Showing posts with label politics. Show all posts
Showing posts with label politics. Show all posts

Tuesday, October 25, 2016

எந்த நாளும் திருவிழா - பாகம் 3 (அல்லது ) 2016 - Are You Not Entertained ?


நவம்பர் 8 எப்போது வரும், கடந்த இரண்டு ஆண்டுகளாகக் கண்டு வரும் இந்தக் கொடுங்கனவு எப்போது முடியும் என்று தேசமே காத்திருக்கிறது.  எப்படிப் பார்த்தாலும் அமெரிக்க வரலாற்றில் இடம் பிடிக்கப் போகும் தேர்தல் இது.  முதன்முறையாக ஒரு பெண் வேட்பாளர் அதிபர் பதவிக்குப் போட்டியிடும் தேர்தல் இது.   பாகிஸ்தான், வங்காளதேசம் போன்ற நாடுகளிலேயே பெண்கள் பிரதமர்களாக இருந்திருக்கிறார்கள்.  மிகவும் முன்னேறிய நாட்டில் இப்போதுதான் சாத்தியமாகியுள்ளது.   சக்தி வாய்ந்த செனேட்டின்  உறுப்பினர்களில் 5ல் ஒரு பங்கு மட்டுமே பெண்கள்.  அரசியல் அதிகாரம் என்பது இங்கு வெள்ளை ஆண்களின் ஏக போக உரிமையாகவே இருந்து வருகிறது.  பரவலாகி வரும் கல்வி, பிறநாட்டிலிருந்து வந்த குடியேறிகள், தொழில் நுட்பம், பொருளாதாரம்,  ஆகிய காரணிகளால் அந்தக் கண்ணாடித் தளம் விரிசல் விட ஆரம்பித்துள்ளது.

Tuesday, June 28, 2016

எந்த நாளும் திருவிழா - பாகம் 2

சென்ற பகுதியில் முதல்நிலை வேட்பாளர் தேர்தல் முறையைப் பார்த்தோம்.   எளிமையாகத் தெரிந்தாலும் அது உள்ளபடியே மிகவும் குழப்பமான, அர்த்தமில்லாத முறை.  1968 வாக்கில்தான் அந்த முறை வந்தது. வருடம் முழுதும் நடக்கும் தேர்தலினால் டி.விக்களுக்கு எக்கச்சக்கமான விளம்பர வருமானம்.  ஒரு பரபரப்பை ஏற்படுத்தி, அந்த சூடு தணியாமல் பார்த்துக்கொண்டால்தான் டி.விக்களுக்கு நல்ல வருமானம்.  இது போக, ரேடியோ, இன்டர்நெட் விளம்பரம்,சம்பளத்துக்கு வேலை செய்யும் ஆலோசகர்கள்,  பயணச் செலவு, கூட்டத்திற்கான செலவு என்று பெரிய பட்ஜெட் வேண்டும்.  ஒரு ஜனாதிபதி வேட்பாளர் சுமாராக 1 பில்லியன் டாலர் செலவழிக்க வேண்டும்.  அதற்கு நிதி திரட்ட வேண்டும்.

Tuesday, June 21, 2016

எந்த நாளும் திருவிழா - பாகம் 1

 
போன வாரம் பாண்டியில் உறவினர்களோடு பேசியபோது,  "என்னப்பா இது அநியாயமா இருக்கு.  நாராயணசாமி எலெக்ஷன்ல நிக்காம சி.எம். ஆயிட்டாரு.  எங்கெல்லாம் எப்பதான் அமேரிக்கா மாதிரி வரப்போவுதோ தெரியல". என்றனர்.  "சரி, இங்க எப்படி எலக்ஷன் நடக்குது தெரியுமா?" என்றேன்.  "அவ்வளவா தெரியாது" என்று பதில் வந்தது.   அவர்களுக்காகவும், மற்ற நண்பர்களுக்காகவும் உலகின் இரண்டாவது பெரிய மக்களாட்சியின் தேர்தல் கூத்துகளை இங்கு பதிவேற்றம் செய்கிறேன்

Sunday, January 9, 2011

என்ன.. பெய்கிறதா மழை வெளியே ?

