Thursday, December 31, 2020

விட்டுச் செல்லும் பாடங்கள்

 நம்முடைய காலத்தில், நினைவு தெரிந்த வரையில் இது போல ஒரு வருஷத்தைப் பார்த்ததே  இல்லை என்று சொன்னால் அது 2020 ஆகத்தான் இருக்கும்.  ஒரு ஃபேன்சி நம்பராக அமைதியாக ஆரம்பித்து, பத்து வருஷங்களுக்குண்டான அனுபவத்தைத் தந்துவிட்டு நம்மைக் கடந்து செல்கிறது 2020.

மேலை நாடுகள் என்று சொல்லப்படும் மேற்கு நாடுகளே அண்ணாந்து பார்க்கும் அமெரிக்கா எப்படிக் கிழித்துத் தொங்க விடப்பட்டது  என்று மட்டும் இங்கு பார்ப்போம்.

முதலில் இந்த ஆண்டின் மிகப் பெரிய வில்லன் (??)
15 நபர்களுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டது என்று மார்ச் 2020ல் முதன் முதலாக அதிகார பூர்வமாக அறிவிக்கப்பட்டது.  டிரம்ப், அது ஒரு நோயே இல்லை என்றும், வந்த வழியே மந்திரம் போட்டது போல, சில நாட்களில் காணாமல் போய் விடும் என்றும் பேட்டி அளித்தார்.  நாளாக ஆக தொற்றின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே போனதும் பல மாநிலங்கள் லாக்கடவுன், கடை அடைப்பு, மாஸ்க் அணிய அறிவுறுத்தல் போன்ற அடிப்படை நடவடிக்கைகளை எடுத்தனர். 


ஃபாக்ஸ் நியூஸ் உள்ளிட்ட வலதுசாரி ஊடகங்கள் வழக்கம்போல், இது வெறும்  சளிக்காய்ச்சல்.  டிரம்ப்பின் நற்பெயருக்குக்  (?!) களங்கம் விளைவிக்க எதிர்க்கட்சிகளும் படித்தவர்களும் சேர்ந்து செய்யும் பொய்ப் பிரச்சாரம் என்றும், முகக்கவசம் அணியத் தேவை இல்லை என்றும் உச்சகட்டப் பிரச்சாரம் செய்தனர்.  அதற்கு ஏற்றாற்போல அவர்கள் ஆதரவாளர்கள் ஆங்காங்கே போராட்டங்கள் நடத்தினர்.  மிஷிகன் மாநிலத்தில் ஆயுதம் ஏந்திய அமைப்புகள் அந்த மாநில கவர்னரையே கடத்திச் சென்று கொலை செய்யத்  திட்டமிடும் அளவுக்கு வந்தனர்.

ஒரு கட்டத்தில் டிரம்புக்கே கொரோனா தோற்று ஏற்பட, உலகிலேயே மிகவும் சிறந்த, வெளியில் யாருக்கும் கிடைக்காத, ஸ்டெம் செல் மருத்துவ சிகிச்சை  அவருக்கு அளிக்கப்பட்டது.  ஆனால் வெளியே வந்த மனிதர் திருந்தினாரா என்றால் இல்லை.. "இதெல்லாம் ஒரு பாதிப்பே இல்லை.  தாராளமாக வெளியே நடமாடுங்கள்" என்று மீண்டும் பொய்ப் பிரச்சாரம்., அவருக்குக் கிடைத்த சிகிச்சை எத்தனைப் பேருக்குக் கிடைக்கும் என்ற அடிப்படை அறிவு கூட இல்லாத ஒரு கூட்டம்.  டிரம்பின் கருத்துக்கு மாறாக அறிவுரைகள் வழங்கிய, நாட்டின் தலைசிறந்த தொற்றுநோய் நிபுணர் டாக்டர் ஃபௌச்சி போன்றவர்களுக்குக் கொலை மிரட்டல்கள் வந்தன.

