூட்டத்தில் கலந்து எஸ்கேப் ஆகிறாள்.
காப்பி: தமிழ் செண்டிமெண்டுக்கு இந்தத் தாலி, தாய்ப்பாசத் தடைகள் இருப்பதால்,  குழந்தையின் தாய் பிள்ளைப்பேற்றின் போது இறந்து போகிறாள்.

ஒரிஜினல்: தனியாகக் காமெடி ட்ராக் இல்லை
காப்பி:  தமிழ்ப்படத்தில் அவசியம் இருந்தே ஆகவேண்டும்

ஒரிஜினல்: பெண் வக்கீல் மன வளர்ச்சி குன்றிய கதாநாயகனைக் காதலிப்பதில்லை
காப்பி: தமிழ்ப்பட விதிகளின் படி ஒரு கனவுப் பாட்டாவது இருந்தே ஆகவேண்டும்.  இந்த விதியை இயக்குனர் மீறவில்லை.

ஒரிஜினல்: குழந்தையை வளர்க்கும் foster பெற்றோர்கள், அவளைத் தகப்பனிடம் ஒப்படைத்து விட்டுத் தம் மேற்பார்வையில் வளர்க்க சம்மதிக்கிறார்கள்.
காப்பி: ரொம்ப சிந்தனைக்குப் பிறகு தகப்பன்,   இறந்து போன தாயின் அழகான தங்கையிடம் ஒப்படைத்து வளர்க்க சொல்கிறான்.

ஒரிஜினல்: ஹீரோவுக்கு அவார்ட் கிடைக்கவில்லை
காப்பி: ஹீரோவுக்கு தேசிய விருது நிச்சயம். மேலும் திருட்டு VCD பற்றி வெட்கமில்லாமல் அங்கலாய்ப்பார்கள்.

மற்றபடி, ஒரிஜினலில் ஆங்கிலம் பேசுகிறார்கள், காப்பியில் தமிழ்.

Wednesday, August 17, 2011

வேதபுரத்து வியாபாரிகள்

இந்த ஜூலை கோடை விடுமுறையில் தென் தமிழகத்தின் திற்பரப்பு, பத்மநாபபுரம், குத்தாலம் உள்ளிட்ட, பரவச அனுபவம் அளித்த இடங்களுக்கு முதலில் சென்றோம். ஒரு மணி நேரத்துக்கு மேல் குளித்தாலும் வெளியே வர மறுத்த என் 7 வயது மகளை மிகவும் சிரமப்பட்டுத்தான் திற்பரப்பு அருவியில் இருந்து வெளியே வர வைத்தோம். குத்தாலம் ஐந்தருவியில் தலையை நனைக்க மிகவும் சிரமப்பட்டோம். ஒரு பெரிய கும்பல் எல்லா இடங்களையும் ஆக்கிரமித்துக் கொண்டு பிறரை நெருங்கவே விடவில்லை. பிறகு மெயின் அருவிக்குச் சென்று ஆசை தீரக் குளித்து வந்தோம். எங்கள் அதிர்ஷ்டம், சாரலுடன் நல்ல சீசன் போலிருந்தது. நாற்பதாண்டு காலத்தில் இப்போதுதான் முதல் முறையாக இங்கெல்லாம் செல்ல முடிந்திருக்கிறது என்பது வருத்தப்பட வேண்டிய விஷயம்.

எல்லா அருவிகளிலும் நான் பார்த்த மகிழ்ச்சி தந்த விஷயம், அங்கு குளித்தவர்களிலே என்னுடைய தொந்திதான் மிகச் சிறியதாக இருந்தது. என்ன ஆயிற்று தமிழர்களுக்கு?

நெல்லையப்பர் கோயில் சென்றால், கத்தியைக் காட்டாத குறையாக, அர்ச்சகர்கள் எல்லாம் தட்டை முகத்தில் மோதுவது போல நீட்டி, 'தட்சணை போடுங்கள்' என்று மிரட்டுகிறார்கள். திருச்செந்தூரில் இன்னும் மோசம். தரகு பிடிப்பவர்கள் போல அர்ச்சகர்கள் 'ஸ்பெஷல் தரிசனத்துக்கு' ஆள் பிடிப்பதில் பிசியாக இருக்கிறார்கள். இந்த அனுபவமெல்லாம் அவர்களுக்கு வேறு சில தொழில்களுக்கும் பயன்படலாம். மற்றபடி, முன்னைப்போலவே நெல்லை நகரம் (எம் தமிழர் பழக்கத்துக்கு விரோதமாக) குப்பைகள் இன்றித் தூய்மையாக இருக்கின்றது.