நான்கு மாதங்களாகக் கடுமையான பணிச்சுமை.  வெளியே மழை பெய்கிறதா என்று கூடத் தெரியாமல் தினமும் முப்பது மணி நேரம் வேலை.  கணி மொழியை நிரடி நிரடிப் பூச்சிப் பிடித்துக் கொண்டிருந்தேன். புத்தாண்டு தொடங்கி இரண்டு நாட்கள் ரிலாக்ஸ் செய்ய பழைய உள்ளூர் வெளியூர் செய்திகளை வாசித்தால், அங்கும் கனிமொழி-நிரா ரடியா செய்திகள்.  உலகமே 4 -G பயன்படுத்த ஆரம்பித்து விட்டது, நீங்கள் இப்போதுதான் 2 -G யில் ஊழல் செய்கிறீர்களா?  சீக்கிரம் வந்து 4 -G ' யிலும் உங்க தெறமயக் காட்டுங்க.  இதிலே நோக்க வேண்டிய முக்கியமான ஒரு விஷயம்.  அனைத்து மீடியாக்களும், அரசியல் வியாதிகளும், சேவகர்களும், பரபரப்பு டீ.வீ.  மற்றும் 'சோ' போன்ற 'சிந்தனை'யாளர்களும்,   ராசாவையும் கனிமொழியையும் மட்டுமே தாக்குகிறார்கள், ஆனால் இந்த ஊழலைத்தூண்டி, அதனால் பலன் அடைந்த ரத்தன் டாட்டாவைப் பற்றியோ, மும்பை அம்பானி பிரதர்ஸ் பற்றியோ மறந்தும் வாயைத் திறக்க மாட்டேன் என்கிறார்கள்.  இந்தியா உண்மையிலேயே இந்த விஷயத்தில் (முதலாளிகளின் காலில் விழுவது ) அமெரிக்காவை மிஞ்சி விட்டது.  அமெரிக்கா, வெல்கம் டு இந்தியா.  சமீபத்தில் 'நோபலுக்கு மேல்' எழுத்தாளர் & கம்பெனி புத்தக வெளியீட்டைப் பப்ளிசிட்டி பண்ணிய விதம் அட்டகாசமாக இருந்தது. தொடர் தோல்விப் படங்களால் நொந்து போயிருந்த இளைய தளபதி விஜய்,  இதைப் பார்த்து அவர்களிடம் தம் அடுத்த படத்தின் விளம்பர கான்ட்டிராக்டைக் கொடுத்திருக்கிறாராம்.

வெளியூர் சேதி இப்படி இருக்கையில், இங்கே ஒரு குறுஞ்செய்தி.  அனைத்துத் தென் மாகாணங்களிலும் 'மூளை குன்றியோர்' காப்பகங்களில் எல்லோரையும் டிஸ்சார்ஜ் செய்து விட்டார்கள்.  கேட்டால், நவம்பர்-2010 தேர்தலில் அவர்கள் அனைவரும் ரிபப்ளிக்கன் கட்சி சார்பில் வெற்றி பெற்று விட்டார்களாம்.  இனிமேல் இந்த ரிபப்ளிக்கன் cynical bas ****s நடத்தும் கூத்துகளைப் பார்த்தால் பகுத்தறிவுள்ள எவருக்கும் ரத்தக்கொதிப்பு, மண்டையிடி உள்ளிட்ட உடல் உபாதைகள் கியாரன்ட்டியாக வரும்.  போதாதற்கு நந்தவனம் போல் இருந்த என்னுடைய ஆபீசை, இந்த வாரத்திலிருந்து வேறு இடத்திற்கு மாற்றி விட்டார்கள். புதிய இடம், பாண்டிச்சேரி பழைய பஸ் ஸ்டாண்டில் இருக்கும் நியூட்டன் தியேட்டர் போல இருக்கிறது.  இன்னும் இன்ன பிற காரணங்களால் லோக்கல் அரசியல் செய்திகள் எதையும் ஆறு மாதங்களுக்குப் பார்ப்பதில்லை என்று முடிவு செய்து விட்டேன்.
அடுத்து வரும் பதிவுகளில் கணினி உள்கட்டமைப்புப் பற்றி ஏதாவது கிறுக்கலாம், அது எனக்காவது ஒரு விதத்தில் உதவியாக இருக்கும்.

அதற்கு முன், ரிலாக்சுக்காக ஒரு சுவையான தகவல்.
"பழைய இலக்கியங்களில் இருந்து கருத்துக்களை அப்படியே எடுத்துப் பாடல்களில் உபயோகப் படுத்துகிறீர்களே" என்று கண்ணதாசனிடம் கேட்க, "தாத்தாவின் சட்டைப் பையிலிருந்து பேரப்பிள்ளைகள் செலவுக்குச் சில்லறை எடுப்பதில்லையா?  எனக்குப் பழைய இலக்கியங்கள் தாத்தாவின் சட்டைப் பை மாதிரி.  உரிமையுடன் தேவைப்படும்போது எடுத்துக் கொள்கிறேன்" என்றார்.  அப்படி அவர் ஒரு பீஸ் எடுத்துப் புகுத்திய பாடலைப் பார்ப்போம்.
கீழ்கண்டது வள்ளல் சீதக்காதியைப் பற்றிப் படிக்காசுப் புலவர் பாடியது.

காய்ந்து சிவந்தது சூரிய காந்தி, கலவியிலே
தோய்ந்து சிவந்தது மின்னார் நெடுங்கண், தொலைவில்பன்னூல்
ஆய்ந்து சிவந்தது பாவாணர் நெஞ்சம், அனுதினமும்
ஈந்து சிவந்தது மால்சீதக் காதி இருகரமே.   -- படிக்காசுப் புலவர்

இந்தப் பாடலைக் 'கர்ணன்' படத்தில் வரும் மிகப் பிரபலமான பாடலில் கையாண்ட விதம் இதோ.

