தலைப்பைப் பார்த்ததும், ஏதோ பைனான்ஸ் அல்லது சுவிசேஷ கம்பெனி பற்றிய மற்றொரு மொக்கை என்று நினைக்க வேண்டாம். இது இந்தப்பக்கம் அமெரிக்காவில் தினந்தினம் நடக்கும் மக்கள் போராட்டங்கள் பற்றிய பதிவு. பொதுமக்கள் நடத்தும் ஜனநாயக முறைப் போராட்டங்கள் நடத்த அமெரிக்காவில் காரணங்கள் நிறைய உள்ளன. முடிவில்லாத யுத்தங்கள், வரலாறு காணாத வேலையில்லாத் திண்டாட்டம், பங்குச்சந்தை சரிவு, ஒரே வாரத்தில் வீட்டையும் சொத்தையும் இழப்பது, பெரும் செல்வர்கள் மேலும் செல்வந்தர்களாவது, இப்படிப் பல. ஆனால் இந்த நியாயமான காரணங்களுக்காக இங்கு எந்த மக்கள் போராட்டமும் நடப்பதில்லை. ஒரு கலப்பின ஆசாமி அமெரிக்க ஜனாதிபதியாக ஆனாலும் ஆனார், வாரம்தோறும் சனி ஞாயிறு வருகிறதோ இல்லையோ, நாட்டின் தலைநகர், மாநிலத் தலை நகர், இங்கெல்லாம் கோவக்கார வெள்ளைக்காரர்கள் தொடர்ந்து ஊர்வலங்களும், போராட்டங்களும் நடத்தி வருகின்றனர். நேரடியாக 'கறுப்பர் அதிபரானது பிடிக்கவில்லை' என்று சொல்ல முடியாது. அதனால் லூசுத்தனமாக வேறு காரணங்களை முன்வைக்கின்றனர்.