 
டிசம்பர் 32 நிலவரப்படி USA வில் மட்டும் கொரோனவால் இறந்தவர்கள் எண்ணிக்கை 353,000.  இது அதிகாரபூர்வமான எண்ணிக்கை. உண்மையில் இதைவிட மேலும் 20 சதவீதம் அதிகமாக இருக்கவே வாய்ப்பு அதிகம்.  நொறுங்கிய பொருளாதாரம், வேலை இழப்புகள் மற்றும் உடைந்த குடும்பங்கள் என்று collateral damage எல்லாம் மிக அதிகம்.  இந்த சிக்கலான நேரத்தில் இப்படி ஒரு ஜனாதிபதியைப் பெற்றது அமெரிக்காவின் துரதிருஷ்டம் என்றோ, பாவத்தின் விளைவுகள் என்ற சொல்லலாம்.  சாவு எண்ணிக்கை 150,000த் தாண்டியதும் அதை பற்றிய பேச்சையே விட்டு விட்டார் டிரம்ப்.

https://www.washingtonpost.com/business/2020/12/10/pandemic-shoplifting-hunger/

நிறவெறியை எதிர்த்து நாடு தழுவிய போராட்டங்கள் 
இது வழக்கமான நிகழ்வு என்றாலும் மே மாதம் 25ல் நடந்த படுகொலை பெருவாரியான  அமெரிக்கர்களின்  அற உணர்வைத் தட்டி எழுப்பியது என்றே சொல்லலாம். ஜார்ஜ் ஃபிளாய்டு என்னும் கறுப்பின மனிதனின் கழுத்தில் காலை வைத்து அழுத்தி, பட்டப்பகலில் பலரும் பார்க்கும் வகையில் வெள்ளைப் போலீஸ் ஒருவன் கொலை செய்தான்.  இந்த வீடியோ உடனடியாக இன்டர்நெட்டில் பரவி நாடெங்கும் அதிர்ச்சி அலையை உண்டு பண்ணியது.  அதைத் தொடர்ந்து பல மாதங்கள் பேரணிகளும் போராட்டங்களும் நடந்தன.  ஒரு கட்டத்தில் வெள்ளை மாளிகை பங்க்கருக்குள் டிரம்ப் ஓடி ஒளியும் அளவுக்கு நிலைமை வந்தது.
 


  
இயற்கைப் பேரழிவுகள்
வருடந்தோறும் வரும் பெரும் புயல்களும் காட்டுத்தீயும் இம்முறையும் தவறவில்லை.  கலிபோர்னியாவில் இந்த ஆண்டு காட்டுத்தீ எண்ணிக்கை சுமாராக 10,000.  எரிந்த நிலப்பரப்பு சுமாராக 4.5 லட்சம் ஏக்கர்கள்.
புவி வெப்பமாவதை இப்போதாவது அதிகாரத்தில் உள்ளவர்கள் ஏற்றுக்கொள்வார்களா?



அதிபர்  தேர்தல்
இந்த வருடம் நடந்த தேர்தல் டிரம்பின் புண்ணியத்தில் மிகவும் வித்தியாசமான முறையில் நடந்தது.  கொரோனா பயத்தால் பெருவாரியான மக்கள் தபால் ஓட்டு போட்டனர்.  அதிக அளவில் வாக்குப் பதிவு நடப்பது எப்போதுமே ரிபப்லிக்கன் கட்சிக்கு பாதகமாக அமையும் என்பதால் வாக்குப் பதிவை மந்தமாகும் முயற்சிகள் எதையும் கைவிடவில்லை.  முக்கியமாக, தபால் வாக்குகளை முடக்கச் செய்த முயற்சிகளை விளக்க ஒரு புத்தகமே போடலாம்.  இருந்தும் மக்கள் பெருவாரியாகத் திரண்டு வந்து வாக்களித்து பைடனைத் தேர்ந்தெடுத்தனர். பல விதங்களில் இது வரலாறு காணாத தேர்தல்.  ஒரு பெண், அதுவும் ஆசிய, கரீபியன் வேர்கள் கொண்டவர் துணை அதிபராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.  ஒரு அதிபரின் தேர்தல் தோல்விக்கு நாடே  தன்னிச்சையாக தெருவில் இறங்கி கொண்டாடி விழாக்கோலம் பூண்டது இதுதான் முதல்முறை.