Wednesday, September 15, 2010

நானே நல்ல ஏய்ப்பன்

தலைப்பைப் பார்த்ததும், ஏதோ பைனான்ஸ் அல்லது சுவிசேஷ கம்பெனி பற்றிய மற்றொரு மொக்கை என்று நினைக்க வேண்டாம்.   இது இந்தப்பக்கம் அமெரிக்காவில் தினந்தினம் நடக்கும் மக்கள் போராட்டங்கள் பற்றிய பதிவு.  பொதுமக்கள் நடத்தும் ஜனநாயக முறைப் போராட்டங்கள் நடத்த அமெரிக்காவில் காரணங்கள் நிறைய உள்ளன.  முடிவில்லாத யுத்தங்கள், வரலாறு காணாத வேலையில்லாத் திண்டாட்டம், பங்குச்சந்தை சரிவு, ஒரே வாரத்தில் வீட்டையும் சொத்தையும் இழப்பது, பெரும் செல்வர்கள் மேலும் செல்வந்தர்களாவது, இப்படிப் பல.  ஆனால் இந்த நியாயமான காரணங்களுக்காக இங்கு எந்த மக்கள் போராட்டமும் நடப்பதில்லை.  ஒரு  கலப்பின ஆசாமி அமெரிக்க ஜனாதிபதியாக ஆனாலும் ஆனார், வாரம்தோறும் சனி ஞாயிறு வருகிறதோ இல்லையோ, நாட்டின் தலைநகர், மாநிலத் தலை நகர், இங்கெல்லாம் கோவக்கார வெள்ளைக்காரர்கள் தொடர்ந்து ஊர்வலங்களும், போராட்டங்களும் நடத்தி வருகின்றனர்.  நேரடியாக 'கறுப்பர் அதிபரானது பிடிக்கவில்லை' என்று சொல்ல முடியாது.  அதனால் லூசுத்தனமாக வேறு காரணங்களை முன்வைக்கின்றனர்.

Sunday, May 16, 2010

நாளொன்றுக்குப் பத்து லட்சம் கேலன் எண்ணெய்...







கேத்தரினா சூறையாடிய லூசியானா மாகாணக் கடற்கரையை ஒட்டி அமைந்துள்ளது BP எண்ணெய்க் கம்பெனியின் ஆழ்கடலில் எண்ணெய்த் தோண்டும் நிலையம்.  போன மாதம் ஏற்பட்ட ஒரு வெடிப்பினால் அங்கே வரலாறு காணாத எண்ணெய்க் கசிவு ஏற்பட்டு, ஒரு நாளில் சராசரியாக பத்து லட்சம் கேலன் எண்ணெய்,  கடலில் கலக்கிறது.  ஒரு மாதமாக

Wednesday, April 21, 2010

பார்வதியம்மாவிடம் இருந்து பாரதத்தைக் காத்த பரமாத்மாக்கள்


போன வாரம் சென்னை விமான நிலையத்தில் தேசப் பாதுகாப்பு தொடர்பான முக்கியமான விஷயம் நடந்தது.  75 இராணுவத்தினரைக் கொன்ற நக்சல்கள் அங்கும் வந்து விட்டனரா?  இல்லை, அவர்கள் சுண்டைக்காய்கள். அதை விட மிக மிக ஆபத்தான பெண்மணி ஒருவர் இந்தியாவுக்குள் புக இருந்தார்.  வந்தவர் வெகு புத்திசாலித்தனமாக, ஒரு 78 வயதான, பல்வேறு நோய்களுடன் போராடும் பெண்மணி போல் வேஷம் போட்டு சக்கர நாற்காலியில்

Saturday, March 27, 2010

செவ்வாயில் முளைத்த வெள்ளி

இந்த வாரம் யு.எஸ். அமெரிக்க வரலாற்றில் மிக முக்கியமான நிகழ்ச்சி நடை பெற்றது.  டெமாக்ரட் கட்சியினர் ஜனாதிபதி பதவியைப் பிடித்த போதெல்லாம் பலமாக முயற்சி செய்து, ஒபாமா வந்த பின் ஓராண்டுக்கும் மேலாக ஆசியால் அரசியல் போராட்டம் நடை பெற்றது. ஒரு வழியாக 'சுகாதார சீர்திருத்த' சட்டம் செவ்வாய்க் கிழமை காலையில் ஜனாதிபதி கையெழுத்திட்டு, இந்த நாட்டின் சட்டமானது.  2008 அதிபர் தேர்தலின்போது கொடுக்கப்பட்ட வாக்குறுதியின்படியோ,

