Sunday, October 12, 2014

சுவரொட்டித் தமிழன், தினமணி, மற்றும் சில..


இணையம் மற்றும் காட்சி ஊடகங்கள் பெருகி விட்ட இந்தக் காலத்திலும் புராதனமான சுவரொட்டிப் பிரச்சாரத்தை எம் தமிழர் விடவில்லை.  கல்யாணம், திடீர்ப் பிரமுகர்கள் வீட்டு மஞ்சள் நீராட்டு விழாவோ அல்லது அவர்தம் இறுதி ஊர்வலமோ, எதுகை மோனையும் எழுத்துப் பிழையுமாக சுவரொட்டிகள் ஒட்டப்படுகின்றன.  எதிர் கோஷ்டிக்கு சவால் விட வேண்டுமா?  ஒரு மணி நேரத்தில் எதிர்  சுவரொட்டித் தயாராகி. சம்பத்தப்பட்டவர் பார்வையில் படும்படி ஒட்டப்படும்.  ப்ளக்ஸ் பலகை விளம்பரங்களில் முதலீடு செய்வது அவர்தம் அந்தஸ்தை அன்போடு வெளிப்படுத்தும் செயலாகும்.  
இன்ன இடத்தில்தான் ஒட்டுவது என்றில்லாமல், பசு மாட்டின் மீது ஓட்டுவது, பெயர்ப்பலகையில் ஒட்டுவது என்பதெல்லாம் பரிணாம வளர்ச்சி, அல்லது அப்போது அருந்திய டாஸ்மாக் சரக்கின் வீரியம் என்பதன் வெளிப்பாடே.


சிறிய நகரமாகிய புதுச்சேரி பக்கம் வந்தீர்கள் என்றால், ஒரு கருமாதிக்கே 30 அடிக்கு 60 அடி என்ற அளவில் பிளாக்ஸ் பலகைகளை சர்வசாதாரணமாகப்  பார்க்கலாம்.  மிகப்பெரிய மாநிலமான  தமிழகத்தின் "கண்ணுக்கெட்டிய தூரம் வரை எதிரிகளையே தெரியவில்லை (வீட்டுக்குள்ளேயே தேடிப் பார்த்திருக்க வேண்டும்)" என்ற, ஒப்பாரும் மிக்காரும் இல்லாத தலைவியை, மானிட இனத்தைச் சேர்ந்த ஒரு நீதிபதி சிறையில் அடைத்தால் என்ன நடக்கும்?  2 வாரங்களாக எல்லா சுவர்களும் நான்கடி அகலத்துக்குப் பெருத்ததாக ஜூ.வி. போன்ற ( லேகிய மருந்து, வாஸ்து விற்கும்) பத்திரிக்கைகள் உணர்ச்சி வசப்படுகின்றன.

இது இப்படி இருக்கையில், தினமணிக்கும் தினமலருக்கும் திருடனுக்குத் தேள் கொட்டியது போல பெருத்த சோதனை.  உள்ளே போனதோ ப(அ)டியளக்கும் தேவி. மத்தியிலோ ஒரே அலைவரிசை. யாரையாவது குற்றம் சொல்லியே ஆக வேண்டுமே.  'எந்த குற்றத்தால் தலைவி சிறைக்குச் சென்றார்' என்பது பற்றி ஒரு இழவு அலசலும் இல்லை. கிடைத்தார் கிழவர்.  2-G வழக்குக்கு என்ன தண்டனை கிடைக்கும் என்பது பற்றியே ஆராய்ச்சிகள் நடக்கின்றன.  கலைஞர் குடும்பம் புதுமனை ( திகார்?) புக இன்னும் சில மாதங்கள் உள்ளன.  அது நடக்கும்போது பார்த்துக் கொள்ளலாம்.

நீதிபதி முன் இவர்கள் கூண்டில் நின்ற காட்சியைக் கற்பனை செய்தால்  ஏனோ இந்த கம்பராமாயணப் பாடல் நினைவில் வந்து போகிறது.

‘நிலம்செய்து விசும்பும் செய்து,
    நெடியவன் படை, நின்றானை
வலம்செய்து போயிற்று என்றால்,
    மற்று இனி வலியது உண்டோ?
குலம் செய்த பாவத்தாலே
    கொடும்பகை தேடிக் கொண்டோம்
சலம்செயின் உலகம் மூன்றும்
    இலக்குவன் முடிப்பன், தானே.


தினமணி தலையங்கம், கார்ட்டூன் இவற்றை எல்லாம் பார்த்தால் 'நமது எம்.ஜி.ஆர்'  பேப்பரின் ஆசிரியர்களுக்கே கூச்சமாகவும் பொறாமையாகவும் இருக்கும் என்று நினைக்கிறேன்.  ஒரு காலத்தில் நடுநிலை தவறாத செய்திகளுக்கு தினமணியைதான் வாசிப்பது வழக்கம். இப்படியா  பரிதாபமாக வீழ்வது ?   (பி.கு: 'நமது எம்.ஜி.ஆர்' என்பது தினசரி பத்திரிக்கை வடிவில் எங்கோ விற்கப்படுகிறதாம். அ.தி.மு.க  பிரமுகர்கள் தினமும் சுழற்சி முறையில் தலைவியை வாழ்த்தி லட்சக்கணக்கில் செலவு செய்து விளம்பரம் தரவேண்டும்.  விசேஷம் ஏதும் வேண்டியதில்லை. தலைவி காலையில் சிற்றுண்டி அருந்தினாலே செயல் மறந்து வாழ்த்தி வணங்கலாம்).
சில ஆண்டுகளுக்கு முன் இதே தலைவி ஜெயேந்திரரைக் கைது  செய்த போது, எங்கெல்லாமோ சுற்றி வந்து தினமலர் கடைசியில் கருணாநிதியைத்தான் திட்டியது.  போதாக்குறைக்கு இந்த மந்திரி வகையறாக்கள் பதவி  ஏற்பு விழாவினால் கிளிசரின் தட்டுப்பாடு ஏற்பட்டதுதான் மிச்சம்.  அப்படி என்ன பதவி வேண்டி கிடக்கிறது?  அம்மா வெளியே வரும் வரை வெறும் எம்.எல்.ஏ வாகவே இருப்பதுதானே.. நடிப்பில் சிவாஜி கெட்டார். 

நான் ரசித்துச் சிரித்த சில சுவரொட்டிகள் இங்கே உங்களுக்காக.

அடேங்கப்பா, இவங்க கண்ணாடி போட்டதுக்கா எல்லாரும் கை தட்றாங்க?

எதற்கு மௌன அஞ்சலி ?


 இதோ வருங்காலத் தமிழக அமைச்சர்கள்




இந்த அல்லக்கைகளின் அடாவடி, அவர்கள் தலைவியை ஆயுசுக்கும் களி தின்ன வைத்து விடும் போலிருக்கிறது.

 கனிமொழி அக்கா களி தின்று சிறை மீண்ட சுவரொட்டிகள் ஏனோ இப்போது கிடைக்கவில்லை.    கிடைத்த ஒன்றிரண்டு.



No comments:

Post a Comment