ஆனால் தன் குணத்துக்கேற்ப, டிரம்ப் இந்த தேதி வரை தன தோல்வியை ஒப்புக் கொள்ளவில்லை.  தான் வென்றுவிட்டதாகவும், எப்படியும் ஜனவரி 6க்கு முன்னர் தேர்தல் முடிவுகளை மாற்றி விடலாம் என்று விடாமுயற்சியில் இருக்கிறார். அவருடைய கட்சியினரே அமெரிக்க ஜனநாயகத்தையும் அரசியலமைப்பையும் கேலிக்குரிய பொருளாக மாற்றி வருகின்றனர்.





Sunday, April 12, 2020

சதிவலைகளும் புரளிகளும்

https://cdn.theatlantic.com/thumbor/muFAAWuH9hRuRsYo4YoFjbdX4No=/0x177:2000x1302/720x405/filters:format(png)/media/img/mt/2018/03/fakenews1-1/original.png
Conspiracy Theory: இயற்கையாகவோ அல்லது வேறு காரணத்தாலோ நடக்கும் நிகழ்ச்சிகளுக்குப்பின் "பெரும் சதிவலை" பின்னப்பட்டிருப்பதாக மக்களை நம்ப வைப்பது.  உதாரணமாக , "9/11 ஒரு உள்ளடி வேலை",  "புல்வாமா தாக்குதல் இந்திய அரசின் சதி ", என்பது போல.   இந்த 'சதி-வலை' தியரிகள்  அரசாங்கங்கள் உருவாகத் தொடங்கிய காலத்தில் இருந்தே உள்ளது.  இப்போதைய தொழில்நுட்பம் இதை ஒரு பெரும் அபாயகரமான, லாபகரமான தொழிலாகவே மாற்றி இருக்கிறது.  இடது-வலது பேதமில்லாத தொழில்.  இந்த சதிவலை-கதைகளை ஹார்வர்ட், IIT, MIT, ஸ்டான்போர்ட் போன்ற இடங்களில் பெரிய படிப்பு படித்தவர்களும் எப்படி நம்புகிறார்கள் ?   சில மாதங்களுக்கு முன்,  இந்தப் பொய்ச்செய்திகளுக்கு (fake news ) மக்கள் எப்படி விழுகிறார்கள் என்று 'சயன்டிபிக் அமெரிக்கா'   விரிவான ஆராய்ச்சி ஒன்றை நடத்தியது . 

Tuesday, May 21, 2019

யார் தந்தார் இந்த அரியாசனம் ?

பொதுவாகவே குஜராத்திகள் வியாபாரத்தில் சிறந்தவர்கள். பெரிய முதலீடுகள் அங்கு குவிந்து முதல்வர் மோடிக்கு நல்ல பெயர் வாங்கித் தந்தது.  பத்திரிகைகளும் அவருக்கு ஒரு பெரிய இமேஜை உருவாக்கி வைத்தது.  சிலிக்கன் வேலி பணக்காரர்கள் வித்தியாசமானவர்கள்.  ஹோட்டல் சர்வருக்கான டிப்ஸை, ஐபோன் ஆப் உபயோகித்துப் பிரித்துக் கொள்வார்கள், ஆனால் இந்தியாவிலிருந்து ஏதாவது சாமியார் வந்தால் கணக்குப் பார்க்காமல் பணத்தை அள்ளி இறைப்பார்கள்.  மோடி ஒரு தீவிர இந்துக் காவலர் என்று அவர்களுடைய புத்தியில் ஏற்றப்பட்டது. குஜராத்தில் அவருடைய வீர சாகஸங்களைப் பார்த்தவர்கள், அவரை எப்படியும் மேலுக்கு கொண்டு வர தம்முடைய பங்கும் பெருமளவு  இருக்க வேண்டும் என்று முடிவு செய்தனர்.