Saturday, January 23, 2010

ஒரு தேர்தலும், வேதாள உலகமும்


இந்த வாரத்தில் முக்கியமான இரண்டு சம்பவங்கள் நடந்தன. முதலாவது, செனேட் தேர்தலில் டெமாக்ரட் கட்சிக்குக் கிடைத்த அடி.
திரு ஒபாமா, தேர்தலின் பொது கொடுத்த வாக்குறுதிகளில் ஒன்றைக் கூடச் செய்யவில்லை. எல்லாவற்றையும் வேக வேகமாக ஆரம்பித்து விட்டு, சட்டமியற்றும் அதிகாரம் கொண்ட செனேட் மற்றும் பிரநிதிகள் அவையிடம் விட்டு விட்டார். அவர்களோ, பழம் தின்று, கொட்டையையும் தின்பவர்கள். 'உன்னால முடிஞ்சதப் பாத்துக்க' என்பது போல, தமது கார்ப்பரேட் முதலாளிகள் காட்டிய வழியில் ஒவ்வொரு சட்ட மசோதாவையும் முதலாளிகளுக்குச் சாதகமாக எழுத ஆரம்பித்து விட்டனர். மேடை ஏறி ஆறு போலப் பேசிய திரு ஒபாமா, தம்மை அதீத நம்பிக்கையுடன் தேர்ந்தெடுத்த மக்களிடம் அல்லவா சென்றிருக்க வேண்டும்? அவர் சொன்னால், அவருடன் சேர்ந்து போராடபெருவாரியான மக்களும் காத்திருந்தனர். அவரோ, வரலாறு தந்த அற்புதமான வாய்ப்புகளைக் கை கழுவி விட்டு, தன்னுடைய தவறான ஆலோசகர்கள் தந்த தவறான ஆலோசனைகளுக்குச் செவி சாய்த்தார். தலை நகரில் நடக்கும் எந்த விதமான கேவலமான அரசியலை மாற்றுவேன் என்று சபதமிட்டு வந்தாரோ,

Thursday, October 1, 2009

ரொம்ம்ம்ப நாள் பொறுத்து ஒரு முதுகெலும்புள்ள டெமாக்ரட் பிரதிநிதி.


மருத்துவ சீர் திருத்தம் தற்போது அமெரிக்காவின் மிக முக்கியமான உள்நாட்டுக் கொள்கையாக விவாதிக்கப் பட்டு வருகிறது. அடிப்படை மருத்துவ வசதிக்குக் கூட வழியில்லாத, ஏறக்குறைய நாற்பது மில்லியன் அமெரிக்க மக்களுக்கு உதவுவதற்காகவும், மருத்துவ இன்சூரன்ஸ் கம்பெனிகளின் அரக்கப் பிடியில் சிக்கி வீடு வாசலை இழந்து கொண்டிருக்கும் நடுத்தர வர்க்க மக்களுக்கு கை கொடுக்கவும் ஒரு நல்ல திட்டத்தைக் கொடுக்குமாறு, ஒபாமா, சட்ட மன்றத்தைக் கேட்டிருக்கிறார். எதிர்க் கட்சியான பணக்கார வெள்ளையர்கள் அடங்கிய கன்சர்வேடிவ் ரிபப்ளிக்கன் செனேட்டர்கள் ஒட்டு மொத்தமாகவும், டெமாக்ரட் கட்சியில் இருக்கும் சில முதுகில் குத்தும் துரோகிகளும், தனியாருக்குப் போட்டியாக வரும் எந்த திட்டத்தையும் கொண்டு வர விடாமல் முட்டுக் கட்டைப் போட்ட வண்ணம் இருக்கிறார்கள். இவர்களைப் பின்னாலிருந்து இயக்கும் கார்ப்பரேஷன்களும், ஓயாமல் பொய்ப்பிரச்சாரம் செய்யும் fox news போன்ற ஊடகங்களும் பிரமிக்க வைக்கின்றன. இவர்கள் எப்போதுமே வரலாற்றின் தவறான பக்கத்திலேயே இருந்திருக்கிறார்கள்.

Tuesday, September 8, 2009

உலகம் யாவையும் தாமுள வாக்கலும் ....


உலகம் யாவையும் தாமுள வாக்கலும்
நிலை பெறுத்தலும் நீக்கலும் நீங்கலா
அலகிலா விளையாட்டுடையார் அவர் தலைவர்
அன்னவர்க்கே சரண் நாங்களே
-- கம்பராமாயண முதல் பாடல்


விளக்கம்:
எண்ணற்ற உலகங்கள் அனைத்தையும் படைப்பதுவும்,
அவற்றைக் காப்பதுவும், பின் அழிப்பதுவும் ஆகிய
அளவற்ற விளையாட்டுகள் புரியும் அவரே (கடவுள் ) எங்கள் தலைவர்.
அத்தன்மை வாய்த்த இறைவனிடமே நாங்கள் சரணாகதி அடைகிறோம்.

Saturday, August 29, 2009

இயற்கை என்னும் இளைய கன்னி ஏங்குகிறாள் நிலையை எண்ணி...