Saturday, April 6, 2019

யட்சப்ரஸ்னம்

காட்டில் நீர் கொண்டு வரச் சென்ற தம்பியர் நால்வரும் திரும்பி வராதது கண்டு கவலை கொண்டான் தர்மன்.
பலவாறாக சிந்தித்தபடியாக குளத்தை அடைந்தான். அங்கு இறந்து கிடந்த நால்வரையும் கண்டான்.  வனவாசம் முடியும் சமயத்தில் இப்படி ஒரு சோதனையா?
யார் இப்படி செய்திருப்பார்கள்? அருகில் சென்று பார்த்தான். உடலில் காயம் ஏதுமில்லை. உறங்குபவர்கள் போல் படுத்திருந்தனர்.
ஒருவேளை இது துரியோதனன் சதியாக இருக்கும் என எண்ணியபடி பொய்கையை கண்டான். தம்பிகளைப் பிறகு பார்க்கலாம், முதலில் தாக்கத்தை தணிக்கலாம் என்று பொய்கையில் இறங்கினான்.
அப்போது ஒரு அசரீரி,  "என் பேச்சைக் கேளாமல் உன் தம்பிகள் தண்ணீர் பருகினார்கள். நீயும் அப்படி செய்யாதே தர்மா.என்கேள்விகளுக்கு பதில் தந்துவிட்டு பிறகு குடி. இது என் குளம்" என்றது.
தர்மனும் தாகத்தை பொருட்படுத்தாமல் சரி கேள் என்றான்.  அசரீரி வரிசையாகக்  கேள்விக்கணைகளைத் தொடுத்தது.

Saturday, March 30, 2019

செய்திகளை முந்தித் தருவது

எத்தனை வேலை இருந்தாலும் தினமும் எதிரெதிர் செய்தித் தாள்களை மொழிக்கு இரண்டு வீதம் வேகமாகப் படித்து விடுவது வழக்கம். இதனால் ஏதும் பயனுண்டா என்று கேட்டால் , நிச்சயம் இல்லை.  யோசித்துப் பார்த்தால் நியூஸ் பேப்பர் படிக்கும் இந்தப் பழக்கம் நான் மூன்றாம் வகுப்புப் படிக்கும் போது ஆரம்பித்தது.  சென்னை சைதாப்பேட்டையில் என் பாட்டி வீட்டில் தங்கிப் படித்துக் கொண்டிருந்தேன்.  அங்கிருக்கும் திரௌபதி அம்மன் கோயில்தான் எங்களுக்கு விளையாடுமிடம்.   மாலையில் யாரும் வரமாட்டார்கள். அதன் பக்கத்திலேயே என் பெரியப்பாக்களில் ஒருவர் ஒரு சிறிய லென்டிங் லைப்ரரி நடத்தி வந்தார். சிகரெட் புகைப்பதற்கோ எதற்கோ போவதற்காக என்னை தினமும் சிறிது நேரம் அந்த லைப்ரரியில் காவலுக்கு உட்கார வைத்து விட்டுப் போவார். அப்போது அங்கிருக்கும் நியூஸ் பேப்பர் மற்றும் காமிக்ஸ் புத்தகங்களைப் படிப்பேன். 

Saturday, December 31, 2016

தமன்னாவும் தமிழ்நாடும்

1290ல் டில்லியில் பதவியைப் பிடித்த 'ஜலாலுதீன் கில்ஜி' இரக்க குணம் கொண்ட மென்மையான சுல்தான்.  'நான் ஆணையிட்டால்,  அது நடந்து விட்டால், இங்கு ஏழைகள் வேதனைப் படமாட்டார்.  உடல் உழைக்கச் சொல்வேன், அதில் பிழைக்கச் சொல்வேன், அவர் உரிமைப் பொருள்களைத் தொட மாடடேன்" என்று ஆட்சி புரிந்து வந்தவர்.  எளிதில் உணர்ச்சி வசப்படும் இவர், தம் சகோதரன் மகனும், பின்னாளில் மருமகனுமான 'அலாவுதீன்  கில்ஜி' யை குழந்தையிலிருந்து வளர்த்து வந்தவர்.  பக்கத்து நாடுகளின் மீது அடிக்கடி படையெடுத்துச் சென்று, சூறையாடிய செல்வங்களை சுல்தானின் காலடியில் குவித்தான் அலாவுதீன்.  "வெற்றி மீது வெற்றி வந்து என்னைச் சேரும், அதை வாங்கித் தந்த பெருமை  எல்லாம் உன்னைச்  சேரும்" என்று புளங்காகிதம் அடைந்தார் ஜலாலுதீன்.  இந்த நம்பிக்கையினால், சுல்தானின் அனுமதி இல்லாமலேயே தனிப்படை வைத்துக் கொண்டு மேலும் பல நாடுகளின் மீது படையெடுத்து அலாவுதீன் செல்வத்தையும் மேலும் படையையும் குவித்துக்கொண்டான்.