ஓர் உறுப்பின் அத்தனை ரத்த நாளங்களும் வெட்டப்பட்டது போல, சுற்றிலும் உள்ள நீர் ஆதாரங்கள் தடுக்கப்பட்டு, வெகு விரைவில் பாலைவனமாகும் நிலையில் உள்ளது தமிழகம். கணக்கற்ற ஏரிகளும் குளங்களும் தூர்ந்து, காணாமல் போய் விட்டன. உயிரை லேசாகப் பிடித்துக் கொண்டிருந்த ஒரு சில சிற்றாறுகளும் பெரிய மனிதர்களால் தூர்க்கப்பட்டு, கல்லூரிகளாகவும் கல்யாண மண்டபங்களாகவும் மாறி விட்டன. ஆற்று மணல் கொள்ளை பற்றிக் கேட்கவே வேண்டாம்.
"காவிரி தென்பெண்ணை பாலாறு தமிழ் கண்டதோர் வைகை பொருனைநதி
எனும் மேவிய ஆறு பலவினிலும் உயர் வெள்ளை மணல் கொண்ட தமிழ்நாடு "
( கண்ணதாசனின் spoof )

Monday, August 17, 2009

பசங்க ....

இன்னும் ஒரு வாரத்தில் என் மகள் பாரதி கிண்டர்-கார்டன் வகுப்பில் சேரப் போகிறாள். நாள் முழுதும் கட்டுப்பாடுகள் ஏதுமின்றி விளையாடிக் கொண்டிருந்தவள் இப்போது ஏழு மணி நேரத்துக்கு ஆசிரியர் மேற்பார்வையில் இருக்க வேண்டும். வீட்டிலிருந்து இரண்டு மைல் தொலைவில்தான் அரசுப் பள்ளி, இருந்தாலும் மனது லேசான பதற்றத்துடன் குறு குறுவென்று இருக்கிறது. வயது போன காலத்தில் பிள்ளை பெற்றால், பெற்றோருக்கு இப்படித்தான் இருக்குமோ?

நான் வசிக்கும் டெக்சஸ் மாநிலத்தில், தம் அதிகாரத்துட்பட்ட எல்லைக்குள் சொத்து வரி விதித்துக் கொள்ள 'ஒருங்கிணைந்த பள்ளிகள் நிர்வாகத்துக்கு' உரிமை உண்டு. இது தவிர அரசாங்கம் சிறிதளவு நிதி உதவி அளிக்கும். இது ஒருவகையில் உள்ளாட்சி அமைப்பு மாதிரி. வரி விதிக்கும் அதிகாரம், கல்வித்துறைக்கு மிகவும் அவசியம். ஏதாவது பற்றக்குறை என்றால் மாநில அரசு கை வைக்கும் முதல் துறை, கல்விதான். இங்கு பள்ளிகளுக்கும், அங்கு படிக்கும் மாணவர்கள் திறமையை வைத்து ரேட்டிங் முறை உண்டு. நம் விருப்பப்படி விரும்பிய பள்ளியில் சேர முடியாது. நம் வீட்டு முகவரிக்கு ஏற்றார் போல் இன்னின்ன பள்ளியில் தான் சேர முடியும். ஒவ்வொரு பள்ளிக்கூடத்துக்கும் எல்லைக் கோடுகள் உண்டு. இந்த எல்லையும் சில வருடங்களுக்கு ஒரு முறை என்று மாற்றி அமைக்கப்படும். அடிப்படைக் காரணங்கள் இரண்டு. முதலாவது, சிறு குழந்தைகள் கல்வி கற்பதற்காக நிறைய தூரம் செல்லக்கூடாது, இரண்டாவது, அந்தந்த எல்லைக்குள் அடங்கும் மக்கள் இடப்பெயர்ச்சி. மேலும் நடுநிலைப் பள்ளி, உயர்நிலைப் பள்ளி என்று போகப்போக, எல்லைக்கோடுகள் விரிவடைந்து கொண்டு போகும். இந்தக் காரணங்களால் சிறந்த பள்ளிகளின் எல்லைக்குள் வரும் வீடுகள் விலை மிக அதிகமாக இருக்கும். இதன் பக்க விளைவு, அவ்வளவு விலையில் வீடு வாங்க, வசிக்க, இயலாதவர்கள் பிள்ளைகள், மோசமான பள்ளிகளுக்குப் போய் சேருகின்றனர். இது முடிவில்லாத சுழற்சி. இதில் பாதிக்கபடுபவர்கள் பெரும்பாலும் கறுப்பின மக்கள், மற்றும் ஸ்பானிஷ் மொழி பேசும் தென்னமெரிக்கப் புலம் பெயர்ந்தவர்கள்.

Monday, August 10, 2009

மயக்கமா.. கலக்கமா .. - அமெரிக்கா

மயக்கமா ? கலக்கமா ? மனதிலே குழப்பமா ? வாழ்க்கையில் நடுக்கமா ?
நாகரீக அவசர உலகின் மனிதர்கள் எவரிடமும் 'விக்ஸ் ஆக்ஷன்- 500' ஸ்டைலில் மேற்கண்ட கேள்விகள் கேட்கப்பட்டால் வரும் பதில் 'ஆமாம் சார் ஆமாம் ' என்பதுதான். நம் வாழ்வில் சிலமுறையாவது மனச்சிக்கலை எதிர்கொண்டே இருப்போம். இதற்கு எளிமையான பக்க விளைவுகள் இல்லாத தீர்வைத் தருகிறார் கண்ணதாசன்.
' வாழ்க்கை என்றால் ஆயிரம் இருக்கும்
வாசல் தோறும் வேதனை இருக்கும்
வந்த துன்பம் எதுவென்றாலும்
வாடி நின்றால் ஓடுவதில்லை

உனக்கும் கீழே உள்ளவர் கோடி
நினைத்துப் பார்த்து நிம்மதி நாடு '

Friday, August 7, 2009

ரிபப்ளிகன் கட்சியும் இலவச பிரியாணி பொட்டலங்களும்


தமிழ்கத்தின் நிரந்தர முதல்வரான அகிலாண்ட நாயகி புரட்சித் தலைவியை விமர்சனம் செய்த சு.சாமியையும், மணிசங்கர் அய்யரையும் மேற்படி அம்மையாரின் அடிப்பொடிகள் துரத்தித் துரத்தி அடித்து, மகளிர் அணி 'நடனம்' போன்ற கலை நிகழ்ச்சிகளையும் நடத்தித் தாம் தின்ற பிரியாணி செரிக்கச் செய்ததை எல்லோரும் அறிவோம். ஏறக்குறைய இது போன்ற கேவலமான நிகழ்வுகள் தற்சமயம் அமெரிக்காவில் நடந்து வருகின்றன. இதற்குக் காரணம், ஒபாமா, தன் தேர்தல் வாக்குறுதிகளில் ஒன்றான 'எல்லோருக்கும் மருத்துவ வசதி' யை சட்டபூர்வமாக்க முயன்று வருகின்றார். இதற்கு ஏன் 'எய்த அம்புகளான அறியா வெள்ளையர்கள்' எதிர்ப்பு தெரிவிக்கிறார்கள் ? காரணங்களைக் கீழே பார்ப்போம்.

முன்னேறிய நாடுகளில் ஒன்றான அமெரிக்காவில், ஒரு காலத்தில், அதாவது நிக்சன் ஜனாதிபதியாவதற்கு முன்வரை,

Thursday, August 6, 2009

கனவெனும் மாயா லோகத்திலே - அமெரிக்கா

போன வாரம் இங்கு நடந்த beer summit பற்றிக் கேள்விப்பட்டீர்களா? கறுப்பரான ஹார்வர்ட் பல்கலை பேராசிரியர் ஹென்றி கேட்ஸ், சீனப் பயணத்திலிருந்து திரும்பி வந்து, தன் வீட்டுக்கதவைத் திறக்க முயன்றிருக்கிறார். பயணக் களைப்போ என்னவோ, கதவைத் திறக்க முடியாமல் டாக்சி டிரைவருடன் முயற்சி செய்திருக்கிறார். மாலை அரையிருட்டில் இதைப் பார்த்த பக்கத்து வீட்டுப் பெண்மணி, பொறுப்பாக போலீசுக்குத் தகவல் சொல்ல, விரைந்து வந்த போலீசிடம் ப்ரொபசர் என்னவோ வாக்குவாதம் செய்யப்போக, தன்னுடைய அடையாள அட்டையைக் காட்டி, அதைத் தன் வீடு என்று உறுதி செய்த பின்பும், அவரை போலீஸ்காரர் கைது செய்தார். மிகவும் செல்வாக்கான ஹார்வர்ட் ப்ரொபசருக்கே இந்த நிலைமை. அவர் கருப்பராக வேறு இருந்ததால் பிரச்னை நாடு முழுதும் பேசப்பட்டது. ஒபாமாவிடம் ஒரு நிருபர் இது குறித்துக் கேட்க, அவர், போலீசின் இந்த நடவடிக்கை முட்டாள்தனமானது என்று சொன்னார். Fox News போன்ற வெறுப்பை மட்டுமே உமிழும் வலது சாரி மீடியாக்களுக்கு இதை விடப் பெரிய தீனி தேவையா? ஒபாமா எந்த வகையில் அமெரிக்காவுக்கு ஆபத்தானவர் என்று 'ஆய்வுகள்', கருத்தரங்கங்கள். நிற வெறுப்பை ஊதி ஊதிப் பற்ற வைத்தார்கள். சோ வும் சு.சாமியும் கேட்டார்கள் போங்கள். பார்த்தார் ஒபாமா. உடனே சம்பத்தப்பட்ட இருவரையும் வெள்ளை மாளிகைக்கு அழைத்து ஒரு பியர் மீட்டிங் வைத்து, பிரச்னை பெரிதாகாமல் 'சாந்தி' செய்து அனுப்பினார். அடிப்படையில், இது நிறப் பிரச்னையே அல்ல. ஒரு ஈகோ பிடித்த போலீசுக்கும், ஒரு கிறுக்குக் கிழவருக்கும் நடந்த சண்டை. அமெரிக்க மனோபாவப்படி ஒருவரும் மன்னிப்பு கேட்கத் தயாராகவில்லை. ஆமாம். அமெரிக்கர்கள் யாரிடமும் எதற்கும் மன்னிப்பு கேட்க மாட்டார்கள். பிரச்னைகள்தான் பெரிதாக வளர்ந்து போகும். இந்த இடத்தில், இப்படி ஒரு தலைவர்தான் தேவை.