Tuesday, October 25, 2016

எந்த நாளும் திருவிழா - பாகம் 3 (அல்லது ) 2016 - Are You Not Entertained ?


நவம்பர் 8 எப்போது வரும், கடந்த இரண்டு ஆண்டுகளாகக் கண்டு வரும் இந்தக் கொடுங்கனவு எப்போது முடியும் என்று தேசமே காத்திருக்கிறது.  எப்படிப் பார்த்தாலும் அமெரிக்க வரலாற்றில் இடம் பிடிக்கப் போகும் தேர்தல் இது.  முதன்முறையாக ஒரு பெண் வேட்பாளர் அதிபர் பதவிக்குப் போட்டியிடும் தேர்தல் இது.   பாகிஸ்தான், வங்காளதேசம் போன்ற நாடுகளிலேயே பெண்கள் பிரதமர்களாக இருந்திருக்கிறார்கள்.  மிகவும் முன்னேறிய நாட்டில் இப்போதுதான் சாத்தியமாகியுள்ளது.   சக்தி வாய்ந்த செனேட்டின்  உறுப்பினர்களில் 5ல் ஒரு பங்கு மட்டுமே பெண்கள்.  அரசியல் அதிகாரம் என்பது இங்கு வெள்ளை ஆண்களின் ஏக போக உரிமையாகவே இருந்து வருகிறது.  பரவலாகி வரும் கல்வி, பிறநாட்டிலிருந்து வந்த குடியேறிகள், தொழில் நுட்பம், பொருளாதாரம்,  ஆகிய காரணிகளால் அந்தக் கண்ணாடித் தளம் விரிசல் விட ஆரம்பித்துள்ளது.

Tuesday, June 28, 2016

எந்த நாளும் திருவிழா - பாகம் 2

சென்ற பகுதியில் முதல்நிலை வேட்பாளர் தேர்தல் முறையைப் பார்த்தோம்.   எளிமையாகத் தெரிந்தாலும் அது உள்ளபடியே மிகவும் குழப்பமான, அர்த்தமில்லாத முறை.  1968 வாக்கில்தான் அந்த முறை வந்தது. வருடம் முழுதும் நடக்கும் தேர்தலினால் டி.விக்களுக்கு எக்கச்சக்கமான விளம்பர வருமானம்.  ஒரு பரபரப்பை ஏற்படுத்தி, அந்த சூடு தணியாமல் பார்த்துக்கொண்டால்தான் டி.விக்களுக்கு நல்ல வருமானம்.  இது போக, ரேடியோ, இன்டர்நெட் விளம்பரம்,சம்பளத்துக்கு வேலை செய்யும் ஆலோசகர்கள்,  பயணச் செலவு, கூட்டத்திற்கான செலவு என்று பெரிய பட்ஜெட் வேண்டும்.  ஒரு ஜனாதிபதி வேட்பாளர் சுமாராக 1 பில்லியன் டாலர் செலவழிக்க வேண்டும்.  அதற்கு நிதி திரட்ட வேண்டும்.

Tuesday, June 21, 2016

எந்த நாளும் திருவிழா - பாகம் 1

 
போன வாரம் பாண்டியில் உறவினர்களோடு பேசியபோது,  "என்னப்பா இது அநியாயமா இருக்கு.  நாராயணசாமி எலெக்ஷன்ல நிக்காம சி.எம். ஆயிட்டாரு.  எங்கெல்லாம் எப்பதான் அமேரிக்கா மாதிரி வரப்போவுதோ தெரியல". என்றனர்.  "சரி, இங்க எப்படி எலக்ஷன் நடக்குது தெரியுமா?" என்றேன்.  "அவ்வளவா தெரியாது" என்று பதில் வந்தது.   அவர்களுக்காகவும், மற்ற நண்பர்களுக்காகவும் உலகின் இரண்டாவது பெரிய மக்களாட்சியின் தேர்தல் கூத்துகளை இங்கு பதிவேற்றம் செய்கிறேன்