Friday, July 31, 2009

என் ஜன்னலின் வெளியே -- 1

என் அபிமான எழுத்தாளர்களுள் ஒருவரான சுஜாதா சொல்வார் "காஷ்மிரில் வசித்துக் கொண்டு மாம்பலத்தில் மாமி இட்டிலி சுடுவது பற்றிக் கதை எழுதுவார்கள். அங்கு ஜன்னலைத் திறந்தால் ஆயிரம் கதைகள் கிடைக்கும்.." என்று.
பன்னிரண்டு ஆண்டுகளுக்கு முன் பாஸ்டன் நகரில் காலடி எடுத்து வைத்தபோது, இதுதான் நான் 'வாக்கப்படப் போற பூமி' என்று நினைக்கவில்லை. கலிபோர்னியாவில் எட்டாண்டுகள் வசித்துவிட்டு நான் தற்சமயம் வசிக்குமிடம் டெக்சஸ் மாகாணத்துத் தலைநகர் ஆஸ்டின். இடையில் நடந்த கதையெல்லாம் சுவாரசியம் இல்லாததால் இங்கே சொல்லப்போவதில்லை. இந்தியாவின் வெகு ஜன மீடியாவில் வராத, எனது ஜன்னலுக்கு வெளியே நடக்கும் சமூக, அரசியல் விஷயங்களை இங்கு என் பார்வையில் பட்டவாறு கொடுக்கிறேன். தமிழகம் அளவுக்கு இங்கு அரசியல் சமூக நிகழ்வுகள் அத்தனை கேளிக்கையோ திருப்பங்களோ அற்றது. இருந்தாலும் என்ன வித்தியாசம் இருக்கிறது என்று நீங்கள் தெரிந்து கொள்ளவே இந்தப்பதிவு.


யு. எஸ். ஏவின் பிரதான இரண்டு அரசியல் கட்சிகள் ரிபப்ளிகன், டெமாக்ரட் கட்சிகள் என்பது சென்னை பள்ளிசிருவர்களுக்கும் தெரியும். அதில்லாமல், சோஷலிச கட்சி, அரசியலமைப்பு கட்சி, பச்சைக் கட்சி, போன்ற நிறைய உதிரிக் கட்சிகளும் உண்டு. இவையெல்லாம் சொற்ப அளவில் ஒட்டு வாங்கித் தோற்பவை. இரண்டு பெரிய கட்சிகளுக்கும் சிறிதளவில்தான் வித்தியாசம். ஒரு கட்சி கொண்டு வரும் திட்டங்களை அடுத்த கட்சி கண்ணை மூடிக்கொண்டு எதிர்க்கும் வகையில் நம்ம ஊர் தி.மு.க. அ.தி.மு.க. போல ஒரே குட்டையில் ஊறிய மட்டைகள். முந்தைய ஆட்சி உழவர் சந்தை, கல்வி, மருத்துவ உதவித் திட்டங்கள் கொண்டு வந்ததா? தூக்கி உடைப்பில் போடு, சாராயக் கடை திறந்ததா? ?? ஹ்ம்ம்.... ?? சரி இருக்கட்டும் விடு.. இது போல.

ஜார்ஜ் புஷ் போன்றவர்கள் அடங்கிய ரிப்பப்ளிக்கன் கட்சி, கிழவர்கள் நிரம்பிய அவ்வளவாக படிப்பறிவில்லாதவர்கள் விரும்பும், தேசிய உணர்வுகளைத் தூண்டி குளிர்காயும் அதி தீவிர வலது சாரிக் கட்சி. டெமாக்ரடிக் கட்சியினர் தம்மை முற்போக்கானவர்கள் என்று அடிக்கடி சொல்லிகொண்டாலும், முக்கியமான விஷயங்களில் ஜகா வாங்கிக் கொண்டும், பல்டி அடித்துக் கொண்டும், சமரசம் செய்து கொண்டும், கேனைத்தனமாக லேசான வலதுசாரித் தனத்துடன் இருப்பவர்கள். இந்த வகையில் ரிபப்ளிகன் கட்சியை பா.ஜ.க என்றும், டெமாக்ரட் கட்சியை, சோனியா காங்கிரஸ் என்றும் சொல்லலாம். பொதுவில் இரண்டு கட்சிக்காரர்களும் கார்ப்பரேட் கோடீஸ்வரர்களின் அடிவருடிகள். ஜனாதிபதி முதல், மாவட்ட ஜட்ஜ்கள், போலீஸ் தலைவர் வரை, பொதுமக்களே ஓட்டுப் போட்டுத் தேர்ந்தெடுப்பார்கள். நான்கு வருடத்துக்கு ஒருமுறை, நிறைய செலவு செய்து ஜட்ஜ் தேர்தலில் நிற்கும் ஜட்ஜின் நீதி வழங்கல் எப்படி இருக்கும் என்பதை உங்கள் கற்பனைக்கு விட்டுவிடுகிறேன்.

இப்போது நானிருக்கும் ஊர் ஆஸ்டின், டெக்சாசின் தலைநகர் . டெக்சசின் பொது குணாதிசயத்துக்குக் கொஞ்சமும் சம்பந்தமில்லாத ஊர் இந்த ஆஸ்டின். இப்போதெல்லாம் விக்கிப்பீடியாவின் உதவியுடன் எந்த இடத்தைப் பற்றியும் அல்லது விஷயத்தைப் பற்றியும் உடனே தெரிந்து கொள்ள முடிவதால், பூகோள, வரலாற்று விபரங்களுக்குச் செல்லப் போவதில்லை.
யு. எஸ். ஏவின் எந்த மாவட்டத்துக்கும் இல்லாத சிறப்பு டெக்சசுக்கு உண்டு. இங்கிருந்து போய் ஜனாதிபதி ஆனவர்கள்தான் பேரழிவான யுத்தங்களை ஆரம்பித்துள்ளார்கள். ரிச்சர்ட் நிக்சன் வியட்நாம் போர், சீனியர் புஷ் முதல் ஈராக் யுத்தம், ஜூனியர் புஷ், சொல்லவே தேவையில்லை, தேன் கூட்டைக் கலைத்த குரங்கு . 'முதலில் சுடு. அப்புறம் கேள்வி கேட்கலாம்' என்ற கவ்பாய் மனப்பான்மை உள்ளவர்கள். கரடு முரடான பண்ணை வாழ்க்கை, கடுமையான தட்ப வெப்ப நிலைகள், தீவிர பைபிள் நம்பிக்கை, எல்லாவற்றுக்கும் மேலாக, கொஞ்சம் தடித்தனம், இவற்றின் கலவையே டெக்சஸ் மக்கள். மாநகரங்கள் அல்லாத இடங்களில் வசிப்பவர்கள், இன்னும் 16-ஆம் நூற்றாண்டு மனப்பான்மையைத் தாண்டி வரவில்லை, விருப்பமும் இல்லை. கொஞ்சம் ரிமோட்டான இடங்களுக்குச் சென்றால், வெள்ளையராக இல்லாத பட்சத்தில் குறைந்தபட்ச ஆபத்து உத்தரவாதம். பல மைனாரிட்டி இனங்கள் இங்கே வசித்து வந்தாலும், வெள்ளையர் அல்லாதவர்களை டூரிஸ்ட்கள் என்றுதான் நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். கரடு முரடான ஆட்கள் என்றாலும், அடிப்படை நேர்மையில், பிற மாநிலத்தவரை விடவும், இந்தியரை விடவும் மிக உயர்ந்தவர்கள். சில இடங்களில், இன்னும் பழைய வாசனை போகாமல், வழி கேட்டு வருபவர்களுக்கும் உணவளித்து உபசரிக்கும் சிற்றூர்களும் சில உண்டு. அடியும் கொடுத்து அல்வாவும் வாங்கித்தரும் மதுரைக்காரர்கள் போல....
டெக்சசைப் பொறுத்தவரை, கண்ணை மூடிக்கொண்டு ரிபப்ளிக்கன் கட்சிக்கே எப்போதும் ஓட்டுப்போடுவார்கள். ஒபாமா வென்ற இந்தத் தேர்தலில் டெமாக்ரட் கட்சி வாங்கியிருக்கும் வாக்கு சதவீதம் உயர்ந்திருப்பது சற்று ஆறுதலானவிஷயம்.
இங்குத் தேர்தலில் நிற்க விரும்புபவர்கள் கட்டாயம் ரெகுலராக சர்ச்சுக்குப் போக வேண்டும். மனைவி குழந்தைகளுடன் வாழ வேண்டும் என்பது போன்ற எழுதப்படாத விதிகள் உண்டு. உங்களுக்கு ஏசுவின் மேல் விசுவாசம் இல்லையா ? அரசு உயர் வேலையை மறந்து விடலாம்.

அடுத்து: ஆஸ்டின் நகர் மக்களைப் பற்றிக் கொஞ்சம், நிகழ்வுகள் கொஞ்சம்..