Friday, May 20, 2016

மகேசன் தீர்ப்பு எனும் மாம்பழம்

ஐந்தாண்டுகளாக பக்கவாதம் வந்து படுத்துக்கொண்டிருந்த அரசாங்கத்தையே மறுபடியும் மக்கள் எப்படி தேர்ந்தெடுத்தார்கள் என்பது,  டாக்டரேட் செய்யக்கூடிய ஒரு சப்ஜெக்ட்.  வசூலைத் தவிர வேறு எந்த வகையிலும் செயல்பாடு இல்லை.  சின்னச்சின்ன நியாயமான போராட்டங்களைக் கூட போலிசை வைத்து அடக்குவது,  பத்திரிக்கைகளுக்கு அவதூறு வழக்குகள் மூலம் வாய்ப் பூட்டு போடுவது,  எந்த அமைப்பையும் நம்பாமல், ஒய்வு பெற்ற சில குறிப்பிட்ட அதிகாரிகளை மட்டுமே வைத்துக்கொண்டு ஆட்சி செய்வது, என்று  ஜனநாயக அமைப்பே கேலிக்கூத்தாக மாறியது.  

Monday, March 28, 2016

மெட்ராஸ் ஷேத்ரே



  
Disclaimer: எழுத்தாளர் ஜெயமோகனின் நெல்லை ஜங்க்ஷன் கீதையை சென்னை எக்மோருக்கு மாற்றியுள்ளேன்...
"ஹல்லோ,  துலுக்கானமா?  கிண்டி கெஜாவ எக்மோர் டேசன் கேட்டாண்ட ஸ்கெட்ச் போட்டுத் தூக்கறன்னு அட்வான்ஸ் வாங்கிக்னு 'கொக்கி அர்ச்சுனனும்'  'கோனாரு கோவாலும்' போனானுங்க.  இன்னாடா பண்றானுங்க இவ்வ்வ்ளோ நேரம்?" என்று பேட்டை பழைய வஸ்தாது, 'நொள்ளக்கண்ணு கபாலி', தன் மச்சானிடம் செல்போனில் கேட்டான்.
பழக்கப்பட்ட பெட்டிக்கடை பின்னால் மறைந்து நின்று கொண்டு செல்போனில் மெல்லிய குரலில் துலுக்காணம்: "தோ, மாமு,  நாகர்கோயிலு எஸ்ப்ரஸ்ல இருந்து கெஜாவும், மாமங்காரன் கன்ஸாமியும், கூட கொஞ்சம்பேரும் செட்டா வர்றானுங்கபா.  கோனாரு இப்ப கொக்கியக் கூட்டிக்னு டேசன் நடு சென்டர்ல நிறுத்தராம்பா.  அப்ப கோவாலு  சொன்னத நான் உன்னாண்ட சொல்றேன்.

Sunday, October 12, 2014

சுவரொட்டித் தமிழன், தினமணி, மற்றும் சில..


இணையம் மற்றும் காட்சி ஊடகங்கள் பெருகி விட்ட இந்தக் காலத்திலும் புராதனமான சுவரொட்டிப் பிரச்சாரத்தை எம் தமிழர் விடவில்லை.  கல்யாணம், திடீர்ப் பிரமுகர்கள் வீட்டு மஞ்சள் நீராட்டு விழாவோ அல்லது அவர்தம் இறுதி ஊர்வலமோ, எதுகை மோனையும் எழுத்துப் பிழையுமாக சுவரொட்டிகள் ஒட்டப்படுகின்றன.  எதிர் கோஷ்டிக்கு சவால் விட வேண்டுமா?  ஒரு மணி நேரத்தில் எதிர்  சுவரொட்டித் தயாராகி. சம்பத்தப்பட்டவர் பார்வையில் படும்படி ஒட்டப்படும்.  ப்ளக்ஸ் பலகை விளம்பரங்களில் முதலீடு செய்வது அவர்தம் அந்தஸ்தை அன்போடு வெளிப்படுத்தும் செயலாகும்.  
இன்ன இடத்தில்தான் ஒட்டுவது என்றில்லாமல், பசு மாட்டின் மீது ஓட்டுவது, பெயர்ப்பலகையில் ஒட்டுவது என்பதெல்லாம் பரிணாம வளர்ச்சி, அல்லது அப்போது அருந்திய டாஸ்மாக் சரக்கின் வீரியம் என்பதன் வெளிப்பாடே.